meta-google-adsense-platform-account: ca-host-pub-2644536267352236 meta-google-adsense-platform-domain: sitekit.withgoogle.com

நின் பிரேமம் என் சிநேகம்-8

அத்தியாயம்-8

   இன்று வேலைக்கு செல்லும் முதல் நாள் இரண்டு நாளாக வீட்டுக்கு தேவையான சிலதை மட்டும் வாங்கி வைத்தான். ஓரளவு ஹ்ருதேஷ் சமைக்க கூடியவன் என்றாலும், சமையலில் நேரம் செலவழிக்க அஞ்சுபவன். அதனால் கூல்ட்ரிங்க்ஸ், பால்பவுடர் பேக்கட், காபி தூள், நடுவே சிற்றுண்டியாக நொறுக்கு தீணி, பெர்ஃப்யூம், ஹெர்ஜெல், ஷாம்பு சோப்பு, என்று இதரவைகளை கொஞ்சம் போல வாங்கி சேமித்தான்.

  இன்று குளித்து முடித்து ஐயர்ன் செய்து ஷர்ட் அணியவும், காலிங் பெல் அழைப்பு கேட்டது, “யாரா இருக்கும்?” என்று கதவை திறக்க, மிதிலா நின்றுயிருந்தாள்.

“இவ்ளோ காலையில இங்க என்ன பண்ற?” என்று கேட்க, கையில் பழத்தட்டும் உடைந்த தேங்காயும் இருந்தது. அதில் திருநீறு எடுத்து, ஹ்ருதேஷ் நெற்றியில் சிறு கீற்று போல வைத்தவள், “முதல் தடவை வேலைக்கு போற. கோவிலுக்கு போக வேண்டாமா?” என்று கூற நெகிழ்ந்து போனான்‌.
 
  தனக்காக கோவிலுக்கு எல்லாம் செல்கின்றாளென பெருமைப்பட்டால் இஷ்டத்திற்கு ஆடுவாளென, “எங்கம்மா வேலை கிடைச்ச உடனே கோவிலுக்கு போய் அர்ச்சனை செய்து, நாலைந்து பேருக்கு அன்னதானம் கூட பண்ணிட்டாங்க.” என்று பெருமை பேசினான்.

“ஓ… அம்மா புகழை பாடறியா. பாடு பாடு… மவனே.. ஆப்டர் மேரேஜ் இப்படி புகழ்ந்து பாடி, மண்டை உடையாம பார்த்துக்கோ‌” என்று கூறி கேசரியை ஊட்டினாள்.

ஹ்ருதேஷ் சிரித்துக் கொண்டு ஆ வாங்கி விழுங்க, போன் அலறியது.

“அம்மா.. நூறு ஆயுசு” என்று கூறி மிதிலாவிடம் வாயில் விரல் வைத்து பேசப்போவதாக தெரிவித்தான்.

அதுவோ வீடியோ கால் என்று கவனித்து, “ஏ.. ஹ்ருத்.. வீடியோ கால்” என்று எச்சரிக்கை செய்தாள்.

நல்ல வேளை இன்னிக்கே மாட்டியிருக்க வேண்டியது, போனுக்கு எதிரே சென்று நின்றாள் மிதிலா.

“என்னம்மா.. எப்ப பாரு போன்ல வர்றிங்க? என்ன சொல்லுங்கம்மா? என்று எரிந்து விழுந்தான்.

அவனுக்கு மிதிலாவோடு மாட்டிக்கொள்வோமோ என்ற பயம்.

செல்வராணியோ “ஏன்டா… நீ அங்க வேலைக்குனு போயாச்சு. நான் இங்க இருக்கேன். பிறகு நேர்லயா பேச முடியும். போன் ஒன்னு தான் உன்னோட பேசறதுக்கு வசதி. அதென்னவோ இந்த போனால அடிக்கடி பேசறதுல தூரத்துல இருக்கற பீல் வராது தானே?” என்று எதிர்க் கேள்வி கேட்டார்.

ஹ்ருதேஷோ “சரி சரி எதுக்கு கால் பண்ணினிங்க. அதை சொல்லுங்க. வேலைக்கு கிளம்பிட்டு இருக்கேன்‌” என்று துண்டிக்கவே அவசரப்படுத்தினான்.

“ம்கூம்.. முதல் நாள் பையன் வேலைக்கு போறான். வீடியோ கால்ல போன் போட்டு பேச ஆசைப்பட்டேன். தனிது தப்பாடா? என் மகன் வேலைக்கு போற அழகை பார்க்க வேண்டாமா?” என்று கேட்க, “பாருங்க நல்லா பாருங்க” என்று போனை ஸ்டாண்டில் நிற்க வைத்து தன் முழு உருவத்தை காட்டினான்.

   செல்வராணி நெற்றி சுருக்கி, “அதென்னடா நெத்தில… திருநீறு கணக்கா தெரியுது. என்னங்க.. இங்க பாருங்க.. உங்க பையன் வேலைக்கு போகவும், கடவுள் பக்தி எல்லாம் வருது.” என்று ஆனந்தப்பட்டார். ராஜலிங்கம் எட்டி பார்த்துவிட்டு, “ம்ம்” என்றார்.
 
   திருநீறு வைத்த மிதிலா மீது பார்வை சென்றது.

   ஏற்கனவே வீட்டை வீடியோ காலில் நன்றாக காட்டிவிட்டான்.
 
  அதனால் “அம்மா… நேரமாகுது… முதல் நாளே லேட்டாக கூடாது. நான் வந்து பேசறேன்” என்று கூற, சரியென அவரும் கேட்டுக்கொண்டார்.

  “தேங்க்ஸ் அம்மா இல்லாத பீல்… நீ நிரப்பிட்ட” என்று ஜெல்லை எடுத்து தலையை தடவ, “ம்கூம்… இப்ப தான் சொன்னேன். உங்கம்மாவை புகழாதனு. அதென்னவோ எனக்கு அவங்களை சுத்தமா பிடிக்காது. ஏன்னுலாம் தெரியாது… ஆனா அவங்க வைக்கிற பாயாசம் மட்டும் செமையா இருக்கும். முந்திரி எல்லாம் நெய்யுல வறுத்து” என்று கூறும் போதே, “ஒரே பையன் நல்லா நட்ஸ் எல்லாம் போட்டு சமையல்ல குறை வைக்க மாட்டாங்க. அப்பறம்.. அதென்ன பிடிக்காது. முதல் கோணல் முற்றிலும் கோணலா போயிட போகுது. அவங்க உன்னை என்ன செய்தாங்க. எங்கப்பாவாது வசதி பார்ப்பார், நிறத்தை பார்ப்பார் தெரியுமா?” என்று அன்னையை பாராட்டினான்.

மிதிலாவுக்கு இந்த பேச்சு பிடிக்காமல் போக, “முதல் நாள் வேலைக்கு போகாம போரடிக்காத ஹ்ருத்” என்றதும், அவளுக்கு தன் தாய் தந்தையை பிடிக்கவில்லையோ என நினைத்துக் கொண்டான். ஆனால் இன்றே எதுவும் கேட்க தோன்றாமல் அலுவலகம் செல்ல கை பட்டனை போட்டான்.‌

  அது அவிழவும், “இங்க காட்டு” என்று அவன் கையை இழுத்து பட்டனை போட முயன்றாள்.

  மிதிலா ஹ்ருதேஷ் பட்டனை போடும் போது அவன் கையை அவளுக்கு நெருக்கமாக இழுக்க, ஹ்ருதேஷ் கைகள் பெண்ணவள் மீது உரசியது.

  மிதிலா கை நழுவவும், அவனும் கையை இழுத்துக் கொள்ள, இருவர் பார்வை சந்தித்து, அவஸ்தைக்குள் ஆனது.

  “நானே போட்டுக்கறேன்” என்று ஹ்ருத் திரும்பிக் கொள்ள, “ம்ம்ம.. ஹ்ருத் சாப்பிட்டியா?” என்றதும், “போற வழில பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன்.” என்றவன், வீட்டை பூட்டி விட்டு பக்கத்தில் உள்ள ஹோட்டலில் உணவருந்தினார்கள்.

  “நீ உன் வேலையை பாரு. அடிக்கடி என்னை பார்க்க ஓடி வராத.” என்றவன் கேப் புக் செய்ய, ‘ஓடி வந்தா தான் என்னவாம்’ என்று மனதில் புலம்பியவள், ‘சரியென சிறு தலையசைப்பை பதிலாக தந்தாள்.

மிதிலா தலையாட்டலில் இவ நிச்சயம் தன் பேச்சை கேட்கமாட்டாளென ஹ்ருத் புரிந்துக் கொண்டான்.

  “நான் இங்கிருந்தே காலேஜ் கிளம்பிடுவேன்.” என்றுரைத்தாள்.

  இருவரும் ஆளுக்கொரு திசையாக பிரிந்தனர்.

  ஹ்ருதேஷ் மனம் முழுக்க, மிதிலா ஆட்சி செய்ய ஆரம்பிக்க கௌசிக்கிற்கு போன் செய்து முதல் நாள் செல்வதை கூற மறந்தான்.

   அலுவலகம் சென்று அப்பாயின்மெண்ட் ஆனதும் அவனுக்கான வேலையை சுட்டிக்காட்டி கூற, கவனமாக கேட்டுக்கொண்டான். பெரும்பாலும் கற்பூர புத்தி என்பதால் எளிதாக வேலையை புரிந்துக் கொண்டான்.

    மதியம் சாப்பிடும் நேரம் கேன்டீனிலேயே பார்த்துக் கொண்டான்.

  ஓரளவு புது நட்பு கிடைத்தது. யாரிடமும் ஹ்ருதேஷாக பேச தயங்குவான். ஆனாலுமே அவனிடம் தானாக பேச நட்பு சூழ்ந்தது.

ஆண் பெண் பேதமின்றி அவரவர் கை குலுக்கி அறிமுகமாகினார்கள்.

  முதல் நாளே ஒரு பெண், நீங்க சிங்கிளா? கமிட்டடா?” என்று கேட்க, வெட்கத்துடன் கூடிய புன்னகையால் “கமிட்டட்” என்றான் கர்வமாய்.

   “ஓ.”

   “பச்” என்ற குரல்கள் கேட்க, மிதிலா நினைவு வந்தது.
 
   பெண்களோ யார் என்ன என்று துருவ, “மிதிலா… இங்க தான் பேஷன் டிசைனிங் படிக்கறா” என்று மட்டும் கூறினான்.

“ஓ.. அப்ப பாஸ் பிளான் பண்ணி இங்க ஜாபுக்கு வந்திங்களா?” என்று கேட்க, “நோநோ.. அப்படியெல்லாம் இல்லை. இன்டர்வியூ அட்டன் பண்ணினப்ப, இங்க ஒரு பிராண்ச் இருப்பதே தெரியாது. இங்க வேலைக்கு நியமிச்சதும் சர்பிரைஸா தான் இருந்தது.” என்று விவரித்தான்.

  “என்னயிருந்தாலும் கமிட்டட்… இனி நோ யூஸ்” என்று சிரிக்க, அன்றைய நேரம் மிகவும் ரம்மியமாக சென்றது.

  மாலை வீடு திரும்பும் நேரம் கூட மிதிலாவுடன் பேசியபடி வந்தான். அதனால் பொழுது நகர்ந்ததே தெரியாமல் போக, இரவு சாப்பிடும் நேரம் ‘செகண்ட் கால் கௌசிக்’ என்று காட்டியது.

  மிதிலாவிடம் பேசிட்டே இருந்ததில், கௌசிக்கிடம் இன்னிக்கு வேலைக்கு போனதையே சொல்ல மறந்துட்டேன்’ என்று ”மச்சி” என்று அழைக்க, “இன்னிக்கு வேலைக்கு சேர்ந்துட்ட தானே?” என்று கேட்டான் கௌசிக்.

ஹ்ருதேஷோ “ஆமாடா.. சாரி டா.. சொல்லணும்னு நினைச்சேன்‌ மறந்துட்டேன்” என்றதற்கு, “ஏன்டா… என்னையே மறக்கற அளவுக்கு உனக்கு அப்படியென்ன வேலை. காலையிலருந்து இப்ப தூங்கற வரை மறந்திருக்க? ஹ்ருதேஷ்… எனக்கு தெரியாம ஏதாவது மறைக்கறியா? ஆன்ட்டி சொல்வது போல லவ் ஏதாவது பண்ணறியா? அப்படின்னா சொல்லுடா. ஆன்ட்டியிடம் உனக்காக நான் பேசறேன்” என்று கூற, ஹ்ருதேஷ் ஒரு‌ நிமிடம் மௌனமானான்.

காதலிப்பதை சொல்லிவிடலாமா? என்று கூட தோன்றியது.

ஆனால் “இல்லை கௌசிக். நான் யாரையும் லவ் பண்ணலை.” என்று பொய் கூறினான்.

  கௌசிக்கோ “அதான் தெரியுமே.. நீ என்னை மீறி யாரிடமும் பேசி நான் பார்த்ததில்லை. என் கூடவே தானடா இருந்த. இப்ப தனியா வேலைனு போயிட்ட. மச்சான்.. நீ இல்லாம இங்க நம்மூர்ல எங்கயும் போகப் பிடிக்கலைடா. ஒரே சூன்யமா இருக்கு.

உனக்கு அந்த வேலையெல்லாம் வேண்டாம். நீ உடனே இங்க வா. நாம ஏதாவது சேர்ந்து பிசினஸ் பண்ணலாம்.” என்று கௌசிக் பேசினான்.

அவன் பேச்சே தினுசாக தெரிய, “மச்சி.. டிரிங்க்ஸ் பண்ணிருக்கியா” என்று ஹ்ருதேஷ் கேட்க, “ஆமாடா.. லைட்டா… நீ காலையில இருந்து கால் பண்ணலை. மனசு எல்லாம் வலிச்சுது மச்சி. லைட்டா… குடிச்சேன். ஆனா… குடிக்க குடிக்க வலி அதிகம்கிடுச்சு மச்சி. உடனே வாடா” என்றான்

  ஹ்ருதேஷ் போனை காதில் வைத்து, பாதி சாப்பாட்டில் ஸ்பூனால் அலசியவன் உணவு இறங்கவில்லை.

“டேய்… உனக்குனு ஒரு வாழ்க்கை, எனக்குன்னு ஒரு வாழ்க்கை பார்க்க வேண்டாமா? பிசினஸ் எல்லாம் செட்டாகாது டா. நீ முதல்ல அரியர் க்ளியர் பண்ணு. இங்க ஜாப் தேடி வைக்கறேன். தயவு செய்து குடிக்காதடா. ஆன்ட்டிக்கு தெரிந்தா ஃபீல் பண்ணுவாங்க. அங்கிள் எப்படி விட்டார்?” என்று அதட்டினான்.‌

  “அதெல்லாம் சாப்பிட்டு அறையில வந்து படுத்த பிறகு தான் குடிச்சேன். வீட்ல தெரியாது. நீயும் சொல்லிடாத மச்சி.” என்று விக்கல் வர, “தண்ணியை குடிடா” என்று ஹ்ருதேஷ் சொல்ல, “ஹாலுக்கு போகணுமே மாட்டிப்பேன். பரவாயில்லை… உன்னிடம் பேசிட்டேன்ல.. சோறு தண்ணி தேவைப்படாது.” என்று உலறியவன், மேலும் அரைமணி நேரம் பேசியப்பின்னே வைத்தான்.

அதற்குள் போனில் குடும்பம் நடத்தாத குறையாக மிதிலா நாலைந்து முறை அழைத்திருந்தாள். அவள் இவனுக்கு அழைத்து விட்டு, அண்ணன் கௌசிக்கிற்கும் அழைத்திருப்பாள் போல.

இரண்டு எண்ணும் பிஸி பிஸி என்று வரவும், “இந்த கௌசிக் வேற குறுக்கால குறுக்கால.. என் லவ்வரை என்னிடம் பேசாம ரம்பம் போட்டுட்டு இருக்கான்.

இவனுக்காவது காதலி போன் பண்ணறாளே, நட்பை கத்தரிக்கணும்னு அறிவிருக்க? இத்தனை முறை கால் பண்ணியும் மிஸ்டு கால்ல போகுது.’ என்று மிதிலா திட்டியபடி உறங்கினாள்.

ஏதோ இன்று அவள் ஹ்ருதேஷை நேரில் சந்தித்து, சாப்பிட்டு, சென்றது மனதில் நிழலாட, அதை எண்ணி கனவுக் கோட்டைக்குள் மூழ்கினாள்.

  ஒருவழியாக கௌசிக் புலம்பி புலம்பி சத்தம் குறையவும், ஹ்ருதேஷ் போனை துண்டித்தான்.

‘இவன் ஏன் நான் இல்லாம வாழ தெரியாதவன் போல பேசறான்.
   வேலையை விட்டுட்டு வாடானு யோசிக்காம பேசறான். இதுல பிசினஸா?’ என்று ஹ்ருதேஷ் துவண்டான்.

  போதாத குறைக்கு ‘இவ வேற… கால் பண்ணி உசுரை வாங்கறா. அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் இந்த ஹ்ருதேஷ் உயிரு வெல்லக்கட்டி.’ என்று சோர்ந்தான்.

-தொடரும்

‌பிரவீணா தங்கராஜ்.

1 thought on “நின் பிரேமம் என் சிநேகம்-8”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top