மதுர ஜில்லா… மச்சானே!-3

அத்தியாயம்-3

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முடிந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. இன்னும் ஊரில் பேசப்படுகின்ற ஒரே விஷயம். ‘அகிலன் மருதுவை அடக்கிய கதையே’ தேயிலை கடை முதல் பஞ்சாயத்து வரை, எங்கே பார்த்தாலும் அதே பேச்சு.

அந்த பேச்சு அருளாளனுக்கு மட்டும் நஞ்சு போல காய்ந்திருந்தது. அவர் வீட்டின் முன் திண்ணையில் அமர்ந்திருந்தார்.

கையில் போனை எடுத்து தீவிரமாக சிந்தித்தார். ‘இவ்வளவு நாளா நான் அமைதியா இருந்ததால தான்,
அந்த பையன் இவ்வளவு உயர்ந்துட்டான். இனி அவனை வளர விடக்கூடாது’ என்று முடிவெடுத்தார்.

தனது அலைப்பேசியில் பெரிய மகன் இனியனுக்கு அழைத்தார்.”

“ஹலோ” என்றது இனியனின் மிடுக்கான குரல்.
“இனியா” என்று அருளாளன் அழைத்திட, “சொல்லுங்க அப்பா” என்றான் இனியன். அருளாளன் கண்கள் மெதுவாக ஒளிந்தது. எத்தனை பிள்ளைகள் எடுத்ததும் சலித்துக் கொண்டு பேசுவார்கள். இனியன் அமெரிக்காவில் படித்தாலும் பணிவாக பேசுவதை கண்டு உவகைத்தார்.

“இனிய நீ படிச்சி முடிச்சிட்டியாப்பா. நம்ம ஊருக்கு எப்போ வருவ. அம்மை எல்லாம் உன்னை பொங்கலுக்கு வரலைன்னு விசனப்பட்டா” என்று சுருக்கமான கேள்வியை கேட்டார்.‌

“ஆல்ரெடி படிப்பு முடிஞ்சு தான் இங்க இருக்கேன்பா. எழிலரசனிடம் அதை சொன்னேன். தம்பி மறந்திருப்பான். இங்க சில வொர்க் விஷயமா தான் இருக்கேன். ஏன் அப்பா.‌. எப்ப வரணும் சொல்லுங்க வந்துடறேன்?” என்றான் இனியன்‌

ஏன் வரணும் என்று எதுவும் கேட்காமல் எப்ப வரணும் என்று கேட்டான் இனியன். அதில் அருளாளனுக்கு கர்வம் கூடியது. முகத்தில் ஆனந்த சிரிப்போடுப் பூரித்தார். “நான் சொன்னா ஏன் எதுக்குனு காரணமில்லாம வந்துடுவியா இனியா?” என்றார். எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றம் வந்திடக்கூடாதல்லவா. அதெல்லாம் அருளாளன் கணக்கிட்டு கேட்டார்.

ஒரு நொடி அமைதியான இனியன், இரண்டு நாளாக தாய் வேல்விழி, தந்தை புலம்பியதை கூறியதால் விவரம் தெரிந்தவனாக இருந்தான்.
அதனால் “என்னை படிக்க வச்சி வளர்த்தவரு. வான்னா வராம இருப்பேனா அப்பா. எனக்கு மத்ததெல்லாம் இரண்டாம் பட்சம் தான்.
நான் ஊருக்கு வர பிளைட் டிக்கெட் கூட எடுத்துட்டேன்”
இன்னும் ஒரு வாரத்துல நம்ம ஊர்ல இருப்பேன்.” என்றான் இனியன். அருளாளன் முகத்தில் மெதுவாக நிறைவான சிரிப்பு பிறந்தது.

இப்ப தான் விளையாட்டு ஆரம்பம். இனியன் வரட்டும் எனக்கு பதிலா இனியனையே நிற்க வைத்து பஞ்சாயத்து தேர்தல்ல அகிலன் மூக்குடைக்க வைக்கறேன் என்று எண்ணினார்.


அகிலனோ இவ்விஷயம் எதுவும் அறியாதவன், மருதுவின் புண்ணியத்தில் வீட்டில் தான் ஓய்வெடுத்தான்.

வேலை வேலைக்கு மருந்தும் மாத்திரையும், காயத்திற்கு களிம்பும் என்று நேரம் சுழன்றது.
தூரிகா மட்டும் கல்லூரிக்கு பறந்தாள்.

மதுரவாணி எல்லாம் படிப்பு பதினொன்றாவது படிக்கும் போதே படிப்பு வரலை என்று படிக்க செல்ல மறுத்துவிட்டாள். தூரிகா மட்டும் படிக்க வைப்பது அகிலனே.

மதுரவாணியையும் படிக்க கூறிய போது, “என் மண்டையில படிப்பு ஏறாது மச்சான். என்னைய விட்டுடுங்க. என்ற தங்கச்சி நிலானி படிக்கட்டும்” என்று மறுத்துவிட்டாள். அத்துடன் அவளது தந்தையும் பெரிதாக மகளுக்கு நல்வழிக் காட்டவில்லை. அவரது வீட்டு வம்ச வழியில் புள்ளைங்க படிச்சி புகுந்த வீட்டுக்கு தானே போகுது’ என்று பழமையில் ஊறியவர்கள்.

அப்படியிருக்க மதுரவாணியே படிப்பில் நாட்டமில்லாததால் விட்டுவிட்டனர். மதுரவாணியின் தங்கை நிலானி மட்டும் பனிரெண்டாம் வகுப்பு படிக்கின்றாள்.

தூரிகா கல்லூரிக்கு சென்றதால் மதுரவாணி அவளை காண வருவதற்கு தடையாக காத்திருந்தாள். அவளை வைத்து தானே அகிலனை காண வருவாள்.

ஆனால் இன்றோ அதிர்ஷ்டவசமாக இளையமதியே தன் சின்ன அண்ணனின் மகனை காண வந்தார். அவரோடு மதுரவாணி ஒட்டிக்கொண்டாள்.

“ஏ.. ராசா.. உனக்கு இந்த வேண்டாத வேலை. பெரியண்ணா வடதிசை போனா நீ தென் திசை போயிட வேண்டியது தானே? நானும் வட திசைக்கு தான் போவேன்னு உடும்பு பிடியா பிடிச்சா நல்லாவா இருக்கு? அவர் வயசென்ன? உன் வயசென்ன? இப்ப பாரு மருது உன்னை குத்தி கிழிச்சுவச்சியிருக்கு. அந்த மருதுவும் அடிமாட்டுவிலைக்கு ஏத்திவிட்டுட்டார்.” என்றார்.‌

அகிலன் சட்டென மதுரவாணியின்அன்னையிடம், “ஏன் அத்த. மருதுவை வித்துட்டாங்களா.? அடிமாட்டு விலைக்கா? அதென்ன தப்பு பண்ணுச்சு. இதே வேற யாரையவாது மருது நெருங்க விட்டுச்சா? நான் அடக்கவே எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா?” என்றான்.‌

இளையமதியோ ”அதென்னவோ அருளாளன் அண்ணனை கேள்வி கேட்க முடியுமா? மாடு இப்ப போயிடுச்சு.” என்றார்.

அகிலனுக்கு தாளயியலாத வருத்தம். அரசுவை போல தானே அந்த வீட்டில் அதை பார்த்து பார்த்து வளர்த்தார்கள். இன்று தன்னால் அதன் நிலை இப்படி மாறியதில் கவலைப்பட்டான்.
ஒரு உயிரை இப்படி துச்சமாக பார்ப்பார்கள் என்றால் வெற்றியை விட்டு தோல்வியை தழுவி, விட்டு விலகியிருக்க வேண்டுமோ? அகிலன் மனதில் இதுவே குடைந்தது.

மீனாட்சியோ மகனின் மனம் வாடுவதை அறிந்தவராக, ”ம்கூம்.. பெரியவரு பிடிவாதம் என்ற மகனாவது அடக்கறானே. அதையும் முடக்கிடாதிங்க அண்ணி. அடங்கி அடங்கி தான் உங்க சின்ன அண்ணன் பெரியவரை எதிர்த்து பேசறதேயில்லை. யாராவது ஒருத்தர் கேட்டா தானே. அது அகிலனா இருக்கட்டும்.
ஆமா… உங்க பெரிய அண்ணன் பையன் இனியன் ஊருக்கு வரப்போவதா பேச்சு அடிப்பட்டுச்சு. நிசம் தானா?” என்று கேட்டார்.

அகிலனுக்கும் இனியன் ஊருக்கு வருகின்றானா? படிப்பு முடிந்ததா? என்று ஆர்வமாக அத்தை இளையமதியின் பதிலை கேட்க ஆவலாக கண்டான்.

“ம்ம்ம்… எல்லாம் நிசம் தாங்க அண்ணி. இனியன் தம்பி எழிலரசனிடம் ‘இனியன் வர்றானா’னு கேட்டேன். அதுக்கு அவன் ஆமா அத்தை.. அப்பாவுக்கு பிறகு பஞ்சாயத்து தேர்தல்ல நிற்க அண்ணனை வரவழைக்கப் போறாராம்.’னு சொன்னான்.

ஆகிலன்.. புரிந்ததா ராசா? நீ நிற்கறது எங்க பெரியண்ணாவுக்கு பிடிக்கலை. அதான் இனியனை நிறுத்த முயற்சி பண்ணறார்.
என்னய கேட்டா நீயும் நல்ல வேலை உத்தியோகம்னு வெளிநாட்டுல படிச்சி, அங்கனையே வேலைக்கு சேர்ந்திருக்கலாம். இங்க விவசாயப்படிப்பு தேவையா? இங்கயே இருந்து உறவுக்குள்ள சண்டையை தான் இழுத்து வைக்குது” என்றார்.‌

அகிலனோ இடைப்புகுந்து, “அத்தை… நான் எங்க சண்டையை இழுக்கறேன். இப்ப கூட பாருங்க இனியன் அவன் படிச்ச படிப்புக்கு வேலை பார்க்கட்டும்னு யோசிக்கறாரா? என்னோட ஏன் மோத விடறார். பெரிப்பா தான் என்னைய சீண்டறார்.” என்று கோபப்பட்டான்.

மீனாட்சியும் “அதானே.. என் புள்ளைய சீண்டறதே பெரியவருக்கு வேலை. நீங்க என்ன மதினி என்ற பிள்ளையை விவசாய படிப்பை குறை சொல்றிங்க” என்று முகம் தூக்கி வைத்தார்.

அந்த நேரம் பார்த்து அதியமான் வந்தவரோ “ஆமாடி… இருக்கற பிரச்சனையில நீ வேற, பையனிடம் கொம்பு சீவற. எப்பா… இத்தனை நாள் ஏதோ பதிலுக்கு பதில் பண்ணியது போதும். இனி அவரா வெத்தலை பாக்கு வச்சி சண்டைக்கு அழைச்சாலும் போகாதிங்க.” என்றார்.‌

“ஏன்பா. எப்பவும் நியாயமில்லாம மல்லுக்கு நின்றா எதிர்த்து பார்த்திடுனு சொல்விங்க.” என்றான் அகிலன்.

அதியமானோ ”இனியன் வர்றானாமே. இங்கயே இருக்கப் போறதா கேள்விப்பட்டேன். எங்க தலைமுறை தான் முட்டிக்கிட்டு இருக்கோம். நீங்களாவது ஒன்னுமன்னா பழகாட்டியும் சண்டை சச்சரவு இல்லாதவங்களா இருக்கணும்னு தான்.” என்றார்.‌

இப்பொழுது அண்ணனுக்கு ஏற்ற தங்கையாக இளையமதியும், “அதை சொல்லுங்க அண்ணா. நானும் அதை தான் சொல்ல நினைச்சேன். வளர்ந்த இரண்டு பிள்ளைங்க, படிச்சவங்க வேற, நல்லபடியா பேசி பழகி பழைய உறவை புதுப்பிக்கலாம்.” என்றார்.‌

மீனாட்சியோ “என்னவோ அகிலன் சண்டை பிடிக்கற மாதிரி பேசறிங்க. உங்கண்ணா தானே இவனை நோண்டிட்டு இருக்கார்.” என்று சத்தமிட, அதியமானோ “மீனாட்சி சும்யாயிருக்க மாட்டியா?” என்று அதட்டினார்.‌

மீனாட்சியோ “ம்கூம் இரண்டு பேரும் பெரியவருக்குன்னா விட்டு தந்துடறது.
மதினி.. புகுந்த வீட்ல கோலாட்சி செலுத்த முடியாட்டியும் பிறந்த வீட்ல உங்க பேச்சை எடுப்பட வைக்கறிங்க” என்று கூறிவிட்டு அகன்றார். இளையமதிக்கோ மதினி தன் புகுந்த வீட்டில் தன் பேச்சை யாரும் மதிப்பதில்லை என்றதை கூறிவிட்டு செல்வதில் மனம் சுணங்கினார்.

அகிலனோ தந்தை பேசியதை யோசித்து, “இனியனோட சண்டைக்கு நானா போகமாட்டேன்பா. ஆனா பஞ்சாயத்து தேர்தல்ல நிற்கறதுக்கு எல்லா வேலையும் பார்த்து வச்சிட்டேன். அதுலயிருந்து விலக முடியாது. என்னை நம்பி இளைஞர் அணில நிறைய பேர் சேர்ந்திருக்காங்க.
இனியனுக்கு இந்த கிராமத்து சூழல், பஞ்சாயத்து எல்லாம் சலிப்பை தான் தரும். அதனால ரொம்ப நாள் இருக்க மாட்டான். அமெரிக்கா நாட்ல படிச்சவனுக்கு இங்க இருக்கவும் முடியாது.” என்றான்.

அதியமானுக்கும் மகன் சொல்ல வருவது விளங்க, தோளில் தட்டி சென்றார்.

மீனாட்சியும் இளையமதியும் சமையலறை பக்கமாக பேசியபடி நகர, அதியமானும் வெளியேறியிருந்தார்.

ஹாலில் அகிலன் மதுரவாணி மட்டும் அமர்ந்திருந்தனர். தூரிகா கல்லூரிக்கு சென்றிருக்க மதுரவாணியிடம் பேச ஆளில்லாமல் இருந்தாள்.

தூரிகாவின் அறையை பார்த்து பார்த்து அகிலனை பார்வையிட அவனோ ”ஓழுங்கா படிச்சிருந்தா.. நீயும் காலேஜி போயிருக்கலாம்ல. பன்னிரொண்டாவது பெயிலுனு அப்படியே உட்கார்ந்துட்ட. ஊர்ல பதினொன்னாவது பாஸுனு சொல்லிட்டு திரியற. கேட்டா… பன்னிரெண்டாவது பெயிலுங்க. பத்தொன்பதாவது பாஸுங்கனு பழைய நடிகர் செந்தில் ஜோக்கை ஜம்பமா சொல்லறது. எப்படியாவது திரும்ப பன்னிரெண்டாவது பரீட்சை எழுதி பாஸாகி அரியர் வச்சி ஒரு டிகிரி முடிச்சிருக்கலாம்ல.” என்றான்.

மதுரவாணியோ “இப்ப எதுக்கு படிப்பு. நாளைப்பின்ன வீட்ல வந்து சமையக்கட்டை தானே கவனிக்க போறேன்.” என்றாள்.

“எந்த வீட்டு சமையலறையில? இப்பலாம் சமையல் அறையில அட்வான்டேஜா இன்டக்ஸ் ஸ்டவ், ஓவன், சப்பாத்தி மேக்கர், ரைஸ் குக்கர், ஏன் பாத்திரம் கழுவ கூட மிஷன் வந்துடுச்சு. அதெல்லாம் படிச்சு செய்யறதுக்கு அறிவு வேண்டாம்?” என்றான் அகிலன். அவன் பேச்சு பொடி வைத்து நின்றது.

“ம்ம்ம் அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். எல்லாம் கட்டிக்க போறவரு சொல்லித் தந்துக்கட்டும்” என்றாள்.

“உன்னை கட்டறவனுக்கு அதான் வேலை பாரு” என்றான் அகிலனும்.

“இப்ப என்ன… எதுவும் வரலைன்னா ஒரு‌மணி நேரத்தில, விறகடுப்புல கூட மணக்க மணக்க சமைச்சிடுவேன். கொஞ்ச நாள் முன்ன கேஸ் இல்லைன்னு ஆளாளுக்கு குயோமொய்யோனு புலம்பினாங்க. எங்க வீட்ல எல்லாம் நாலு விறகை போட்டு பத்த வச்சிட்டு நாள் முழுக்க அதுலயே எல்லாத்தையும் வச்சேன்ல. அம்மை கூட போறயிடத்துல பொழிச்சிப்படினு புகழ்ந்துச்சு தெரியுமா?.” என்றாள்.

“சாமர்த்தியம் தான்” என்றான். ‘இல்லைன்னா உங்களை சமாளிக்க முடியுமா?’ என்று முனங்கினாள். அகிலனுக்கு அந்த குரலும் கேட்டது. ஆனால் அதற்குள் சமலயல்கட்டு பக்கம் செல்பவளை நிறுத்தி பேசவில்லை.

அன்னை அத்தை எதிரே அவன் மதுரவாணியிடம் விளையாடியது இல்லை. ஏன் தனியாக இருந்தாலும் அப்படி தான். ஆனால் உள்ளுக்குள் காதல் கொட்டி கிடந்தது.
இந்த பஞ்சாயத்து தேர்தல் முடிந்து, சித்திரையில் அத்தை இளையமதியிடம் தந்தை அதியமான், மதுரவாணியை அகிலனுக்கு பேசி முடிக்க நினைத்திருக்க, அதுவரை எட்டியிருந்தே காதல் பயிரை வளர்த்தான்.

மதுரவாணிக்கும் அகிலனின் காதல் விதை மனதில் ஆழமாக இருக்க, காதல் பயிர், பேசி பழக வேண்டுமென்ற அடிப்படை தண்ணீர் இல்லாமலே புரிதலில் அடிப்படையில் செழிப்பாக காதல் மொட்டு விட்டது.

அத்தையும் அம்மாவும் பேசியபடி இருக்க, மின்சாரம் தடையானது.
மீன்குழம்பிற்கு மிக்ஸியில் போட இருந்தவர்களை தட்டுதடுமாற, அவர்களை நிறுத்தி, “என் கையால அரைச்சிடறேன்” என்று வாங்கிக் கொண்டாள்.

அம்மியில் அரைக்க சுவாதினமாக ஏற்பாடு செய்தாள்.

தன் மச்சான் அகிலனுக்காக அரைத்து சமைக்கவும், பாவாடையை தூக்கி சொருகி வேலையை பார்த்தாள்.

மீனை கழுவி தந்தது மட்டுமே மீனாட்சி வேலை. மற்றவை மதுராவே பார்த்துக் கொண்டாள்.

மதுரா இங்கே சமையல் கட்டை உருட்ட, “ஏன் அண்ணி… நம்ம மதுராவை விரசா மருமகளா ஆக்கிட்டா உங்களுக்கும் வேலை பாதியா குறையுமே.” என்றார்.

“அட… வீட்ல தூரிகாவை வச்சிட்டு அகிலனுக்கு கல்யாணமா? இந்தா இந்த வருஷம் தூரிகா படிப்பை முடிச்சிட்டா பிறகு பார்க்கலாம்.” என்றார்.

மீனாட்சிக்கு ஊரில் ‘பெண்ணை வைத்துக் கொண்டு மகனுக்கு முடிக்கவா’ என்று பேசுவாரென தூரிகாவை மணமுடித்தப்பிறகு மதுராவை மகன் மணக்க நினைத்தார்.

இதெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மதுராவுக்கு மனமெல்லாம் மத்தாப்பூ பூத்தது.

அதன் பூரிப்பில் மீன் குழம்பை வைத்து வாசம் நுகர்ந்தாள். “அத்தை… மீன் குழம்பு வச்சிட்டேன். உப்பு காரம் சரியா இருக்கானு பாருங்க” என்று குழம்பு கரண்டியை முன்னே நீட்டினாள்.

“ஏன்டி… அங்க அகிலன் இருக்கான். அவனிடம் கேட்டுக்கோ” என்று கூறிட, அவசரமாக அவள் கையாலேயே, தட்டில் மீனை வைத்து, அகிலனுக்கு கொடுக்க விரைந்தாள்.

ஆசையாக அகிலனுக்கு தட்டில் வைத்து அவன் முன் நீட்ட, “என்னவோ மருது முட்டியதுக்கு அம்புட்டு முறை மருதுவை ஏசின. இப்ப பாரு.. அவனால தான் நான் வீட்ல தேமேனு இருக்கேன். உன்னோட குழம்பை ருசிப்பார்க்கறேன். நீ மருதுவை ஏசாம இருந்திருக்கலாம். இப்ப அது விலைக்கு போயிடுச்சு.” என்றான்.

“ஆ… நான் ஏசினதும் தான் அதுக்கு அந்த நிலைமையா? அப்படி பார்த்தா அதை விலைக்கு அனுப்பியதுக்கு அதுவும் மனசுல என்னை வைதிருக்கும். அதோட பலன் அனுபவிச்சிக்கறேன். நீங்க இதை சாப்பிடுங்க.” என்றாள்.

“எப்படியும் நல்லா தானே வச்சியிருப்ப” என்றவன் மீனை சுவைத்து, தன்னை மறந்து சப்புக்கொட்டினான்

கூடுதலாக கையை அவளது உடுப்பிலேயே துடைத்துவிட்டான்.

மதுரவாணிக்கு வானில் பறந்த உணர்வு.

இளையமதி தான் ‘அகிலனை பார்த்து விட்டாச்சு. வீட்டுக்கு போவோம் அங்க உங்க அப்பா சாப்பிட வர நேரம்டி’ என்று அழைத்து சென்றார். ஏற்கனவே காலையிலேயே சோறு குழம்பு செய்து வைத்திருந்ததால் இங்கே மதினி வீட்டில் கொஞ்சம் மீன் குழம்பையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.

தாவணியின் முந்தானையில் மீனை சாப்பிட்டு துடைத்த சுவடுடன் அகிலனின் வாசம் நுகர்ந்தவளாக சென்றாள் மதுரவாணி.

‘உங்கத்தை புருஷன் கல்யாணசுந்தரம் செத்த சூதனமா இருந்தா மதுரவாணியும் இந்நேரம் காலேஜ் படிப்பு படிச்சிருக்கும். ம்ம்ம்ம்.” என்று மீனாட்சி சத்தமாக உரைத்துவிட்டு, ‘நமக்கு படிக்காத மருமவ தான் வாய்க்கும்னு இருக்கு’ என்று மென்குரலில் முனங்கினார்.

அகிலனுக்கு எப்பொழுது இந்த காயம் ஆறும் என்ற ஆவலுடன் இந்த வாரம் முழுக்க ஓய்விலிருக்க, அடிக்கடி அவனை காண நண்பர்கள், பஞ்சாயத்து இளைஞர்கள் என்று வந்து சேர அவர்களோடு பேசி நேரம் போனது.

-தொடரும்.

4 thoughts on “மதுர ஜில்லா… மச்சானே!-3”

  1. M. Sarathi Rio

    காளை மாடு தோத்துச்சுன்னு வித்துப்பூட்டாரு, இனியன் பஞ்சாயத்து எலக்சன்ல தோத்துட்டால் அவனை என்ன பண்ணுவாராம் இந்த அருளாளன் என்கிற அறிவாளன்..?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. Kavi Bharathi

    Iniyan avanga amma sonnathu ah vachi than avanga appa kaga ooruku varan nu solluran indha manushan avan ah vachi neraiya plan poduraru athula akilan madhura love ku vettu vaikama irundha seri

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top