அத்தியாயம்-25
காலை சூரியன் இன்னும் முழுதாக பூமித்தாய் முது படரவில்லை. கோவிலின் கல்தரையில் மெல்லப் பரவிய அந்த பொன்னிற ஒளி, ஒரு அமைதியான ஹ்ருதேஷின் திருமண ஆரம்பத்தை அறிவிப்பது போல இருந்தது.
கோவில் மணியின் சத்தம் தூரத்தில் ஒலித்துக் கொண்டேயிருந்தது.
ஆடம்பரம் இல்லாத ஒரு எளிமையான திருமணம் அங்கே நிகழப்போகின்றது.
ஹ்ருதேஷ் கோவில் மண்டபத்தின் ஓரத்தில் நின்றிருந்தான். வெள்ளை வேஷ்டி பட்டு சட்டை, ஆனாலும் அவன் முகத்தில் ஒரு அமைதியாகத் தோன்றினாலும், உள்ளே ஒரு பெரும் அலைபாய்ச்சல்.
மிதிலாவுக்கும் தனக்குமான காதல் உறவு இன்று ஒரு முடிவுக்கு வந்து, தனக்கு ஒரு பொறுப்பு கூடுவது உறுதி.
மிதிலா கோவிலுள்ளே பெற்றவர்களுடன் வந்தாள். எளிய சேலை, மிகக் குறைந்த அலங்காரம். அவள் கண்கள் தரையைத் தாண்டி எங்கும் செல்லவில்லை.
அவளுக்கு பயமில்லை ஆனால் ஒரு கனமான உணர்ச்சி அவளை சுற்றியிருந்தது. இந்த திருமணம் தன் காதலுக்கு ஒரு நிறைவான முடிவை தந்து மீண்டும் பிள்ளையார் சுழி போட்டு திருமண பந்தத்திற்கு வித்திட்டது.
மிதிலாவின் பெற்றோர் முகத்தில் மட்டும் தெளிவான மகிழ்ச்சி. அவர்கள் அடிக்கடி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
‘இது சரியான முடிவு. இவர்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படுவது சரி’ என்று சொல்லாமல் சொல்வது போல. அவர்களுக்கு இன்றைய நாள் ஒரு கடமை முடிந்த திருப்தி.
தங்களுடைய மகள் வாழ்க்கை தவறான பாதைக்கு போகவில்லை என்று பெண்ணை பெற்றவருக்கான நிம்மதி.
மண்டபத்தின் இன்னொரு ஓரத்தில் கௌசிக் நின்றிருந்தான். கௌசிக் தங்கை கல்யாணம் என்று எந்தவொரு விஷயத்திலும் தலையிடவில்லை.
அவன் வர வேண்டிய அவசியமில்லாதது போல காட்டிக்கொண்டான்.
யாருக்கோ கல்யாணம் என்ற ரீதியில் இருந்தது கௌசிக் தோற்றம்.
கௌசிக் கண்கள் ஒருமுறை கூட மணமக்களை நேராகப் பார்க்கவில்லை. கோவில் சுவரில் இருந்த ஓவியத்தை பார்த்துக் கொண்டது போல தனித்து நின்றான்.
கௌசிக் மனதிற்குள் ஒரு எரிச்சல், ஏமாற்றம், இழப்பு.
நண்பன் துரோகியானது எரிச்சல், ஹ்ருதேஷ் தன் தங்கையை காதலித்தான் என்ற ஏமாற்றம். தன் நண்பன் இனி தனக்கு நண்பனாக இல்லை என்ற இழப்பு.
‘இது நடக்க வேண்டியதா?’ என்ற கேள்வி இன்னும் அவன் மனதில் தீராத சத்தமாக இருந்தது. மிதிலா மீதும் கோபங்கள் இருந்தது.
அதை தாண்டி மந்திரங்கள் தொடங்கின.
பூசாரியின் குரல் கோவிலின் காற்றில் கலந்தது. அந்த ரம்மியமான ஒலி, எல்லோரையும் ஒரு மையத்திற்கு இழுத்தது.
தாலி கட்டும் சமயம் ஹ்ருதேஷ் மிதிலாவை பார்த்தான். ஒரு நொடி நின் சிநேகத்தை தான் வழிநடத்தி திருமணத்தில் சேர்த்துவிட்டேன் என்ற பெருமிதம். அந்த பார்வையில் காதல் காட்டிக்கொள்வதில்லை. ஒரு உறுதி மட்டுமே தந்தான் ஹ்ருத்.
ஹ்ருதேஷின் விரல்கள் மெதுவாக உறைந்தது. அவன் பார்வை கௌசிக்கை சென்றது. கௌசிக்கோ வேண்டாவெறுப்புடன் கையிலிருந்த பூவை கசக்கிக் கொண்டிருந்தான்.
மிதிலாவின் தாய் கண்களைத் துடைத்தார். அவள் தந்தை தலை குனிந்து நிம்மதியாக மூச்சை விட்டார்.
கௌசிக் மட்டும் தனியாக படியில் சென்று அமர்ந்தான். கௌசிக் கண்களில் வலி இருந்தது, தங்கை திருமணத்தை ஏற்றுக் கொள்ளும் முயற்சியில் இருந்தான்.
யாரும் அவனை அழைத்து ஹ்ருதேஷ் பக்கத்தில் நிறுத்தவில்லை.
செல்வராணி மண்டபத்தின் பின்புறம் நின்றிருந்தாள். அவர் முகத்தில் வெளிப்படையான எதிர்ப்பு இல்லை, மகிழ்ச்சியும் இல்லை.
தன் மகனை ஹ்னுதேஷை பார்த்தார், அவன் மிதிலாவுடன் அருகருகே அமர்ந்திருப்பதை கண்டு பொறுமினார்.
மெதுவாக வந்து தட்டில் இருந்த குங்குமத்தை எடுத்து, மிதிலாவின் நெற்றியில் வைத்திட தீபா கூற ஹ்ருதேஷ் அதை செயல்படுத்தினான்.
ராஜலிங்கமும் செல்வராகவனும், சம்பந்தி முறையில் நிறைவாக பேசினார்கள். இந்த கூட்டத்தில் அவர்கள் இருவரும் நல்ல தகப்பனாக நடந்துக்கொண்டார்கள்.
கொஞ்ச நேரம் கோவில் வெளியே காற்று சுதந்திரமாக வீசவும் அங்கே அமர்ந்தனர். ஹ்ருதேஷ் ஒரு நொடிக்கு குறைவாக கண்களை மூடினான். அவன் தோள்களில் முழுவதும் புதிதான பாரம் ஏறியது. ஆனால் இது சுகமாக இருப்பது போல மாயை.
மிதிலா ஹ்ருதேஷ் அருகில் நின்றாள்.
இரு வீட்டார் முன்னிலையில் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் ‘காதல் கல்யாணம்’ என்று கூறியே மணந்தான்.
அதனால் கௌசிக் நட்பை இழந்ததாக பேச்சு வந்தப்பின்னும் ஏற்றுக்கெண்டான்.
செல்வராணி எல்லாம், மைந்தன் தான் பார்த்து வைத்த பெண்களை தவிர்த்து, இப்படி காதலித்து மணப்பது ஒரு குறை என்றால் விமர்சையாக வைக்காதது மற்றொரு குறை. அதை திருமணத்திற்கு வந்த உறவுகளிடமெல்லாம், சொல்லி வருத்தப்பட்டார்.
ஹ்ருதேஷ் மெதுவாக கௌசிக் பக்கம் நடந்தான். மிதிலா தடுக்க, அவளையும் அழைத்தபடி கௌசிக் பக்கம் வந்து தள்ளி அமர்ந்தான்.
“இந்த கல்யாணம்… ரொம்ப விமர்சனையா நடக்க வேண்டியது கௌசிக். நீ என்னை மிதிலாவுக்கு லவ்வரா அக்சப்ட் பண்ணி, என்னையும் மிதிலாவையும் ஏற்றுயிருந்தா…
இப்ப பாரு… உங்க வீட்ல முதல் கல்யாணம். எங்க வீட்ல.. நான் ஒரே பையன். ஆனாலும் சாதாரணமா கோவில்ல ரொம்ப அமைதியா எளிமையா நடந்துயிருக்கு.
ஏன்டா…. என்னை வார்த்தைக்கு வார்த்தை மச்சி மச்சினு கூப்பிடுவ. ஆனா உன் தங்கையை நான் காதலிச்சது பெரிய குற்றமா நினைச்சி என்னை அடியோட வெறுக்கற?
என் நிலையில இருந்து கொஞ்சம் யோசித்து என்னை மன்னிச்சிருக்கலாம்ல? எனக்கு மச்சான் முறையில செயின் போட சொன்னதுக்கும் போடமாட்டேன்னு சொல்லிட்ட.
ஒரு காலத்தில என்னை மட்டும் தானே உலகமா நம்பி சுத்தின. என் நட்பை நீ உதாசினப்படுத்திட்ட கௌசிக்.” என்றான்.
கௌசிக்கோ நக்கலாய் ஹ்ருதேஷை பார்த்து, “விமர்சனமா கல்யாணம் செய்யணும்னா பணக்கார பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணியிருக்கலாம்ல. என் தங்கச்சி தான் கிடைச்சாளா?
நீயும் அவளும் எல்லை மீறி பழகிட்டு வயித்துல ஒன்னு வளருது என்றதும் அவசரமா கல்யாணம் பண்ணற. ஏன் ஆறு மாசம் கழிச்சு பொறுமையா ஊர் முழுக்க பத்திரிக்கை தந்து, ரிசப்ஷன் வச்சி, பேண்ட் வாத்தியம் டிஜே வச்சி நடத்த வேண்டியது தானே. முடியாதுல… வயிறு காட்டிக்கொடுத்துடும் இல்ல.
இந்த எளிமையான திருமணத்திற்கு பின்னாடி, உங்க அவசரம் இருக்கு.
இங்கயிருக்கற யாருக்காவது தெரியுமா? ஆனா இந்த கௌசிக் கெட்டவன். நண்பன் தானே லவ் பண்ணினான். ஆனாலும் கோபமா மூஞ்சி தூக்கி உட்கார்ந்திருக்கான் பாரறேனு பேசும்.
ஏன்… உன் பொண்டாட்டி மிதிலா கூட, ‘எனக்கு கடை திறக்க காசு தந்தும் நன்றியில்லாம நிற்கறானேனு தான் மனசுல திட்டுவா’ என்று பேசினான்.
மிதிலாவோ இத்தனை நேரம் அமைதியும் அழுகையும் சோர்ந்தவளாக நின்றியிருந்தவள் அண்ணனை ஏறிட்டு, “என்ன பேசற அண்ணா… என்னைக்கு எங்க காதல் உனக்கு தெரிந்ததோ அன்னிலயிருந்து இவர் எப்படி கஷ்டப்படறார்னு பார்த்தவ நான்.
என் பிடிவாதம் நெருக்கத்தால என்னை காதலிச்சிட்டு, உன்னிடம் நல்ல நண்பனா அவர் காதலை மறைச்சிட்டு தவிச்சப்ப துடிச்சிட்டார்.
இதுல நீ அவரிடம் பேசாம விலகவும், என் காதல் தான் உங்க நட்பை பிரிச்சிடுச்சுனு தினம் தினம் உள்ளுக்குள்ள வெதும்பறார்.
முன்ன மாதிரி என்னிடம் சரியா பேசறதில்லை தெரியுமா? நீ கூட என்னிடம் முகம் திருப்பிட்டு போற.
இருக்கட்டும்… என் காதல் ஜெயிக்கணும்னு உடுப்பு பிடியா இருக்கணும்னா, நிறைய அம்பு துளைக்கற வார்த்தையை கேட்டு தான் ஆகணும். இட்ஸ் ஓகே.” என்று கண்ணீரை துடைத்து, கையை கட்டி நின்றவள், “ஓகே… கௌசிக்… எங்க கல்யாணத்துக்கா வந்ததுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம். இப்ப இவர் பொண்டாட்டியா பேசறேன். அதுக்கு பதில் சொல்லு.
இம்புட்டு பேச்சு பேசற நீ ஒரு காலத்துல நான் பத்தாவது படிக்கறப்ப என் பிரெண்ட் ஒருத்தி, வனிதா… அவளை ரூட் விடலை. அவ கூட உங்க அண்ணா என்னை அடிக்கடி முறைச்சு முறைச்சு பார்க்குதுனு சொல்ல, நான் வந்து உன்னை கேட்டதும், மழுப்பின நினைவிருக்கா? இப்ப அந்த பொண்ணுக்கு கல்யாணமாகி இரண்டு வயசுல குழந்தை இருக்கு. ஆனா அவ போன வாரம் உன் கடையில ஜூஸ் குடிக்க வந்தா, அப்பவும் உத்து உத்து பார்த்தியாம். ஏன்டா… இதென்ன புத்தி?” என்று கேட்டு ஹ்ருதேஷ் பர்ஸை எடுத்து, அதில் சில்லரை ஐந்து ரூபாயை அண்ணன் கையில் வைத்து, “சில்லரை புத்தி” என்றாள்.
“ஏய்.. அவளை எங்கயோ பார்த்தேன். யாராயிருக்கும்னு உத்து பார்த்தேன். தப்பா இல்லை” என்று உடனடியாக மறுத்தான்.
“நீ என்னவோ பண்ணி தொலை.. ஆனா எனக்கு எண்ணி ஒரு மாசத்துல என் புருஷன் தந்த பணம் வேண்டும். அவர் வேண்டுமின்னா பணத்தை தந்துட்டு வாயை மூடியிருக்கலாம். என்னால அப்படி இருக்க முடியாது. அவரை மதிக்காதவனை நான் ஏன் பாவம் பார்க்கணும். பணத்தை எடுத்து வை.” என்றாள் கறாராக.
“மிதிலா… அறிவில்லை. வாயை மூடு. அது என் பிரெண்டுக்கு நான் தந்தது. கடனுக்கு இல்லை.” என்றான் ஹ்ருதேஷ்.
“ஓ.. தானமா.? அதெல்லாம் தேவையில்லை. உன்னை அவன் பணத்தை தந்து என்னை கரெக்ட் பண்ண வாயடைச்சதா அசிங்கமா நினைக்கறான். நீ நண்பனுக்காக தந்தேன்னு பேசற. உன்னை நண்பனா மதிக்க அவன் பழைய கௌசிக் இல்லை.” என்றாள்.
“நான் அதே ஹ்ருதேஷ் தான் மிதிலா. உன்னோட காதலும் என்னோட நட்பு, இரண்டும் எனக்கு முக்கியம்” என்றான்.
அதற்குள் செல்வராணி “நல்லநேரம் பார்த்து வீட்டுக்கு போய் விளக்கு ஏத்த வேண்டாம். எதுவும் முறையா செய்யக் கூடாதுனு நினைக்கறாளா அவ” என்று கத்த துவங்கினார்.
“பிறந்த வீட்ல நீ. புகுந்த வீட்ல அவங்க. நல்லா வருவிங்க” என்று கௌசிக்கை பார்த்து கூறிவிட்டு மிதிலா ஹ்ருதேஷ் கையை பிடித்து இழுத்து சென்றாள்.
கௌசிக் பார்வை தங்கை இழுத்து சென்ற ஹ்ருதேஷ் கவனித்தாள்.
“கையை விடுடி. என்ன திமிரு உனக்கு. வாய் நீளுது.” என்று அதட்ட, “உங்கம்மாவுக்கு வாய் நீளமா தான் இருக்கு. ஈடுக்கொடுக்க வேண்டாம்” என்று பேசுவது இங்குவரை கேட்க, கௌசிக்கிற்கு தங்கை ஹ்ருதேஷை அவள் இழுப்புக்கு ஆட்டி படைப்பது தெரிந்துக்கொண்டான்.
ஒருவேளை ஹ்ருதேஷ் விலகி தங்கை நெருங்கி வந்து இம்சை தந்து காதலித்து இருக்க, ஹ்ருதேஷ் இருதலை கொள்ளியாக சங்கடம் அனுபவித்து இருப்பானோ என்று லேசாக எண்ணம் மொட்டு விட்டது.
ஹ்ருதேஷ்-மிதிலா அதற்குள் காரில் ஹ்ருதேஷ் வீட்டிற்கு சென்றார்கள். பாதி பேர் ஹோட்டலில் சாப்பிட்டு கிளம்பியிருந்தனர். கௌசிக்கும் கடைக்கு வந்து கல்லாப்பெட்டி அருகே அமர்ந்து விட்டான்.
அவனுக்கு மனதில் உறுத்தியது. இந்த கடை ஹ்ருதேஷ் தந்த பணத்தால் வளர்ந்ததே. அப்படியிருக்க தினமும் அந்த நினைப்பு வேறு கொல்கின்றது.
எப்படியாவது பணத்தை தந்து கடனை அடைக்க வேண்டும் என்றெண்ணினான்.
மிதிலாவோ ஹ்ருதேஷ் வீட்டில் விளக்கு ஏற்ற, இரண்டு குச்சி எரியாமல், தீக்குச்சியின் முனையில் இருந்தவை கீழே சிதைந்தது.
அதற்கு செல்வராணியோ “ஒரு விளக்கு பத்தவைக்க சொன்னா தீக்குச்சியை உடைச்சி போட்டுட்டு இருக்க. முன்ன பின்ன சாமி விளக்கு ஏத்தியிருக்கியா?” என்று ஆரம்பித்தார்.
தீபாவோ மகள் கையை பிடித்து அமைதிப்படுத்த, “ஹ்ருத் நீ ஏத்து” என்று தர, “கல்யாணம் ஆனப்பிறகு என் பையன் பேரை சொல்லற. விளக்கு நீ தான் ஏத்தணும். அவனை ஏத்த சொல்லற” என்றார்.
“ஹ்ருத்.. தீக்குச்சி உரசிப்பாரு” என்று அதிகாரம் செய்ய, ஹ்ருதேஷோ சாமி ரூம்ல பிரச்சனை பண்ணிட்டு” என்று பிடுங்கி தீக்குச்சியை உரச முயல, அன்னையை கண்டு முறைத்தான்.
தீக்குச்சி தண்ணியில் நனைத்து உதறி தந்திருப்பதை அவன் யூகித்திட, வேறொரு தீப்பெட்டியை தந்து மிதிலாவை ஏற்ற வைத்தான்.
மிதிலாவோ விளக்கு ஏற்றிவிட்டு, செல்வராணியை ஒழுங்குக் காட்டி விட்டு சாமி கும்பிட்டாள்.
செல்வராகவன்-தீபா இருவரும் மகள் இந்த வீட்டில் நல்லபடியாக வாழ வேண்டினார்கள். ராஜலிங்கமோ செல்வராணியிடம் “நல்லபடியா நடந்துக்கிட்டா நல்லது” என்று பேசி சென்றார்.
செல்வராணியோ மகனை கண்டு நழுவினார்.
மிதிலாவோ “ஹ்ருத்… குங்குமம் வச்சிவிடு” என்றாள் உளமாற. அவனும் புன்னகையுடன் வைத்துவிட்டான்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்
