அத்தியாயம்-4
மதுரை விமான நிலையம், வெளியே வரும் கூட்டத்தில்,
உயரமான ஆறடி உருவத்தில், பிளாக் ஷர்ட், லைட் ப்ளூ ஜீன்ஸ், கூடுதலாக கவர்ச்சிகரமான கண்ணாடி, நிமிர்ந்த நடையும், அவனது ஒவ்வொரு நடைக்கும், கூட தாளமிட்டபடி வந்தான் இனியன்.
கண்ணாடியை மெதுவாக கழற்றினான். எதிரே அருளாளன் மகனை கண்டு பூரிப்போடு நடந்து வர, தந்தையை கண்டு புன்னகைத்தான்.
பிறகு அங்கிருந்தபடி கண்களை சுற்றி பார்த்தான். இனியன் இங்கிருந்து சென்றப்போது, இருந்த அதே ஊரின் மண்வாசனை.
“மதுரை இன்னும் அதே மாதிரி அப்படியே இருக்குப்பா” என்று காரில் ஏறினான்.
“ம்ம்ம் அதெல்லாம் எதுவும் மாறாது.” என்று கூறியவர், மகனிடம் தன் விருப்பத்தை கூற நேரம் பார்த்தார்.
வரும் வழியெல்லாம், “ஏம்பா… படிப்பு முடிச்சி இத்தனை மாசம் ஏதோ அங்கயே இருக்க போவதா பிஸினஸ் பார்க்கறதா பேசிட்டு இருந்த. அதெல்லாம் என்னாச்சு?” என்றார்.
இனியனோ “அதெல்லாம் ட்ரை பண்ணினேன்ப்பா. கொஞ்சம் சில வேலை இழுக்கு. அதனால தான் அதுவரை இங்க வந்துட்டேன்.” என்றான்.
“அப்படியா? அப்ப இங்க கொஞ்ச நாள் தான் இருப்பியா?” என்றார். இனியனை நம்பி பலவித கனவு கோட்டையை கட்டியவருக்கு ஏமாற்றத்துடன் கேள்விக் கேட்டார்.
“தெரியலைப்பா. பார்ப்போம். நாளைக்கு நடப்பதை பத்தி இன்னிக்கு யோசிக்க கூடாது. அதான் என் பாலிசி.” என்று தத்துவம் பேசி சிரித்தான்.
“அதுசரி” என்ற அருளாளனுக்கு இப்பொழுதே அதிருப்தி. அதற்காக வந்த அன்றே எதையும் இனியன் தலையில் ஏற்றவும் முடியாத நிலையில் அமைதியானார். இத்தனை கால அனுபவம், இனியனை வீட்டிற்கு அழைத்து சென்று, நிதானமாக பேசிட முடிவெடுத்தது.
அப்படி கார் பயணத்தில் வண்டியை நிறுத்த கூறி, “வாவ்… அப்பா..அதெல்லாம் நம்ம தோட்டமா?” என்று கேட்டான். இனியன் இறங்கி அவ்விடத்தை ரசித்து பார்த்தான்.
“அட அது உன்ற சித்தப்பனோடது. எல்லாம் தரிசா இருந்ததுனு, சொத்துல அதை தள்ளி விட்டது. ஆனா அகிலன் பள்ளிக்கூடம் படிக்கற வயசுலயிருந்து, நிலத்துக்கு என்னத்த போட்டு வளர்த்தானோ. தரிசு நிலம் எல்லாம் விளை நிலமா போயிடுச்சு. நல்லா செழிப்பா தான் பயிரும் வளருது. இந்தா… பேயை நினைச்சா பிசாசே வருமாம். இந்தா அவனே இருக்கான் பாரு” என்றார்.
இனியன் காரை நிறுத்திவிட்டு, வயல் வாசம் காற்றோடு கலந்திருக்க, அந்த மண்ணை கையில் எடுத்துக்கொண்டு நின்றான்.
அவன் மனசு அமைதியா இருந்தாலும், உள்ளே எங்கோ ஒரு ஏளனம். இதில் வந்ததும் வராததும் அகிலன் வரவும் ஏளனம் குடிப்பெயர்ந்தது.
அந்த ஊரில் சாதாரணமா வராத பெரிப்பா கார். இன்று நேராக வயல் பக்கம் வந்து நின்றதும், அகிலன் புருவம் சுருக்கினான்.
பெரிப்பாவா என்று கூர்ந்து பார்க்க, கார் கதவு மெதுவாக திறந்து வந்த கால்கள் ப்ளூ ஜீன் அணிந்திருக்க, பிறகு முழு உருவமாக பிளாக் ஷர்ட்டில், கண்ணாடி அணிந்தவனின் பார்வையே சொல்லியது இனியன் என்று.
இனியன் நடந்து அகிலன் முன் வந்தான். சாதாரணமாக அல்ல. ஏதோ அதிகாரம் காட்டுபவன் போல நின்றான். இனியன் கண்ணாடியை கழற்றி, நேர்கொண்ட பார்வையாக, அகிலனை பார்த்தான்.
“ஹாய்… நீ அகிலன் தானே?” என்று இனியன் கேட்டதும், பரவாயில்லையே பெரிப்பா இனியனிடம் தன்னை பற்றி எடுத்துரைக்க அவனாக வந்து நின்று நலம் விசாரிப்பதாக எடுத்து கொண்டு முகம் பூவாக மலர்ந்து,
“நானே தான். நீ இனியன் தானே?” என்று அகிலன் சிரிச்சான்.
“ஆள் அசரடிக்கற மாதிரி வந்து நிற்கறேன் தெரியாத மாதிரி கேக்கற?” என்றா இனியன் லேசாக தலையை சாய்த்தான்.
“தெரியுது இனியா. பெரிப்பாவோட வந்திருக்க தெரியாமலையா? உனக்கு என்னை அடையாளம் தெரியுதே அந்த வகையில் சந்தோஷம்” என்றான் அகிலன்.
“அடையாளமா… அதான் நீ இவ்வளவு பேமஸ் ஆகியிருக்கியே. எங்க வீட்டு மருதுவை அடக்கிய காளைனு.. உன்னை இந்தளவு வீராதி வீரன்னு எதிர்பார்க்கலை.” என்று இனியன் பேச பேச அகிலன் சிரிப்பு கொஞ்சம் கூர்மையானது.
“நீ ஊர்ல இல்லாத நேரத்துல பெரியப்பா சொல்வதை கேட்டு தானே வளர்ந்திருப்ப.?” என்றான் அகிலன்.
இனியனோ “அப்பா சொல்லி தெரிந்த கதை தான். ஆனா.. இனி இந்த இனியன் புகழும் பரவும். இனியன் இருந்தா அங்க அவன் தானே சிங்கம்” என்றான்.
சிறுவயதில் இனியன் முன் அகிலன் அந்தளவு சண்டைக்கு செல்ல மாட்டான். அப்படியே சென்றாலும் அதியமான் அதட்டி மன்னிப்பு கேட்க கூறி தடுத்திடுவார். அதனால் எப்பொழுதும் இனியன் எல்லா விதத்திலும் அதிகாரமாக எண்ணி பெரியாளாவான். அதை இன்றும் சொல்லிக் காட்டினான். தற்புகழ்ச்சியும் பெருமையும் பேசி திரிந்தான்.
“அப்ப சின்ன வயசு… எது தப்பு எது சரின்னு தெரியாது. நம்ம தப்பு செய்யாட்டியும் அப்பா மன்னிப்பு கேட்க சொன்னா அவர் வார்த்தைக்கு மதிப்பு தந்துடுவேன். இப்ப அதே அகிலன் இல்ல இனியன்.” என்றான் அகிலன்.
இனியனும் கண்ணாடியை சுழற்றி அகிலன் பேசியதை கேட்டவன், அந்த கண்ணாடியை அணிந்தவாறு, “நானும் அதே இனியன் இல்லை அகிலன். எனிவே கங்கிராட்ஸ்… தரிசு நிலத்தை விவசாய நிலமா மாத்திட்ட. மூளைக்காரன் தான்.” என்று வாழ்த்தினான்.
“தேங்க்ஸ்” என்றான் அகிலன்.
அருளாளனுக்கு எரிச்சல் மண்டியிட, “டேய் இனியா.. போதும் பேசியது வெயில்ல நின்று கருத்துட போற. ஏசி கார்ல ஏறு. வீட்டுக்கு போவோம்.” என்றார்.
அகிலன் என்ன தான் உயரமும் கட்டுடலும் கொண்டவனாக இருந்தாலும், இனியனை விட நிறம் குறைவு தான்.
அதை சொல்லிக் கூட சிறுவயதில் ‘கருப்பா’ என்று இனியன் கேலி செய்தது உண்டு.
இன்றும் அருளாளன் அதை தான் மறைமுகமாக சுட்டிக் காட்டி பேச, அகிலனோ அவர்கள் சென்றதும் தன் நிறத்தை கவனித்தான். அப்படியொன்றும் கருப்பு இல்லை. ஆண்கள் இந்த நிறத்தில் இருப்பதே அதிசயம்.
முன்பானால் சிறுப்பிள்ளையான அகிலனுக்கு தாழ்வுமனபான்மை வந்ததுண்டு. இன்று பல அறிவும் அனுபவமும் கண்டவனுக்கு நிறமல்லாம் பொருட்டாகவே தெரியவில்லை.
ஆனால் அருளாளன் அதை தான் முன்னிருத்தி பேசி அகன்றதும் ‘இப்ப தான் ஊருக்குள்ள அடியெடுத்து வச்சியிருக்கான். அதுக்குள்ள நேரா என்னை வந்து பார்த்து பேசிட்டு போறான்னு நினைக்கவா? இல்லை என்னிடம் வம்பளந்துட்டு போறான்னு நினைக்கவா? மதுரை மீனாட்சி தாயே… நீயே பதில் சொல்லு.’ என்று வானம் பார்த்து வணங்கினான் அகிலன்.
இனியனும் அகிலனும் மாதக்கணக்கில் மட்டுமே பெரியவர் சிறியவர். அதனால் இனியனை அண்ணன்னும் சொல்ல முடியாமல் அகிலன் நின்றான்.
இனியன் காரில் “என்னப்பா மருது குத்தி கிழிச்சதுனு சொன்னிங்க. ஆனாலும் கல்லு மாதிரி நிற்கறான். மருதுவை விலைக்கு விற்றது கரெக்ட்பா” என்றான் இனியன்.
“இனியா… நீ இன்னிக்கு தானே வந்த. உன்னிடம் நான் நிறைய பேசணும். இவனை அழிக்க நான் சில விஷயத்தை யோசித்து இருக்கேன். நீ அதையெல்லாம் கேட்டு நடந்தா மட்டும் தான் இவன் கொட்டம் அடங்கும்.” என்றார் அருளாளன்.
“நான் கூட நிறைய பேசணும் அப்பா. அதோட இந்த அகிலனை உண்டில்லைனு ஆக்கணும். உங்களுக்காக என்ன வேண்டுமின்னாலும் செய்வேன்.” என்று வாக்கு தந்தான்.
அருளாளனுக்கு இந்த வார்த்தை போதுமே ஆனந்தமாக வீட்டிற்குள் வந்தார்.
வீட்டில் மகன் வருவதாக தெரிந்ததால் வாசலிலேயே இனியனின் அன்னை வேல்விழி ஆலம் கரைத்து வைத்திருந்தார்.
மகனை கண்டதும் கற்பூரம் ஏற்றிவிட்டு, “கண்ணா இனியா… எப்படிய்யா இருக்க. படிப்பெல்லாம் முடிச்சிட்டு ஒரெடியா வந்துட்டதா உங்கப்பாரு சொன்னாரு. நிசமா?” என்று கேட்க இனியன் விழித்தான். அவன் கொஞ்ச நாளில் செல்லும் நோக்கத்துடன் தான் வந்திருந்தான்.
“அதில்லைம்மா…” என்று கூறவந்தவனை, “அடியேய்… அந்த அகிலனுக்கு ஒரு முடிவு கட்டற வரை இனியன் இனி எங்கயும் போக மாட்டான்.” என்று பேச இனியன் தந்தை சொல்வதை ஏற்றவனாக தலையாட்டினான்.
“ஏய்.. எழிலரசா.. ஏதோ படிக்கறதா கேள்விப்பட்டேன். படிப்பெல்லாம் எப்படி போகுது.” என்று பொறுப்புள்ள அண்ணனாக இனியன் தம்பியை விசாரித்தான்.
“நல்லா போகுதுன்னா. நீ எப்படி இருக்க?” என்றான் எழிலரசன்.
“ஜம்முனு இருக்கேன். நீயேன்டா அமெரிக்கா போய் படிக்க மறுக்கற.” என்று தம்பியின் தோளில் உரிமையாக கைப்போட்டு பேசினான்.
“இந்த பாழா போன இங்கிலிஷு அந்தளவு வராதுன்னா. தனியா போய் அவஸ்தைப்படுவேன்” என்றான் எழிலரசன்.
வேல்விழி சமைத்து வைத்து காத்திருக்க, இனியன் குளித்துவிட்டு வருவதாக சென்றான்.
இனியன் குளியலறை செல்லவும் இரண்டு மூன்று முறை ‘Kavya Calling’ என்று வந்து தவறிய அழைப்பில் காட்டியது.
இனியன் தலைத்துவட்டி வந்த பொழுதும் அழைப்பு வரவே, அதை எடுத்து காதில் வைத்து, “சொல்லு காவ்யா?” என்று அஸ்கி குரலில் பேசி கதவை மூடினான்.
“என்னடா சொல்லணும். ஊருக்கு போனதும் கால் பண்ணறேன்னு சொன்ன. இப்ப என்னடான்னா அங்க போய் மூன்று மணி நேரம் ஆகியிருக்கும். ஒரு போன் கூட இல்லை. அட்லீஸ்ட் ரீச் ஆனதையாவது சொல்லலாம்ல.” என்று பொரிந்தாள்.
இனியனோ “ஏ பேபி… நான் வந்ததும் கால் பண்ண நினைச்சேன் டி. அப்பா கூடவே இருந்தார். அதான் கால் பண்ண முடியலை. இப்பதான் குளிச்சிட்டு வந்தேன். போன் அடிச்சதை பார்த்தேன். நான் மதுரை வந்துட்டேன் பேபி. இப்ப ஓகே தானே? உன்னால என் போன் கால் இல்லாம இருக்க முடியாதா பேபி” என்றான்.
“ஓகே தான். உன் போன் இல்லை என்றதும் வெக்ஸ் ஆகிட்டேன்டா” என்று குரல் குழைந்தப்படி வந்தது.
“என் புஜ்ஜிம்மா… இதுக்கு எல்லாம் பீல் ஆகலாமா? நம்ம காதலை சொல்லி அப்பாவிடம் பர்மிஷன் வாங்க தானடி வந்தேன். இப்பவே பேச முடியுமா? அதோட இங்க சில கணக்கு முடிக்கணும்.
அதென்னவோ இங்க இல்லாதப்ப அகிலன் என்ற கேரக்டரையே நான் மைண்ட்ல வச்சிக்கலை. ஆனா இங்க வந்து மதுரை மண்ணை மிதிச்சதும், எனக்கு அவன் தான் கண்முன்ன வர்றான். யூ நோ பேபி… வர்ற வழில அவனை தான் முதல்ல பார்த்தும் தொலைச்சேன்.” என்றான்.
காவ்யா என்பவளோ “சரிடா… நீ அங்க ரீச் ஆகிட்டியானு கேட்க தான் கூப்பிட்டது. இப்ப ஓகே. நான் போனை வைக்கட்டுமா?” என்று கேட்க, “போன் வைக்க மனசேயில்லை பேபி. ஆனா அம்மா கதவை தட்டறாங்க. உனக்கு சவுண்ட் கேட்குதா? நான் போய் பேசி, சாப்பிட்டுட்டு வந்துடறேன்.” என்றான். காவ்யாவுமே “ஓகே டியர்” என்று துண்டித்துவிட்டாள்.
இனியன் பூனை போல கதவை திறந்து “என்னம்மா வெளியே வரமாட்டேனா?” என்று சலித்துக் கொண்டான்.
“வந்ததும் பசிக்கும்ல. பிள்ளைங்க சாப்பிடாம இருந்தா பெத்தவ மனசு உடைச்சிடுமே. உனக்கு பச்சை தண்ணீர் தரலை. சாப்பிட வேண்டாம்?” என்று தலைவாழை விருந்து படைத்தனர். அருளாளன் வேல்விழி இருவரும் விழந்து விழுந்து உபசரித்தனர்.
எழிலரசனோ அண்ணனை கண்டு மகிழ்ந்தவனாக ஜோதியில் ஐக்கியமானான். அவன் இந்த முதல் வருடம் தான் கல்லூரியில் சேர்ந்திருக்க, அண்ணனை போல வெளிநாட்டில் சேரவிடவில்லை வேல்விழியோ ‘ஒருத்தன் போனான். நீயும் அங்க போனா அம்மா அப்பாவை மறந்துடுவ’ என்ற உப்புசப்பில்லா காரணத்தை உரைத்து மதுரை தாண்டவிடவில்லை. எழிலரசனும் அப்படியொன்னும் வெளிநாட்டு மோகம் பிறக்காமல் இருந்தான். அவனுக்கு ஆங்கிலமும் சரளமாக பேச வராது. அதனால் அகிலன் படித்த கல்லூரியில் தான் எழிலரசனும் படிக்கின்றான்.
இனியனை அன்னை தந்தை ஸ்பெஷலாக கவனிப்பதை கண்டு எழிலரசன் ஆச்சரியப்பட்டான். இனியனோ வீட்டுக்கு வந்ததும் தாய்தந்தை கவனிப்பில் ராஜாவாக உணர்ந்தான்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.

Super sis nice epi semmaiya pogudhu story 👍 evan enna avanga appavaiye minjiduvaan polaye vandhadhum vambizhukuran🙄😐
ஆக மொத்தம், பெத்தவங்களே பிள்ளைங்களே கெடுத்து விடறாங்க.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Iniyan unga appa oda plan enna nu muzhusa ketu mandai aatu appuram avar oda plan unnoda love ku vettu ah irundhuda poguthu
Wow super super. Parents sometimes give more affection to children that causes ill to.the child. Very intresting sis.
இந்த இனியனாவது படிச்ச புத்தி இல்லாதவான இருக்கான்
Super super super super interesting
Superb epi interesting