Forum

Notifications
Clear all

வெளிச்சம் - 13

1 Posts
1 Users
0 Reactions
7 Views
(@arulmozhi-manavalan)
Posts: 22
Trusted Member
Topic starter
 
[#207]

திருமணம் முடிந்த அடுத்த நாள் விஸ்வநாதன் தன் மனைவியையும் மகளையும் அழைத்துக் கொண்டு ஊருக்கு செல்வதாக இருந்தது. 

 

அதில் மிகவும் வருத்தம் அடைந்த நளினி சிவன்யாவிடம் தன் கவலையை சொல்லிக் கொண்டிருக்க, சிவன்யாவோ "அப்படி என்றால் நீ இங்கேயே இருந்து விடு. நானும் உங்கள் அண்ணனும் வரும்பொழுது ஒன்றாக போகலாம்" என்றாள். 

 

அதுவும் சரிதானே என்று ஒரு புறம் ஆசை இருந்தாலும், "வேண்டாம் அண்ணி, உங்கள் ரிசப்ஷன் வேலை எல்லாம் இருக்குது. அப்பாவும் அம்மாவும் வெளி வேலைகளை பார்த்துக் கொண்டால், வீட்டை நான் பார்த்துக் கொள்ள வேண்டுமல்லவா? எப்படியும் இரண்டு நாளில் வந்துவிடுவீர்கள் தானே!" என்று சொல்லி சமாளித்தாள். 

 

அவளின் சிறுபிள்ளைத்தனமான செயலில் புன்னகை தோன்றியது சிவன்யாவிற்கு. 

 

மதிய உணவு அசைவம் செய்ய இருப்பதால், சிவகாமி தன் மகளை அழைத்து இருவரும் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று வரும்படி கூறினார். 

 

'தேவ் கோயிலுக்கு வருவாரா தெரியவில்லையே?' என்று நினைத்துக் கொண்டு தயங்கி தயங்கி, 

"அம்மா நம்ம ரெண்டு பேரையும் பக்கத்துல இருக்குற கோயிலுக்கு போயிட்டு வர சொன்னாங்க" என்றாள் சிவன்யா. 

 

அவனும் சாதாரணமாக தோள்களை குலுக்கிக் கொண்டு "ஓகே" என்று எழுந்தான். 

 

உடனே நளினியும் ஓடி வந்து, "நானும் வருகிறேன் அண்ணி" என்க, 

 

பார்வதியோ, "அவர்கள் இருவரும் போயிட்டு விரட்டும். நீ பேசாமல் இரு" என்று அவளை தடுத்தார் பார்வதி. 

 

உடனே நளினியின் முகம் வாடி விட, அதை பார்த்த சிவன்யா, "பக்கத்திலே தானே அத்தை, அவளும் வரட்டும். நான் அடிக்கடி செல்லும் கோயிலை அவளும் பார்த்தது போல் இருக்கும் அல்லவா?" என்று பார்வதியை பார்த்து சொல்லிவிட்டு, "நீ வா நளினி" என்று அவளின் கைப்பற்றி அழைத்தாள். 

 

அவளோ தயக்கமாக தாயின் முகத்தை பார்க்க, போய் வரும்படி செய்கை செய்தார் பார்வதி. உடனே மகிழ்ந்து அண்ணியின் கையைப் பிடித்துக் கொண்டு, வீட்டில் இருந்த அனைவரிடமும், சென்று வருவதாக சொல்லி கிளம்பினாள் நளினி. 

 

சந்தோஷமாக குதித்து குதித்து தன் மகளுடன் செல்லும் நளினியின் முதுகை பார்த்தவரே "இன்னும் ஒரு மாசத்துல அவளுக்கு கல்யாணம் னு சொல்றீங்க, ஆனா அவள் சின்ன பிள்ளை போல நடந்துக்கிறா" என்றார் சிவகாமி. 

 

"ஆமா அண்ணி, புகுந்த வீட்ல போயிட்டு என்னென்ன அட்டகாசம் பண்ண போறாளோ தெரியல. அவரின் சித்தப்பா மகள்தான் இவளுக்கு மாமியார். சிறுவயதில் இருந்தே நளினியை நன்கு தெரிந்தவர் தான். அது ஒன்றுதான் எனக்கு நிம்மதியாக இருக்கிறது. அவர்களுக்கு நளினியை ரொம்ப பிடிக்கும். அதனால் அவளை நன்றாக பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அது மட்டுமல்ல இரண்டு தெரு தள்ளி தான் அவர்கள் வீடும், அதனால் அவள் நாமும் கொஞ்சம் பார்த்துக் கொள்ளலாம்" என்று மகிழ்வாக கூறினார். 

 

"பரவாயில்லை அண்ணி, உங்களுக்கு பக்கத்து தெருவில்லையே சம்பந்தம் அமைந்து விட்டது" என்று சற்று சோகமானார் சிவகாமி. 

 

"நீங்க கவலைப்படாதீங்க அண்ணி. சிவன்யாவை நான் நளினி போல கவனிச்சுக்குவேன்" என்று சிவகாமியின் கையை பிடித்துக் கொண்டு கூறினார். 

 

"நீங்க நல்லா கவனித்துக் கொள்வீர்கள் என்று தெரியும் அண்ணி. எனக்கு அதெல்லாம் ஒரு குழப்பமும் இல்லை. ஆனால் நளினியின் திருமணம் முடிந்த பிறகு, மாப்பிள்ளை இவளை அழைத்துக்கொண்டு துபாய் சென்று விடுவாரே! உங்கள் வீட்டில் இருந்தாலாவது நினைத்ததும் வந்து பார்த்துவிட்டு வரலாம். வெளிநாடு போயிட்டாள் என்றால் எப்படி நினைத்தபோதெல்லாம் சென்று வர முடியும்" என்று சோகமானார் சிவகாமி. 

 

ஒரு தாயாக மகளை கட்டிக் கொடுத்தால் எவ்வளவு வருத்தம் இருக்கும் என்பதை உணர்ந்த பார்வதி, சிவகாமிக்கு எப்படி ஆறுதல் சொல்லுவது என்று தெரியவில்லை. இருந்தாலும் "தேவ் அவளை நன்றாக கவனித்துக் கொள்வான் அண்ணி, கவலைப்படாதீர்கள்" என்று சொல்லிவிட்டு, "நேரில் சென்று பார்த்தால் தான் பார்த்தபடியா? இப்பொழுதுதான் நினைத்தவுடன் வீடியோ கால் செய்து பேசி விடலாமே! அதிலே உங்களுக்கு அவளை பார்த்தது போல் இருக்கும். அதையும் மீறி நேரில் பார்க்க வேண்டுமென்றால், நினைத்தவுடன் போய் பார்த்துவிட்டு வாருங்கள். ஐந்து மணி நேர பயணம் தானே!" என்று சிவகாமிக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார் பார்வதி. 

 

இப்படியே அவர்கள் பேசிக் கொண்டு, தேவ்விற்கு என்ன உணவு பிடிக்கும் என்று கேட்டு, அவனுக்கு பிடித்தபடியே மதிய உணவை செய்ய கூறினார் சிவகாமி. 

 

தடபுடலாக மதிய உணவு தயாராகிக் கொண்டிருக்க, கோயிலில் மனம் உருகி வேண்டிக் கொண்டிருந்தாள் சிவன்யா. 'அவருக்கு விருப்பமில்லாத திருமணம் தான். ஆனால் நீ மனசு வைத்தால், சீக்கிரமாக அவர் மனதை மாற்றி என்னை மனதார ஏற்றுக்கொள்ள வைக்க முடியும். என் வாழ்க்கையே உன் கையில் தான் இருக்கிறது தாயே! தயவு செய்து எங்கள் இருவருக்கும் நலமான வாழ்க்கையை தா" என்று வேண்டிக் கொண்டாள். 

 

சாமி கும்பிட்டு முடித்ததும் கோயிலைச் சுற்றி வந்து, ஓரிடத்தில் சிறிது நேரம் அமர்ந்திருக்க, நளினி தான் ஓயாமல் இருவரிடமும் ஏதாவது பேசிக்கொண்டே இருந்தாள். 

 

"கொஞ்சம் அமைதியா இருக்கியா? லொட லொடண்ணு பேசிக்கிட்டே இருக்க" என்று ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து கூறினான் தேவ். 

 

அவளும் ஒருசில விநாடிகள் அமைதியாக இருந்துவிட்டு, மீண்டும் ஏதோ பேச ஆரம்பித்து விட்டாள்" 

 

"ஊஃப்" என்று பெருமூச்சு விட்டு தோள்களை குலுக்கி, "உன்னை திருத்தவே முடியாது" என்று சொல்லிவிட்டு எழுந்து விட்டான் தேவ். 

 

அவன் எழுந்ததும் சிவன்யாவும் எழுந்து விட, அவர்கள் கூடவே நளினியும் மீண்டும் எழுந்தாள். 

மீண்டும் ஒருமுறை சுவாமியை பார்த்து கும்பிட்டு விட்டு வெளியே வந்தாள் சிவன்யா. 

 

வரும்பொழுது அவ்வளவாக வெயில் இல்லாததால் நடந்தே வந்து விட்டார்கள். ஆனால் இப்பொழுது வெயில் சுளீர் என்று அடிக்க, "ஆட்டோ பிடித்து விடலாமா?" என்றான் தேவ். 

 

இரண்டு தெரு போவதற்கு ஆட்டோவா என்று யோசித்த சிவன்யா என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருக்க, 

"பக்கத்து தெருவுக்கு போறதுக்கு ஆட்டோ புடிக்கணுமா? வாங்க நடந்தே போகலாம் என்று முன்னால் விறுவிறுவென்று நடந்தாள் நளினி. 

 

"ஏய் நளினி, மெதுவா போ" என்று அவளை பிடிப்பதற்காக சற்று வேகமாகவே சிவன்யாவும் நளினியின் பின்னால் செல்ல, 'இந்த பொம்பள பிள்ளைங்க, ஏதாவது சொல் பேச்சு கேட்குதா?' என்று மனதில் நினைத்துக் கொண்டு அவர்கள் பின்னே நடந்தான் தேவ்வும். 

 

வேகமாக முன்னால் சென்ற நளினி அங்கிருந்த ஐஸ் கிரீம் கடைக்கு முன்பு வந்து நின்று விட்டாள். 

"ஏன் இங்கே நிற்கிறாய்? வா போகலாம்" என்று அழைத்த சிவன்யாவிடம், 

"அண்ணி, ஐஸ்கிரீம்!" என்று கடையை காண்பித்தாள். 

 

அவளின் செய்கையில் சிரித்துவிட்ட சிவன்யா, பின்னால் திரும்பி தேவ்வை பார்க்க, 

"ஊஃப்" என்று பெருமூச்சு விட்டு, "இதற்கு தான் நீ முன்னால் வந்தாயா?" என்று கேட்டுக் கொண்டே கடைக்குள் நுழைந்தான். 

 

"ஆமாம், பின்ன நீங்க பாட்டுக்கு ஆட்டோ புடிச்சிட்டீங்கன்னா, ஐஸ்கிரீம் எப்படி சாப்பிடுவது" என்று சொல்லிவிட்டு, தனக்குத் தேவையான ஐஸ்கிரீமையும் கூறினாள். 

 

சிவன்யாவிற்கும் என்ன வேண்டும் என்று கேட்டு, மூவருக்கும் ஐஸ்கிரீம் வாங்கி வந்து அமர்ந்தான் தேவ். 

மிகவும் ரசித்து ரசித்து சாப்பிட்டாள் நளினி. 

சாப்பிட்டு முடித்ததும், "நீங்க மெதுவா போய்கிட்டு இருங்க. நான் காசு கொடுத்துட்டு வருகிறேன்" என்று கூறி கடைக்காரனிடம் சென்றான் தேவ். 

 

"எல்லோரும் ஒன்றாகவே போகலாமே!" என்று சிவன்யா சொல்ல, 

"அண்ணன் தான் சொன்னாங்கல்ல அண்ணி. நீங்க வாங்க, நாம மெதுவா நடந்துகிட்டு இருப்போம். அதுக்குள்ள அவர்களும் வந்து விடுவார்" என்று சொல்லி சிவன்யாவை பிடித்து இழுத்துக் கொண்டு வந்தாள் நளினி.  

 

இவர்கள் பேசிக்கொண்டே மெதுவாக நடந்து வீட்டு வாசலுக்கு வருவதற்குள், அவர்களின் பின்னாடியே வந்து விட்டான் தேவ். 

"பத்திங்களா அண்ணி, நான் சொன்னேனே! அண்ணன் வேகமா நடக்கும்" என்று சொல்லிவிட்டு, அவன் கையில் இருந்த பையை பார்த்து "ஐ, அண்ணா ஐஸ்கிரீம் வாங்கிட்டு வந்தீங்களா?" 

 

"நாம மட்டும் சாப்பிட்டோமே! வீட்டில் உள்ளவர்களுக்கு வாங்கிக் கொண்டு வரவில்லையே! என்று எனக்கு தோணவே இல்லை பாருங்கள்" என்று அண்ணனின் கையில் இருந்த கவரை வாங்கினாள் நளினி. 

 

அவள் கையில் கொடுத்து, அவள் தலையில் லேசாக கொட்டி விட்டு, "அந்த எண்ணம் எல்லாம் உனக்கு ஏன் வரப்போகுது? நாம மட்டும் சாப்பிட்டால் போதும், அப்படித்தானே!" என்று புன்னகையுடன் சொல்லிக் கொண்டே வீட்டுக்கு வந்தார்கள். 

 

வேகமாக சமையல் அறை சென்று குளிர்சாதன பெட்டியில் ஐஸ் கிரீமை வைத்துவிட்டு, அத்தையிடம் "அத்தை மதியானம் சாப்பிட்டதும், ஐஸ்கிரீம் சாப்பிடலாம்" என்று சொல்லி மகிழ்ந்தாள். 

 

மதிய உணவு தயாராக இருக்க அனைவரையும் உணவு உண்ண அழைத்தார் சிவகாமி. 

 

ஒற்றுமையாக. குடும்பமாக அனைவரும் பேசி மகிழுந்து உணவு உண்டனர். அப்படியே நேரம் கடக்க? சாயங்காலம் விஸ்வநாதன் குடும்பம் கிளம்பும் நேரம் வந்தது. 

 

நளினி சோகமாக கிளம்ப, பெரியவர்கள் அனைவரிடமும் விடை பெற்று, மருமகளை அழைத்துக் கொண்டு பத்திரமாக வரும்படி மகனிடமும் சொல்லிவிட்டு, "எல்லோரும் ரிசப்ஷனுக்கு வந்துடுங்க" என்று சொல்லி ரயில் நிலையத்திற்கு கிளம்பினார்கள். 

 

இரண்டு கார்களில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு அனைவரும் கிளம்பி விஸ்வநாதன் பார்வதி நளினியை பத்திரமாக ரயில் ஏற்றி விட்டு, வீட்டிற்கு வந்தார்கள். 

 

மறுநாள் இனிமையாக விடிய, சிவநேசனும், மேகநாதனும் பத்து நாட்கள் விடுப்பு எடுத்திருந்ததால் வீட்டில் இருக்க, "சிவன்யாவை அழைத்துக் கொண்டு எங்காவது சென்று வாருங்கள் மாப்பிள்ளை" என்றார் சிவநேசன். 

 

"கொஞ்ச நாளில் இவள் துபாய் வந்துவிடுவாள் அல்லவா? அதுவரை அவள் உங்களுடன் நேரம் செலவழிக்கட்டும் மாமா" என்று, சரிதானே என்பதுபோல சிவன்யாவை பார்த்தான் தேவ். 

 

சிவன்யாவின் பெற்றோருக்கு அவனது செயல் மகிழ்ச்சியாக இருந்தது. அங்கு இருந்த இரண்டு நாட்களும், அவன் தன் மாமனார் மாமியாருடனும் மேகநாதனுடனும் அதிக நேரம் செலவழித்தான். 

 

மற்ற நேரங்களில் எப்பொழுதும் கையில் ஃபோனுடனோ அல்லது லேப்டாப் உடனோ இருந்து விடுவான். சிவன்யாவுடன் பேசும்போது மட்டும் ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லி விடுவான். 

 

அவள் அவன் அருகில் அமர்ந்தால் கூட நாசூக்காக விலகி அமர்ந்து கொள்வான். அவனது செயல், அவளை அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று அப்பட்டமாக தெரிந்தது. அவளுக்கு வருத்தமாக இருந்தாலும் தன் பெற்றோர்களிடத்தில் அவன் நல்லவிதமாக பேசுவதை கண்டு மகிழ்ச்சியாகவே இருந்தது. 

 

இப்படியே ஊருக்குச் செல்லும் நாளும் வர, எல்லோரும் இருக்கும் பொழுது தன்னுடன் நல்லவிதமாக பேசுபவன், தனியாக இருக்கும் பொழுது தன்னை விட்டு ஒதுக்கமாக இருப்பதைக் கண்டு குழப்பமாகவே, ஊருக்கு கிளம்பினாள் சிவன்யா. 

 

- தொடரும்..

 

- அருள்மொழி மணவாளன்..


 
Posted : July 24, 2026 6:37 pm

Scroll to Top