அத்தியாயம்-1
மதுரையில் உள்ள அலங்காநல்லூர் ஊர், மண்ணின் வாசனை நாசியில் நுழைந்து, கண்முன்னே பசுமை விரிந்தது.
காலையிலேயே இங்கு சூரியன் எழுவதற்கு முன்பே, பறவைகளின் கூவல் அந்த ஊரை எழுப்பி விடும்.
ஈரமான மண்ணில் பனி துளிகள் ஒட்டிக் கிடக்கும் நேரம், தூரத்தில் தெரியும், நெல் வயல்கள் பச்சை கடலாக அலைபாய்வதை காணலாம்.
அலங்காநல்லூரின் வீதிகள் பெரிய நகரங்களின் கூட்ட நெரிசலோ, சத்தமோ கொண்டதல்ல. இங்கு வீதிகள் அமைதியாக இருக்கும்.
ஆனால் அந்த அமைதிக்குள் கூட ஒரு உயிர்ப்பு இருக்கும்.
வீட்டு முன் தண்ணீர் தெளித்து, கோலமிட்டு நிற்கும் பெண்கள், மாடுகளை கயிற்றில் கட்டிக்கொண்டு செல்லும் விவசாயிகள், சைக்கிளில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், இவை எல்லாம் அந்த ஊரின் தினசரி ஓவியமாக காணலாம்.
இந்த ஊரின் மையம் என்று சொன்னால் அது ஜல்லிக்கட்டு. ஆண்டுதோறும் பொங்கல் வந்துவிட்டால், அலங்காநல்லூர் ஒரு சாதாரண கிராமமல்ல. அது ஒரு திருவிழா பூமியாக மாறி விடும். ஊரின் ஒவ்வொரு வீட்டிலும் உற்சாகம், ஒவ்வொரு இதயத்திலும் பெருமை.
ஜல்லிக்கட்டு நாளன்று, மாடுகளின் குரல், மக்கள் ஆர்ப்பாட்டம், மஞ்சள் தூள், சாம்பல், எல்லாம் கலந்து ஒரு பரவசமான காட்சியை உருவாக்கும்.
வலிமையான காளைகள், தங்கள் உரிமையாளர்களின் பெருமையாக, களத்தில் பாயும்.
அவற்றை அடக்க முனையும் இளைஞர்களின் கண்களில் இருக்கும் தீ, அது சாதாரண விளையாட்டு அல்ல, காலங்காலமாக கட்டிக்காப்பாற்றப்படும் வீரத்தின் சாட்சி.
அப்படியொரு களத்தில் அகிலன் பட்டு வேஷ்டி கட்டி மாப்பிள்ளை தோரணையுடன், தன் ‘அரசு’ என்ற ஜல்லிக்கட்டு காளையை அழைத்து செல்வதற்காக அலங்காரம் செய்தான்.
அகிலனின் தந்தை அதியமான், “தம்பி… மாட்டுக்கு கொம்பு சீவலையா?” என்று கேட்டார்.
“இல்லைப்பா.. நம்ம அரசுக்கு ஏற்கனவே கொம்பு நல்ல கூர்மையா இருக்கு. இதுல கொம்பு சீவினா விளையாட்ல கலந்துக்கற இளவட்டத்து பசங்க வயிற்றை கிழிச்சிடாது. இதுவே சரியா இருக்கும் அப்பா?” என்றான்.
அம்மா மீனாட்சியோ “எங்கிட்டு… நம்ம அரசுவே யாரையும் நெருங்க விடாது. நீ அதுக்கு சீவி விட்டிருக்கலாம்யா” என்று கூறினார்.
அகிலன் லேசாக சிரித்து, அரசை அலங்கரிக்கவும் அதற்கு திருநீறு அணிவித்திட தங்கை தூரிகா வந்தாள்.
அகிலனின் தங்கை தூரிகா “அண்ணா இந்த முறையும் அரசு ஜெயித்தா நம்ம பெரிப்பா மூஞ்சை எங்க தூக்கி வச்சிப்பாராம்.” என்று அதியமானின் அண்ணன் அருளாளனை பற்றி கேட்டாள்.
“ஏலே… பொட்டக்கழுத… எங்கண்ணாவை வம்புக்கு இழுக்கற?” என்று அதியமான் மகளது வார்த்தையில் கடிந்தார்.
மீனாட்சியோ “ம்கூம்.. இந்த ஊரையே ஆளறது மீனாட்சி தேவினு சொல்வார். வீட்ல மக பேசினா பொட்டக்கழுத? இப்படி பேசாதிங்கனு எத்தனை முறை சொல்லறதுங்க” என்றார்.
“தப்பு தான் தாயி மன்னிச்சிடு நம்ம வீட்லயும் மீனாட்சி ஆட்சி தான்.” என்று கூறினார்.
அகிலனும் தந்தையை கடிய வந்து அன்னையே பேசி திருத்தவும், புன்னகை பூத்தவனாக, “தூரிகா.. பெரிப்பா வீட்டு காளை மருது, நம்ம விட்டு அரசு களத்துல நிற்க போகுது. நீ வரலையா?” என்றதும் “அதெல்லாம் நான் ரெடின்னா… எல்லாம் இந்த மதுரவாணிக்கு தான் வெயிட்டிங். இருடி வந்துடறேன்னு சொல்லுச்சு. இப்பவரை காணோம்.” என்றாள்.
அகிலனோ மதுரவாணி என்ற பெயரை கேட்டதும் அமைதியின் திருவுருவமாக மாறிவிட்டான்.
மீனாட்சியோ “ஏன்டி… நீ மதுரவாணினு பெயரை சொல்லறதை உங்கத்தை கேட்டா சண்டை பிடிக்கவா? மதினினு கூப்பிடுனு எத்தனை முறை சொல்லறது. நாளை பின்ன மாத்த முடியாது” என்று கடிந்தார்.
அதியமானின் தங்கை இளையமதியின் தங்கை தான் மதுரவாணி. தங்கை மகளை அகிலனுக்கு முடிக்க அதியமானுக்கு விருப்பம் உண்டு.
முக்கிய காரணம் அகிலன் எங்கு சென்றாலும் மதுரவாணி அங்கே ஆஜராகிவிடுவாள். மச்சான் என்றால் அத்தனை உயிர்.
இளையமதிக்கும் கூட அகிலனுக்கு மணமுடித்து வைக்க ஆர்வம்.
“போம்மா.” என்று தூரிகா கூறிவிட்டு அண்ணனை கண்டாள்.
அகிலனோ “சரி அப்ப நீ அந்த வாயாடியோட வந்துடு. நான் அரசுவை கூட்டிட்டு ஜல்லிக்கட்டு நடக்கற இடத்துக்கு போறேன்.” என்று அரசுவை ஓபன் மினி வேனில் ஏற்றினான் அகிலன். நண்பன் ரகுவோடு புறப்பட்டான்
அகிலன் ஆறடி உயரம் உரமேறிய கட்டு உடல், அடங்காத கேசம், மண்ணிற்கு ஏற்ற நிறம் என்று வந்திட, அவனை காணவே ஒரு கூட்டம் வந்தது.
ஒருவன் ஊரில் செழிப்பாக மிடுக்காக இருந்தால் அவனை மட்டம் தட்டவே சிலர் இருப்பார்கள். அப்படி தான் அங்கே எதிரே அகிலனின் பெரிப்பா அருளாளன் இருந்தார்.
அருளாளனுக்கும் அதியமானுக்கும் சொத்து விஷயத்தில் பிரச்சனை. அகிலனுக்கு 11 வயது இருந்த பொழுதே பேச்சு வார்த்தை முறித்துக் கொண்டார்கள்.
அருளாளன், அதியமான் இருவருக்கும் ஒரே தங்கை இளையமதி. இளையமதி மட்டும் இரு அண்ணனிடம் சுமுகமாக பேசிக் கொள்வார்.
அண்ணன் தம்பியானவர்கள் மட்டும் ஊரறிய முறுக்கி கொள்வார்கள்.
இதில் அருளாளன் அகிலனை எங்கு கண்டாலும் இளப்பமாய் மட்டம் தட்டி வேறு பேசுவார்.
“ம்கூம்… காளையை மட்டும் வளர்க்கறது. ஆனா ஆம்பளைன்னா களத்துல நிற்கணும். நம்மகிட்ட வேலையை செய்யறவன் கூட மாட்டை பிடிக்கறான். ஆனா… மாட்டை வளர்த்துட்டு ஜம்பமா வர்றவனுங்க உள்ள இறங்க யோசிக்கறானுங்க” என்று பேசினார்.
அகிலனோ “பெரிப்பா… ஒரு நிமிஷம்.” என்றவன் அவர் அருகே வந்து, “ஏல தம்பி மகனே… மாட்டை மட்டும் வளர்க்கற. களத்துலயும் இறங்கி வீரத்தை காட்டுனு சொன்னா. அடுத்த நிமிஷம் இறங்கப்போறேன். ஏன் பெரிப்பு… சுத்தி வளைக்கறிங்க” என்று சிரித்தான்.
“என்னல… ஊர்க்காரங்க முன்ன எதிர்த்து பேசற. எங்க வீட்டு மருது முன்ன நிற்க தைரியம் வேணும்ல. அதெல்லாம் உனக்கேது. இதுல பெரிப்பாவா? எனக்கு தம்பியே இல்லைனு தலைமூழ்கிட்டேன் தெரியும்ல” என்றார்.
“தெரியும் பெரிப்பா.. எனக்கு இரண்டு ஆம்பள புள்ளைங்க. உனக்கு ஒருத்தன்னு சொல்லி சொத்தை முக்கால் வாசி புடுங்கிட்டு சொந்தத்தை வெறுத்து ஒதுக்கிட்டிங்க. எங்களால அப்படி இருக்க முடியுமா? எப்பவும் எங்க அப்பாவுக்கு நீர் அண்ணன் தானே.” என்று கூற அருளாளன் முறைத்தார்.
“கோச்சிக்காதிங்க பெரிப்பா. காளையை அடக்க பெயர் கொடுத்துட்டு வந்துடறேன்.” என்றவன் அரசுவை களத்தில் இறக்க, தன் நண்பன் ரகுவிடம் தெரிவித்து முடித்தான்.
“நம்ம காளையை நீ இறக்கு ரகு.” என்று கூறிவிட்டு, ஜல்லிக்கட்டு மாட்டை பிடிக்க பெயர் கொடுக்க வந்தான்.
ரகுவோ “அகிலன் உங்க பெரிப்பா வேண்டுமின்னே உன்னை வம்பிழுக்கறார்டா. பெயர் எல்லாம் கொடுக்காத. அவர் மாட்டுக்கு கொம்பு சீவி கத்தி போல வச்சியிருக்கார். உசுரு போயிடும் டா” என்று அறிவுறுத்தினார்.
“போற உசுரு மண்ணுல ஜல்லிக்கட்டுல தானே போகும். பார்த்துக்கலாம்” என்று பெயர் கொடுக்க வரிசையில் நிற்கவும், அங்கிருந்தவரோ “தம்பி அகிலனா? மாட்டுக்கு பெயர் கொடுக்கற வரிசை அந்தபக்கம்யா” என்று கூறினார்.
“இல்லைங்கய்யா… இந்த முறை மத்த மாட்டையும் அடக்கி பார்த்திடலாம்னு வந்திருக்கேன்.” என்றவன் பெயரை தந்தான்.
அங்கிருந்தவர்கள் அகிலனை பார்த்து கிசுகிசுக்க, பெயர் தந்துவிட்டு, உடல் திடம் ஆராயும் மருத்துவரிடமும் நின்றான். பெரும்பாலும் இது போன்ற வீர விளையாட்டில் யார் வேண்டுமென்றாலும் கலந்துக்கொள்ள பெயர் தந்தாலும் டாக்டர் சிலர் உடல்நிலையை ஆராய்ந்து முடித்து அனுப்புவார்கள். சிலருக்கு இதயநோய் ஏதாவது உடல்உபாதை இருந்தால் டாக்டர் அவரை ஏறுதழுவுதலுக்கு அனுமதிக்க மறுப்பார்.
இங்கே அகிலன் வெள்ளை சட்டையின் பட்டனை கழட்டிவிட்டு, ரகுவிடம் தந்தவனாக வந்தான்.
எங்கிருந்தோ ஒரு பெண்ணின் குரல் ”மதுரவாணிக்கா… உங்க மச்சான் அகிலன், இந்த முறை உங்க பெரிய மாமாவோட மாட்டை அடக்கறதுக்கு பெயர் கொடுத்திருக்கு.” என்று கூற அப்பொழுது தான் தன் மச்சானை காண தூரிகாவுடன் வந்தவள், “தூரிகா… மச்சான் ஜல்லிக்கட்டுல மாடு பிடிக்க போகுதா?” என்று கேட்க, “அதெல்லாம் வீட்ல எதுவும் சொல்லலையே. ரகு அண்ணாவிடம் கேட்டா தெரியும்.” என்று விரைந்தனர்.
ரகு நடந்தவயை விவரிக்க, “பெரிப்பாவுக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை? நான் அப்பாவுக்கு கால் பண்ணறேன்” என்று அதியமானுக்கு அழைத்தாள் தூரிகா. அவரோ போனை சைலண்டில் போட்டுவிட்டு, இருக்க எடுக்கவில்லை.
மதுரவாணியோ “இந்த பெரிய மாமாவுக்கு ஏன் புத்தி இப்படி போகுது வேண்டுமின்னே பண்ணறார்.” என்று அகிலனை தேடி நடந்தார்கள்.
மதியம் எரியும் சூரியன் கூட அன்றைய நாள் அலங்காநல்லூரின் உற்சாகத்தை குறைக்க முடியவில்லை. களத்தின் மண் ஏற்கனவே நூற்றுக்கணக்கான கால்களின் அடியில் தூசியாக எழுந்து வானத்தில் கலந்தது.
கூட்டம்… சத்தம்… ஆர்ப்பாட்டம்… எல்லாமும் ஒன்றாக கலந்த அந்த இடம் ஒரு போர்க்களம் போலவே இருந்தது. இந்த கூட்டத்தில் அகிலனை தேடி நடக்க தூரிகா போனில் தந்தைக்கு அழைத்தபடி வர, மதுரவாணியோ “அங்குட்டு இருக்கு மச்சான்” என்று சுட்டிக்காட்டினாள். அவள் கண்ணில் அவன் மச்சான் அகிலன் படாமல் போவானா?
வாடிவாசல் முன், கட்டுப்பாட்டில் நின்ற காளைகள் மூச்சை விட்டு பறக்கும் சத்தம் மட்டும் கேட்கும். அவற்றின் கண்களில் ஒரு தீ போல தெறிக்கும். ‘யாராவது என்னை அடக்க முடியுமா?’ என்ற சவால் காளையின் கண்ணில் தெரியும்.
அந்த கூட்டத்தின் நடுவில் நின்றியிருந்தான் அகிலன்.
வெள்ளை வேட்டி மடிச்சு முடிச்சு கட்டியிருந்தான். மேலே சட்டை இல்லை. மார்பில் வியர்வை முத்துக்கள்.
‘இந்த மண் என்னோடது இந்த களம் என்னோடது. இதுல என் அரசுவை இறக்கி பார்த்திருக்கேன். இன்னிக்கு களத்துக்குள் இறங்கணும்னு என்ற ஆசையும் நிறைவேற போகுது’ என்று தான் நினைத்தான்.
“அகிலா பத்திரம்டா” என்று நண்பன் கத்தினான்.
அகிலன் நண்பனை கண்டு பக்கத்தில் இருந்த தங்கையையும் மதுரவாணியையும் பார்த்தான்.
மதுரவாணி கண்ணில் மின்னல், அகிலனை கண்டு நாணம் உற்றவளாக தலைகவிழ்ந்தாள்.
“அப்பா போனையே எடுக்காமா இருக்கார்.” என்று தூரிகா வருந்தினாள்.
“ஏ புள்ள தூரிகா மச்சான் மாட்டை பிடிச்சிடுவார். நீ ஏன் பயப்படற. மச்சானை பார்த்து காளை தான் பதுங்கணும்” என்று மச்சானை கண்டதும் பெருமை பேசினாள்.
தூரிகாவோ அண்ணன் மீது மதுரவாணி வைத்திருக்கும் நம்பிக்கையை கண்டு தந்தைக்கு அழைப்பதை நிறுத்தினாள். இன்று வாடிவாசலில் அண்ணனின் வீரமும் பறைச்சாற்றப்படும்.
வாடிவாசல் கதவு திறக்கப் போகுது.
கூட்டம் முழுக்க கதவு திறந்த சத்தம்!
ஒவ்வொருத்தரின் காளையும் சீறிப்பாய்ந்து வந்தது. அகிலன் அதன் திமிளை தீண்டி அடக்க, காளை சீறிப்பாய்ந்தாலும், சில வினாடியில் ஒருவர் மாற்றி ஒருவர் தொட்டு விட்டு மதிப்பெண்ணை பெற்றனர். அரசு வரும் பொழுது எல்லாம் அகிலன் தனித்து நின்றுவிட்டான். மற்றவர்கள் பங்கு பெறட்டுமென்ற நோக்கத்தில்… அரசு களத்தில் சுற்றிய நேரத்தில் யாராலும் தொடவும் முடியாமல், வெற்றி வாகை சூடியது.
அருளாளன் அதில் கருப்பு காளையான மருதுவை இறக்க ஆணையிட்டார். மஞ்சள்தூள் பூசப்பட்ட உடம்புடன், பாய்ந்தது மருது.
அதன் கொம்புகள் வானத்தை கிழிக்கும் விதமாக உயர்ந்திருந்தது. அதன் வேகம் மின்னல் போன்ற வேகத்தில் துள்ளி குதித்தது.
கூட்டம் முழுக்க அலறல்.
பல பேர் முன் பாய்ந்தார்கள். ஆனால் காளையின் வேகத்துக்கு முன் அவர்கள் எல்லாம் உடனடியாக பின்வாங்கினார்கள்.
அகிலன் மட்டும் நகரவில்லை.
அவன் கண்கள் காளையின் கண்களையே கூர்ந்து பார்த்தது.
காளையும் நேராக அவனை நோக்கி பாய்ந்தது.
‘அகிலா… விலகு டா’ என்று ரகுவும், “அண்ணா பாத்து” என்று தூரிகாவும், “மச்சான் ஜாக்கிரதை” என்று மதுரவாணியும் கத்தினார்கள்.
அகிலனோ அசையவில்லை.
காளை மிக அருகில் வந்த நொடியில், அகிலன் திடீரென்று முன்னே பாய்ந்தான்.
அவன் கைகள் காளையின் கும்பளத்தை தழுவின.
ஒரு வினாடி… இரண்டு வினாடி… மண் தூசி முழுக்க எழுந்தது.
காளை அவனை தள்ள முயன்றது. திடீரென்று இடது பக்கம் திரும்பியது. அகிலன் கைகளை விடவில்லை. அவன் விரல்கள் கும்பளத்தில் இறுகப் பிடித்திருந்தது.
‘நம்ம அகிலன் பிடிச்சிட்டான்’ என்று கூட்டம் முழுக்க கத்தல்.
காளை இன்னும் வேகமாக ஓடியது.
அகிலன் உடல் காளையின் உடம்போடு ஆடியது. அவன் கால்கள் மண்ணை சுரண்டினாலும், அவன் பிடி தளரவில்லை.
காளை திடீரென்று நின்று, தலை குலுக்கி, அவனை தூக்கி எறிய முயன்றது.
அகிலன் ஒரு நொடி சறுக்கினான். லேசாக மருது குத்தவர, வலது பக்கம் கொம்பால் காயம் உண்டாகியது. நல்லவேளை வயிற்றை கிழித்திடாமல் சற்று லாவகமாக விலகினான். ஆனாலும் ரத்தம் பீறிட்டதை மதுரவாணி கண்டாள்.
மீண்டும் பார்வை காளையை குறிவைத்திட, காளையும் எதிரே யார் வந்தாலும் குத்தி கிழிக்கும் ஆவேசத்துடன் துள்ளியது.
அங்கிருந்த இளைஞர் பட்டாளம் முக்கால் வாசி பேர் ஒதுங்கி நின்றனர்.
அகிலனோ ‘நான் விட மாட்டேன்’ என்று சொல்லும் பார்வையில் களத்தில் நின்றான். வெள்ளை வேஸ்டியில் லேசான ரத்த கறை உறைந்திட, அருள்வாளனுக்கு கர்வமாக சிரிப்புண்டாகியது.
கூட்டம் முழுக்க இப்போது ஒரே குரல். ‘அகிலா’ ‘அகிலன் ‘ அகிலண்ணா” என்று விண்ணை முட்டும் அளவிற்கு உற்சாகப்படுத்தினார்கள்.
காளையின் ஒரு கொம்பை பிடித்தவன், ஒரு திமிலை சேர்த்து விடாமல் பிடித்தான்.
அருளாளன் முகம் இருட்டியது. காளையின் வேகமும் குறைந்தது.
அகிலன் தனது பிடியை இன்னும் இறுக்கினான். நேரம் முடிந்தது.
காளை சோர்ந்து நின்று தரையில் மடங்கி படுத்தேவிட்டது.
அங்கிருந்த ஜல்லிக்கட்டு களம் கரகோசமாக செவியை கிழித்தது.
“அகிலன் வீரன்”
“அகிலன் ஜெயிச்சிட்டான்” என்று கூற அதையே ஒலிப்பெருக்கியில் மேடையில் இருந்தவர்கள் உரைத்தனர்.
அகிலன் மெதுவாக மாட்டினை பிடித்த கைகளை தளர விட்டான்.
அவன் மூச்சு வேகமாக இருந்தது. மார்பில் வியர்வை சொட்டியது. மெதுவாக மாட்டை பரிவாக தடவிக் கொடுத்தான்.
அதன் பிறகே தலை தூக்கி கூட்டத்தை பார்த்தான். தவறு மதுரவாணியை கண்டான்.
அத்தனை கூட்டத்திலும், அவளது முகம் மட்டும் அவனுக்கு தெளிவாக தெரிந்தது.
மதுரவாணி கண்களில் பயம், பெருமை, காதல் எல்லாமும் கலந்திருந்தது.
அந்த ஒரு பார்வை,
அகிலனுக்கு காளையை வீழ்த்தி கிடைத்த வெற்றியை காட்டிலும் பெரிய வெற்றியாக பாவித்தான்.
காளையின் தழுவி பிடித்ததை காட்டிலும், மதுரவாணியின் இதயத்தையும் அகிலன் தழுவி பிடித்தான் என்றால் அது மிகையாகாது.
மதுரவாணியோ அங்கிருந்தவர்களிடம் அருவாகத்தி இருக்க, அதை வாங்கி தன் தாவாணியை கிழித்துக் கொண்டிருந்தாள்.
அகிலனோ ‘இவ ஏன் புது தாவணியை கிழிக்கறா?’ என்று பார்வையை அகற்றாமல் வந்தான்.
தூரிகாவும் “அண்ணா… கலக்கிட்ட போ” என்று வாழ்த்த, நண்பன் ரகுவோ “உங்க பெரிப்பாவுக்கு மூஞ்சி போன போக்கை பார்த்தியா அகிலன்” என்று கேட்டான்.
அகிலனோ மதுரவாணியை பார்வையிட, “முதல்ல அந்த ரத்தத்தை வராம தடுத்து நிறுத்துங்க.” என்று தாவணியை நீட்டினாள்.
அகிலனோ ”இதுக்கா புது தாவணியை கிழிச்ச? அங்க பஸ்ட் எயிட் பண்ணுவாங்க. அங்க போவேன். அதுக்குள்ள என்ன அவசரம்” என்று கடிந்தான்.
“ஆங்… அங்க போறதுக்குள்ள ரத்தம் எவ்ளோ போகும்” என்று கண்ணீரோடு கட்டமுனைந்தவள் தடுமாறினாள்.
வைரம் பாய்ந்த கட்டை போல அகிலன் கட்டுமஸ்தான உடலாக நிற்க, அவனை காண தடுமாறி ரகுவிடம் நீட்டினாள்.
ரகுவோ அகிலனை கண்டு ரத்தம் வந்த இடத்தில் இறுக கட்டினான்.
அருளாளனோ தூரத்தில் தன் காளை தோற்றதையும் அகிலனை புகழும் சத்தமும் கேட்டவராக கொதித்தார்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.

Wow super start sis. Really i can see the maruthu and akilan fight while.reading. awesome sis. My native is also madurai sis.
Nice sis
ஆரம்பம் அட்டகாசம்
Agilan kalakitan
அடேயப்பா..! பெரியப்பாவா இருந்துக்கிட்டு என்னாம்மா சிலுத்துக்கிறாரு..? இப்ப அகிலன் ஜெயிச்சசிட்டா முஞ்சியை எங்கே கொண்டுப்போய் வைச்சுப்பாராம்?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Super sis amazing start 👌😍 sandaiya nerla partha mathiriye eruku sis semma👌👌👌😍 eagerly waiting to read this story 😘