அத்தியாயம்-2
ஜல்லிக்கட்டு களம் இன்னும் ‘அகிலன்’ என்ற கோஷத்திலேயே அதிர்ந்துக் கொண்டிருந்தது. அந்த சத்தம் எல்லாம் அருளாளனுக்கு தாங்க முடியாத எரிச்சலை தந்தது
அவர் முகம் கருமையாக இறுகியது. தன் காளை மருது தோற்றது கூட அவருக்கு அவமானம் இல்லை. ஆனால் அதை அடக்கியது அகிலன் என்றதுதான் அவருக்கு தாங்க முடியாத அவமானம்.
‘தன் தம்பி பையன், தன் முன்னே நிற்கின்றான். அதுவும் வெற்றி மிதப்பில்.., ஏதாவது பேசினால் முகத்தை தொங்கப் போட்டுவிட்டு செல்லவே அருளாளன் அப்படி பேசினார். ஆனால் அகிலனோ களத்தில் நின்று வெற்றி கனியை பறித்திட, உள்ளுக்குள் கொதித்தார் அருளாளன்.
அவர் பார்வை மெதுவாக திரும்பி
மதுரவாணி, தூரிகா மேல் பதிந்திட, தோளில் உள்ள துண்டை உதறி தள்ளி அகிலனின் மிதப்பான பார்வையை தவிர்த்து, நகர அகிலனோ அத்தனை வலியிலும் குருதி சொட்டியதை கூட மூளைக்குள் எடுத்து செல்லாமல், “என்ன பெரிப்பா.. நீங்க வச்ச போட்டியில நான் ஜெயிச்சிட்டேன். நான் களத்துல காளையை இறக்கிட்டு, கைகட்டி வேடிக்கை மட்டும் பார்க்கறவன் இல்லை. சூழ்நிலை வந்தா அந்த களத்தில் துள்ளி குத்திதுசீறி பாயற எந்த காளையையும் அடக்கவும் தெரிந்தவன். வீரத்துக்கு அகிலன் பெயரை இந்த மதுர ஜில்லால ஒலிக்க விட்டதுக்கு நன்றி பெரிப்பா” என்றான் துடுக்குத்தனமாய்.
அவரோ ரகு, மதுரவாணி, தூரிகா மூவரையும் கண்டு கோபமாய், இதோ அவரது வீட்டிற்குள் வந்து நின்றார்.
மருதுவை கட்டி வைத்து கேரளாவுக்கு விலைக்கு விற்றிட கூறிவிட்டார். தோற்றதால் ஏற்பட்ட அவமானமாக உணர இந்த முடிவு. அதனால் மருதுவை விற்கும் முடிவால் கொதித்து அங்கும் இங்கும் நடந்தார்.
‘இந்த அகிலன் கூட அவள் என்ன செய்கிறாள்? தங்கை மகள் மதுரவாணி, அவள் அணிந்த தாவணியை கிழித்து,
அகிலனின் காயத்திற்கு கட்ட முயற்சிக்கிறாள். அகிலனும் அதை ஆமோதித்து நிற்கின்றான்.’ என்று குமைந்தார்.
கணவர் அருளாளன் இந்த நேரத்தில் வீட்டில் இருக்கவும், வேல்விழி அருகே வந்தார்.
“என்னாச்சுங்க? சோகமா கிடக்கிங்க” என்று நெற்றியை தொட்டு பார்த்தார்.
அருளாளனோ “எனக்கு ஒன்னுமில்லை. கையை எடு.” என்று எரிந்து விழுந்தார்.
“என்னாச்சு.. முகம் சரியில்லனு சொல்லுது” என்று கேட்டு நின்றார்.
“எல்லாம் என் தம்பி மகன் அகிலன் தான். ஜல்லிக்கட்டுல ஏறுதழுவுதல் நடக்கற களத்தில, அவனை அவமானப்படுத்த நினைச்சேன். அவன் ஜெயிச்சிட்டான். முகத்துல கரியை அள்ளி பூசிட்டான்.” என்று புலம்பினார்.
“அட நானே நம்ம பையன் இனியன் பொங்கலுக்கு கூட ஊருக்கு வராம இருக்கானேனு கவலைப்பட்டுட்டு இருக்கேன். உங்களுக்கு எந்த நேரமும் தம்பி பையன் நினைப்பு. நமக்கு இனியன்னு மூத்தவனும், எழிலரசன்னு இளைய மகனும் இருக்கான். நினைவு வச்சிக்கோங்க.” என்று வேல்விழி மகன்களை பற்றி கூறிவிட்டு கடந்தார்.
அந்த நொடி அருளாளனின் கண்களில் கோபம் மட்டும் இல்லாமல் ஒரு திட்டத்தின் துவக்கமும் பிறந்தது. அது இனியனை வரவழைக்கும் எண்ணம்.
இனியனை படிப்பிற்காக அமெரிக்காவில் படிக்க அனுப்பியிருந்தார். தம்பி மகனுக்கும் தன் மகனுக்கும் சிறுவயதிலிருந்தே போட்டி உண்டு. அகிலனை விட தன் மகன் இனியன் அதிகப்பட்சமாக பெயரும் புகழும் எடுக்க வேண்டுமென்ற ஆசை.
அதற்கேற்றவாறு, அதியமான் மகனான அகிலன் பக்கத்து டவுனில் படித்து பட்டம் பெற, இனியனை போட்டிக்காகவே வெளிநாட்டில் மேற்படிப்புக்கு படிக்க வைத்தார்.
ஏதேதோ கணக்கு போட்டு பார்த்தவர் மகனை ஊரில் வந்து தன் இடத்தை அவனுக்கு மாற்றும் எண்ணமும் உதித்தது.
இங்கே அகிலன் மருத்துவரிடம் மருது குத்தியதை காட்டி சிகிச்சை பார்த்திட வந்திருந்தனர்.
“பெரிய மாமா ஏன் தான் கரம் வச்சி ஏதாவது பண்ணுறார். உங்க அண்ணனுக்கு கூறு வேண்டாம். போட்டில ஏன் கலந்துக்கணும். இப்ப பாரு.. அந்த மருது குத்தி ரத்தம் எம்புட்டு போச்சி தெரியுமா” என்று புலம்பினாள்.
“அண்ணாவுக்கு தான் ஒன்னுமில்லையே கொஞ்சம் புலம்பாம வா மதுரா” என்றாள் தூரிகா.
மதுரவாணி வாயை மூடுவாளா? “அம்புட்டு பேர் எதிர, சட்டையை கழட்டிட்டு இளங்காளை கணக்கா நின்றப்பவே மனசு பதபதப்பா இருந்தது. கட்டுகட்டா உடம்பை வச்சிட்டு இவர் ஏன் போனார்.
எவஎவ கண்ணு வச்சி மச்சானை பார்த்தாளோ?” என்று புலம்ப, இவள் புலம்பலை நிறுத்த மாட்டாளென தூரிகா ரகு அண்ணாவை காண நகர்ந்தாள்.
அவள் சென்றதும், “ஏய்… இந்தாடி.. தூரிகா.” என்று அலும்ப, “அடிப்பட்டது கூட அசதியா தெரியலை. நீ புலம்பறதை கேட்டா தான் என்னடா இவ நிறுத்த மாட்டாளானு இருக்கு.” என்ற குரலில் தனக்கு பின்னால் அகிலன் இருப்பதை அறிந்தாள்.
“ம..மச்சான்” என்று சத்திமில்லாமல் ஆள்காட்டி விரலை பல்லால் வலிக்காமல் கடித்து உச்சரிக்க, “கையை கட்டிக்கொண்டு அவளை உறுத்தி பார்த்து, “திரும்பி இருந்தப்ப என்ன பேசின?” என்று கேட்டான்.
“ஒன்னும் பேசலையே” என்று மழுப்பினாள்.
“ஏதோ கட்டுக்கட்டா.. எவளாவது கண்ணு வச்சாளோ? அறையும் குறையுமா விழுந்ததே” என்று காதை குடைந்தான்.
இப்பொழுதும் மேற்சட்டையில்லாமல் நின்றவனை பார்க்க வெட்கப்பட்டு நிலத்தை நாணி பார்வையிட்டவாறு, “முதல்ல சட்டையை போடுங்க. பல பேர் இருக்கற இடத்துல இப்படி தான் ஆம்பள நிற்கறதா” என்று கட்டளையிட்டாள்.
“ஏய் மதுரா… மதுரவாணி.. அத்தை பொண்ணே… சட்டையில்லாம அழகா தானே இருக்கேன். நம்மூர் பொண்ணுங்க பார்க்கட்டுமே” என்றவன் உதிர்த்ததும் புஸுபுஸுவென கோபம் பொங்க மதுரவாணியோ வேகமாய் அவ்விடம் விட்டு மாயமானாள். இரண்டே நொடியில் ரகுவிடமிருந்து சட்டையை வாங்கி வந்து, “இதை போடறிங்களா? இங்கன நர்ஸ் வேலையில அங்கயும் இங்கயும் பொண்ணுங்க நடமாடறாங்க. ஆம்பள பிள்ளையா அடக்கவொடக்கம் வேண்டாம்.” என்றாள்.
“நர்ஸ் தானே பார்க்கட்டும்” என்றான். கன்னத்தின் உள்கதுப்பை நாக்கால் சுழற்றி சிரித்தபடி கூறினான்.
“உங்களால என் புது தாவணி கிழிச்சி ரத்தத்தை கட்டினேன்ல இதுவும் பேசுவிங்க இன்னமும் பேசுவிங்க. ம்கூம்” என்றாள்.
அதற்குள் ரகு மருத்துவம் பார்த்தமைக்கு நன்றி செலுத்தி தூரிகாவுடன் வந்து கிளம்பினார்கள்.
“என்னடா இப்படி கிழிச்சிடுச்சு?” என்றான் ரகு.
“நம்ம அரசு விளையாட்ல பசங்களை கிட்ட நெருங்க விடாம விளையாட கத்துக் கொடுத்தோம். மருது அப்படியா? பெரிப்பா எல்லாம் கொம்பு சீவி உயிர் போனா கூட மாடு தோற்றக் கூடாதுனு யோசிக்கறவரு. இதெல்லாம் எதிர்பார்த்தது தானே.” என்றான்.
“என்ன சொல்லு.. நீ உங்க பெரிப்பாவுக்குனு பார்த்து நடந்துக்கற. அவரு ஏதோ உன்னை, உங்க குடும்பத்தை ஜென்ம விரோதியா பார்க்கறார்.” என்றான்.
மதுரவாணியோ இடைப்புகுந்து, “அண்ண… சொத்தை பிரிக்கறப்ப அவர் பக்கம் விவசாய நிலமா பார்த்து வாங்கிட்டார். அதுலயும் தாத்தாவிடம் எனக்கு இரண்டு ஆம்பள புள்ளை, தம்பிக்கு ஒரு பையன் தானேனு சொத்தை சாமார்த்தியமா முக்கால் வாசி வளைச்சிக்கிட்டார். அப்ப ஏச்சும் பேச்சும் வாங்கி, பெரிய சண்டை வந்துச்சு. அப்ப தூரிகா பிறக்கலை. சண்டையில சின்ன அத்தையை வேற தள்ளிவிடவும் கர்ப்பமா இருந்தது கூட தெரியாமலேயே சின்ன அத்தைக்கு கர்ப்பம் கலைந்துடுச்சு.
சொத்தை போட்டி போட்டு வாங்குனதும், தாத்தா செத்து போச்சு. இப்ப பேச்சு வார்த்தை மொத்தமா இல்லை. இதுல தரிசு நிலமா இருந்ததை வச்சி சின்ன மாமா ஏதாவது செய்ய யோசித்து முழிச்சிட்டு இருந்தது. இப்ப உங்க பிரெண்டு அந்த நிலத்தையும் விவசாய நிலமா மாத்தி பயிரை விதைச்சி சொகுசா வளமான நிலமா மாத்தியாச்சு.
அங்குட்டு நம் பெரிய மச்சான் படிக்க வைக்கறேன்னு செலவு பண்ணியே இருந்த சொத்தும் பாதியா கரைந்து போச்சு. இதுல இரண்டாவதா பிறந்தவரும் அந்தளவு விவரமில்லை.
பெரிய மாமா சொத்து கண் எதிர்ல கரையுது. சின்ன மாமா வீட்ல சிக்கனமா இருந்து சேர்த்து வைக்காங்க. இவக வேற துள்ளிட்டு நெஞ்சு நிமிர்த்தி பெரிய மாமாவுக்கு எதிரா ஊருக்கு தலைவரா வர்றதுக்கு இளைஞர் அணி கட்சில இரண்டு வருஷமா சேர்ந்தாச்சு. அப்படியிப்படி எதுனாலும் இவுகளிடமும் ஏதாவது நல்லது பொல்லது கேட்டாகணுமேனு காந்தல். அதை அங்கங்க வார்த்தையா இறைச்சி அள்ளிட்டு போறாரு.” என்றாள் மதுரா.
“அடப்போமா… அவர் பண்ணற அக்கபோருக்கு அகிலன் தான் ரிவேஞ் எடுக்கணும். ஆனா அவன் சிரிச்சிட்டு பெரிப்பா தானடானு வந்துடறான். அவரு வன்மத்தை பூட்டி வைக்கறார்.” என்று வீட்டை வந்து சேர்ந்தனர்.
“ஏன் மதுரா.. எனக்கு முன்ன அம்ம வயித்துல ஒரு உசுரு இருந்துட்டு போச்சா?” என்றாள் தூரிகா.
“ம்ம். பிறந்திருந்தா என் வயசு இருக்கும். இல்லை என்னை விட இளையவங்களா இருக்கும். எங்க அம்மைக்கும் நான் பொண்ணு என்றதும் தாத்தாவுக்கு மனசு தாங்கலை. அவரு ஆம்பள வாரிசை எதிர்பார்த்தாராம். எனக்கு பிறவு சின்ன அத்தை உண்டானங்க. அது கலைந்தப்பிறகு நீ பிறந்ததா அம்மா சொல்லும். ஆனா நீ என்னை மதினினு வாய் நிறைய கூப்பிட மாட்டேங்கற” என்று நொடிந்து கொண்டாள்.
“மதினினா…? கூப்பிடலாம் கூப்பிடலாம்.. நேரம் கூடினா… ஆனா பாரு மதுரா… நீயே அத்தையை ‘அம்மா சொல்லும்’னு தான் சொல்லற. அம்மா சொன்னாங்கனு சொன்னியா… இல்லயில்ல. அப்பறம் நான் மதினியை பொறுமையா சொல்லறேன்.” என்று கண்ணடித்து மதுராவை வாயடைத்தாள்.
மதுரவாணி அமைதி காத்து தானே ஆக வேண்டும். தூரிகாவுக்கு தான் மதுரா அண்ணன் அகிலன் மீது நேசம் வைத்தது தெரியுமே.
“சும்மாயிருடி.” என்று அதட்டிவிட்டு அகிலனை ஏறிட, அகிலனும் மதுராவை தான் பார்வையிட்டான்.
ரகு அதற்குள் வீட்டிற்கு வந்துவிட, அரசுவை அழைத்து கட்டியவர்கள், அதற்குள் விஷயம் தெரிந்து ஆலம் கரைத்து வைத்திருந்தனர். மீனாட்சி வாசலிலேயே மகனை நிற்க வைத்து திருஷ்டி கழித்தார்.
“நானே சொல்லனும்னு நினைச்சேன் அத்த. நீங்களே ஆலம் கரைச்சி வாசலில வந்துட்டிங்க. அங்க அம்புட்டு கூட்டமும் மச்சானை பார்த்து தான் பேச்சு” என்று பேச அகிலனோ அன்னை ஆலம் சுற்றி முடிக்க, மதுரவாணியை கண்டு, குறுகுறுவென பார்த்தான்.
“ஏ.. தூரிகா.. போன் போட்டு சொல்லணும்னு தவியா கிடந்த சொல்லு.” என்று பேச்சை மாற்றினாள்.
“அப்பா… பெரிப்பாவுக்கு அண்ணனை உசுப்பி விடறதே வேலைப்பா.” என்றாள் தூரிகா.
அதியமானோ “உங்கண்ணன் தான் ஜெயிச்சிப்புட்டாரே. விடுடா.” என்றார் அவரும்.
“மாமா… நீங்க விட்டுக்கொடுக்கறது தான் உங்க வழில மச்சானும் பண்ணறார்.” என்றாள் மதுரா.
“இருக்கட்டும் தாயி. அகிலனுக்கு தெரியாததா. அடுத்த ஊர் பஞ்சாயத்துல நிற்கணுமே. இதெல்லாம் பண்ணி எங்கண்ணனோட எதிர்த்து நிற்கட்டும். இது ஆரம்பம் தானே” என்றார்.
“ஆங்.. இரண்டு பேரும் நல்லா பேசறிங்க. நான் தான் பதறிட்டு என்ற தாவணி கிழிச்சி போட்டு கட்டு கட்டிட்டேன். எனக்கு தேவை தான்” என்று பொறுமினாள்.
“அட தாவணி என்ன? பட்டு சீலையே பையனை சொல்லி வாங்கி தர்றேன்.” என்றார்.
அகிலனோ புருவம் உயர்த்தி பார்வையிட, “அம்மா தேடும் நான் கிளம்பறேன் மாமா. அத்தை… காயத்தை பார்த்து இருக்க சொல்லு. மருந்துலாம் தந்திருக்காங்க.
ஏய் தூரிகா… நான் போறேன்டி.” என்று திண்ணை பக்கம் பார்த்து கூற, அவளோ கரும்பை கடித்து டாட்டா காட்டினாள்.
“உடம்பை பார்த்துக்கோங்க மச்சான்” என்று அகிலனிடமும் திருவாய் மலர்ந்து கூறினாள். அப்படியே பார்வையினால் உடலை கவனிக்க மௌனமாய் உரைத்தாள்.
ரகுவோ “என்னடா பச்சைகிளி ஏதோ ரகசியமா பேசிட்டு போறாப்ள தெரியுது” என்று கூற, “ம்ம். அவ தான் ரகசியத்தையே ஊரை கூட்டி சொல்லறவளாச்சே” என்று அகிலன் உதடு பூரித்தது.
அதில் மதுரவாணியின் மீதுள்ள நேசம் இதயம் முழுவதும் பரவியது.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.

Super super nativity touch love story. Intresting sis.
Nice
Super sis
Nice
Nice moving. Intha story rerun story a..veena…already padicha mathiri irukku?
புதுக்கதை மா.
Indha periyappaa ennavo perusa plan podura pola iruku yae
அட.. மாமனும் முறைப்பொண்ணும் நல்லாவே ஜாடையில
பேசிக்கிறாங்க.
😀😀😀
CRVS (or) CRVS2797
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 renduperum pesikiradhu romba super sis 😘
Oor pakam intha mama pasanga athai pasangala machan kupdurathula sigame thani than apadi tha madhura