வெளிச்சம் - 17
அத்தியாயம் 17
இன்று சாயங்காலம் ஊருக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்து கொண்டிருந்த சிவகாமியின் அங்கு அமைதியாக அமர்ந்திருந்த நளினியை கண்டார்.
"என்ன ஆயிற்று நளினிக்கு? ரொம்ப அமைதியாக இருக்கிறாள்!" என்று பார்வதியிடம் கேட்டபடியே நளினியின் அருகில் வந்து அமர்ந்த சிவகாமி, அவள் நாடியை பிடித்து தன்னை பார்க்கச் செய்து, "என்ன ஆயிற்று நளினி?" என்றார்.
அவரைப் பார்த்ததும் அவளது கண்கள் கண்ணீரில் குளம் கட்டிக் கொண்டது. அதை கண்டு பதறிய சிவகாமி, "என்ன ஆயிற்றுடா? ஏன் அழுகிறாய்?" என்று தன் முந்தானைக் கொண்டு அவளது கண்ணீரை துடைத்து விட்டார்.
"நீங்கள் ஊருக்கு போவது எனக்கே மிகவும் வருத்தமாக இருக்கிறது. அப்படி என்றால் அண்ணிக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும்? அதை நினைத்து தான் அழுகிறேன் அத்தை" என்று அவரை வயிற்றுடன் கட்டி அணைத்துக் கொண்டாள்.
அதில் புன்னகைத்த சிவகாமி, அப்பொழுது அங்கு வந்த சிவன்யாவையும் தன் அருகில் வரவைத்து அணைத்து கொண்டார். சிவன்யாவின் பின்னாடியே அனைவரும் குடிப்பதற்கு மோர் எடுத்துக்கொண்டு வந்த பார்வதி சிவகாமி, அனைத்து நிற்கும் இரு பெண்களையும் பார்த்து புன்னகைத்தபடி, "என்ன அண்ணி? ரெண்டு பேரும் உங்க கிட்ட இப்படி ஒட்டிக்கிட்டு நிக்கிறாங்க?" என்று கேட்டபடியே மோரை எடுத்து அவர் கையில் கொடுத்தார்.
"எல்லாம் கல்யாணம் முடிந்த பிறகு பெண்களுக்கு வரும் கவலைதான் அண்ணி" என்று சொல்லியபடியே தன் கையில் இருந்த மோரை நளினிக்கு கொடுத்து குடிக்கும்படி சொல்லிவிட்டு, மகளுக்கும் கொடுத்து விட்டு தானும் ஒன்றை எடுத்து அவர்கள் இருவருக்கும் நடுவில் அமர்ந்து கொண்டார்.
"நம் கலாச்சாரத்தில் திருமணத்திற்குப் பிறகு பெண்கள் கணவன் வீட்டில் செல்ல வேண்டும் என்பது ஒரு முறையாகி விட்டது. இது மேலோட்டமாக பார்த்தால் ஒரு சாதாரண நிகழ்ச்சி போலத்தான் இருக்கும். இவ்வளவு நாள் உன் அப்பா அம்மா கூட இருந்த, இப்ப இங்க என் வீட்ல இருக்க போற, என்று ஆண்களால் சாதாரணமாக சொல்லிவிட முடியும். ஆனால் உண்மையில் ஒரு பெண்ணிற்கு இது ஒரு சவாலான காலம். ஓர் இடத்தில் வாழ்ந்த வளர்ந்த செடியை பிடுங்கி, மற்றொரு இடத்தில் நட்டு வைத்தால், அந்தச் செடி எப்படி இருக்கும்?" என்று நளினியை பார்த்து கேட்டார் சிவகாமி.
மோர் குடித்துக் கொண்டிருந்த நளினி நிமிர்ந்து அவரை பார்க்க மோரில் இருந்த வெள்ளை நுரை, அவள் மேலுதட்டில் மீசை போல் ஒட்டிக் கொண்டிருப்பதை கண்டு புன்னகைத்து, "நளினிக்கு வெள்ளை மீசை முளைத்து விட்டதே!" என்று கிண்டல் அடித்தார்.
தன் புறங்கையால் தன் மேல் வாயை துடைத்துக் கொண்ட நளினி, "செடி வாடி போய்விடும் அத்தை" என்றாள் அவர் கேட்ட கேள்விக்கு பதிலாக.
"ஆமாம், முதலில் செடியின் வாடி தான் போகும். அதை கவனமாக பார்த்துக் கொண்டால், அந்த மண்ணில் நன்றாக வேர் பிடித்துக் கொண்டு செழித்து வளர்ந்து பூத்து காய்க்க தொடங்கி விடும், இல்லையா?" என்றார் இரு பெண்களையும் பார்த்து.
"ஆமாம்" என்று இருவருமே மௌனமாக தலையாட்டினார்கள்.
"அதுதான் இப்பொழுது உனக்கு நடக்கிறது" என்று சிவன்யாவின் நாடி பிடித்து கூறினார். "இன்னும் கொஞ்ச நாளில் உனக்கு நடக்கும்" என்று நளினியிடமும் கூறினார்.
"நாம் பிறந்து வளர்ந்த இடத்தில் நம் பழக்க வழக்கங்கள் ஒரு விதமாக இருக்கலாம். நாம் திருமணம் முடித்து செல்லும் வீட்டில் உள்ள பழக்கவழக்கங்கள் ஒருவிதமாக இருக்கலாம். நான் இப்படித்தான் இருப்பேன் என்று முரண்டு பிடித்துக் கொண்டு இருந்தால், நான் அந்த இடத்தில் தான் வளர்ந்தேன், அதே மண்ணில் தான் இருப்பேன், இந்த மண்ணை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று, செடியின் வேர் மணலுடன் ஒட்டாமல் இருந்தால் அந்தச் செடி வாடிவிடும்.
அதை விட்டுவிட்டு புது மண்ணில் உள்ள புது சத்துக்களை எடுத்துக்கொண்டு தன்னை வளர்த்துக் கொள்ள முயன்றால், அச்செடி நன்றாக வளர்ந்து செழிக்கும். அதுபோலத்தான் நாமும், இதுவரை நான் இப்படி இருந்தேன், இனிமேலும் இப்படித்தான் இருப்பேன் என்று முரண்டு பிடித்துக் கொண்டிருந்தால், நம் வாழ்க்கை சிறப்பாக இருக்காது. ஆனால் புது இடத்திற்கு நுழைந்ததும் அவர்களது பழக்கவழக்கங்களையும் தனது பழக்க வழக்கங்களாக ஆக்கி கொண்டால், நீண்ட நாட்கள் நிம்மதியாக வாழலாம் இல்லையா?" என்று மீண்டும் இருவரையும் பார்த்தார். இருவருக்கும் புரிந்தது போல் தலையாட்டினர்.
"அப்படி என்றால் நமக்கென்று எந்த விருப்பு வெறுப்புமே இருக்கக் கூடாதா அத்தை?" என்று கவலையாக சிவகாமியை பார்த்தாள் நளினி.
"அப்படி இல்லடா, உன் விருப்பு வெறுப்பு போலவே உன் துணையின் விருப்பு வெறுப்புக்கும் கொஞ்சம் செவி சாய்க்க வேண்டும் என்றுதான் சொல்கிறேன். உன்னுடைய சுயம் அனைத்தையும் தொலைத்து விட்டு, உன் துணையை சார்ந்து இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. உன் விருப்பு வெறுப்போடு, உன் துணையின் விருப்பு வெறுப்பையும் புரிந்து கொண்டு, அவருக்கு இணையாக, அவருடன் பயணிக்க வேண்டும் என்றுதான் சொல்கிறேன்.
கணவன் மனைவிக்குள் எந்த ஒளிவு மறைவும் இருக்கக்கூடாது. உனக்கு தோன்றுவதை, உங்கள் கணவனிடத்தில் சொல்ல வேண்டும். அதற்கு அவர் கூறும் பதில்களையும் கவனமாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் இல்லறம் செழிப்பாக இருக்கும். அதை புரிந்து கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் அது மிகவும் கடினமாக தான் இருக்கும். ஆனால் அந்த குடும்பத்தில் உள்ள எல்லோரையுமே உங்கள் பிறந்த குடும்பத்தில் உள்ளவர்கள் போல் பார்க்க ஆரம்பித்து விட்டால், எல்லாமே சுலபம்தான்" என்று இருவருக்கும் பொதுவாக அறிவுரை கூறிய சிவகாமி,
"நளினிக்கு பக்கத்து ஊரு தான். அரை மணி நேரத்தில் நினைத்ததும் அவள் அவள் தாயைப் பார்க்க வந்துவிடுவாள். பார்வதிக்கும் மகளைப் பார்க்க வேண்டும் என்று தோன்றினால் உடனே சென்று பார்த்து விடலாம். ஆனால் எனக்கும் உனக்கும் அப்படி இல்லை. ஆகையால் நளினியை விட நீ தைரியமாக இருக்கணும். உன் கணவன் குடும்பத்தை உன் குடும்பமாக ஏற்றுக் கொண்டால் உனக்கு என்னை பார்க்க வேண்டும் என்ற எண்ணமே வராது" என்று புன்னகைத்து கூறினார் மகளைப் பார்த்து.
சிவன்யா தாயை அணைத்துக் கொண்டு, "நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன் அம்மா" என்று கூறி அவரது கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.
"நானும் அத்தை" என்று அவரின் மறுபுறம் நின்று அணைத்துக் கொண்ட நளினி, அவரின் மற்றொரு கன்னத்தில் முத்தம் கொடுக்க, இரு கன்னங்களையும் துடைத்துக் கொண்ட சிவகாமி "அதற்கு இப்படி தான் எச்சில் பண்ணுவீங்களா" என்று விளையாட்டாக கோபித்துக் கொண்டார்.
இவ்வளவு நேரம் அவர் கூறியது அனைத்தையும் கேட்ட பார்வதி "சரியாக சொன்னீங்க அண்ணி. ஆண்களுக்கு குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற பொறுப்பு இருந்தாலும், பெண்களுக்கு இரு குடும்பத்தையும் சீராக இணைக்கும் கூடுதல் பொறுப்பு இருக்கத்தான் செய்கிறது. எனக்கு சிவன்யாவை பற்றி கவலை இல்லை. நான் பார்த்தவரைக்கு ரொம்ப பொறுப்பா எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறாள். ஆனால் இவளை நினைத்தால் தான் பயமாக இருக்கிறது. ஒரு வேலையும் செய்வது இல்லை. இவள் மாமியாரிடம் போய் என்னென்ன திட்டுகள் வாங்க போகிறாளோ?" என்று கவலையாக சொல்லியபடியே அவளின் தலையில் செல்லமாக ஒரு கொட்டும் வைத்தார்.
தலையை தடவிக் கொண்ட நளினி "நான் எதற்கு வேலை செய்யணும்? அத்தை வீட்ல தானே இருக்காங்க! அவங்க எல்லாத்தையும் பார்த்துப்பாங்க" என்று கூறி "இல்லையா அண்ணி?" என்று சிவன்யாவையும் தன் பேச்சுக்கு கூட்டு சேர்த்துக் கொண்டாள் நளினி .
அவளது செயலில் சிவன்யாவிற்குமே சிரிப்பு வந்துவிட்டது. சிரித்துக் கொண்டே தன் தாயைப் பார்த்தாள் சிவன்யா. மகளின் முகத்திலிருந்த புன்னகையை பார்த்து, தானும் புன்னகைத்த சிவகாமி, சிவன்யாவை தோளுடன் அணைத்துக் கொண்டு "திருமணத்திற்கு பிறகு தாய் தந்தையரை பிரிந்து தான் ஆக வேண்டும். நாங்கள் ஊருக்குச் செல்லும் பொழுது நீ அழுதால் எங்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அதுவும் உன் அப்பாவால் கொஞ்சம் கூட தாங்கிக்க முடியாது, நொறுங்கி போய்டுவார். அதனால அப்பா முன்னாடி அழுதுவிடாதேடா!" என்று அவளின் நாடி பிடித்து செல்லமாக ஒரு வேண்டுகோளையும் வைத்தார்.
"சரி அண்ணி, நீங்க கொஞ்ச நேரம் ஓய்வெடுங்க" என்று சிவகாமியிடம் சொல்லிவிட்டு,
"அம்மா கூட பேசிகிட்டு இருமா" என்று சிவன்யாவிடம் சொல்லிவிட்டு,
அவர்களுக்கு தனிமை கொடுக்க நினைத்து, "நீ வா, நாம் மதிய உணவுக்கு அண்ணன் சொல்லி விட்டானா? என்று கேட்போம்" என்று நளினியையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்தார் பார்வதி.
- தொடரும்..
- அருள்மொழி மணவாளன்..
-
வெளிச்சம் - 16
12 hours ago
-
வெளிச்சம் - 15
2 days ago
-
வெளிச்சம் - 14
2 days ago
-
வெளிச்சம் - 13
3 days ago
-
வெளிச்சம் - 12
3 days ago
Currently viewing this topic 1 guest.
- 25 Forums
- 210 Topics
- 747 Posts
- 1 Online
- 329 Members
