meta-google-adsense-platform-account: ca-host-pub-2644536267352236 meta-google-adsense-platform-domain: sitekit.withgoogle.com

நின் பிரேமம் என் சிநேகம்-9

அத்தியாயம்-9

ஹ்ருதேஷ் வாழ்க்கை முறை, ஒரு அட்டவணை போல இயங்கியது. காலையில் எழுந்ததும் சுறுசுறுப்பாய் அலுவலகம் செல்ல புறப்பட்டு, இரண்டு தெரு தள்ளி உள்ள ஹோட்டலில் சாப்பிட்டு, அலுவலகம் சென்று வேலையை பார்ப்பான்.

மதியம் அலுவலக கேன்டீனில் சாப்பிட்டு, மாலை சாலையோர கடைகளில் அல்லது சிறு சிற்றுண்டி உணவகத்தில் ஏதாவது வயிற்றுக்கு தள்ளிவிட்டு, மீண்டும் இருப்பிடம் வந்து சேர்வான். இடைப்பட்ட நேரத்தில் மிதிலா அவனுடன் உரையாடி அழகான இம்சையையும் கூட்டுவாள்.

இரவும் இரண்டு தெரு தள்ளி உள்ள ஹோட்டலில் சாப்பிட்டு வந்து, வீட்டில் அன்னையிடம் பேசிவிட்டு, நடுவே கௌசிக்கிடம் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பேசிவிடுவான். இரவு உறங்கும் வரை மிதிலா பேச்சுக்கு செவியை தந்துவிட்டு வெட்கப்படுவது சிரிப்பது, பேசுவது, அதட்டுவது, தங்களுக்கு அன்றைய நாட்கள் நடந்த விஷயங்களை பகிர்ந்து கொள்வதென்று சுவாரசியங்களாக பொழுதுகள் கழியும்.

அதுவும் ஹ்ருதேஷின் அலுவலகத்தில் கமிட்டட் என்றதிலிருந்து, யாரை லவ் பண்ணற? பொய் சொல்லறியா? உன் ஆளும் இங்க தான் படிக்கறாளா? எங்களுக்கு உன் ஆளை காட்டுப்பா?’ என்றதை மிதிலாவிடம் கூறுயதில், நான் உன் பிரெண்ட்ஸோட சந்திக்க வரவா? என்று ஆர்வமாய் கேட்பாள்.

‘ஒன்னும் வேண்டாம்.‌‌ உன் படிப்பை பாரு” என்பான்.

இதற்கு நடுவே சனி ஞாயிறு என்றால் இரண்டு மூன்று முறை சேலம் வந்து சேர்வான்.

கௌசிக்குடன் ஊர்ச்சுற்றி அவனிடமும் வேலை பற்றி பகிர்வான்.

கௌசிக் முகம் வாடும். “ஏன்டா… வரவர உனக்கு உன் ஆபிஸ் பிரெண்ட்ஸே முக்கியமா போயிடுச்சுல்ல. அதனால தான் என்னை மறந்துடற. இங்கிருந்தப்ப நினைச்ச நேரம் என் வீட்டுக்கு வருவ. நானும் உங்க வீட்டுக்கு வருவேன்.
இப்ப அதெல்லாம் நீ மிஸ் பண்ணலையா ஹ்ருதேஷ்? உனக்கு இந்த லைப் செட்டாகிடுச்சா? எனக்கு எதுவும் செட்டாகலைடா. நீ இல்லாம வீட்டை விட்டு தாண்ட கூட பிடிக்கலை.” என்று வருத்தமாய் உரைத்தான்.

ஹ்ருதேஷோ “ஏன்டா… எல்லாரும் ஒரு கட்டத்தில் எங்கயாவது மூவ் ஆன் ஆக வேண்டிய கட்டாயம் வருதே. நான் என்ன வேண்டுமின்னே அங்க போனேன். ஆபிஸ்ல தானே அங்க போஸ்டிங் கொடுத்தாங்க.

இங்க பாரு… நீ இவ்ளோ பீல் பண்ணற அளவுக்கு இந்த பிரிவு நிரந்தரமில்லை கௌசிக்.” என்று புரிய வைக்க முயன்றான்.‌

“இல்லை மச்சி… உனக்கு தான் தெரியலை. நீயும் நானும் சேர்ந்து சுத்தின இடமெல்லாம் நான் தனியா போய் வரவும், அங்கிருக்கற ஆட்கள் எல்லாம் உன்னை தான்டா கேட்கறாங்க. நகமும் சதையுமா இருப்பிங்க. ஹ்ருதேஷ் பிழைக்க தெரிந்து போயிட்டானா? நீ மட்டும் என்ன செய்யறனு கேட்டு நக்கலா பேசறாங்க. ரொம்ப ஹர்ட் ஆகுது.
அதுலயும் சிலர், நான் உன்னை விட எப்பவும் தகுதில குறைச்சல், அதான் உனக்கு வேலை கிடைச்சிடுச்சு. எனக்கு வேலையில்லைனு பேசி சீண்டறாங்க.” என்றான்

“பேசறவனுங்க எல்லாம் சின்னபசங்க புத்திடா. விட்டு தள்ளு… உன்னோட திறமை என்னனு உனக்கு தெரியறப்ப வாயை மூடுவாங்க” என்று ஹ்ருதேஷ் குளத்தங்கரையில் கல்லை போட்டு பேசினான்.

அது என்னவோ கௌசிக் இதயத்தில் அந்த கல் அளவிற்கு கூட சலனமின்றி இதயத்தில் வெறுமையாக இறங்கியது.

“ஆமா.. இங்கிருந்து போறப்ப ஒரு பொண்ணுக் கூட இங்க பேசினியாம். யார்டா அந்த பெண்ணு?” என்று கேட்டான்.

ஹ்ருதேஷிற்கு திகில் பரவியது.
“பொண்ணா..? எந்த பொண்ணு. எனக்கு தெரியாது. நான் எந்த பொண்ணிடமும் பேசியதா நினைவில்லையே.” என்று பதட்டமானான்.‌

“ஒரு மீன் பிடிக்கற பையன் சொன்னான்டா. நீ தனியா உட்கார்ந்துட்டு இருந்தப்ப ஒரு அக்கா வந்துச்சு. உன்னிடம் பேசுச்சுனு.” என்று சந்தேகமாய் கேட்டான் கௌசிக்.

மிதிலா பிளஸ்டூ முடித்ததும் பேஷன் டிசைனிங் படிக்க பெங்களூரில் பறந்துவிட்டதால் அந்த பையனுக்கு மிதிலா யாரென்று சரியாக தெரியாமல் ‘ஒரு பொண்ணு’ என்று மட்டும் குறிப்பிட்டிருந்தான். ஒருவேளை மிதிலா மட்டும் யாரென்று அறிந்து குறிப்பிட்டிருந்தால் இத்தனை நிதானமாக கௌசிக் ஹ்ருதேஷிடம் விசாரித்து இருக்க மாட்டான்.‌

“அது யாரோ வழில போற பொண்ணா இருக்கும். இங்க வர்றதே உன்னை பார்க்க. இதுல பொண்ணா? ஏன்டா.. எங்கம்மா என் கல்யாண பேச்சை எடுத்ததும், உன்னிடம் யாரையாவது லவ் பண்ணறானானு கேட்டதுல இருந்து ஏன்‌ என்னை இப்படில்லாம் கேட்கற. நான் உன்கூட தானே சுத்தினேன்.” என்றான் ஹ்ருதேஷ்.

கௌசிக் மனதிலோ முன்ன சுத்தின. இப்ப.. என்னை கண்டுக்கலை… என்னை விட்டு நீ தூரமா போயிட்ட டா.’ என்று பார்த்தவன், அமைதிக் காத்தான்.

ஹ்ருதேஷிற்கு கௌசிக் மௌனம் கண்டு, ‘சந்தேகப்படறானா’ என்று பயந்தவனாக, ”ஓகே கௌசிக் நான் கிளம்பறேன்.” என்று எழவும், கௌசிக் அதேயிடத்தில் இருந்து எழாமல் இருக்க, “என்னடா?” என்று கேட்க, “ஒன்னுமில்லை… முன்ன எல்லாம் நீ வீட்டுக்கு போகாம பேசிட்டே இருப்ப. எங்கம்மா கால் பண்ணி திட்டியதும் தான் சாரி கேட்டு நீ என்னை கிளம்ப சொல்வ. நான் போக முடிவெடுத்ததும் தான் நீயும் புறப்படுவ. இப்ப எல்லாம் மிஸ்ஸாகுது. எனக்கு புரிது.. எல்லா நேரமும் ஒன்னாவே சுத்த முடியாது. ஆனா ஏத்துக்க கஷ்டமா இருக்கு.
ஏன் ஹ்ருதேஷ்… எங்கம்மா அடிக்கடி உன்னை திட்டியதால அதை கேட்டு ஹர்ட் ஆகிட்டியா?” என்று கேட்கவும், “அப்படில்லாம் இல்லைடா. எப்படியும் கல்யாணம் குழந்தைன்னு ஆனா பிரெண்ட்ஸுங்க சந்திக்கறது குறைவாகும். ஆனா ஒரு விஷயத்துல ஆண்கள் நட்பு உடையாது. எப்பவும் சேர்த்தே இருப்போம். பெண்கள் நட்பு தான் சந்திக்கற வாய்ப்பு இருக்காது. ஏன் போன்ல கூட பேச முடியாத அளவுக்கு வேலை கழுத்தை நெறிக்கும். நாம வாரம் வாரம் சந்திக்கறோம். போன்லயும் பேசறோம்‌. அப்பறம் என்னடா?” என்றான்.
அதென்னவோ நெருக்கமாய் இருப்பதாக தெரிந்தாலும் மனதால் தூரமாக மாறிய சோர்வில் இருந்தான் கௌஷிக்.

ஹ்ருதேஷுக்கு அது தெளிவாக தெரிய, காதல் செய்யும் பாட்டிற்கு கௌசிக்கிடம் இயல்பான நட்பை பாவிக்க முடியாது துடித்தான்.

அதைமீறி பேசி சரி செய்து, படிப்பு வரலை‌ ஓகே.. ஏதாவது பிசினஸ் பண்ண ஐடியா வச்சியிருக்கியா?” என்று நண்பனின் மனதை மாற்ற முயன்றான் ஹ்ருதேஷ்‌.

“ஒரு ஐடியாவும் இல்லைடா. என்னை நினைச்சா எனக்கே இரிட்டேடா இருக்கு.” என்று கௌசிக் கூறவும், “இங்க நம்ம ஏரியாவுல ஏதாவது அடிக்கடி என்ன சேல் ஆகுது. கடைங்க குறைவா இருக்கா?” என்று கேட்க, கௌசிக் யோசனை வயப்பட்டவனாக மாறினான்.

“என்னடா இப்படி யோசிக்கற?” என்று கேட்க, “அதான் சொல்லறேனே.. என்னால எதையும் யோசிக்க முடியலை. ஏதாவது செய்து சறுக்கிட்டா… அப்பா தோலை உறிச்சிடுவார். ஏழு அரியரும் க்ளியர் பண்ண முயற்சி பண்ணணும்.” என்று நடந்து வந்து பைக் பக்கம் வந்து சேர்ந்தனர்.

“பெங்களூர்ல புட் பிசினஸ் அமோகமா போகுது. பெங்களூர்னு இல்லை… இப்ப எல்லாம் எல்லா இடத்திலும், ஒரு தெருவுக்கு ஒரு உணவு விடுதி, தள்ளு வண்டி கடை, சின்னதும் பெருசுமா ஹோட்டல், இதான் பெருகுது. வீட்ல யார் சமைக்கறாங்க சமைக்கலை என்றதை தாண்டி, பாரம்பரிய உணவு, வித்தியாசமான உணவுக்கு மவுசு ஜாஸ்தி ஆகுது.

உனக்கு அதுல இன்ட்ரஸ்ட் இருந்தா சொல்லு. நான் ஐந்து லட்சத்துக்கு பணம் ரெடி பண்ணறேன். நீ சரியான இடத்தையும் உழைப்பையும் போடு. செட்டாகுதானு பார்த்திடலாம்.” என்று கூற, கௌசிக்கோ “அவ்ளோ காசு வச்சி ஆரம்பிச்சிட்டு ஏதாவது சரியா போகலைனா தப்பாகிடும்டா. அப்பா வேற கடனை வச்சிட்டியானு திட்டுவார்.” என்று மறுத்தான்.

ஹ்ருதேஷோ “ஏன்டா… ஆட்டத்துக்கும் வரமாட்டேன். ஆனா விளையாடணும்னா எப்படி? நாளைக்கு எப்படியாவது தெரிந்தவங்களிடம் பணத்தை புரட்டறேன். அது என்பாடு. நீ இடமும் செய்ய மனதைரியமும் வை. இப்ப கிளம்பு” என்று அனுப்ப, கௌசிக்கும் நண்பன் பேச்சை கேட்டு கிளம்பினான்.

கௌசிக்கும் வீட்டில் தீபாவிடமும் செல்வராகவனிடமும் பகிர்ந்தான்.

தீபாவோ “ம்கூம்.. ஐந்து லட்சம் நாளைக்கே நீட்டப்போறான். நீ பிசினஸ் பண்ண போறியா. அந்த அரியரை பார்க்க என்னவாம்.” என்று எப்பவும் போல பேசிவிட்டு கடந்தார்.

செல்வராகவனோ “ஏன்டா… உங்கம்மா சொன்ன மாதிரி அரியரை க்ளியர் பண்ணிட்டு அவனை போல வேலைக்கு போக என்ன கேடு?” என்று திட்டி அகன்றார்.

‘படிப்பு தான் வரலையே. அதையே சொன்னா… அரியர் வேண்டுமின்னா கஷ்டப்பட்டு க்ளியர் பண்ணலாம். அவ்ளோ தான்.” என்று எரிச்சலில் சுழன்றான்.

இங்கு பேசிவிட்டு சென்றதும் மிதிலாவிடம் பகிர, ‘எங்க நிலமே இருக்கு ஹ்ருத். அந்த பிரைவேட் ஸ்கூலு இருக்கே.., பஞ்சாயத்து ஆபிஸூ பக்கத்துல.. பஸ் ஸ்டாப் கூட இருக்குமே. அங்க கூட முள்ளு செடியா வளர்ந்து இருக்கும். அதெல்லாம் சரிப்பண்ணி ஆரம்பிச்சா கூட சரிவரும்.” என்று கூற, ஹ்ருதேஷ் கேட்டுக் கொண்டு போனை துண்டித்தான்.

அதன்பின் அடுத்த நாள் ஞாயிறு தனது தங்க அரைஞான் கயிற்றையும், தங்க செயினையும் விற்று பணம் புரட்டி, பெற்றவர்களுக்கு தெரியாமல், ஏன் கௌசிக்கிற்கு கூட பணம் வந்த விவரம் கூறாமல் பணத்தை தந்துவிட்டு, அவனது நிலத்தை நினைவுப்படுத்தி, அந்த முள்ளுசெடியை புல்டவுசர் வச்சி சமப்படுத்தி, சுத்தி சுவரை எழுப்பி, மேல சிமெண்ட் ஷீட் போட்டு, இந்தா… இந்த டிசைன்ல கட்டி முடி. அதுக்கான செலவுக்கு காசு.
இதை முடிச்சிட்டு கடையை திற. உன் உழைப்பை இதுல ஆரம்பி.” என்று பணத்தை தந்துவிட்டு, அந்த இடத்தில் கட்டுவதற்கான பிளானையும் கூறினான்.

“பணம் எப்படிடா கிடைச்சது. எனக்கு பிசினஸ் செட்டாகலைன்னா?” என்று தயக்கமாகவே கேட்க, “செய்டா.. ஹ்ருதேஷ் சொன்னதுக்காகவே ட்ரை பண்ணுவோம்னு முயற்சி பண்ணு. நான் இப்ப ஊருக்கு போறேன். அடுத்த வாரம் வர்றப்ப வேலை ஆரம்பிச்சி நடந்துட்டு இருக்கணும்” என்று கூறினான். வீட்டிற்கு வந்து தான் இதை பற்றி பேச, செல்வராகவன் தீபா இருவருமே, ஒருவருக்கொருவர் மாற்றி பார்த்து, கௌசிக்கை பார்வையிட, அவனும் தாய் தந்தையை பார்க்க, “நம்ம நிலம் இருக்கு. ஹ்ருதேஷ் பணம் தந்திருக்கான். எதுக்கும் முயற்சி பண்ணுவோம்.” என்று நம்பிக்கை ஊட்டினார். மகனால் எதுவும் முயன்று தோற்றால் அங்கே இரண்டு கடையை விட்டு வாடகை விடவும் நினைத்தார். அவர் ஒருபுறம் சறுக்கினால் முட்டுக்கொடுக்க ஒரு திட்டம் வைத்திருக்க கௌசிக் தனக்கான முன்னேற்றத்தை ஆரம்பித்தான்.

ஹ்ருதேஷோ அப்படியே பெங்களூர் பயணம் மேற்க்கொள்ள, கௌசிக் தனக்கான பாதைக்கு பிள்ளையார் சுழியை போட்டான்.

சும்மா இருக்கும் மனம் சாத்தானை போல எதையாவது சொல்லிக் கொண்டேயிருந்தது. இன்று கௌசிக்கிற்கு பல பொறுப்பை ஏற்றி வைத்துவிட்டு ஹ்ருதேஷ் சென்றதும், மிகவும் கவனமாய் அதில் தன் பங்களிப்பை செலுத்தினான்.‌

மிதிலாவுடன் அடுத்த சந்திப்பில் அதை பற்றி கூறாமல் இருந்தவனை, “கௌசிக்கு பணம் தந்தியாம். ஏது பணம்?” என்று கேட்க, அன்னை தந்தையிடம் கூட கூறாதவன், மிதிலாவிடம் நகை விற்றதை தெரிவித்தான்.‌

“எருமை எருமை… தங்கம் விற்கற விலைக்கு வித்துட்டதா சொல்லற. உங்கம்மாவுக்கு தெரிந்தா அவ்ளோ தான். அதுவும் குழந்தையா இருக்கறப்ப போட்ட தங்க அரைஞான் கயிறுனு சொல்லற. ஏதாவது மெமரிஸுக்கு வச்சியிருப்பாங்க. என்னைக்கு விஷயம் தெரியுதோ ஹ்ருதேஷ் பையா… நீ காலிடி. அதோட உன் பிரெண்ட் இதை வச்சி பிழைப்பானா என்பது டவுட் தான்.” என்று அச்சுறுத்தினாள்.

ஹ்ருதேஷோ, “உன் வேலையை பாரு. எனக்கு என் பிரெண்டுக்கு என்ன செய்யணும்னு தெரியும். அவனுக்கு மத்தவங்க பணம் தந்து சொல்லியிருந்தா நீ சொன்னது நடக்கலாம். பணம் தந்து சொல்லிட்டு வந்தது நான். என் பிரெண்ட் முன்னேறி வருவான். நீ என்னை பையா கிய்யானு சொன்ன.. பல்லை தட்டிடுவேன். போடி.” என்று எரிந்து விழுந்தான்.

மிதிலாவோ “பார்டா… பிரெண்டை பத்தி சொன்னா பொசுக்குனு கோபம் வருது.” என்று அவன் கையை தன் கையோடு இணைக்க, உரசல்கள் இயல்பாக நிகழ்ந்தது.

அதெல்லாம் தற்போது இலகுவாக தான் இருவரும் எடுத்துக் கொண்டார்கள். மனதிற்குள் மட்டும் பரவசத்தையும், வெளியே இயல்பாக காட்டிக் கொண்டு காதல் பறவைகள் பறந்தது.

-தொடரும்.

பிரவீணா தங்கராஜ்

1 thought on “நின் பிரேமம் என் சிநேகம்-9”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top