meta-google-adsense-platform-account: ca-host-pub-2644536267352236 meta-google-adsense-platform-domain: sitekit.withgoogle.com

நின் பிரேமம் என் சிநேகம்-13

அத்தியாயம்-13

      ஷோ முடிந்து வெளியே க்ரவுட் கலைந்து கொண்டிருந்தது. கல்லூரிக்கு வெளியே வந்தனர் மூவரும்.

மிதிலாவின் தோழிகள் ஹ்ருதேஷை சுற்றி நின்று
“சார்… நீங்க ரொம்ப ஹாண்ட்ஸம்மா இருக்கிங்க. நேச்சுரலவே ஸ்டைலிஷ்ஷான வாக் இருக்கு” என்றாள் ஒருத்தி.

“நீங்க மாடலாகவே ட்ரை பண்ணலாம்” என்று மற்றொருத்தி ஆலோசனை தந்தாள். ஹ்ருதேஷ் அதற்கு பதிலாக சிறு சிரிப்பை உதிர்த்தான்.
அந்த நேரம் மற்றொரு பெண் ஹ்ருதேஷ் கையை உரிமையாக பிடித்து, “இன்ஸ்ட்ராகிராம் ஐடி இருக்கா?” என்று கேட்டாள்.

மிதிலா தூரத்தில் நின்றவளின்
முகத்தில் சிரிப்பு இருந்தாலும், கண்களில் எரிமலை வெடிக்கும் தணல் இருந்தது.
அந்த பெண்ணின் அருகே வந்து
“அவர் ஆல்ரெடி மாடலிங்கும் கமிட்மெண்ட்லயும் புக்ட்.” என்று காட்டினாள்.

அந்த பெண்ணோ மிதிலாவின் பார்வையிலேயே ஹ்ருதேஷ் காதலன் என்று புரிந்து உதடு கோணி நகர்ந்தாள்.
மிதிலா கை ஹ்ருதேஷ் கையை இறுகப் பிடித்தது.

  இதெல்லாம் கௌசிக் ரெஸ்ட் ரூம் சென்ற கணம் நடந்தேறியதால் ஹ்ருதேஷ் மிதிலா இப்பொழுதும் தப்பித்தார்கள்.

   ஒரு வழியாக மிதிலாவை அவளது ஹாஸ்டலில் விட்டுவிட்டு கேப்பில் திரும்பினார்கள்.

  நேற்று போல ஹ்ருதேஷ் தங்கிருக்கும் இடத்திற்கு செல்ல முடியாத சோகத்தில் குட்நைட்’ என்றாள். ஏற்கனவே இன்று முழுவதும் வேலையில் மூழ்கியிருக்க குட்நைட்” என்று மற்றவர்களும் கிளம்பினார்கள்.

  கௌசிக் தனது போனில் இன்று எடுத்த புகைப்படத்தை ஸ்கோரல் செய்தபடி புகைப்படத்தை பார்வையிட்டான்.

திடீர்னு ஒரு புகைப்படத்தில் ஸ்தம்பித்தான்.
அப்புகைப்படத்தில் ஹ்ருதேஷ் மிதிலா மிகவும் க்ளோஸாக இருந்தது போல தோன்றியது.

  கௌசிக் புகைப்படம் கண்டு புருவ முடிச்சுடன் காண்பதை கவனித்த ஹ்ருதேஷிற்கு ஏசி காரில் வேர்த்து விட்டது‌.

அதை காட்டிக்காமல் “பேஷன் டிசைனிங் செய்து நடந்து வர்றவங்க எல்லாம் படத்துல நடிக்கற மாதிரி தத்ரூபம் ஜோடியா நின்று போஸ் தர்றாங்க. நாம அது போல ஓரளவு தான் பெர்பெக்ட் பண்ண முடிந்தது. அதனால கூட ஐந்தாவது பிரைஸ் இருக்குமோ.?” என்று கேள்வி எழுப்பவும்,

கௌசிக் மூளையோ உடனடியாக, ரிகர்ஸல் போது ரொம்ப க்ளோஸா இருக்க இதுவும் காரணமாக இருக்கும்’ என்று அமைதியானான்

“மாடலிங்ல டச் பண்ணறது அவாய்ட் செய்ய முடியாது.” என்று கௌசிக்கே உரைத்தான். அவனுக்கு அவன் தங்கை அவ்வாறு நெருங்கி நிற்பதாக ஹ்ருதேஷ் தவறாக எண்ணிவிட்டால்? அதனால் சமாளித்தான்.
ஆனாலும் மிதிலா ஹ்ருதேஷா மீதான சந்தேகம் உறுதி இல்லாமல் விதை மட்டும் போட்டுவிட்டது கௌசிக் இதயத்தில்..‌.
   ஏதோ கௌசிக்கே சமாளிக்கவும் நிம்மதிக் கொண்டான் ஹ்ருதேஷ்.

அந்த இரவு அறைக்கு வந்தப்பொழுதும் அமைதியில் கழிந்தது‌. அதீத அலைச்சல் வேலை காரணமாக கௌசிக் உறங்கிவிட, ஹ்ருதேஷ் சீலிங்கை பார்த்துப்படி படுத்திருந்தான்.
மிதிலாவின் அருகே தொட்டு தீண்டி, ஒன்றாக நடந்து வந்தது, நிறைய போட்டோ எடுத்தது எல்லாம் மீண்டும் காட்சியாக மனதில் ஓடியது.

மிதிலா ஹ்ருதேஷின் காலரை சரி பண்ணும் நேரம் சில புகைப்படம் பிடிக்கப்பட்டது. அதெல்லாம் பார்க்க உதட்டில் குறுநகை பூத்தது.

அதோடு கௌசிக் முகமும் வந்து சேர்ந்தது.
‘அவன் என்னை மிதிலாவுக்கு அண்ணன் மாதிரி நம்பியிருப்பான். ஆனா நான் அவளை காதலிக்கறேன்.’ என்ற எண்ணமே கனத்தது.
‘நான் என்ன பண்ணிட்டு இருக்கேன்?’ என்று தெரிந்தா என் நண்பன் என்னை விட்டு போயிடுவானா? என்றதும் ஹ்ருதேஷ் கை நெஞ்சில் இறுகியது.
‘மிதிலாவை விட்டுட முடியல… இவன் நட்பும் கெடக்கூடாது. நெருப்புல நிற்கற மாதிரி இருக்கு’ என்று மனதோடு புலம்பி
கண்ணை மூடினான்.
‘இந்த காதலில் நான் வெற்றி அடைய  நினைச்சா இந்த துரோகம் என்ற பழியை சுமக்க நேருமா?’ அந்த கேள்வி ஹ்ருதேஷை தூங்கவிடவில்லை‌.

  அடுத்த நாள் காலை கௌசிக் எழுந்து நேரம் பார்த்தான். ஹ்ருதேஷை எழுப்பினான்.

“மச்சி..‌ ஆபிஸ் போகணும்னு சொன்ன. தூங்கிட்டு இருக்க, ரொம்ப அசதியா இருக்காடா?” என்று கேட்க ஹ்ருதேஷ் கண்ணை கசக்கி எழுந்தான்.‌

“ஆபிஸுக்கு நேரமாகுது.” என்று எழுந்தான்.‌

கௌசிக்கோ “நானும் ஊருக்கு புறப்படணும். இரண்டு நாள் நேரம் போனதே தெரியலை. ஆனா சாரிடா.. உன் நேரத்தை மிதிலா குரங்கு அபகரிச்சிட்டா.” என்று கூற, “இன்னும் இரண்டு நாள் இருக்கலாமே” என்று கேட்க, “அங்க வேலை இருக்குடா. கடை திறக்க கூடயிருக்கணும். இன்னும் ஏதாவது விட்டுயிருந்தா பார்க்கணும். நீ எப்படியும் வந்துடுவ தானே?” என்று கேட்டான்.
“கண்டிப்பா.. வந்துடுவேன்.  ஞாயிறு தானே கடைத்திறப்பு விழா ஜாமாய்ச்சிடலாம்.” என்று பேசி கிளம்பி ஹோட்டலில் சாப்பிட்டு கௌசிக் ஒருபுறம் சேலத்திற்கு கிளம்ப, ஹ்ருதேஷ் ஒரு புறம் அலுவலகம் சென்றான்.‌

  மிதிலா போன் காலிலேயே அண்ணனை வழியனுப்பினாள்‌. ஹ்ருதேஷிற்கு அழைத்தால் அவனோ பிசியா இருக்கேன். அப்பறமா கால் பண்ணறேன் என்று மட்டும் மொழிந்தான்.

அதனால் மிதிலா தொந்தரவு செய்யவில்லை‌.

     அவளுக்கும் கல்லூரியில் இருப்பதால் அவளது நேரம் அதற்கு செலவானது.

  கல்லூரியில் யார் அந்த புதுமாடல்?” என்று கேட்டு காதை புண்ணாக்க, “உயரமா இருந்தது என் லவ்வர். கொஞ்சம் ஷார்ட்டா இருந்தது என் அண்ணன்.’ என்று சொன்னாள்.

 ” என்னது லவ்வரா?” என்று சீனியர் சிலரும் வாயை பிளந்தனர். ஆனாலும் வாழ்த்து கூறினார்கள். இந்த இரண்டு நாளில் மாடலை மாற்றி இம்சைப்படுத்தியதற்கு ஏதாவது காரணமிருக்குமென்று எண்ணியது போலவே அவள் காய்நகர்த்தியிருந்தாள்.

    இப்படியாக இங்கே நகர, ஊரில் வந்திறங்கிய கௌசிக்கை தீபா பிடித்து திட்டி தீர்த்தார்.
 
  “ஏன்டா.. மிதிலாவுக்கு முறுக்கு அதரசம் சீவலை தந்துட்டு, ஹ்ருதேஷை கடைத்திறப்பு விழாவுக்கு அழைக்க போனதா சொன்ன, அங்க போய் என்ன வேலைடா பார்த்திருக்க?” என்று அதட்டினார்.

“என்ன பண்ணினேன்?” என்று எதிர் கேள்வி எழுப்பினான்.

”என்ன பண்ணினியா? மிதிலா நீ அந்த ஹ்ருதேஷ் எல்லாம் ஏதோ கலர் கலர் டிரஸ் போட்டு போட்டோவா எடுத்திருக்கிங்க? ஏன்?” என்று கத்தினார்.

கௌசிக் தங்கையின் நிலையை விவரிக்க, “அந்த கழுதைக்கு மாடலிங் பண்ண ஆள் இல்லைன்னா வேற யாராவது பார்த்திருப்பாளே. நீயும் அவனும் எதுக்கு? நீயாவது ஓகே… அவன் எதுக்குடா? ஓட்டி உரசி நிற்கறதை பார்த்தா தப்பா தெரியுது.” என்று பொங்கினார்.

கௌசிக்கோ பெங்களூரை பார்த்தும், பேஷன் ஷோவில் கலந்தவர்களையும் பார்த்ததால், நிதானமாக, “நம்மூர் தான் பக்கத்துல நின்னாலே பத்த வச்சி பேசறிங்க. அங்க வந்து பாருங்க. ஆம்பள பொம்பளை பிள்ளைங்க எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னா நட்பா திரியுதுங்க. நீங்களா ஹ்ருதேஷையும் மிதிலாவையும் இணைச்சி பேசாதிங்க. உங்களுக்கு இப்பவும் ஒருமாதிரி இருந்தா, மிதிலா ஒரு லிங்க் அனுப்பியிருக்கா. அதை அனுப்பறேன்.. மெதுவா ஓடவிட்டு பாருங்க. அங்க கலந்துக்கிட்டவங்க பலரும் முகம் தெரியாத மாடலிங். பேஷன் டிசைனிங் செய்த ஸ்டூடண்ட்ஸோட டிரஸ் தச்சதை போட்டுட்டு கேட்வாக் பண்ணினாங்க.” என்று லிங்கையும் அனுப்பினான்.

  தீபாவோ அனைத்தையும் கேட்டு அந்த வீடியோவையும் பார்வையிட்டார்.

  கௌசிக் கூறியது போல ஆண் பெண் இணக்கமாக பலரும் நடமாடினார்கள். இதில் குறை கண்டறிய இயலாது. ஆனால் ஹ்ருதேஷ் மிதிலா விவகாரத்தில் ஏதோ மனதில் அலாரம் அடித்ததாகவே தோன்றியது. இது பெற்றவர்களுக்கான அபாய ஒலியா என்று பொருத்திருந்து காண முடிவெடுத்தார்.

   செல்வராகவனும் கௌசிக் பேச்சில் அவராக வார்த்தை வீசவில்லை. ஆனாலும் ஹ்ருதேஷ் மீதான சந்தேகம் வலுத்தது. முதல் காரணம் இந்த கலியுகத்தில் பணம் கேட்டு நண்பர்களிடம் நின்றால் தலை தெறிக்க ஒடுபவரே அதிகம். அதை தாண்டி ஹ்ருதேஷ் பணம் தந்து உதவியது மகளை விரும்பும் நோக்கம் இருக்குமோ என்று அனுபவத்தால் கணித்தார்.

     இவர்கள் இங்கே இவ்வாறு நினைக்க, மறுபக்கம் ஹ்ருதேஷ் பெற்றவர்கள் ஹ்ருதேஷிற்கு வரன் தேடினார்கள்.‌

  ஜோசியம் பார்ப்பவரிடம் எல்லாம் “எங்களுக்கு ஒரே பையன் சார். வேலைக்கு போனதும் கல்யாணம் பண்ணுவேன்னு சொல்லியிருந்தான். இப்ப வரன் தேடலாமா? நல்ல வசதியான வரன் அமையுமா? எந்த பக்கம் இருந்து பொண்ணு வரும்” என்றதெல்லாம் கேட்டு அதற்கேற்ற புகைப்படம் ஜாதகம் தேடி அலைந்தார்கள்.

   இதோ அதோவென்று ஒரு வாரம் ஓடியதில், மிதிலா வெள்ளி மாலையே சேலத்திற்கு வந்து சேர்ந்தாள். ஹ்ருதேஷும் மிதிலாவும் ஒன்றாக வருவதற்கு எண்ணியிருந்தார்கள். ஆனால் ஹ்ருதேஷ் தான் “நாம சேர்ந்து போனா ஊருக்கு சந்தேகம் வரும் . ஏற்கனவே உங்கண்ணா நாம நெருக்கமா இருக்கற பிக்கை பார்த்து கேட்டான். எதுக்கு வம்பு… நீ முதல்ல போ” என்று மிதிலாவை விரட்டினான். ‌

  ஹ்ருதேஷ் சனிகிழமை வருவான் என்று கௌசிக் காத்திருக்க, ஹ்ருதேஷோ ஞாயிறு காலை சேலத்திற்கு வந்து சேர்ந்தான்.‌
 
  கௌசிக்கோ ‘ஏதாவதுன்னா சேர்ந்து வந்திருப்பாங்க. என் மச்சி அப்படி பண்ண‌மாட்டான்.’ என்று பெருமைப்பட்டான்.

  “ஏன்டா… வாரத்துக்கு ஒரு இரண்டு நாள் லீவு இருக்கே… நீ சனி கிழமை வர வேண்டியது தானே ஹ்ருதேஷ்.” என்றார் செல்வராணி.

   “ம்ம்மா. வேலை ஜாஸ்தி. இதுல நானே அவசரமா  தலைக்காட்ட வந்தேன்.” என்றுரைத்தான்.

“ஆமாடா… பெத்தவங்களை பார்க்க வர்றதில்லை. அவன் கடைத்திறக்கறான் என்றதும் ஓடி வந்துயிருக்க” என்று குற்றம் சாட்டினார்கள். இதற்கு முன் வந்த விடுமுறைக்கு எல்லாம் ஊருக்கு வந்து எட்டி பார்க்காததில் இந்த குற்றம் ஏற்புடையதாக இருக்க அமைதியாக செவியில் கேட்டு நின்றான்.

  ”அம்மா… ப்ளீஸ்… சும்மா ஏதாவது நை நைனு. நீங்க அங்க வர்றிங்களா?” என்று மட்டும் கேட்டான்.

  “வர்றேன் வர்றேன்… என்ன கடை திறந்திருக்கான்னு பார்க்க வர்றேன்” என்று சலித்துக் கொண்டார்.

  அதன்பின் ஹ்ருதேஷை தொந்தரவு செய்யாமல் செல்வராணி ராஜலிங்கம் இருந்தனர்‌.

  ஹ்ருதேஷ் செல்வராணி மட்டும் அந்த கடைக்கு சென்றார்கள். கௌசிக் ரிப்பனை கட் பண்ண ஹ்ருதேஷை அழைக்க, “என்ன விளையாடறியா? உங்க அப்பாவை வச்சி கட் பண்ணி திற.” என்றான்.

“இல்லைடா.. நீ தானே..” என்று ஆரம்பித்தவன் செல்வராணி அருகே இருக்க, ஹ்ருதேஷாக கௌசிக்கை தனியாக அழைத்து, “பணம் எவன் வேண்டுமென்றாலும் தருவான்டா. ஆனா நீ நல்லா வரணும்னு மனசால நினைக்கறது உன்னை பெத்தவங்களா தான் இருப்பாங்க. மரியாதையா அங்கிளை கட் பண்ணி திறக்க வைச்சி மரியாதை செய்” என்று முடிவாக கூறினான்.

நண்பன் பணத்தை தந்ததையும் மற்றவர்களுக்கு தெரியாததால் தந்தை செல்வராகவனை கடைத்திறக்க உந்தினான்.

செல்வராகவனும் ஹ்ருதேஷை பார்த்தவாறு கடைத்திறந்து வைத்தார்.

  அன்று வந்தவர்களுக்கு ஆபர் முறையில் உணவுகள் விற்கப்பட்டது.
  செல்வராணியும் தீபாவும் பேசி சிரித்தனர். தீபா அவர்களுக்கு பிடித்த உணவை உபசரித்தார்.
   மிதிலா தான் ஹ்ருதேஷ் அம்மாவிற்கு கொண்டு வந்து தந்தாள்‌. செல்வராணியோ அவளை மேலும் கீழும் பார்த்து, “முன்ன விட உங்க பொண்ணு தேறியிருக்கா. தனியா ஹாஸ்டல்ல தங்கி படிக்கறாளே… என்ன படிக்கறா?” என்றார்.

   தீபாவோ மகள் பேஷன் டிசைனிங் படிப்பதாக கூறினார். கூடுதலாக “இந்த ரவிக்கை டிசைன் எல்லாம் அவ தான் செய்தா.” என்று சுட்டிக்காட்டினார்கள்.

  ரவிக்கை டிசனை பார்வையிட்டவாறு, “இதுக்கு டைய்லரிங் கிளாஸுக்கு அனுப்பியிருக்கலாம். இதுக்கா… பொட்டப்பிள்ளையை தனியா படிக்க அனுப்பியிருக்கிங்க” என்றார்.

செல்வராணிக்கு டைய்லரிங் பேஷன் டிசைனிங் என்ற இரண்டிற்கும் வித்தியாசம் காட்ட நினைத்த தீபாவோ மகள் கடந்த வாரம் பேஷன் ஷோவில் செய்த உடைமைகளை போட்டோவாக காட்டினார்.

இது போதாதா அதில் ஹ்ருதேஷ் இருக்க, ‘இவன் ஏன் அங்க போனான்.
அவளோட படிப்புல இவனுக்கு என்ன வேலை?’ என்று கோபமானார்.

“ஹ்ருதேஷ்… வீட்டுக்கு போகலாமா?” என்று கோபமாக கேட்க, ஹ்ருதேஷும் ‘ரொம்ப நேரம் இருக்க முடியலைடா. நான் கிளம்பறேன்” என்று கௌசிக்கிடம் விடைப்பெற்றான்.‌ கௌசிக் தங்கை கேட்ட போட்டோவை நண்பனிடம் தந்தான். ”என்னது டா இது?” என்று பேப்பர் சுற்றியதை காட்டி கேட்க, நீ நான் எடுத்த போட்டோ டா. மிதிலா கூட அன்னைக்கு கேட்டாலே.. பேஷன் ஷோ முடிந்தப்ப ப்ரேம் போட்டு தரச்சொல்லி. அது தான். 
   அவளுக்கு ஒன்னு என் ரூம்ல ஒன்னு, உனக்கு ஒன்னு” என்று நீட்டவும், மறுக்காமல் வாங்கிக் கொண்டு புறப்பட்டான்.

  மிதிலாவோ ‘அரைமணி நேரம் கூட ஆகலை’ என்றாள். டெக்ஸ்ட் மெஸேஜில் அவளை திரும்பி பார்த்து, எதுவும் பதில் தராமல் அன்னையை அழைத்து சென்றான்.

வீட்டுக்கு செல்லும் பொழுதே வண்டியில் அமர்ந்தவாறு அந்த பேப்பரை கிழித்து என்ன கொடுத்தான் என்று பார்வையிட “ஏன்டா.. தீபா ஒரு போட்டோ காட்டினா அந்த போட்டோவை ப்ரேம் போட்டு தந்திருக்கான்.
  ஆமா.. அவ படிப்புக்கு நீ ஏன் மாடலா போன? அவளும் நீயும் பேசி பழகுவிங்களா?” என்று கேட்டார்.

  “ம்ம்மா..‌ இது கௌசிக் என்னை பார்த்து கடைத்திறக்க இன்வெயிட் பண்ண வந்தப்ப அவன் தங்கையை பார்க்க போனான். அந்த நேரம் அவ மாடல் வரலைன்னு கௌசிக்கை வச்சி சமாளிச்சா. கௌசிக் கூட இருந்ததால நானும் போட்டோவால இருக்கேன். மத்தபடி நான் மாடல் இல்லை. அவளோட நான் ஒன்னும் பேசி பழகலை.” என்று கோபமாக கூறினான்.

   செல்வராணிக்கோ மகன் பேச்சில் மனம் ஆறவில்லை. மாறாக இந்த சிறுக்கி என் பையனோட எல்லாம் போட்டோ எடுத்திருக்கா.’ என்ற ரீதியில் தான் குமைந்தார்.

-தொடரும்.

பிரவீணா தங்கராஜ்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top