நின் பிரேமேம் என் சிநேகம்-26

அத்தியாயம்-26

  இரவு சாந்தி முகூர்த்தம் என்று மிதிலா வீட்டில் அலங்காரம் செய்ய நினைத்தார்கள். அதனால் மாப்பிள்ளை மகளை அழைத்தார்கள். ஆனால் ஹ்ருதேஷோ “இல்லை அத்தை.. எந்த அலங்காரத்துக்கும் அவசியமில்லை. நான் அங்க வரலை. நான் வந்தா கௌசிக் இன்னமும் கோபப்படுவான்.
 
  நான் இங்கயே இருக்கேன். நாளைக்கு மதியம் சாப்பிட வருவோம். அப்படியே மிதிலா திங்க்ஸ் எடுத்துட்டு ஈவினிங் பெங்களூர் கிளம்பிடுவோம்.

   அங்க போனதும், ஹாஸ்டல் காலி செய்துடுவோம்.” என்றான்.‌

   தீபாவிற்கு மறுத்து பேசவோ, வீட்டிற்கு அழைக்கவோ தயக்கம் இருந்தது. எத்தனையோ நாட்கள் ஹ்ருதேஷ் வீட்டிற்கு வரும் போது அவன் ஏன்டா வர்றான்’ என்று கௌசிக்கிடம் திட்டும் சாக்கில் ஹ்ருதேஷ் காதுபட கூறியிருக்க, எந்த முகத்தை வைத்து தற்போது அழைக்க?

செல்வராகவனும், “கௌசிக் மனம் மாறுவான் மாப்பிள்ளை. நீங்களும் சங்கடமில்லாம வருவிங்க. அந்த காலம் ரொம்ப தூரமில்லை” என்று மட்டும் கூறினார்.

“கண்டிப்பா மாமா” என்று புன்னகைத்தான்.‌

  அதன்பின் தீபா மகளிடம் சொல்லிவிட்டு புறப்பட்டார். செல்வராணியை கண்டு லேசான பயமிருந்தது. தண்ணீரில் போட்ட தீக்குச்சியை எடுத்து விளக்கு ஏற்ற தடங்கலிட்டு, ஏதோ மகளுக்கு விளக்கு கூட ஏற்ற தெரியாது என்று ஏசினாரே. ஆனால் மிதிலா அதெல்லாம் பார்த்துக் கொள்வாளென நம்பி சென்றார். கூடுதலாக ஹ்ருதேஷ் விட்டு தர மாட்டானென்றும் நம்பினார்.

  மிதிலாவோ அன்னை தந்தை சென்றதும், ஹாலில் அமர்ந்து, ஹ்ருதேஷை பார்வையிட்டாள்.

  அவனோ ஆபிஸுக்கு நாளை மறுநாள் வருவதாக கூறி, தனது திருமணத்தை உரைத்தான்.

அவன் பேசவும் அவனையே பார்த்திருந்த மிதிலாவை கண்டு, “ஏய்… என்ன புள்ளையை வச்ச கண்ணு வாங்காம பார்க்கற. போய் டிரஸை மாத்து. சாதாரண டிரஸா போடு. இங்க ஒன்னும் சாந்தி முகூர்த்தம் நடக்கப்போறது இல்லை. அதான் ஏற்கனவே வயித்தை நிரப்பிட்டு நிற்கறியே” என்று குத்தி கிழித்து பேச, மிதிலாவோ வார்த்தை போருக்கு தயாரானவள் ராஜலிங்கம் வரவும் அமைதியானாள்.

  மாமனார் ஓரளவு ஆதரவு தர, இந்த நேரம் பேசினால் நன்றாக இருக்காது என்று, ஹ்ருதேஷ் அறைக்குள் அடைந்தாள்.

ராஜலிங்கமோ “நீ பேசறது சரியில்லை செல்வராணி. ஏதோ தப்பு பண்ணியது அந்த பொண்ணு  மட்டும்ங்கற மாதிரி பேசற. நீ பேசி காயப்படுத்தறது உன் பையனுக்கும் சேர்த்து தான்.” என்றார் அவர்.

“ஆமா… ஊசி இடம் கொடுத்தா நூலு நுழைய தான் செய்யும்.” என்று பழமொழியை சப்புக்கட்ட, “எந்த பொண்ணு இடம் கொடுத்தாலும் உன் பையன் தடுமாறுவானா? சொல்லுடி.” என்று அதட்டவும் செல்வராணி கணவரை முறைத்தார்.

“நீங்க அவளுக்கு வக்காலத்து வாங்கறிங்க” என்றதும், “இல்லை… மறைமுகமா உன் பையனுக்கு வக்காலத்து வாங்கறேன்.‌ பகிரங்கமா உன் பையன் மேலயும் தப்பிருக்கறதை சுட்டி காட்டறேன். அவ்ளோ தான்.

  இன்னமும் ஏதாவது பேசிட்டு திரி, உன் மகன் நாளைக்கே பொங்களுர் போக இருக்கான். இங்க திரும்பி வராம போயிடுவான். காலத்துக்கும் நீ தனியா இந்த வீட்ல இருப்ப. நானாவது டீக்கடை குளத்தங்கரைனு சுத்துவேன். உன் வாயுக்கு எவ வீட்டுக்கும் போக முடியாது.” என்றவர் மருமகள் மிதிலா வரவும் அமைதியாக ஹாலில் அமர்ந்தார்.

   ஹ்ருதேஷ் இன்னமும் போன் பேசுவதை கண்டாள்.

  மாத்திரை போடுவதற்காக தண்ணீரை தேடி கிச்சனுக்கு சென்றாள்.

“என்ன மாத்திரை?’ என்று கேட்டு செல்வராணி வரவும், “சத்து மாத்திரை ஐயர்ன், கால்சியம் டேப்ளேட்” என்று கையை விரித்து காட்டினாள்.‌

   “அந்த பாலை சூடுப்படுத்தி வச்சியிருக்கேன். அவன் ரூமுக்கு போறப்ப கொண்டு போ.” என்று மட்டும் கூறிவிட்டு நகர்ந்தார்.

மிதிலாவும் பாலை பார்த்து சரியென்று தலையாட்டிக் கொண்டாள்.

ராஜலிங்கம் செல்வராணி அவர்கள் அறைக்கு சென்றடைந்தனர்.

ஹ்ருதேஷும் வாசல் கதவை அடைத்து அறைக்கு வந்து சார்ஜரில் போனை போட்டிருக்க, மாத்திரை விழுங்கி, மிதிலா பால் டம்ளருடன் அறைக்கு வந்தாள்.

”ஏய்… இதென்ன..” என்று ஹ்ருதேஷ் சிரிக்க, “என்னது?” என்றாள்.

ஹ்ருதேஷ் அவள் புறம் வந்து, காலையில கட்டின பட்டுபுடவை மாதிரி கட்டிட்டு, வெட்கப்பட்டு, தலைநிறைய பூவும், கைநிறைய வளையலும் அலங்காரம் பண்ணிட்டு வந்து கதவை தாழிட்டு, என்னை பார்க்க தயங்கி வருவன்னு நினைச்சேன்” என்றான்.

  அவளோ கோபப்பார்வை வீசி, “உனக்கே ஓவரா தெரியலை. என் வயிற்றுல குழந்தை உருவானதால மட்டுமே இந்த கல்யாணம் அவசரமா நடந்துடுச்சு. இல்லைன்னா உங்க வீட்ல ஏத்துட்டு இருப்பாங்களா? இல்லை எங்க வீட்ல தான் ஏத்துட்டு இருப்பாங்களா? இதுல சாருக்கு முதலிரவு வைப் இல்லைனு கேட்கற” என்றாள்.

  “மிது. சும்மா விளையாட தானே செய்யறேன்” என்று அணைக்க, “உங்கம்மா எனக்கு வேசி பட்டம் கட்டாத குறை. உன்னை ரசிச்சா கூட கண்ணு வைக்காதனு வந்துடறாங்க. ஏன்டா… இப்படியொரு சூழலில் கல்யாணம் பண்ணினோம்னு கஷ்டமாயிருக்கு. உங்கம்மாவுக்கு நான் அபார்ஷன் பண்ணிட்டு வெறுமெனே கல்யாணம் பண்ண போராடினா நல்ல பொண்ணுனு நினைச்சிருப்பாங்கல?” என்று கண்ணீரை உகுத்தினாள்.

  அன்னை தான் வேசி பட்டம் கூட கட்ட தயாரானவன்று ஹ்ருதேஷ் அறிவானே. இவன் தானே அதட்டி உருட்டி தற்போது வாயை மூட வைத்தது. தன்னிடம் அப்படி பேசுவதை விட்டு, மிதிலாவிடம் இப்படி ஆரம்பிக்கின்றாரா?’ என்ற எண்ணினான்.‌

“அம்மாவுக்காக நான் சாரி கேட்டுக்கறேன். அவங்க அப்படி பேசக்கூடிய ஆளு தான். ஆனா இங்க இருக்கறவரை தான். நாம பெங்களூருக்கு போனதும் நாம மட்டும் தான். அதுவரை அட்ஜஸ்ட் பண்ணு ப்ளீஸ்.

  அதோட கல்யாண நாள் அதுவுமா கண்ணீர் வேண்டாம். எனக்கு கஷ்டமாயிருக்கு.” என்று அவளது கன்னத்தில் படிந்திருந்த கண்ணீரை துடைத்து விட்டான்.

அவன் நெஞ்சில் கட்டிக்கொண்டு, “பால்” என்று நீட்ட, அதை பாதி பாதி குடித்து ஓரம் வைத்து, “ஆமா… நீ ஏன் இப்ப எமோஷனல் ஆகற. முன்ன எல்லாம் அப்படி ஆகமாட்ட.” என்று அவன் படுத்துக்கொண்டு அவளை கட்டிக்கொண்டு கேட்டான்.‌

“தெரியலை… என் காதல்ல உடும்பா இருந்தேன். நீயா லவ் பண்ணறதை அக்சப்ட் பண்ணியதும் அப்பாடா இனி இரண்டு பேர் சேர்ந்து இந்த காதலை வாழ வைச்சிடுவோம்னு நினைச்சேன். ஆனா நீ பிரேக்கப் என்றதும், பயந்து உன் வாயை அடைக்க கிஸ் பண்ணி அதை நாம கண்ட்ரோல் மீறி, நாம ஒன்னுக்குள்ள ஒன்னா ஆனதில, என்னை கைவிட மாட்டேனு தெளிவு வந்துச்சு.

ஆனா அதையே நீ அடிக்ட் ஆக்கியதும், குற்றவுணர்வு இருந்தது.
  படிக்க அனுப்பின இடத்தில் உன்னை தேடி வர்றேனேனு. ஆனா நீயா கூப்பிட்டு மறுக்கவும் மனசுவரலை. நான்‌ கன்சீவ் ஆனதும் எல்லாருக்கும் தெரியவும், கௌசிக் பார்த்த பார்வை கேவலமா இருந்தது.
  அதோட உங்கம்மா பார்வை. இவங்க இரண்டு பேரை பார்க்கறப்ப நான் குற்றவாளி மாதிரி பீல் பண்ணறேன் ஹ்ருத்.” என்றாள்‌.

  “காதலிச்சு கழட்டி விட்டு, கர்ப்பமாகிட்டு அந்த குழந்தையை அழிச்சுட்டு வேறொருத்தனை கட்டிக்கிட்டா தான் தப்பு. நாம அந்த தப்பை செய்யலை. அதனால ரொம்ப யோசிக்காத,  கொஞ்ச நாளில் சரியாகிடும்” என்று கண்ணில் முத்தம் வைத்தான் கள்வன்.

ஹ்ருதேஷ் வீட்டில், அவனது அறையில், அவன் கட்டிய மாங்கல்யம் அவள் வெற்று மார்பில் உரசியபடி, நெற்றியில் குங்குமம், உடலெங்கும் மணநாளுக்கென அணிந்த பொன் நகைகள் என்று மிதிலாவை மேலும் அழகாக காட்டியதில் ஹ்ருதேஷின் நெஞ்சில் கூடல் முடிந்து சுகமாக உறங்கினாள்.

  ஹ்ருதேஷிற்கு காதலில் திருமணம் பந்தத்தில் இணைந்து மிதிலாவுக்கு நல்ல காதலனாக மாறியது சந்தோஷமென்றாலும், நண்பனை இன்னும் பிரிந்திருக்க அது உறுத்தியது.
  கௌசிக் தன்னை எப்பொழுது ஏற்பானோ என்று உள்ளுக்குள் வாடினான்.
 
   அடுத்த நாள் ஹ்ருதேஷ் எழுந்து சோம்பல் முறித்து, மிதிலாவை பார்த்தான்.

  ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அவளது தட்டையான வயிற்றை தீண்டினான்.

  மிதிலா அவன் கைச்சூட்டில் விழிப்பு ஏற்பட்டு எழுந்தாள்.

“என்ன பார்த்துட்டு இருக்க” என்றாள்.

“ஒன்னுமில்லை.” என்றுரைக்க, பல் விலக்க ஆரம்பித்தாள்‌.

“ஏ… நூரையெல்லாம் ரத்தமா வருது” என்று பயப்பட, “இப்ப எல்லாம் சம்டைம் இப்படி ஆகுது ஹ்ருத். ஈறு வீக்கா இருக்காம்.” என்று துப்பினாள்.

லேசான ரத்த சிவப்பு வெள்ளை நூரையுடன் கொப்பளித்தாள்.

இருவரும் குளித்து முடித்து டீ குடிக்க வெளியே வர, அங்கே செல்வராணி மருமகளை கண்டு டீயை ஆற்றி மகனிடம் தந்தார்.

“உனக்கு நீயே ஊத்தி குடிச்சிக்கோ” என்று கூற, ஹ்ருதேஷ் தனது டீயை அவளிடம் தந்துவிட்டு மற்றொரு டீ டம்ளரை எடுத்து டீயை ஊற்றினான்.

செல்வராணிக்கு மகன் அவளுக்காக வேலை செய்வதை கண்டு, “ஏன்டா… அவ ஊத்தி குடிச்சா என்ன? நீயேன் வேலைக்காரனா அவளுக்கு சேவகம் செய்யற?” என்றார்.‌
 
  “கணவன் மனைவி இரண்டு பேர்ல யார் யாருக்கு உதவி செய்தா என்ன? உங்களுக்கு தலைவலின்னா அப்பா தைலம் தேய்ச்சி விட்டா அது வேலையா? இல்லைல்ல? அது மாதிரி தான்” என்று கூற பாதி டீ குடித்தவள் வாந்தி எடுத்து நின்றாள்.

அன்னையிடம் பேசிவிட்டு, அவளை தாங்க போனான்.

   மிதிலா தலையை பிடித்து வாந்தி எடுக்க உதவினான். அடுத்து தண்ணீரை குழந்தைக்கு புகட்டுவது போல ஊட்டினான்.

டீ வேண்டாமென்றதும் பாலை சூடுப்படுத்தி கொடுத்தான்.
  செல்வராணியோ இதை காண பிடிக்காமல் அறைக்குள் அடைந்தார்‌.

காலை உணவு சாம்பார் இருக்க இட்லி சாம்பார் தொட்டு சாப்பிட்டதும் இதே சம்பவம் நடந்தது.

“அம்மா.. மதியம் புளிக்குழம்பு செய்யறிங்களா” என்று கேட்க, “சாம்பார் செய்தாச்சுடா இன்னொரு குழம்பு எல்லாம் வைக்க முடியாது.” என்றார்‌.

  “ஹ்ருத்.. மதியம் எங்க வீட்ல சாப்பிடுவோம். எனக்காக எதுவும் வைக்க வேண்டாம். எங்கம்மா ஏதாவது செய்திருப்பாங்க” என்று முடித்துவிட்டாள்.

  ஹ்ருதேஷ் சரியென்று திரும்ப, “இங்க பாருடி… என் பையனை என்‌ எதிர்ல பெயர் சொல்லாத. மரியாதையா பேசு‌” என்று கண்டித்தார்.

  இம்முறை ஹ்ருதேஷ் மிதிலாவை பார்வையிட்டு, ‘சரியென சொல்லிட்டு போ’ என்ற ரீதியில் பார்க்க, அவளோ “வாயில வர்றதை தான் கூப்பிட முடியும்‌” என்று துணியெடுத்து வைக்க ஓடினாள்.

“இவங்க எனக்குன்னு டீ எடுத்து நீட்ட மாட்டாங்க. குழம்பு வச்சி தர மாட்டாங்க. ஆனா என்னை அதிகாரம் பண்ண மட்டும் வாய் வரும்.” என்று அறைக்குள் சென்று முனங்கினாள்.
  அது வெளியே இருந்தவர்களுக்கு கேட்டது.

செல்வராணியோ “ஏன்.. பெத்தவங்க முன்ன பெயர் சொல்லாம தவிர்க்க தெரியாது. அப்படி தான் வாயில வர்றதை கூப்பிடுவேன்னு போறா. இப்படியே போனா மரியாதை கிடைக்காது ஹ்ருதேஷ். நீ பொண்டாட்டி பேச்சை கேட்டு ஒரு நாள் இல்லை ஒரு நாள் இந்த அம்மாவை பார்க்க விடாம பண்ணுவா பாரு” என்று ஒப்பாரி வைக்க தாயுக்கும் தாரத்திற்கும் இடையே நின்றவனாக தலையை உலுக்கி கொண்டான்.

-தொடரும்.
 
 பிரவீணா தங்கராஜ்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top