அத்தியாயம்-27
மிதிலா வீட்டில் தீபா மருமகனுக்கு வகையாக சமைத்து வைத்து பரிமாற, அங்கு மதியம் சாப்பிட வந்த கௌசிக் ஹ்ருதேஷை கண்டு, மரியாதைக்கு கூட பேசாமல் அறைக்கு சென்றான்.
ஹ்ருதேஷ் கைகள் சாப்பாட்டை துழாவியது.
மிதிலாவோ “பெங்களூர் கிளம்பணும்னு சொன்ன. சாப்பிடு ஹ்ருத்” என்று கூறவும், சாப்பாட்டை கவனித்தவன், “அத்தை… கௌசிக் எப்ப சாப்பிட வருவான்?” என்று கேட்க, “அவன் முகம் கைகால் கழுவிட்டு வந்துடுவான். ஆனா இன்னிக்கு என்ன செய்ய காத்திருக்கானோ?” என்று பதில் தந்தார்.
கௌசிக் வருவானோ என்னவோ என்று அவன் இருந்த அறைப்பக்கம் பார்வையிட, மிதிலாவோ “ஹ்ருத்.. அவன் வரமாட்டான். நான் இருந்தாலே ஹாலுக்கு வராதவன். நீயிருந்தா வெளியே வருவானா? ரூம்ல அடைகாத்து முட்டை போடுவான்.” என்று கேலி செய்தாள்.
“சும்மாயிருக்கியா” என்று ஹ்ருதேஷ் கோபமாக முகம் காட்டியதும், மிதிலா எனக்கென்ன என்று சாப்பிட்டாள். மீன் குழம்பு புளி ஊற்றி வாயுக்கு சுவையாக இறங்கவும், அதில் கவனம் செலுத்தினாள்.
ஹ்ருதேஷிற்காக மட்டன் குழம்பும் இருக்க, மெதுவாக சாப்பிட்டு எழுந்தான்.
நாம ரூம்ல போனா தான் அவன் வெளியே வருவான்.’ என்று மிதிலா கூறியதும் எழுந்துவிட்டான். செல்வராகவனும் மாப்பிள்ளை மகளோடு சாப்பிட்டார்.
மிதிலா அறைக்கு ஹ்ருதேஷ் சென்றதும், தீபா மகனை அழைத்தார். அவனும் தனியாக சாப்பிட வந்தான்.
பாதி சாப்பிட்டு முடிக்கும் தருணம், ஹ்ருதேஷ் வெளியே வந்தான்.
“அத்தை… மாமா.. நாங்க நாலு மணிக்கு பெங்களூர் கிளம்பறோம். அடுத்து எப்ப வருவோம்னு எங்களுக்கே தெரியாது. மேபீ… குழந்தை பிறக்கறப்ப இங்க தான் மிதிலா இருப்பா. ஏதாவது எங்களிடம் சொல்லணும்னா சொல்லுங்க.” என்று ஆசையாக நண்பன் தன்னிடம் பேசுவதற்கு ஏங்கினான்.
கௌசிக்கோ சாப்பிட்டு பொறுமையாக கை கழுவியவன், “உன் குழந்தை இந்த மன்னில் உதிக்கக்கறதுக்கு முன்ன, உன்னிடம் நான் வாங்கின பணத்தை தந்துடுவேன். அதுவரை வட்டி போடணும்னா போட்டுக்கோ.” என்று பேசிவிட்டு அறைக்குள் அடைந்தான்.
“கௌசிக் நான் பணத்தை என்னைக்கும் கேட்கலையே. என்கூட பழையபடி பேசுடா.” என்று ஹ்ருதேஷ் கௌசிக் கைகளை பிடிக்க, கையை உதறினான்.
“ஏதாவது பேசிடுவேன். பிறகு வீட்டுக்கு வந்த மாப்பிள்ளையை பேசிட்டனு எங்கப்பா அம்மா என்னை திட்டுவாங்க. உன் அருமை பொண்டாட்டி என் ஹ்ருதை எப்படி சொல்லலாம்னு சண்டைக்கு வந்து நிற்பா. தேவையேயில்லை.. நமக்குள்ள இருந்த நட்பு என்னைக்கோ செத்து புதைஞ்சு போச்சு.” என்று கதவை அடைத்துக் கொண்டான்.
ஹ்ருதேஷ் துவண்டவனாக சோபாவில் அமர்ந்தான்.
அவனருகே மிதிலா அமர்ந்து, “அவன் கிடக்கான் இன்னிக்கு நைட் இட்லியா சப்பாத்தியா. அம்மாவை எது பேக் பண்ண சொல்ல?” என்று இடித்தபடி அமர்ந்தாள்.
ஹ்ருதேஷ் இருந்த கோபத்திற்கு, “கொஞ்சம் சும்மாயிருக்கியா… எல்லாம் உன்னால தான்டி. தோள்ல கை போட்டு விடிய விடிய என்கூட பேசுவான். நின்னு ஒரு நிமிஷம் பேசாம கதவை லாக் பண்ணறான்.
எங்கயாவது நான் வர லேட்டானா, அடுத்த செகண்ட் என் வீட்டை தேடி நாய்குட்டி மாதிரி வருவான்.
மச்சி ஏன்டா நாலு அரியர் ஒழுங்கா படிக்கலையானு கேட்டா. அதை விடுடா.. நீ ஏன்டா ஐந்து மார்க்ல செண்டம் போச்சுனு கேட்பான்.
என்னை காதலிக்கறேன்னு சுத்தி எங்க நட்பை பிரிச்சிட்டியேடி. இந்த கருமத்துக்கு தான் காதலே வேண்டாம்னு சொல்லி விலகினேன்.” என்று கத்தவும், மிதிலா தாய் கிச்சனிலிருந்தும் தந்தை மற்றொரு அறையிலிருந்தும் கேட்டார்.
கதவை மூடியிருந்தாலும் கௌசிக்கும் ஹ்ருதேஷின் கோபமான வார்த்தைகளை கேட்டான்.
மிதிலா சத்தமில்லாமல் அறையில் வந்து படுத்துக் கொண்டாள்.
ஹ்ருதேஷோ கோபத்தில் வார்த்தை வீசியப்பின் கொஞ்ச நேரம் கழிந்ததும், அதே சோபாவில் இருந்தவன், தன்னை சுற்றி பார்வையிட்டான்.
இது மிதிலா வீடு என்றதும், மிதிலா சத்தமின்றி அழுவதை பார்த்ததும், எழுந்து மெதுவாக அவளருகே சென்றான்.
அவன் வரவும் குறுகிக் கொண்டு படுத்தாள். அவன் தோளை தீண்டும் நேரம், ஏதோ அன்னை சமைக்கும் வாடை வரவும், குமட்டிக் கொண்டு வாஷ்பேஷனுக்கு ஓடினாள்.
ஹ்ருதேஷ் பின்னால் வந்தவன், தண்ணீர் பாட்டிலை எடுத்து தர, அவனிடம் வாங்காமல் கிச்சனில் சென்று டம்ளரை எடுத்து பானையில் மொண்டு குடித்தாள்.
கிச்சன் பக்கம் ஹ்ருத் வராமல் நிற்க, அங்கேயே மிதிலா அமர்ந்தாள்.
ஹ்ருதேஷ் ஹாலில் அவள் வருகைக்கு காத்திருந்தான். தீபாவோ “இப்ப அழுது என்ன புரோஜனம்.? காதலிக்கறதுக்கு முன்ன யோசிச்சிருக்கணும். அட்லீஸ்ட்.. குழந்தை வரை போகாமலாவது பார்த்திருக்கலாம். கல்யாணத்தை லேட்டா கூட பண்ணிருப்போம். எல்லாத்திலையும் அவசரம். இப்ப… எல்லாரிடமும் திட்டு வாங்கு” என்று மகளை அவருமே திட்ட ஆரம்பித்தார்.
மிதிலாவோ “திட்டை வாங்கிக் கட்டிக்கறது தான் எனக்கு பழக்கமாச்சே. பரவாயில்லை.” என்று இட்லி தட்டில் மாவை ஊற்றினாள்.
அப்படியிப்படி ஹ்ருதேஷின் பக்கமே வராமல், கொஞ்ச நேரம் தனித்து இயங்கிவிட்டு, டீயை குடித்துவிட்டு, லக்கேஜை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.
டீ கொடுக்க போகும் போது, கௌசிக் அறை திறந்திருக்க, “கௌசிக் நாங்க கிளம்பறோம்” என்று அவன் ஏதும் கூறாமல் கடைக்கு சென்றான்.
“சரிங்க அத்தை கிளம்பறேன். மாமா போயிட்டு வர்றேன்” என்றான் ஹ்ருதேஷ்.
செல்வராகவனிடம் மிதிலா “அப்பா போயிட்டு வர்றேன்பா. நான் தலைகுனிவு செய்யற விதமா நடந்ததுக்கு மன்னிச்சிடுப்பா” என்று தேம்பியவள், தீபாவை கட்டிக் கொண்டாள்.
அங்கிருந்து சேலம் பேருந்து வந்ததும், “ஆஹ் அப்பா. பஸ் ஏறப்போறேன். அம்மா இருந்தா கொடுங்க” என்று கேட்க, மிதிலாவோ ஹ்ருதேஷ் தோளில் சுரண்டி, எதிரே சுட்டிக் காட்டினாள்.
“என்னப்பா சொல்றிங்க? அம்மா என்கூட வர்றாங்களா?” என்று தலையில் கைவத்தவன் மிதிலாவை ‘சும்மாயிரு’ என்பது போல அவள் கையை தட்டியும் விட்டான்.
“ஆமாடா… சொல்ல சொல்ல கேட்காம, நானும் என் பையன் கூட கொஞ்ச நாள் இருக்க போறேன்னு கிளம்பிட்டா. எவ்வளவோ எடுத்து சொல்லிட்டேன். இங்க இருக்கறப்பவே என் மகனை அவ கைக்குள்ள போட முயற்சி பண்ணறா. அங்க போனா என் பையன் மொத்தமா என்னை விட்டுட்டு போயிடுவான்னு பயந்துட்டு வாய்க்கு வந்ததை உலறுறா.” என்றதும், ஹ்ருதேஷை மிதிலா மீண்டும் சுரண்ட, அவள் கைகாட்டும் இடத்தில் பார்த்தவன், “இங்க என்னம்மா பண்ணற?” என்றான்.
“உன் கூட பெங்களூருக்கு வர்றேன். உன் பொண்டாட்டி தான் மசக்கையா இருக்காளே. கூடமாட ஒத்தாசைக்கு இருக்கேன். ஏன் வரக்கூடாதா?” என்று கேட்டார்.
“நீங்க ஏன் வர்றிங்கனு எனக்கு தெரியும். முதல்ல கீழ இறங்கி வீட்டுக்கு போங்க” என்றான்.
பஸ்ஸில் இருந்த கூட்டம் இவனை காண, ‘அம்மாவுக்கும் பையனுக்கும் நடுவுல நான் வரலை.’ என்று ஜன்னலோரம் சென்றாள் மிதிலா.
“அப்பா இறங்க மாட்டேங்கறாங்க. டிரைவர் வேற வந்துட்டார் அம்மா இறங்கும்மா” என்றதற்கு போராட்டம் செய்யாத குறை.
“பச்.. நீங்க அவளை பார்த்துக்க வரலைன்னு எனக்கு தெரியும். உங்க வேலையை பாருங்க” என்று எழ வைக்க, அவரோ மறுத்துவிட்டார்.
“அப்பா… இவங்க இறங்கறதா தெரியலை. நான் பார்த்துக்கறேன். வைக்கறேன்பா” என்று மிதிலா பக்கம் அமர, அவர்களோ இருக்கையின் இறுதி பாகத்தில் அமர்ந்தார்.
ஏதோ சின்ன குழந்தை அழுது காரியம் சாதிப்பது போல ஏறிவிட, மிதிலாவை சமாதானம் செய்யும் வாய்ப்பு அமையாமல் போனது.
இரவு வந்ததும் வராததும் இட்லி புதினா சட்னி மிதிலாவுக்கும், ஹ்ருதேஷிற்கு மட்டன் குழம்பும் வைத்து தந்துவிட, அவனோ இறங்கியதும் சாப்பிட்டு சோம்பல் முறித்தான்.
ஹாலில் செல்வராணி படுத்திட, அறைக்குள் ஹ்ருதேஷ் மனைவியை நெருங்கி வந்தான்.
“சாரி” என்றான். காது கேட்காதவளாக மிதிலா பாவிக்க, “நின் பிரேமமா என் சிநேகமானு பார்த்தா என் சிநேகம் தான் எனக்கு முக்கியமா போச்சு மிதிலா.” என்று கூற, “எனக்கு தூக்கம் வருது குட்நைட். காலையில ஹாஸ்டலை வெக்கட் பண்ணணும். படிப்புல வேற நிறைய லீவ் போட்டு வச்சியிருக்கேன்.” என்று அந்த பக்கம் திரும்பினாள்.
“கோபமா?” என்று இடையில் கையை வைத்தான்.
அவள் தட்டி விட்டு, போர்வையை போர்த்திக்கொள்ள, “அநியாயம்டி இது. கல்யாணத்துக்கு முன்ன பக்கத்துல வந்தாலே என் ஆசை தெரிந்து புரிந்துப்ப. இப்ப ஆசையா தீண்டியும் தட்டி விடற.” என்றான்.
“ஆஹ்ஹ்.. ஆசையா… நம்பிட்டேன். போடா.. உன்பிரெண்ட் கௌசிக்கை கட்டிப்பிடிச்சி தூங்கு. இல்லை. உங்கம்மா வெளியே தான் இருக்காங்க. தாலாட்டு பாட சொல்லு” என்று திரும்பியவள் சிறிது நேரத்தில் அயர்ந்து உறங்கியிருக்க, ஹ்ருதேஷ் போர்வை போர்த்தி விட்டு தலை கோதி விட்டான்.
இத்தனை நாளில் எத்தனை அவமானங்களோ, கௌசிக் என்னவெல்லாம் திட்டினானோ, அதெல்லாம் இவளாக சமாளித்திருப்பாள். அம்மாவும் இஷ்டத்திற்கு பேசினார்களே. அடுத்து சமுகத்தை வேறு சந்திக்க வேண்டும். காலேஜில் தாலியையும், இனி வரும் நாளில் வயிறு உப்பசம் பெற்றாலும் சமாளிக்க வேண்டிய இடத்தில் இருப்பது இவள் தானே. தன்னால் அதிகமாக அவஸ்தைப்படுகின்றாள்.
தினமும் சாப்பிட்டது எல்லாமே வாந்தி எடுத்தே களைத்து விடுகின்றாள்.
தன் குழந்தை எப்படியெல்லாம் இவளை பாடுபடுத்துகின்றதோ?! என்று கனவுகுள் சென்று உதட்டில் அழகான முறுவலில் கூடியது. இதில் அவள் கைகள் அவனை அணைத்துக் கொள்ள, உதட்டில் சத்தமின்றி ஒற்றியெடுத்தான்.
அடுத்த நாள் கல்லூரிக்கு சென்று விட்டு மாலை ஹாஸ்டல் காலி செய்ய நினைத்தாள். அதனால் கல்லூரிக்கு தயாராகி கொண்டிருந்தாள். மறுபுறம் ஹ்ருதேஷ் அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தான்.
“ஏய்… சமைக்காம எங்க கிளம்பிட்ட?” என்று கேட்டு செல்வராணி நிறுத்த, “காலேஜிக்கு.. அப்பறம் ஹாஸ்டலுக்கு” என்றாள்.
“காலேஜிக்கா… இதுக்கு பிறகு என்னத்த படிச்சி கிழிக்க போற” என்று கேட்டதும், அவசரமாய் ஷர்ட் பட்டன் மாட்டி, “அம்மா அம்மா.. அவ படிப்பே துணியை தான் கிழிச்சி பேஷன் டிசைனிங் பண்ணறது. எப்படியோ கிழிச்சிக்கிட்டோம். நீ சும்மாயிரும்மா” என்று மிதிலாவை அனுப்ப முயன்றான்.
“சரி சாப்பாடு செய்யலை?” என்று மிதிலாவை ஏறிட, அதற்கும் “ஆர்டர் தந்துடுவாம்மா” என்று ஹ்ருதேஷ் பதில் தந்தான்.
“அவளை சொன்னா இவன் வந்துடறான்.’ என்று செல்வராணி மனதோடு பொறுமினார்.
ஆர்டரில் வந்த உணவை தட்டில் கடைப்பரப்பி அலங்காரம் செய்து “ஹ்ருத் பிரேக்பாஸ்ட் ரெடி. நீங்களும் வாங்க அத்தை” என்றாள்.
”என்னமோ நீயே உன் கையால செய்தது மாதிரி கூப்பிடற. கடையில தானே வாங்கின?” என்றவர், தண்ணீரை எடுத்து வைத்தபடி, “பெயரையாவது என் எதிர்ல கூப்பிடாம இரு.” என்று சலித்தபடி சாப்பிட்டார்.
“டேய்… இதுல சப்புனு இருக்கு. ஒரு சட்னி கிட்னி கூட வீட்ல வைக்காம என்னடா ருசி?” என்று புலம்ப, “அம்மா… உனக்கு இதெல்லாம் வேண்டாம்னா ஊருக்கு கிளம்பு. சும்மா வேண்டுமின்னே கூட வந்துட்டு இம்சை பண்ணாத. முன்ன இங்க ஒன்றரை மாசம் இருந்தப்ப இப்படி தானே சாப்பிட்டேன். அப்ப அடிக்கடி நீங்களா எதாவது செய்து தந்திங்க. முடிச்சா இப்பவும் செய்யுங்க. இல்லையா வாயை மூடிட்டு சாப்பிடுங்க” என்றான்.
அதன்பின் செல்வராணி வேண்டாவெறுப்பாய் சாப்பிட இருவரும் புறப்பட்டார்கள். செல்வராணி மட்டும் தனியாக இருந்தார்.
இங்கு மிதிலாவின் கல்லூரி வளாகம் வழக்கம்போல சத்தமாக இருந்தது. மிதிலா தனது ஸ்கெட்ச் பைலை மார்போடு அணைத்தபடி பேஷன் லேபுக்கு நடந்தாள்.
வீட்டிலிருந்து கிளம்பும் போது புத்துணர்வாக இருந்தவள் இங்கு வந்து சேரவும், உடம்பு லேசாக சோர்வை காட்டியது. அப்படி இருந்தாலும் சமாளித்தாள்.
“இன்னிக்கு டிராபிங் பிராக்டிக்கல் நம்ம மிஸ் ஸ்டிரிட்” என்று தோழி லாவண்யா சொல்ல, மிதிலா சிரிக்க முயன்றாள்.
“நான் மேனேஜ் பண்ணிடுவேன்” என்றவள் குரலில் இருந்த சோர்வு அவளுக்கே தெரிந்தது.
லேப் உள்ளே பேப்ரிக் ரோல்ஸ் மேனிக்கியூ, பின்ஸ் எல்லாம் பரவிக் கிடந்தது. ஆசிரியர் சொல்லிக்கொண்டிருக்க, மிதிலா மேனிக்கியூ மேல் பேப்ரிக் ஸ்பிரட் செய்ய ஆரம்பித்தாள்.
இரண்டு நிமிஷம் சரியாக இருந்தது.
மூன்றாவது நிமிஷத்தில்…
திடீரென லேப் சுவர்கள் மெதுவா சுழலுவது போல தோன்றியது.
இது என்ன மீண்டும் தலைசுற்றலா?
கண்ணில் வெளிச்சம் வேறு கூடியது. மூச்சு சீராக வரவில்லை.
“மிதிலா… ப்ளீட்ஸ் சரியா பண்ணு” அவளுக்கு கற்றுத்தரும் ஆசிரியர் குரல் தொலைவில் இருந்து வருவது மாதிரி கேட்டது.
அவள் கை மேனிக்கியூவில் மேல் இருந்த பேப்ரிக்கை பிடிக்க முயன்றது, விரல்களோ பலவீனமா இருந்தது.
அடுத்த நொடி தள்ளாடினாள்.
காது முழுக்க அவளது பெயரை சொல்லி அழைப்பது போல் இருந்தது.
“மிதிலா!” “மிதிலா”
லாவண்யா குரல் கேட்டதும் அவள் உடல் சற்று பின்னோக்கி சாய்ந்தது. அருகிலிருந்த மாணவிகள் பிடிக்கவில்லை என்றால் தரையில் விழுந்திருப்பாள்.
“அய்யோ… டிஸ்ஸி ஆகிட்டா!”
என்றதும் கற்றுத்தரும் ஆசிரியர் வேகமாக வந்தார்.
” விண்டோ ஓபன் பண்ணுங்க!”
மிதிலா கண்களை திறக்க முயன்றாள். காற்று முகத்தில அடிக்க, லேசாக சீரானது.
“வாந்தி வர்ற மாதிரி இருக்கு. ரெஸ்ட்ரூம் போகணும்” என்றாள்.
அவள் மெதுவா சொன்னாள்.
லாவண்யா அவளை அழைத்து ஓடினாள். சில நிமிடங்களில் வாந்தி எடுத்தபின் சோர்வோடு சுவரை பிடித்து நின்றாள்.
“டாக்டரிடம் போகணுமா?” என ஆசிரியர் பயந்த குரலில் கேட்டார்.
“நோ மேம்.. வேண்டாம்… ஐ அம் பிரகனென்ட்” என்று கூறி மிதிலா மெதுவாக தாலியை எடுத்து காட்டி சொன்னாள்.
அங்கிருந்தவர்களில் கண்கள் பெரிதானது. தாலி கழுத்திலிருக்க, அவள் சிசுவும் அவளும் அருவருப்பான பார்வையிலிருந்து தப்பித்தனர். ஆளாளுக்கு வாழ்த்து கூறியிருந்தாலும், எப்ப மேரேஜ் ஆனது? எப்படி என்ற ரிஷி மூலம் கேட்கவில்லை. தாலி அது மற்றவர்களை வாயடைக்க வைத்தது.
“அடடா… நீ கிளாஸ் அட்டன் பண்ணறியா இன்னும்?”
“நான் ஸ்டடிஸை டிராப் பண்ண மாட்டேன் மேம். சோ… கன்டினியூ பண்ணறேன்” என்றாள்.
அந்த ஆசிரியரும் “ஆர் யூ ஓகே?” என்று கேட்டுக்கொள்ள “எஸ்” என்று மிதிலா தலை ஆட்டினாள்.
அந்த மேம் அவளை சில விநாடிகள் கவனமா பார்த்தார்.
“லிசன் ஹெல்த் முதல்ல முக்கியம். பட்.. ஐ அப்ரிஷேட் யுவர் டெடிகேஷன். நீ உட்காரு. யாராவது இவளுக்கு உதவுங்க” என்ற அந்த ஒரு வாக்கியம் மிதிலா கண்களில் நீர் வர வைத்தது.
அவள் சேரில் அமர்ந்தபடி லாவன்யா உதவியுடன் வேலை செய்வதை பார்த்தாள்.
அடிக்கடி வயிற்றில் கை வைத்தாள். “நாம இருவரும் சேர்ந்தே அச்சீவ் பண்ணுவோம்… சரியா? என்று அவளது குழந்தையுடன் மானசீகமாக பேசினாள்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்
