meta-google-adsense-platform-account: ca-host-pub-2644536267352236 meta-google-adsense-platform-domain: sitekit.withgoogle.com

நின் பிரேமம் என் சிநேகம்-19

அத்தியாயம்-19

  கௌசிக் சென்றதும் அவ்விடம் மாயன அமைதி கொண்டது.

  கௌசிக் கொண்டு வந்த ஊறுகாய் பாட்டில் கீழே விழுந்து கண்ணாடி உடைந்திருந்தது. அதிலிருந்து கசிந்திருக்க, மிதிலாவிற்கென புது உடையில் அந்த ஊறுகாய் எண்ணெய்கள் ஒட்டிக் கொண்டிருந்தது.

  ஏற்கனவே ஹாலில் கௌசிக்-மிதிலா-ஹ்ருதேஷ் மூவரும் எடுத்த புகைப்படமும் உடைந்திருந்தது.

   அதை எடுக்க சென்ற மிதிலாவை கண்டு, “அதை தொடாத… அதை தொட உனக்கு எந்த உரிமையும் இல்லை.

எத்தனை முறை ஒதுங்கி போனேன். லவ் பிரேக்கப் பண்ணிடலாம்னு கூட கெஞ்சினேன். எவ்ளோ பயந்தேன்.
 
  என்னை துரோகினு சொல்வான்னு படிச்சி படிச்சி சொன்னேன். கேட்டியா… பச்சை துரோகியாம். சின்ன பொண்ணை மயக்கியதா பேசறான். தங்கச்சினு பார்க்க வேண்டியது தானேனு காரி துப்பி சொல்லிட்டு போறான்.‌
  இப்ப சந்தோஷமா… சந்தோஷமா டி.

உன்னையும் கேவலப்படுத்திட்டு, என்னையும் கேவலப்படுத்திட்டு, இந்த காதல் எதை நியாயப்படுத்த போது?

  சொல்லு.. எதை நியாயப்படுத்த போது?

நட்பா காதலானு என்னை தவிக்க விட்டியே… இப்ப சொல்லு. என்‌ பிரெண்ட் கௌசிக் என்னை என் முகத்துல துப்பிட்டு போயிட்டான்” என்று கூற, மிதிலாவோ அங்கிருந்த துப்பட்டாவால் முகத்தை துடைக்க சென்றாள். அதை தட்டி விட்டவன், “கடைசில உடம்பை காட்டி என்னை உனக்கு அடிமையாக்கிட்டு, இப்ப என்னென்ன பெயரை எடுக்க வச்சிட்ட?
   அப்படியென்னடி காதல்.. கட்டில்ல புரண்டதை தவிர” என்று கௌசிக் பேசியது போதாதென்ற ஹ்ருதேஷும் மிதிலாவை வார்த்தையால் வதைத்தான்.

  மிதிலாவோ “அவன் பேசிட்டு போயிட்டான் ஹ்ருத். அவனுக்கு என் காதல் புரியாது. உனக்கு என் காதல் புரியும் தானே? நீ ஏன் ஹ்ருத் என்னை அசிங்கமா பேசற. ஒவ்வொருத்தருக்கு அவங்க காதலை காப்பாத்திக்க, என்னென்னவோ பண்ணுவாங்க. நீ நட்பா காதலானு குழப்பத்தில இருந்தப்ப, எங்க என்னை பிரேக்கப் பண்ணிடுவியோனு தான், என்னை தந்து உன்னை இழுத்தேன். தப்பு தான். ஆனா அதுக்கு பிறகு நட்பை விட காதல்ல சரியா இருக்கணும்னு பிரேக்கப் பண்ணக்கூடாதுனு உனக்கு ஒரு பிடிப்பு வந்துச்சுல? இப்ப கௌசிக் பேசியதும் கட்டில்ல புரண்டது மட்டும் தான் தெரியுதா? உனக்காக நான் எந்த நிலையிலும் விட்டுப்போகாம நிற்கற என் காதல் புரியலையா?

   நம்ம உடலால மட்டுமா இணைந்தோம். மனசால இல்லையா ஹ்ருத்.

  என்னைக்கு கௌசிக்கு தெரிந்தாலும் ஏதாவது பேசி காயப்படுத்துவான்னு தெரியும்.
   நாம அப்ப வாய் வார்த்தையால காதலிப்பதாக சொல்வோம்னு இருந்தேன்.
   இப்படி திடுதிப்புனு வந்து, நின்றப்போ நான் உன் வீட்ல உன் ரூம்ல இருந்தா வேறென்ன நினைப்பான் சொல்லு.
  தப்பா தான் நினைப்பான், தப்பா தான் பேசுவான். அதுக்காக நீ என்னை தப்பா பேசுவியா ஹ்ருத்?” என்று உலுக்கினாள்.

  “போடா..” என்று சோபாவில் அமர்ந்து அழுதாள்.

  கொஞ்ச நேரத்தில் தீபாவிடமிருந்து போனில் ‘அம்மா’ என்ற  அழைப்பு வந்துக் கொண்டேயிருந்தது.
  மிதிலா அழைப்பை ஏற்கவில்லை.
  தந்தை செல்வராகவனும் அடுத்து அழைத்தார். ‘அப்பா’ என்ற அழைப்பையும் எடுக்காமல் அதையே பார்வையிட்டாள்.

   தொடர்ந்து மாறிமாறி போனில் அழைக்க, மூக்கை உறிந்து, “சொல்லும்மா” என்றாள்.

“அடுத்த பஸ் பிடிச்சு வீட்டுக்கு வாடி.” என்று அதட்ட “அம்மா… நான்” என்று ஆரம்பித்தவளிடம்  செல்வராகவனும், “உன் மகளை இங்க வந்து பேச சொல்லு.” என்று கண்டிக்கும் குரலை கேட்க, “அப்பா.” என்று ஆரம்பிக்கும் முன் போன் துண்டிக்கப்பட்டது.

   ஹ்ருதேஷ் கடிகாரத்தை பார்த்து, “கிளம்பு.. நானும் வர்றேன்.” என்றான்.‌

  மிதிலா முகம் பூவாக மலர்ந்து தலையாட்டி புறப்பட தயாரானாள்.

  குளித்து முடித்து உடையை மாற்றி, வந்தவளோடு அவனும் இரண்டு நிமிடத்தில் புறப்பட்டான்.

   எப்பொழுதும் பெங்களூருக்குள் இருவரும் பயணம் செய்தால் கைகளை பிணைத்து பேசியபடி பொழுதை ஓட்டுபவர்கள். இன்று சேலம் வரை ஒன்றாக பயணம் என்றாலும், பக்கத்தில் பக்கத்தில் அமைதியாக பயணித்தனர்.

  ஹ்ருதேஷ் முகமோ சோர்வுடன் தலையில் சாய்த்து இமை மூடிவிட்டான்.

மிதிலாவுமே ஹ்ருதேஷை தொந்தரவு செய்யாமல், அமைதியாக ஜன்னலில் சாலையை வெறித்தாள். சற்று நேரம் கழிதாது, ஹ்ருதேஷ கை வளைவில் சாய்ந்துக் கொண்டவள் உறங்கியிருந்தாள்.

   ஹ்ருதேஷுக்கு தான் அதிகப்பட்ச வருத்தம் கொண்டான்.
  மனதிற்குள் கௌசிக் தன்னை குற்றவாளியாக மாற்றி கேள்விகளை துப்பாக்கியால் துளைத்தெடுப்பது போல பிரம்மை.

   தன்னை காதலித்த பாவத்திற்கு மிதிலா இல்லாத அவப்பெயரை கேட்டுவிட்டாளென்று துடித்தான்.

  உண்மையில் மிதிலாவை கௌசிக் அசிங்கமாக பேசிய பொழுது கௌசிக் சட்டை காலரை பற்றி அடித்து நொறுக்கும் ஆவேசம் அதிகரித்தது. இதே வேறோரு ஆள் அப்படி பேசினால் நிச்சயம் முகத்தை பேத்திருப்பான். எதிரே நின்றவன் நண்பனாக மாறியப்பின் இங்க பொறுமை தான் தேவைப்பட்டது.

  கௌசிக்கும் ஏதாவது பஸ்ஸில் தான் பயணம் செய்வானென்று தோன்ற, தனக்கு முன்னேயிருந்த பேருந்தை எட்டியெட்டி பார்த்தான்.

  எதிலும் இருப்பது போல தெரியவில்லை. நண்பனை தேடிய மனம் காதலி சோர்ந்து இருப்பதையும் கவனித்தான்.

ஒரிடத்தில் சற்று வண்டி நிற்குமென்று கூறவும், இறங்கியவன் சேலத்திற்கு செல்லும் வண்டியில் எல்லாம் நண்பனை தேடினான்.

  அவன் இல்லை என்றதும், சோர்வாய் வந்தான். மிதிலா இருக்கையில் இல்லை என்றதும், அவளை தேட, மிதிலாவோ வாழைப்பழம், தண்ணீர் பாட்டில், அங்கே இருந்த பிரட் சான்ட்வெஜ் என்று வாங்கினாள்‌.
  
  ‘இங்க எவ்ளோ பெரிய இஸ்ஸு போகுது திங்கறதுக்கு வாங்கிட்டு இருக்கா’ என்று பேருந்தில் அமர்ந்தான்.

  மிதிலாவும் இடம் வந்து சேர்ந்தவள், அவனிடம் கொடுக்க, “இதை திங்கற மனநிலையில நான் இல்லை.” என்று கோபித்தான்.

“நேத்து நைட் ஏழு மணிக்கே சாப்பிட்டு படுத்துட்டோம் ஹ்ருத். காலையிலருந்து இன்னமும் சாப்பிடலை.  மதியம் சாப்பிடற  நேரமும் தாண்டிடுச்சு.
 
  எனக்கு தான் சூடுசுரணை இல்லையே… ஆனா பசிக்குது. அங்க போய் வேற என்னென்ன பேச்சு வாங்கறதுனு தெரியலை. ஏதோ என்னால முடிஞ்சளவுல திங்கறேன்.” என்று கூறியவளிடம் “சாரி” என்றான்.‌

  “உன் சாரி எனக்கு ஒன்னும் தேவையில்லை. நீயும் தான் என்னை இஷ்டத்துக்கு பேசின. எல்லாம் கேட்டும் உயிரோட தான் இருக்கேன். நம்ம காதல் இதுவரை என்னத்த சாதிச்சதுனு கேட்ட.., எதுவும் சாதிக்கலை… ஹ்ருத்.

  இப்பவரை நீயும் நானும் சேர்ந்திருக்கோம் பாரு. அதுவே சாதனை தான். காதல் பிரியாம இருப்பது சாதனை தான். இப்ப கூட நீ உன்‌ பிரெண்ட் ஏதாவது பஸ்ல இருப்பான்னு எட்டி பார்க்கற. இந்த காதலி பக்கத்துல இருந்தும் கண்ணுக்கு தெரியாது.” என்று பிரெட் சான்ட்வெஜ் விழுங்கி வாழைப்பழத்தை விழுங்கி தண்ணீரை குடித்து விழுங்கினாள்‌.

ஹ்ருதேஷிற்கு தான் பேசியது தவறென்றாலும், இந்த சண்டையை  தவிர்க்க இயலாதது என்றாவது கௌசிக்கிடம் இந்த பேச்சு வாங்க நேரலாமென நினைத்தவன் தான். ஆனால் மிதிலாவுடன் வீட்டில் தனது உடையை அவள் அணிந்து , கழுத்தில் தனது பற்தடம் பதித்த விதமாக மாட்டுவோமென சத்தியமாக நினைத்துக் கூட பார்க்காதவன்‌.

   பேருந்து பயணம் தொடரவும், அவனிடம் சன்ட்வெஜ், மற்றும் வாழைப்பழத்தை நீட்டினாள். ஹ்ருதேஷ் வாங்கி விழுங்கி தண்ணீரை குடித்தான். மனம் இந்த ரணகளத்திலயும், சாப்பிட வாங்கிட்டா, அதோட நான் இறங்கி கௌசிக்கை தேடறதையும் யூகித்து சொல்லறா. இதுக்கு மேல என்ன புரிதல் வேண்டும். இந்த காதல் என்ன சாதிக்கணும். இவ சொன்ன மாதிரி சேர்ந்தேயிருப்பதே சாதனை தான். காதலை விட்டு பின் வாங்க முடியாது. நட்பை இழந்திடுவேனோனு தான் பயமாயிருக்கு.’ என்று கௌசிக்கின். கோபமான முகமே எண்ணியெண்ணி வந்தான்.

சேலம் பேருந்து நிலையம் வரும் போது மிதிலா கையை பற்றி இறங்க உதவினான் ஹ்ருதேஷ்.

இதற்கு முன் எல்லாம் சேர்ந்து வருவதை கவனமாக தவிர்த்திருந்தான். இன்று பகிரங்கமாக கைப்பிடித்து இறக்க, அதே நேரம், “என்ன சுப்பையா… வண்டி ஒரு மணி நேரத்துக்கு முன்னயே எடுத்த, இப்ப தான் வந்திருக்க” என்று இவர்கள் வந்த ஒட்டுனர் கேட்க, கௌசிக் வந்த பேருந்து ஓட்டுநரோ “அட நடுவுல பஸ் பஞ்சர்ப்பா. பாதிக்கு பாதி மத்த பஸ்ல ஏத்தி விட்டு சேலத்துக்கு வரவே நேரமாச்சு” என்று பேசினார்கள்

மிதிலா கையை ஹ்ருதேஷ் பிடித்து நடந்து வருவதை கண்டு, கௌசிக் “அவ்ளோ அசிங்கமா திட்டியும் இவன் கையை பிடிச்சிட்டு  இறங்குற. வெட்கமா இல்லையாடி?” என்று கௌசிக் கத்த, அங்கிருந்தவர்களில் சிலர் திரும்பி பார்த்தார்கள்.

ஹ்ருதேஷிற்கு இது வீடு இல்லை… இந்த இடத்தில் மிதிலா திட்டு வாங்குவதை விரும்பாதவனாக, “கௌசிக்.. இதுவொன்னும் வீடு இல்லை. பப்ளிக் பிளேஸ்.. அவளை என்ன திட்டுவதா இருந்தாலும் வீட்ல போய் திட்டு.” என்றான்.

  “என்னடா… என் தங்கச்சியை எங்க வேண்டுமென்றாலும் திட்டுவேன். அது என் இஷ்டம். நீ யாரு… மயிறு அட்வைஸ் பண்ணற. அறிவுக்கெட்டவளே..” என்று அறைந்தான்.

“கௌசிக்” என்று ஹ்ருதேஷ் பதற, “ஹ்ருத்.. நீ கிளம்பு. நான் பார்த்துப்பேன்.” என்று கௌசிக்கை முறைத்தபடி, ஆட்டோவொன்றை மறைத்து அதில் ஏறினாள். கௌசிக்கும் கூடவே ஏறிவிட்டான் என்றதும், ஹ்ருதேஷும் வேறு ஆட்டோவை பிடித்தான்.

முதலில் மிதிலா பேசட்டும், அதற்குள் தாய் தந்தையிடம் பேசி அவர்களை அழைத்து செல்ல முடிவெடுத்தான்.

   ஹ்ருதேஷ் அவன் வீட்டுக்கு வந்த நேரம், செல்வராணி இதயத்தை பிடித்தபடி, “என்னடா இது? கௌசிக் போன் பண்ணி என்னென்னவோ சொல்லறான். அவன் உன்னை பார்க்க வந்தப்ப, அவ தங்கச்சி உன்கூட இருந்ததா, வாய்க்கு வந்தப்படி பேசறான்.” என்று கேட்க, ‘கௌசிக்.. ஏன் இப்படி? பொறுமையா ஹாண்டில் பண்ணவே மாட்டேங்கறான்.’ என்று நினைத்தவன் அன்னையை தூக்கி நிறுத்தி, “நான்..பொறுமையா சொல்லறேன்மா” என்ற நேரம் ராஜலிங்கமும் வந்து விட்டார்.‌

“எதுக்குடி உடனே வாங்கனு தலைப்பாடா கத்திட்டுயிருக்க? நீ என்னடா… இப்ப வந்து நிற்கற? வர்றதா இருந்தா நேத்து வரலாம்ல, நாளைக்கு வேலையை வச்சிட்டு, இந்த நேரம்?” என்றவரிடம் ஹாலுக்கு வந்து சேர்ந்தார்கள். பையை வைத்துவிட்டு, “உதட்டை ஈரப்படுத்தி அமர்ந்தான்.

“ஹ்ருதேஷ்… அவன் சொல்வது பொய்யுனு சொல்லு. நீ அவன் தங்கச்சியை காதலிக்கலை தானே? அவளோட தங்கலை தானே? அவன் ஏதோ உன்‌மேல பழி சுமத்தறான் அப்படி தானேடா?” என்று தாடைப்பிடித்து மகனிடம் கேட்க ராஜலிங்கமோ மகன் புறம் திரும்பினார்.‌

   ஹ்ருதேஷோ ”அம்மா… ப்ளீஸ்… பதட்டப்படாம இருங்க. தண்ணி குடிங்க” என்று நீட்டினான்.‌

அதை தட்டிவிட்டு, “டேய்… நீ அந்த பொண்ணை விரும்பறியா? அவ உன்கூட ஒரே வீட்ல இருந்தாளா? சொல்லுடா? சொல்லு டா?” என்று சட்டையை பிடித்து உலுக்கினார்.‌

பெற்றவர்களை காண தயங்கி, “நான் மிதிலாவை நேசிக்கறேன். எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா அவளோட தான் நடக்கும்.” என்று பேச சொல்வராணி ‘பளாரென்று’ ஹ்ருதேஷை அறைந்தார்.

  “அவளோட படுத்தியாடா?” என்று பச்சையாக கேட்க, “அம்மா” என்று பார்வையை கூட காணாமல் தவிக்க, “சொல்லுடா.. அவ தானே உன்னை மயக்கினா.?” என்று கேட்டு குடைய, “அய்யோ அம்மா.. நான் ஒன்னும் சின்ன பையன் இல்லை. நானா தான் மிதிலாவிடம் வரம்பு மீறியது.” என்று முன்வந்தான்.

  அப்ப அவளோட ஒன்னா இருந்திருக்க?” என்று கேட்க ஆமென்று தலையாட்டினான்.‌

செல்வராணி தொப்பென்று தரையில் அமர்ந்து அழ, ராஜலிங்கமோ, கோபமாக மகனை கண்டார்.

-தொடரும்.

பிரவீணா தங்கராஜ்

1 thought on “நின் பிரேமம் என் சிநேகம்-19”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top