அத்தியாயம்-14
வீட்டுக்கு வந்ததும் வராததுமாக, ஹ்ருதேஷ் பெங்களூர் கிளம்ப ஆயத்தமானான்.
“ஏன்டா… வந்து அரை நாள் கூட ஆகலை. மறுபடியும் ஓடற. அப்ப நீ இங்க வந்தது கௌசிக்காக தானா?” என்று கேட்க, “ஆமா.. வேலையை விட்டு வர முடியுமா? நாளைக்கே போகணும். இப்ப கிளம்பினா தான் நைட் அங்க நிம்மதியா தூங்க முடியும். காலையில எனர்ஜியா வேலைக்கு போகலாம்.” என்று கௌசிக் தந்த ப்ரேமை அப்படியே எடுத்து செல்ல வைத்தான்.
செல்வராணியோ “ஒரு கல்யாணத்தை பண்ணிட்டு போனா என்னடா?” என்று கேட்டு நின்றார்.
“ஒரு வருஷம் போகட்டும் கல்யாணத்தை பத்தி பேசறேன்.” என்று சண்டையை முடித்திட முயன்றான்.
“ஒரு வருஷம் எதுக்கு?” என்று அதற்கும் பாய்ந்தபடி வந்தார்.
“எதுக்குன்னா… என் நிலையை உயர்த்திக்க. அவனவன் 30,35ல கல்யாணம் பண்ணறான். என்னை ஏன் அவசரப்படுத்தறிங்க.” என்று எரிந்து விழுந்தான்.
முன்பு யாரையாவது காதலிக்கின்றானா என்று கௌசிக்கிடம் கேட்ட செல்வராணிக்கு, இன்று மிதிலாவை மகன் நேசிக்கின்றானா? என்று சந்தேகம் முளைத்தது. முன்பு போல ஒளித்து மறைத்து கேட்காமல் நேரிடையாக கேட்டார்.
“ஏன்டா… எவளையாவது விரும்பறியா?” என்று வழிமறைக்க, “கல்யாணம் வேண்டாம்னா உடனே காதலிக்கறியானு அடுத்த கேள்வி.” என்று தலையை உலுக்கி பதில் தராமல் அவர்களை தாண்டி முதுகு பையை எடுத்து புறப்பட்டான்.
ராஜலிங்கமோ “ஏய்.. அவன் புறப்படறான் பாரு” என்று உலுக்க, “போகட்டும்… பெத்த அம்மா அப்பாவை பார்க்கவா வந்தான்.” என்று கோபம் மாறாமல் நின்றார் செல்வராணி.
வாசல் வரை வந்தவன், மீண்டும் திரும்பி, “அம்மாவை பார்க்க வந்ததால தான் வர்றப்ப மைசூர் சில்க்ல சேலை வாங்கிட்டு வந்தேன். அவசரத்துல கொடுக்க மறந்துட்டேன். ஐடி பீல்டு என்றாலே டென்ஷன் பிரஷர் இருக்கும்மா. சும்மா நீ வேற ஏதாவது பிரஷர் தர்றாத.
இந்த மந்த்ல பிராஜெக்ட் முடிக்கணும். நான் போறேன். இதுக்கு மேல நிதானமா பதில் சொல்ல என்னால முடியாது. பஸ் போயிடும்.” என்று அன்னையை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் வைத்து நகர்ந்தான்.
ராஜலிங்கமோ மகனது செய்கையை பார்வையிட்டு வேடிக்கை பார்த்தார்.
ஹ்ருதேஷ் அவசரமாய் சென்றதும் கணவரிடம் வந்து, “அந்த பொண்ணு… கௌசிக் தங்கச்சியும் இன்னிக்கே ஊருக்கு கிளம்பறாளானு பாருங்க. அப்படி மட்டும் போனா… ஏதோ இருக்குங்க.” என்று பொறுமினார்.
ராஜலிங்கமோ மனைவி இப்படி பேசவும், “என்னடி கூமுட்டையா பேசற?” என்றார்.
“இல்லைங்க.. எனக்கு எதுவும் சரியா தெரியலை.” என்று கூற, “அந்த பொண்ணு கிளம்புதானு தெரிந்துட்டு வர்றேன்.” என்றார்.
அவருக்கும் இந்த சந்தேகம் விதைத்து விட்டாரே செல்வராணி.
ராஜலிங்கம் கௌசிக் கடையை கடந்து செல்லும் நேரம், அங்கே மிதிலா அவள் தோழிகளுடன் தன் அண்ணன் கடையில் உட்கார்ந்து சூடான சமோசாவை விழுங்கி உப்உப்’ என்று ஊதி விழுங்கி அரட்டை அடிப்பதை கவனித்தார்.
காதலிக்கற பையன் அவசரமா கிளம்பறான். இவளும் அதே ஊருக்கு போறவ என்றால் சேர்ந்து போகலாமே. ஆறமர இங்கிருக்கற பிரெண்ட்ஸோட பொழுதை கழிக்கறா. சொல்வாராணியோட கணிப்பு தப்போ?
ராஜலிங்கத்தை கவனித்த கௌசிக்கோ “அங்கிள்.. வாங்க” என்று அழைத்திட, “என்னப்பா பிசினஸை ஆரம்பிச்சாச்சா?” என்று வாழ்த்தி கைகுலுக்கி வந்தார்.
“ஆமா அங்கிள். ஹ்ருதேஷ் மாதிரி எனக்கு படிப்பு வரலை. எனக்கென்னவோ இதான் வசதினு தோணுச்சு. ஏன் அங்கிள் ஹ்ருதேஷ் ஆன்ட்டி கூட நீங்க காலையில வரலை.” என்றான்.
“எனக்கு கொஞ்சம் வேலை இருந்துச்சு.” என்று மழுப்பியவர், மிதிலாவை பார்வையிட, அவளோ ஹ்ருதேஷ் தந்தை வந்ததை காணாதவள் போல இருந்தாள்.
“உன் தங்கச்சி பெங்களூர் போகலை.” என்று கேட்டார்.
“அவளா… அவ காலையில கிளம்புவதா அம்மாவிடம் சொல்லிட்டா அங்கிள்.” என்றார். அந்த நேரம் மகன் இப்ப கிளம்பறான் லவ் பண்ணறவளா இருந்தா அவனோட போயிருப்பாங்க. செல்வராணி யூகம் தப்பு தான்.’ என்று சிந்தனையில் மூழ்க, கௌசிக்கோ ‘இன்னிக்கு வந்தவங்கள்ல எல்லாருமே உன் தங்கச்சி பெங்களூர் போகலையானு கேட்கறாங்க. இல்லைன்னா… ஹ்ருதேஷ் பெங்களூர் போயிட்டானானு கேட்கறாங்க. இந்த இரண்டுமே ஏதோவொரு டிஸ்டர்ப் பண்ணுது.’ என்று கௌசிக்கும் எண்ணத்தில் மூழ்கியிருந்தான்.
ராஜலிங்கம் அவரும் வீட்டிற்கு செல்வதற்கு முன் பணத்தை செலுத்த “வேண்டாம் அங்கிள்.” என்று மறுத்தான்.
“ஏன்பா.” என்று கேட்க, “அதென்னவோ வாங்க தேணலை அங்கிள்.” என்று தலையை சொரிய, ராஜலிங்கமோ மிதிலாவை பார்த்து மீண்டும் யோசனைவயப்பட்டு நகர்ந்தார்.
செல்வராணியிடம் அந்த பொண்ணு மிதிலா இங்க தான் இருக்கு. நான் போனதை கூட கண்டுக்கலை.’ என்றதும், செல்வராணிக்கு நிம்மதி பரவியிருக்க வேண்டும்.
இங்கு இரவு வரை அண்ணன் கடையில் அட்டூழியம் செய்தவளாக மிதிலா இருந்தாள்.
நள்ளிரவு ஹ்ருதேஷிற்கு, ” பெங்களூருக்கு போயிட்டியா?” என்று கேட்டாள்.
“ம்ம்ம்” என்றான்.
“அப்படியென்னடா அவசரம். சண்டைப்போட்டா என் மூஞ்சியை கூட பார்க்காம போவியா? என்ன சொல்லிட்டேன்… உன் பிரெண்ட் கௌசிக்குன்னா மட்டும் ஓடுவ. நான் கூப்பிட்டா வேலை இருக்குனு மழுப்புவனு சொன்னேன். உடனே கோபம் பொத்துக்கிட்டு வருது.
உண்மையிலயே நாலு நாள் முன்ன வான்னு கூப்பிட்டா வந்தியா?” என்று கேட்டாள்.
“இங்க பாரு.. நீயா கௌசிக்கானு கேட்டா, ஒரு செகண்ட் கூட யோசிக்காம கௌசிக்னு சொல்வேன். அதனால கௌசிக்கு ஏதாவதுன்னா ஓட தான் செய்வேன்டி. சும்மா காதலா-நட்பா, நட்பா காதலானு பட்டி மன்றம் வைக்காத. என் நட்பு தான் முதல்ல. நீ இரண்டாம் பட்சம் தான்.” என்று கோபமாக உரைத்தான்.
மிதிலா அதன்பின் பேசவில்லை. பேசிக்கொண்டிருந்த காலை துண்டித்து முடித்தாள். ஹ்ருதேஷும் ‘சரிதான் போடி’ என்று எரிச்சலில், போக்குவரத்து அசதி மற்றும் அலைச்சலில் படுத்துறங்கினான்.
மிதிலா அடுத்த நாள் தன் அண்ணன் ப்ரேம் செய்த போட்டோவை எடுத்துக் கொண்டு அன்னை தந்த உணவுகளை அள்ளிக் கொண்டா புறப்பட்டாள்.
கௌசிக் தான் பஸ் ஏற்றி விட வந்தான்.
“என்ன ஒரு மாதிரி இருக்க?” என்றான்.
“ம்ம்ம. உன்னால தான்.” என்றாள்.
“என்னாலையா?” என்று கேட்டதும் தான் ஹ்ருதேஷ் பேசியதில் அண்ணன் மீது கோபத்தில் இருப்பதே மிதிலா உணர்ந்தாள்.
“ஏ.. மிதிலா.. கோபமா இருக்கியா?” என்றதும், தன்னை சமாளித்தவளாக, “ஆமா… உனக்கு பிசினஸுக்கு பணம் தரலாம்னு அம்மா அப்பா நினைச்சாங்களாம். ஆனா எல்லா பணமும் என் படிப்புக்கே போச்சுனு பீல் பண்ணறாங்க. உன்னை வச்சி என்னை திட்டறாங்க. இங்க பாரு.. இந்த பிசினஸை நல்லா இம்ரூவ் பண்ணி முன்னேற பாரு. எனக்கு எதுவும் செட்டாகாதுனு சொல்லிட்டு நிற்காத. சரியா” என்று அறிவுரையோடு திட்டை பரிசாக்கினாள்.
”இவ்ளோ தானா. அதெல்லாம் பொறுப்பா இருக்கேன்” என்று தங்கை தலையை கலைத்து விட்டு வழியனுப்பினாள்.
“ஏய்.. ஹேர் ஸ்டெயில் களையுது.” என்று ஏறினாள்.
சேலத்திலிருந்து ஏறி பெங்களூர் வந்திறங்கும் பொழுது, ஹ்ருதேஷ் அங்கே நின்றியிருந்தான்.
லக்கேஜை எடுத்தவனாக, பேசாமல் வர, மிதிலாவும் பேசாமல் வந்தாள்.
கேப் புக் செய்தப்பின், ”ஆபிஸ் போகலை?” என்று கேட்க, “மனசு சரியில்லை” என்று சாலையை வெறித்தான்.
அவள் கல்லூரி ஹாஸ்டலில் எல்லோரும் கல்லூரிக்கு சென்றியிருக்க, ப்ரேம் லக்கேஜ் என்று இறங்கவும், “ரூம் வரை கொண்டு வர்றியா?” என்று கேட்க, தலையிலடித்தபடி கையை முன்னே நீட்டி செல் என்றான்.
ஹாஸ்டல் நிர்வாகியிடம் சொல்லிவிட்டு, லக்கேஜை அறைக்கு கொண்டு செல்ல அனுமதி வாங்கினார்கள்.
அறைக்கு வந்து மிதிலா, “ஹ்ருத்… அந்த ப்ரேமை இங்க மாட்டிடு” என்றாள்.
அவனும் மாட்டிவிட, “அன்னிக்கு ஏதோ சொன்ன… ஒரு பிக் உன் போன்ல என்னோடதை வைக்க முடியுமானு? நான் அப்ப போன்ல என்னடா, ரூம்லயே உன்னோட இருக்கற பிக்கை மாட்டறேன்னு சொன்னேன். இப்ப பாரு… எங்கண்ணா ப்ரேம் போட்டு தந்து, நீ அதை உன் கையால என் ரூம்ல மாட்ட வச்சியிருக்கேன். ஹ்ருத்… இப்ப என்ன சொல்லற?” என்று புருவம் தூக்கி கேட்க, ஹ்ருதேஷிற்கு அவள் எதையும் நடத்தி காட்டும் முடிவில் இருப்பதை தெரிந்துக் கொண்டான்.
லேசான சந்தேகம் துளிரிட, “உன்னோட சீனியர் மாடலா வரமாட்டேன்னு சொன்னது பொய்யா? அப்ப நீயா தான் வேண்டுமின்னே திட்டம் போட்டிருக்க?” என்று கேட்க, மிதிலாவோ புன்னகைத்தாள்.
“ரைட் ஹ்ருத்… சீனியரை தான் மாடலா வச்சி எல்லாம் ரெடி செய்தேன். ஆனா நீ போட்டோ கேட்டு பேசவும், அப்பவே முடிவுப்பண்ணிட்டேன். என்னோட நெக்ஸ்ட் பேஷன் ஷோவுக்கு உன்னை தான் மெயின் மாடலா நிறுத்தணும்னு. அதான்… எப்படியும் அண்ணா வருவான் என்றதும் அவன் என்னை சந்திக்கறப்ப டிராமா போட்டேன். பிளான் சக்சஸ்.” என்று வெற்றியில் பெற்ற மமதையில் பேசினாள்.
ஹ்ருதேஷிற்கு பிடிக்காமல் கீழே செல்ல, “ஹ்ருத்.. ஹ்ருத்” என்று அவசரமாய் கதவை அடைத்து பின்னால் ஓடிவந்தாள்.
படியில் இறங்கையில் ”ஆனா ஒன்னு அந்த கௌசிக் முதல்ல என்னை பார்த்து பிளான் சொல்லி உன்னிடம் கன்வின்ஸ் பண்ண நினைச்சேன். அவன் என்னடான்னா நேரா உன்னை பார்த்து கூட்டிட்டு வந்துட்டான். சொல்லப்போனா கௌசிக் அண்ணா எனக்கு உதவி பண்ணிருக்கான்.” என்று கையை பிடித்து புன்னகைத்தாள்.
அவள் கையை உதறிய ஹ்ருதேஷோ “அவன் என்னை நம்பறான்டி. நண்பனா மதிக்கறான். நாளைக்கு அவன் தங்கையை நான் காதலிப்பதா தெரிந்தா என்னை புழுவை விட கேவலமா நினைப்பான். உனக்கு அதைப்பத்தி கொஞ்சம் கூட யோசிக்க மாட்டல்ல? உனக்கு உன் காதல், உன் திட்டம், உன் எண்ணம் மட்டும் நிறைவேறணும். எங்க நட்பு எந்தளவு சிதையும்னு துளி கவலையில்லை?” என்று கேட்டான்.
“ஹ்ருத்.. ஒருதடவை நீ இதை சொன்னா நான் பதில் சொல்வேன். ஒவ்வொரு தடவையும் கௌசிக் டாபிக் வர்றப்ப எல்லாம் நண்பனுக்கு துரோகம் பண்ணிட்டுன்னு புலம்பற. எத்தனை முறை சமாதானம் செய்யறது.
சரி நீ புலம்புனு விட்டுட்டேன். நண்பனோட தங்கையை காதலிச்சா துரோகம்னு நீயும் அவனுமே முடிவெடுத்தா அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது. காதல் கண்மூடித்தனமா தான் வரும்.” என்றாள்.
அதற்குள் ஹாஸ்டல் நிர்வாகி எதிரே வரவும், பேச்சு அமைதியானது. அவர்களிடம் சொல்லிவிட்டு மிதிலா ஹ்ருதேஷுடன் சேர்ந்து வந்தாள்.
“என் பின்னாடி ஏன் வர்ற?” என்றான்.
“நீ ஏன் காலையில ஆபிஸ் போகாம என்னை வந்து பிக்கப் பண்ணின?” என்றதும் ஹ்ருதேஷ் அவனாக ஆட்டோ பிடிக்க முற்பட்டான்.
“கேப் புக் பண்ணறேன். வெயிட் பண்ணு” என்றாள்.
“நான் ஆபிஸ் போறேன். நீ ஒன்னும் கூடவே வராத” என்று திட்டிவிட, “ஓ… ஆபிஸ்கு இப்படி தான் டிரஸ் பண்ணுவாங்களா?” என்றாள்.
அலுவலக ஆடை போல அணியாமல் இயல்பாக ஜீன் டிஷர்ட் அணிந்திருக்க, ஆட்டோ என்று கையை காட்டினான்.
அவனருகே வரவும், கன்னட மொழியில் ஏதோ பேச, “2343” என்று ஹ்ருதேஷை அமர கூறிவிட்டு ஓடிபி கூறினாள் மிதிலா.
கேப் புக் செய்தவள் நடந்து நடந்து ஆட்டோவை புக் செய்து அதில் தன்னை ஏற்றியதில் கூடுதல் கோபம் வந்தது.
“எதுக்குடி என் பின்னால நாய் யாதிரி வர்ற?” என்று திட்டிவிட, “நாய் எதுக்கு வரும்.. நாக்கை தொங்கப்போட்டுட்டு.” என்று அவளும் கோபமாக வார்த்தை வீசினாள். ஆனாலும் ஹ்ருதேஷுடன் பயணம் செய்வதை உதறவில்லை.
ஹ்ருதேஷ் தான் இவளை சந்திக்க வந்தது தவறோ என்றெண்ணினான். அதுவும் காதலித்ததும் தவறு என்று மனதில் கூக்குரலிட்டு வருந்தினான்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்
