meta-google-adsense-platform-account: ca-host-pub-2644536267352236 meta-google-adsense-platform-domain: sitekit.withgoogle.com

நின் பிரேமம் என் சிநேகம்-12

அத்தியாயம்-12

ஹ்ருதேஷ் வீட்டு ஹாலில் பரப்பி வைத்திருந்த துணிகளின் நடுவில் மிதிலா முழங்காலிட்டு அமர்ந்திருந்தாள்.

      வண்ண நிறங்கள் எல்லாம் கலந்திருந்த அவளிருந்த காட்சி, ஒரு சிறிய ஃபேஷன் ஸ்டுடியோ மாதிரி மாற்றியிருந்தாள்.

    ஹ்ருதேஷ் சோஃபாவை ஒட்டி நின்றவனாக, ‘எப்படி சிக்கியிருக்கேன் பாரு?’ என்ற முகத்துடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

  “சரி… முதல்ல இந்த டிரஸ் போட்டு பாருங்க,” என்று அவள் டிசைன் செய்த துணியை நீட்டினாள்.
“இங்கயேவா?” அவன் புருவம் சுருக்கினான்.

“அண்ணா… நீ வெளியே போய் நில்லு. நான் இவரை ரெடி பண்ணணும்” என்று கட்டளையிட்டாள்.

கௌசிக் விழித்தபடி “மச்சி… நான் அங்க வெயிட் பண்ணறேன்” என்று பால்கனிக்குப் போனான்.

கௌசிக் சென்றதும் ஹாலில் அமைதி எழுந்தது‌
ஹ்ருதேஷ் துணியை வாங்கிக் கொண்டு திரும்பியவனாக உடையை மாற்றி நின்றான்.

“மிதிலா… உனக்கே இது ரொம்ப ஓவரா போகுதுனு தோணலையா?
அவள் மெதுவா நெருங்கினாள்.

“உஷ்ஷ்… ரிகர்ஸல் பண்ணறப்ப அன்வான்டட் டாக்கிங் போகாத. ரிலாக்ஸ் மேன்.” என்றாள். அதில் நீயாக பேசி காரியத்தை கெடுக்காதே என்றாள்.

அவள் ஹ்ருதேஷ் காலரை சரி செய்ய கையை உயர்த்தியதும், அவன் மூச்சு தடுமாறியது.

அவளது விரல்கள் கழுத்தை ஒட்டிச் சென்ற உணர்வு, அவனை ஒரு நொடிக்கு மின்சாரம் தாக்கியது.

   தன்னை காதலிக்கும் பெண், தானும் காதலிக்க ஆண் மனம் தடுமாறியது. “கௌசிக் வெளியே இருக்கான் மிதிலா.”

  “ம்ம்ம் சோ வாட்” என்றாள்‌.

அவள் என்னவோ உடையை அணிந்து ரிகர்ஸல் பார்ப்பதில் தீவிரமாக இருக்க, இங்க நம் ஹ்ருதேஷ் மனமோ நண்பனுக்கு செய்யும் துரோகமாகவே உணர்த்தியது. தங்கையை காதலிப்பது அறிந்தால் என்ன நினைப்பானோ என்ற எண்ணம் அவன் மனசுக்குள் கூச்சலிட்டது.

“ஸ்ட்ரெய்டா நில்லு… ஷோல்டரை சாய்க்காதிங்க” என்று அவள் சத்தமாகவே சொன்னாள்.

அவள் கையை அவன் தோளில் வைத்து நிலை திருத்தினாள்.

அந்த தொடுதலில் இருந்த இயல்பு பெரிய ஆபத்தை சொல்லாமல் சொன்னது.

“இப்ப நான் நடக்கறேன்… நீங்க என்னை  ஃபாலோவ் பண்ணுங்க” என்று இரண்டு அடிகள் நடந்தாள்.

அவள் நடை  நம்பிக்கையோட கண்கள் நேராக பார்த்து கற்றுத்தர,
ஹ்ருதேஷ் அவளை பின்தொடர்ந்தான்.

ஆனால் அவன் கவனம் நடையில் இல்லை. அவள் தலைமுடி ஆடும் விதத்திலிருந்தது. ஆண்மனம் தடுமாறிக் கொண்டிருந்தது.

“ஹ்ருத்” என்று அவள் மெதுவாக அழைத்தாள்.
“ம்ம்ம்?”

“நீங்க என்னை பார்க்காம முன்னாடி பாருங்க. ஜட்ஜ் அங்க இருப்பாங்க.” என்றதும் அவன் மென்னகையிட்டான்

“இங்க ஜட்ஜ் நீ தான்.” என்றான் குழைவாக. இருவர் கண்களும் சந்திக்க, காதல் பூதம் அங்கே எழுவதற்கு தயாரானது.

அடுத்த கணம் “டேய் மச்சி… ரெடியா?” என்று கௌசிக் குரல் வெளியில் இருந்து வந்தது.

இருவரும் ஒரே நேரத்தில் பதட்டமாய் விலகினர்.
மிதிலா உடனே இயல்பாக முகத்தை மாற்றி கொண்டாள்.
“ஒன்னு ஓகே. இன்னொரு ரவுண்ட்” என்று வேலைக்குரிய விஷயத்தில்  பேச ஹ்ருதேஷ் தலையசைத்தான்.

“சரி… இப்ப டர்ன் எடுத்துட்டு நடங்க. கௌசிக்.. நீயும் கவனமா பாரு. அடுத்து நீயும் நடக்கணும்” என்று மிதிலா கையை காட்டினாள். கௌசிக்கும் தலையாட்டினான்.‌

ஹ்ருதேஷ் திரும்பி அழகாக மாடல் போலவே நடந்து வந்தான்.
மிதிலா கௌசிக் இருக்கும் இடம் வரும் போது, அந்த நேரம் தரையில் இருந்த துணி அவன் காலில் சிக்கியது. அதில் தடுமாறி ஒரு கணத்தில் அவன் முன்னே சரிந்தான்.

மிதிலா உடனடியாக அவன் கையை பிடித்தாள்.
அடுத்த நொடி அவனுடன் அவளும்  சாய்ந்தாள்.
இருவரும் சோஃபா ஓரம் சாய்ந்து சிக்கி நின்றனர்.
  மிதிலா கைகள் ஹ்ருதேஷ் மார்பிலும், ஹ்ருதேஷ் கை மிதிலா இடையையும் தாங்கியது. இருவரும் பதட்டத்துடன் மூச்சு கலந்தது.

எதிரே கௌசிக் நிற்கின்றான் என்றதால், ஹ்ருதேஷ் மனசுக்குள் அலாரம் அடித்தது.

‘விலகு… உடனே விலகு. இல்லைன்னா கௌசிக் தன்னை தவறாக நினைப்பான்’ என்றது மனம்.
ஆனால் உடல் அசையவில்லை.
மிதிலா கண்களை உயர்த்தி பார்த்தாள். அந்த பார்வையில் பயமில்லை ”ஏய் அண்ணா… அவரை பிடிச்சி நிறுத்து. கால்ல க்ளாத் சுத்தியிருக்கு பாரு” என்று கட்டளையிட்டாள். கௌசிக்கும் நெற்றி சுருக்கி தங்கை நண்பன் இருவரும் நின்ற கோலம் உருத்த, மிதிலா பேசியதில் ரப்பர் வைத்து காட்சிகள் அழிந்து ஹ்ருதேஷ் காலில் சிக்கிய உடையை எடுத்தான்.

“சாரி” என்று மிதிலா மெதுவா சொன்னாள்.
“நான் தான் கவனிச்சிருக்கணும்” என்று அவனும் குரல் கரகரத்திட உரைத்தான்.

கௌசிக்கோ “முதல்ல மூட்டைக்கணக்கா கீழேயிருக்கற துணியை ஓரமா நகர்த்து.” என்று கோபமாய் உரைத்தான். என்னயிருந்தாலும் அண்ணன் என்ற கண்டிப்பை காட்டினான்.

மிதிலா உடனே துணிகளை எடுத்துக் கொண்டாள்.
“மறுபடியும் ட்ரை பண்ணலாம். அண்ணா.. நீயும் வாக் பண்ணு” என்று பேச்சை மாற்றினாள்.

  ஏதோ பிரச்சனை உருவாகாமல் சந்தேகத்திற்கு இடமும் அளிக்காமல் திசைத்திருப்பினாலும், இருவரின் கை இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தது.

மூன்றாவது ரிகர்ஸல் ரவுண்டும் நடக்க கௌசிக் தான் ஒழுங்காகவே நடக்கவில்லை என்று அண்ணனை டிரில் மாஸ்டர் போல வளைத்து முடித்தாள்.
  “நான் ஒன்னும் பிறவி மாடல் இல்லை. முன்ன பின்ன ஒழுங்கா நடக்கலைன்னா அட்ஜஸ்ட் பண்ணு” என்றான்.

“உன்‌ பிரெண்ட் பெர்ப்பெக்டா பண்ணினார்ல‌. ட்ரை பண்ணு.” என்று அண்ணனை கொட்டினாள்.
 
  இவளை பார்த்துட்டு ஸ்னாக்ஸ் தந்துட்டு நைஸா டாட்டா காட்டிட்டு வந்திருக்கணும்’ என்று முனங்கியவாறு நடந்தான்.

ஹ்ருதேஷிடம் நெருக்கம் கூடுதோ என்ற பயத்தில் அவனை நடக்க விட்டு அமர வைத்துவிட்டு கௌசிக்கை பெண்டு எடுத்தாள்.
  ஹ்ருதேஷ் பார்த்து சிரித்தான்.

ஒருவழியாக மூன்று மணி நேரத்தை விழுங்கி, ரிகர்ஸல் முடிந்ததும் அமைதி நிலவியது.

  “ஈவினிங் ஆகிடுச்சு. எனக்கு டீ வேணும் தலைவலிக்கு” என்று மிதிலா கூற, மச்சி நீ உட்காரு டா நான் டீ போடறேன்” என்று தங்கையிடம் தப்பித்ததாக எண்ணி கிச்சன் ஓடினான்.

“மிதிலா”  ஹ்ருதேஷ் அழைத்தான்.
“ம்ம்ம்” என்றாள். ஹ்ருதேஷ் ஒரு நொடி தயங்கினான்.

“நீ… இப்படி பக்கத்துல இருக்கும்போது பயமாயிருக்கு” என்றான்.

அவள் மெதுவாக திரும்பி நின்றாள். “என்ன?” என்றதும் அவன் தாபத்தை விழுங்கினான்.
“என்னை கண்ட்ரோல் பண்ண முடியல. உங்கண்ணாவிடம் மாட்ட போறோம்” என்றான்.
மிதிலா கண்கள் மெதுவாக கிச்சனை கண்டு, ஹ்ருதேஷிடம் திரும்பியது.

“எல்லாத்துக்கும் ரிகர்ஸல்னு நினைச்சிக்கோ” என்று அவள் சிரிக்க முயன்றாள்.
“பச் அதுக்காக இல்ல” என்று அவன் தவிக்க. மிதிலா ஆழமாக மூச்சை விடுத்தாள்.

“ஹ்ருத்… இப்ப பேசக்கூடாத விஷயம் பேசுற. இதுவே கௌசிக்கு டவுட் வரும் அமைதியா இரு” என்றாள்.

அவன் தலையை தாழ்த்தி நின்றான்.
“அவன் ஏதாவது சொல்லிட்டா… என்னால தாங்க முடியாது” என்றுரைத்தான்.

    “ஹே டீ சுமாரா தான் போட்டிருக்கேன். குறை சொல்லக்கூடாது.” என்று தரவும், வாங்கி பருகினார்கள்.

“கௌசிக்… செமையா இருக்கு டீ.” என்று ஹ்ருதேஷ் புகழ, “அதான் ஸ்னாக்ஸ் டீ கடை வச்சிட்டியா?” என்று சிரித்தாள் மிதிலா.

“என்ன கிண்டலா… அவன் நம்ம ஏரியால மாசா வருவான். ஈவினிங் ஆனா டீ வேணும். மதியம் நேரத்துக்கு சாப்பிடணும்னு தேடற. அந்தளவு நாக்கு ருசி தேடுறோம். என் மச்சி அந்தளவு பெர்பெக்டான ஃபுட்டை சேல் பண்ணுவான்” என்று கௌசிக்கிற்காக ஹ்ருதேஷ் பேசவும் கௌசிக் நெகிழ்ந்து போனான்.

  இரவெல்லாம் மீண்டும் ஒருமுறை ரிகர்ஸல் செய்து கைதட்டி எல்லா ஆடையும் சூட்டபிளாக உள்ளதா என்று பார்த்து சிலதை ஐயர்ன் செய்து எடுத்து மடித்து வைத்தாள். கௌசிக்கிற்கு ஒரு உடை மட்டும் கையில் ஸ்டிரிச் செய்தாள்.

கௌசிக் ஹ்ருதேஷ் ஹாலில் படுத்துக் கொண்டார்கள்.

  கௌசிக் சீரான மூச்சு விட்டு உறங்கவும், ஹ்ருதேஷ் அறைக்கதவை திறக்க, “ஏய்.. அண்ணா தூங்கிட்டானா?” என்றாள்.

“நீ தூங்கலையா?” என்று கேட்க, “இந்த ஸ்டிரிச் பண்ணிட்டு தூங்கணும்.” என்றாள்.

   எந்தவிதமான தைரியமோ அறைக்குள் அடியெடுத்து வைத்தான்.

  “காலையிலயிருந்து இப்பவரை நீயும் கௌசிக்கும் என் கூடயிருக்கிங்க. நீ என் கூட, என் ரும்ல, என் பெட்ல… லைப் ரொம்ப அழகாயிருக்கு. சந்தோஷமா இருக்கேன்.
  என்னவொரு பயம், அவனுக்கு தெரிந்துடுமோனு செத்துட்டேன். ஒருவேளை நம்ம ரிலேஷன்ஷிப் தெரிந்து இப்படியொரு நாள் அமைந்தா நான் இன்னும் ஹாப்பியா இருப்பேன்.” என்றான்.

மிதிலாவோ இமைமூடி தன்னருகே வரக்கூறினாள். கௌசிக் உறங்குவதை உறுதிப்படுத்திக் கொண்டு, “என்ன?” என்று நெருங்கி வர, அவன் கன்னத்தில் இச்சென்று முத்தம் வைத்து, “எதையும் யோசிக்காம தூங்குடா” என்று விரட்டினாள்.

  கன்னத்தை பிடித்து நெஞ்சிலும் ஒரு கை வைத்தபடி, “என்ன காரியம் பண்ணற? உதைக்க போறேன்” என்று வெளியே ஓடினான். மிதிலாவோ மகிழ்ச்சியுடன் உறங்கினாள்.

ஹ்ருதேஷும் மூடிய கதவை பார்த்து கௌசிக் உறங்க, சிரித்துக்கொண்டே கனவு கண்டு உறங்கினான்.

அடுத்த நாள் பேஷன் ஷோ நிகழ்விற்காகவே கண்விழித்தாள் மிதிலா. இதே விடுமுறை என்றால் ஹ்ருதேஷ் மெத்தையில் கூடுதலாக உறங்கியிருப்பாள்.

   கௌசிக் குளித்துக் கொண்டிருக்க, டீயை பருகியபடி ஹ்ருதேஷிடம் வந்து, “குட்மார்னிங்” என்று பின்னாலிருந்து கட்டி பிடித்தாள்.

”உனக்கு கொழுப்பாடி? நேத்து கன்னத்துல முத்தம் தர்ற, இப்ப கட்டிப்பிடிக்கற.” என்று தள்ளி நகர்ந்தான்.

“அதெல்லாம் நீ செய்யணும் ஹ்ருத். நீ தான் பயப்படறியே. அதனால நானா முத்தம் தந்தேன்‌ கட்டிபிடிச்சேன். கன்னத்துல தானே முத்தம் கொடுத்தேன். உதட்டுல கொடுத்த மாதிரி ஓவரா டென்ஷன் ஆகற” என்று இடுப்பில் கை வைத்து கேட்க, ஹ்ருதேஷ் தான் நிலைக்குலைந்து நின்றான்.

“அம்மா தாயே… உங்கண்ணா கிளம்பற வரை என்னை விட்டு நாலடி தள்ளி நில்லு ப்ளிஸ்” என்று கும்பிடு போடவும் சிரித்துவிட்டு நகர்ந்தாள்.
  கௌசிக் வந்ததும் மிதிலா குளித்து முடித்து வர, ஹ்ருதேஷும் கிளம்பினான். இன்று விடுமுறை நாளென்பதால் தப்பித்தான். இல்லையேல் மிதிலாவுக்கு உதவவும் இயலாது.
  ஷோ நடக்கவிருக்கும் கல்லூரி கேட்டிற்கு கேப் மூலமாக சென்றார்கள்.
பின்னணியில் சத்தம், லைட்ஸ், தொகுப்பாளியின் குரல்.
மிதிலா கைகளில் வியர்வை சுரந்தது.
“நீ ரெடியா?” என அவள் கேட்டாள்.
ஹ்ருதேஷ் கண்ணாடியில் தன்னை பார்த்தான்.
“ரெடி தான்… ஆனா கொஞ்சம் டென்ஷனா இருக்கு.” என்றான்.
  கௌசிக்கோ என்னை வச்சி கோமாளித்தனம் பண்ணறாடா” என்று உடையணிந்தான். மிதிலா சிரிக்க முயன்றாள்.

  “சரி நானும் ரெடியாகிட்டு வந்துடறேன்.” என்று எழ, “எங்க ரெடியாகுற?” என்றான் கௌசிக்.

  “இரண்டு மேல்-மாடல் இருக்கிங்க. பீமேல்-மாடல் வேண்டாமா? அது நான் தான்” என்று கூற, கௌசிக்கோ ‘பார்டா’ என்றான்‌.

ஹ்ருதேஷோ ‘முன்கூட்டியே சொல்லவில்லை’ என்று பார்க்க, அவர்கள் பார்வைக்கு பதில் கூற நிற்காமல் பக்கத்து அறையில் தயாரானாள். மிதிலாவின் நண்பர்கள் பட்டாளம், மற்றும் பாடம் சொல்லித் தரும் மேடத்திடம் அறிமுகம் செய்து வைத்தாள். 
   மிதிலா ஹ்ருதேஷ் கௌசிக் மூவரும் தயாராகி, ஸ்டேஜ் என்ட்ரன்ஸ் அருகே நின்றனர்.

மிதிலா தோழிகள் எல்லாரும் தம்ஸ்-அப் காட்டினார்கள். அண்ணன் அண்ணனின் நண்பன் என்றதால் வேறு பேச்சு கிசுகிசு எழவில்லை. ஆனால் சில பெண்கள் சைட் அடித்து ரசித்தனர்.

நெக்ஸ்ட் என்ட்ரி அவர்கள் தான் என்றதும் மிதிலா ஆழமூச்சை இழுத்தாள்.

ஹ்ருதேஷ் கௌசிக் பதற,
“நான் உங்களோட இருக்கேன். முகத்தில பயத்தை காட்டாம வாங்க” என்றாள்.
மியூசிக் பிளாஸ்ட் ஆகவும் அவர்கள் ஸ்டேஜிற்கு நடந்தார்கள்.
ஆடியன்ஸ் யாரும் தெரியவில்ல, சுற்றிலும் லைட்ஸ் மட்டும்.
ஹ்ருதேஷிற்கு மிதிலாவின் பிரசென்ஸ் வாக் நடக்கவும், ஏதோ எல்லையில்லா சந்தோஷம்.
  இதில் மிதிலா இருவரின் கையை தொடும் நொடி உலகமே ஸ்தம்பித்தது போல உணர்ந்தான் ஹ்ருதேஷ்.

    அவனுக்கு இது நார்மல் வாக், தீண்டல் என்றாலும், தான் தவறான பாதையில நட்பிற்கு துரோகம் செய்யும் முறையாக நடக்கின்றேனோ என்று துவண்டான்.

  கைதட்டலும் ஆர்ப்பாட்டமும் தான் அவனை ஜட்ஜ் முன் பார்வையிட வைத்தது.

ஸ்டேஜில் இதே போல நான்கைந்து ஆடை மாற்றி வந்து நடந்தார்கள்‌. அதெல்லாம் நேரம் சர்க்கரை போல கரைந்தது.

  ஷோவில் கலந்ததில் வின்னர் அனவுன்ஸ்மெண்ட் சொல்லும் போது, மிதிலா ஐந்தாம் இடத்தில் தான் வெற்றி பெற்றாள்.

அதற்கு ஹ்ருதேஷ் மன்னிப்பு கேட்க, “அட… கடைசி நிமிஷத்தில வந்து இந்தளவு வந்ததே பெரிய விஷயம்னு என் பிரெண்ட்ஸ் கங்கிராட்ஸ் பண்ணிதை பார்க்கலையா?” என்றாள்.

கௌசிக்கோ “டேய்… நான் எல்லாம் மாடல்னு பெருமையா சொல்லிக்கலாம். இதுவே இவளுக்கு அதிகம்.” என்று கிண்டல் செய்தான்.

எது என்னவோ இன்றைய நாள் மிக அற்புதமாக மாறியது.

   இதில் கடைசியாக நார்மல் உடையை அணிந்து, கௌசிக் ஹ்ருதேஷ் இருவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்தாள்.

   “கௌசிக்.. நான் வாட்ஸப்ல அனுப்பற  இந்த பிக்ஸரை எனக்கு பெரிசா ப்ரேம் போட்டு தர்றியாடா” என்று அண்ணனிடம் கேட்டாள்.
 
  “ஒன்னு என்ன? மூன்று ப்ரேம் போட்டு தர்றேன்.” என்று கௌசிக் ஆனந்தப்பட்டான்.

கௌசிக் இருக்கும் ஆனந்தத்தில் வாக்கு தர, ஹ்ருதேஷை இடித்து, ‘என்னோட ரூம்ல மாட்டலாம்னு இருக்கேன். என்னவோ அன்னிக்கு சொன்ன. என் போட்டோ போன்ல ஒரு பிக் வைக்க முடியுமானு கேட்ட,  இன்னிக்கு பாரு நம்ம போட்டோ ப்ரேம் போட்டு என்‌ ரூம்ல மாட்டப்போறேன். அதுவும் கௌசிக் அண்ணா தான் ப்ரேம் போட்டே தரப்போறான்.’ என்ற பார்வையை வீசினாள் மிதிலா.

ஹ்ருதேஷிற்கு அந்த நேரம் தங்கள் காதலில் தன்னை விட மிதிலா உடும்பாக இருப்பாளென்று புரிய துவங்கியது.

-தொடரும்.

பிரவீணா தங்கராஜ்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top