அத்தியாயம்-28
மிதிலா மாலை நேரம் வீடு வந்து சேர அமைதியாக இருந்தது.
மிதிலா புத்தகத்தையும் ஸ்கெட்ச் பேடையும் எடுத்துக்கொண்டு டைனிங் டேபிளில் அமர்ந்தாள்.
சப்மிஸ்ஸன் டேட் நெருங்கிக் கொண்டிருந்தது.
அவள் டிசைன் லைன் வரையும்போது செல்வராணி கிச்சனில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
“இன்னும் இந்த படிப்பு எதுக்கு? அவனுக்கு தான் அறிவில்லை.” குரல் கூர்மையாக வந்தது.
மிதிலா தலை தூக்கினாள். மிதிலா எதுவும் வாயாடாமல் இருக்கவும், செல்வராணி மெதுவாக அருகே வந்தார்.
“உன் நிலை என்னனு தெரியாதா? கர்ப்பமா இருக்கே. இப்பவும் காலேஜ் காலேஜின்னு அலையணுமா?” என்றார்.
மிதிலா பென்சிலை மெதுவா வைத்தாள்.
“டாக்டர் அதெல்லாம் படிக்க போகலாம்னு சொன்னாங்க”
“டாக்டர் எல்லாம் சொல்லுவாங்க. ஆனா நாளைக்கு ஏதாவது ஆயிட்டா?” என்றதும் அந்த வார்த்தை காற்றை நெருப்பாக்கியது.
மிதிலா மூச்சை கட்டுப்படுத்தினாள். ஏதாவது அபசகுனமாக கூறிகின்றாரே.
“எதுவும் ஆகாது. நான் கவனமா இருக்கேன்.” என்றாள் மிதிலா.
செல்வராணி இடுப்பில் கையை மடக்கி நின்றார்.
“குழந்தை முக்கியமா? படிப்பு முக்கியமா?” என்றார் செல்வராணி. ஹ்ருதேஷ் இல்லாததால் கிட்டதட்ட பனிப்போர் நிகழ்ந்தது.
மிதிலா பார்வை நேராக சென்றது.
“இரண்டும்.” என்றாள். அந்த பதில் செல்வராணியை எரிச்சலடைய வைத்தது.
“கல்யாணமானா பொண்ணு புகுந்த வீட்டுக்கு வந்ததும் படிப்பெல்லாம் ஒதுக்கணும். இது தான் வழக்கம்.” என்றார் மாமியாராக.
மிதிலாவின் குரல் மெதுவாக இருந்தாலும் உறுதியாக “நான் என் படிப்பை முடிக்கணும். இது என் ப்யூட்சர். ஆம்பிஷன்” என்றாள் மருமகளாக.
“ப்யூட்சரா?” என்று செல்வராணி கேலியாக சிரித்தார்.
“குழந்தை பிறந்ததும், நீ புஸ்தகத்தை எடுத்துட்டு படிக்கப் போறியா?” என்ற அந்த கேள்வி மிதிலா நெஞ்சை குத்தியது. ஆனா அவள் தளரவில்லை.
“ஆமா படிப்பேன்.” என்றாள் வீம்பாக.
அந்த நேரம் ஹ்ருதேஷ் உள்ளே வந்தான். இருவரின் முகத்தையும் பார்த்தவுடனே ஏதோவொன்று என புரிந்தது.
“என்னாச்சு?” என்றான்
செல்வராணி உடனே பேசினார்.
“உன் பொண்டாட்டி இந்த நிலையில கண்டிப்பா காலேஜ் போகணுமா?” என்றார்.
ஹ்ருதேஷ் மிதிலாவை பார்த்தான். அவள் அமைதியா நின்றாள். இவன் பேசட்டுமென்ற காத்திருப்பில் அவளிருந்தாள்.
“அவளுக்கு ஓகேன்னா போகட்டும்மா” என்ற ஒரே வரியில்
செல்வராணி அதிர்ந்தார்.
“நீயும் இவளுக்கே சப்போர்ட் பண்ணறியா” என்றார்.
“அம்மா… அவ உடம்பை அவ கவனிக்கிறா, படிப்பும் முடிக்கணுமே… மேனேஜ் பண்ணிடுவோம்” என்றான்.
சில விநாடிகள் அமைதியில் கழிந்தது. தனக்காக ஹ்ருத் பேசுவதால் வந்த நிறைவில் மிதிலா.
செல்வராணி முகத்தை திருப்பிக் கொண்டார்.
“நாளைக்கு ஏதாவது ஆயிட்டா தலைசுத்தல் வாந்தி, அதுயிதுனு இருக்கும். உடம்புல சத்து பிடிக்கணும். இவளை பாரு… இப்பவே ரத்தமில்லாதவளா வெளுப்பா தெரியறா.” என்று மகனிடம் உரைத்தார் செல்வராணி.
மிதிலாவோ “நான் பொறுப்பா என்னை பார்த்துப்பேன். இன்னிக்கு கூட மயக்கமா இருந்தது மயங்கிட்டேன். அப்பறமா மேமிடம் தாலியை காட்டி கல்யாணம் ஆகிடுச்சுனு சொல்லிட்டேன். அதோட கன்சீவா இருப்பதால லாவன்யாவோட சேர்ந்து உதவி செய்து பார்த்துக்கிட்டேன்.” என்றாள்.
“காலேஜிலயும் மயக்கம் வந்துச்சா?” என்று ஹ்ருதேஷ் பயந்து கேட்டான்.
“ஆமா.. ஆனா நான் சமாளிச்சிடுவேன்” என்றாள் மிதிலா.
செல்வராணியோ “என்னத்த சமாளிப்ப… ரொம்ப நேரம் ஒரேயிடத்துல உட்கார முடியுமா? உடம்பு சூடாகிடும். வாந்தி மயக்கம் வந்தா இதே வீட்லயிருந்தா ரெஸ்ட் எடுப்ப. அங்க படுத்துக்கோமானு தூங்க சொல்வாங்களா? சரி.. அதெல்லாம் விடு… படில ஏறற இறங்கற.. கால் இடறினா குழந்தை கலைந்துடாது. உனக்கென்ன… இந்த குழந்தை எங்க வீட்டு முதல் வாரிசாச்சே” என்று பேசவும் ஹ்ருதேஷோ இவளுக்கு ஹீல்ஸ் போட்டாளே கால் இடறுமே? என்று யோசித்தான்.
“அம்மா சொல்லறது சரியா தானே இருக்கு. பேசாம குழந்தை பிறக்கறவரை படிப்பை தள்ளி வைக்க முடியாதா?” என்று கேட்டான்.
“என்ன ஹ்ருதேஷ் பேசற? அவங்க தான் இப்படி பேசறாங்கன்னா மெடிக்கல் பீல்டுல எத்தனையோ வசதி வந்துடுச்சு. இப்ப போய் நீ இப்படி பேசற.
எனக்கு ஏதாவது பிரச்சனைன்னா நான் பார்த்துப்பேன். உங்கம்மாவை என்னை நோண்டாம இருக்க சொல்லுங்க” என்று கத்திவிட்டு அகன்றாள்.
ஹ்ருதேஷோ வந்ததும் வராததும் பிரச்சனையா என்று சலித்து குளிக்க சென்றான்.
அடுத்து செல்வராணியோ தோசை மாவை வாங்கி ஊற்றி, இரண்டு வகையான சட்னி செய்தார்.
பரவாயில்லை.. சமையலை முடிச்சிட்டாங்க’ என்று மிதிலா சாப்பிட வந்தாள்.
எப்பொழுதும் ஆர்டர் தரும் பொழுது ஒரு தோசை மட்டும் அவளுக்காக ஆர்டர் தருபவள். இன்று நான்கு தோசை சாப்பிடவும், மிதிலா காதில் விழாத அளவிற்கு “பாரு.. அவ நேத்து ஒரு தோசை தான் சாப்பிட்டா. இன்னிக்கு நாலு தோசை. வீட்ல சமைச்சி சாப்பிட்டா கூடுதலா சாப்பிடுவா குழந்தையும் நல்லா வளரும். இதை சொன்னா அவ சண்டை போடுறதா சொல்வா. ஒழுங்கா சாப்பிட்டா தானே குழந்தையும் நல்லா வளரும்.” என்று ஏற்றிவிட, இந்த முறை ஹ்ருதேஷ் குழந்தைக்காக பேசினான்.
நல்லவேளை அப்பொழுதே ஆரம்பிக்காமல், உறங்கும் பொழுது அந்த பேச்சை பேசினான்.
“நீ கன்சீவா இருக்க. நல்லா சாப்பிட்டா தானே நம்ம குழந்தை ஹெல்தியா வளரும். நாம கடையிலேயே வாங்கி சாப்பிடறோம். அதுல என்ன சத்து இருந்திட போகுது. இதே வீட்ல இருந்து பொறுமையா சாப்பிட்டா நிறைய சாப்பிடற. பேசாம காலேஜ் போகாம இருந்து, குழந்தை பெத்த பிறகு போகலாம். எனக்கும் அம்மா சொல்லறது சரியா தெரியுது மிதிலா.” என்றான்.
மிதிலா எழுந்து அமர்ந்தவாறு., “ஏன் ஹ்ருத் இப்படி பேசற. என்னால முடியும். சும்மா உங்க அம்மா பேசியதை கேட்டு சண்டைக்கு வராத.
எப்பவும் சனி ஞாயிறு ஆனா என் கையை விடாம பிடிச்சிட்டு சந்தோஷமா இருப்போம். ஆனா இந்த இரண்டு நாள் அவங்க கூடயிருப்பதால சண்டை தான் வருது. அவங்களை உங்க வீட்டுக்கு அனுப்பு” என்றாள் சிடுசிடுவென.
“அவங்க என் அம்மா. என் கூட இருக்கணும்னு வந்திருக்காங்க. நல்லதோ கெட்டதோ. அவங்க சொல்லற ரீஸன் பாயிண்ட்டா இருக்கு. அதை தான் கன்சிடர் பண்ண சொன்னேன். எங்கம்மாவையே பேக் பண்ண பேசற. திஸ் இஸ் யுவர் லிமிட்.” என்று பொரிந்து தள்ளி திரும்பி படுத்துக் கொண்டான்.
மிதிலாவோ நான் என்ன பேசினேன். இவன் என்ன பேசறார். அவங்க வேற இம்சை பண்ணறாங்க. அது இவருக்கு புரியலை.’ என்று கோபமாக தனது வேலையாவது கவனிக்க ஆரம்பித்தாள்.
”லைட்டை ஆப் பண்ணறியா?” எனக்கு தூங்கணும்” என்றான்.
“எனக்கு சப்மிட் பண்ண வேண்டிய வேலை இருக்கு. தூக்கம் வருதுன்னா ஹாலுக்கு போங்க” என்று கோபமாக உரைத்தாள்.
அவனும் இருந்த கடுப்பில் அன்னையுடன் வந்து உறங்க, செல்வராணி எட்டி பார்த்துவிட்டு மகனுக்கு போர்வை போர்த்தி விட்டார்.
மிதிலா இரவெல்லாம் கண் விழித்து, தன் வேலையை முடித்துவிட்டே கண்ணயர்ந்தாள்.
அடுத்த நாள் காலையில் மிதிலா சமையல் கட்டில் உருட்டவும், ஹ்ருதேஷ் எழுந்து பார்த்துவிட்டு கண் அசந்தான். செல்வராணியோ எட்டியெட்டி பார்த்துவிட்டு வேடிக்கை பார்த்தார்.
இரண்டு மூன்று முறை குக்கர் சத்தம் கேட்டதும், மிதிலா சமைப்பதை யூகித்தான் ஹ்ருதேஷ்.
இங்கே முன்பு சனி ஞாயிறு இருக்கும் பொழுது சமைப்பவள் தான்
அதனால் சமைக்கவும் எழாமல் விட்டான். சற்று நேரத்திற்கு எல்லாம் மிதிலா வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டு ஓடிவந்தான்.
வாந்தி எடுத்து சோர்வுடன் நின்றவளிடம், “என்ன பண்ணிட்டு இருக்க?” என்றான்.
“சமைத்து நல்லா சாப்பிட்டா தானே நம்ம குழந்தை ஹெல்தியா வளரும். நாம கடையிலேயே வாங்கி சாப்பிடறோம். அதுல என்ன சத்து இருந்திட போகுது. இதே வீட்ல இருந்து பொறுமையா சாப்பிட்டா நிறைய சாப்பிடற.’னு சொன்னியே. அதான்.. சமைச்சிட்டேன். பட் அந்த ஸ்மெல் குமட்டுது.” என்று முகத்தை அலம்பினாள்.
ஏனோ இம்முறை ஆர்டர் தந்துடலாமே. ஏன் கஷ்டப்படற என்று கூற வாய் வரவில்லை. வீட்டு உணவை சாப்பிட்டால் மிதிலாவுக்கு பரவாயில்லை என்ற எண்ணமே அவன் உணர்ந்தான்.
செல்வராணி அப்பொழுதும் கொஞ்சம் உப்பு கூட போட்டுட்ட. இப்படி போட்டா எப்படி? காரம் சுத்தமா இல்லை” என்று ஆரம்பிக்க, சப்புக்கொட்டிய ஹ்ருதேஷோ “ஹாஸ்டல் வெக்கட் பண்ணறதை சொல்லிட்டியா? ஈவினிங் வர்றேன். திங்க்ஸ் புக்ஸ் டிரஸ் எல்லாம் கொண்டு வந்துடலாம்” என்றான்.
“ம்ம்ம.” என்று மிதிலா கூற, செல்வராணியோ தனது பேச்சை மதிக்காதது எரிச்சலுடன் விழுங்கினார்.
ஹ்ருதேஷ் மட்டும் அம்மாவிடம் சொல்லிவிட்டு புறப்பட, மிதிலா மறுபுறம் கல்லூரிக்கு விரைந்தாள்.
லேசான தள்ளாட்டம் ஓய்வு, இதெல்லாம் பார்த்தபடி தனது படிப்பை கவனித்தாள்.
மாலை ஹ்ருதேஷ் ஹாஸ்டல் வாசலில் வர, தனது உடமைகளை எடுத்து வந்தாள் மிதிலா.
“கொஞ்சம் பிரைவேஸி மிஸ்ஸாகுது ஹ்ருத். பெரிய வீடா பிடிக்கலாமா? இங்க பேசினா அங்க கேட்குது. அங்க பேசினா இங்க கேட்குதுனு நாம பேசறதே குறைந்து போகுது.” என்றாள்.
“நாம இந்த வீட்ல இரண்டு பேர் மட்டும் இருந்து பழகிட்டு இப்ப அம்மா வந்தது அப்படி தோணலாம். அம்மா கிளம்பிட்டா அப்படி தோணாது.” என்றான்.
“அவங்க தான் இங்கிருந்து போகமாட்டேன்னு இருக்காங்க. ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கறாங்க.” என்றாள்.
“அவங்க பையன் வீட்டுக்கு வந்துயிருக்காங்க மிதிலா. இப்ப போய் வராதிங்கனு சொன்னா நல்லாயிருக்காது. ஊர்லயே வராதிங்கனு சொன்னதை மீறி வந்திருக்காங்க. அவங்களா போரடிச்சா போயிடுவாங்க” என்று கூறினான்.
நினைச்ச நேரம் தூங்கலாம்னு படுத்தா, இந்த நேரம் தூங்கற எந்திரினு சொல்லறாங்க. புட் ஆர்டர் போட்டா இதெல்லாம் வீட்ல செய்ய மாட்டியானு கேட்கறாங்க.
டயர்டா இருக்கேனு ஒரு ஜூஸ் வாங்கிட்டேன். இதை கூட கடையில வாங்குவனு கேட்கறாங்க. துணியெல்லாம் எடுத்து வச்சி பேபரிக் வச்சி டிசைன் பண்ண முயன்றா என்ன எப்ப பாரு துணியை கலைச்சி போட்டு வச்சியிருக்கனு கேட்கறாங்க. முடியலை ஹ்ருத். ஸ்டிரஸ் பீல் ஆகுது.” என்றாள்.
“கர்ப்பமா இருக்கறப்ப தேவையில்லாத ஸ்டிரஸ் கோபம் வருமாம். மூட் ஸ்விங் மாதிரி.” என்று எளிதாக கூறினான்.
“நீயும் நானும் இருந்தப்ப இப்படி ஆனதில்லை.” என்றாள்.
ஹ்ருதேஷோ “சுத்தி சுத்தி அவங்களை வெளியே அனுப்பறதை பத்தி பேசாத. அவங்களை அனுசரிச்சி வாழு. இல்லையா அவங்களை இக்னோர் பண்ணிட்டு நீ பாட்டுக்கு அமைதியா இரு.” என்று முகம் கோபத்துடன் எச்சரித்தான்.
மிதிலா மீண்டும் அமைதியாக மாறினாள்.
‘முன்னயெல்லாம் நீ இப்படி இல்லை ஹ்ருத். என் பீலிங்கை புரிஞ்சுக்க மாட்டேங்கற’ என்று மனதோடு வெதும்பினாள்.
வீட்டில் ஹாஸ்டலிலிருந்து கொண்டு வந்ததை எடுத்து சேகரித்து வைத்தாள்.
இரவானால் செல்வராணி சமையல், காலையில் மதியத்தில் மிதிலா சமையல், என்று மாறியது.
அடித்து பிடித்து மசக்கையை சமாளித்தாள் மிதிலா.
கல்லூரியில் என்னவொரு கஷ்டங்கள் என்றால், அவள் படிக்கும் பேஷன் டெக்னாலஜிக்கு அதிக நேரம் நின்று அளவெடுத்து பேப்ரிக் பார்த்து கத்தரித்தல் என்று சதா நின்றுக்கொண்டே நடமாட, அடிக்கடி கால்கள் வலி முதுகு வலி கூடியது.
ஒய்வு எடுக்க நேரமின்றி திரிந்தாள். முன்பை விட வாந்தி மயக்கம் மட்டும் மட்டுப்பட்டது. கூடுதலாக சாப்பிட துவங்கினாள்.
ஹ்ருதேஷ் தான் செக்கப்பிற்கு எல்லாம் அழைத்து சென்றான். அதற்கும் செல்வராணி ‘ஏன் பிறந்த விட்ல அவ அம்மா வந்து செக்கப் கூட்டிட்டு போக மாட்டாங்களா” என்று கேட்டிட, “அம்மா… ஆபிஸ்ல இன்ஸ்சூரன்ஸ் கார்ட் இருக்கு. இந்த ஹாஸ்பிடல்ல அவளுக்கு உண்டாகற செலவை ஆபிஸே தந்திடும்” என்று கூற, இருந்தாலும் அவ அம்மா வரலாம்ல.” என்று தான் கூறினார்.
அதற்கும் மிதிலா கணவனை முறைத்து சென்றாள்.
முன்பை விட மேடிட்ட வயிற்றில் ஹ்ருதேஷ் தொட்டு தடவி கதை பேச, தனது நிலையை குழந்தையிடம் வர்ணிப்பான். உங்க பாட்டி அம்மா இரண்டு பேருக்கு நடுவுல மாட்டிட்டு முழிக்கறேன் டா பட்டு’ என்பான்.
சில நேரம் மிதிலா கோபம் மறைந்து சிரித்திடுவாள். சில நேரம், ‘உனக்கு வரவர என்னை விட குழந்தை தான் முக்கியமாகிடுச்சு. முன்ன கௌசிக் கௌசிக்னு புலம்புவ. இப்ப குழந்தை குழந்தைனு புலம்பற. விழுந்து விழுந்து காதலிச்ச நான் தனியா தத்தளிக்கறேன்.” என்று குமைவாள்.
இப்படியே ஐந்தாம் மாதம் துவங்கும் நாள் அன்று செக்கப்பிற்கு அழைத்தாள் மிதிலா.
இந்த முறை நான் வரமுடியாது. ஆபிஸ்ல ஹேவி வேலை. நீ மட்டும் போ. இல்லை அம்மாவை கூட்டிட்டு போ” என்றான்.
“நீ வரலைனு சொல்லு. அவங்களை அழைச்சிட்டு போன்னு சொல்லாத.” இங்க வந்து மூனு மாசம் தங்கிட்டாங்க. எனக்கு இப்ப ஐந்து மாசமாகுது. ஊருக்கு போற ஐடியா இருக்கா இல்லையா?” என்று கேட்க, அந்த நேரம் செல்வராணியும் வீட்டில் இல்லை. எங்கோ வெளியே சென்று வருவதாக சென்றியிருக்க, ஹ்ருதேஷ் இருந்த கடுப்பில், “ஏய்.. என்னதான்டி பிரச்சனை அவங்க இருந்தா உனக்கென்ன? இந்தளவு மோசமானவளாடி நீ. நீ என்னை காதலிச்சன்றதுக்காக நான் மட்டும் உன்னோட வரணுமா? எங்க அப்பா அம்மாவும் தான் குடும்பம்.
இன்னொரு முறை ஏதாவது பேசின.. அறைஞ்சுடுவேன்” என்றான்.
அவன் நேரமோ என்னவோ அவன் கையை ஓங்கி பேசும் சமயம் வாசலில் கதவு திறந்திருக்க, தீபா மற்றும் கௌசிக் இருவரும் நின்றியிருந்தனர்.
மிதிலா இமை மூடி பயந்து கண்ணை திறக்காமல், வயிற்றில் ஒரு கையை வைத்து நின்றுயிருந்த கோலம் தீபாவுக்கும் கௌசிக்கிற்கும் பதபதைப்பை கூட்டியது.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்
