meta-google-adsense-platform-account: ca-host-pub-2644536267352236 meta-google-adsense-platform-domain: sitekit.withgoogle.com

நின் பிரேமம் என் சிநேகம்-7

அத்தியாயம்-7

  அலைப்பேசி மட்டும் இல்லாமல் போனால் இந்த காதல் செய்பவர்களுக்கு பைத்தியம் பிடித்திடும். ஆனால் அலைப்பேசியால் தான் பல காதல் பைத்தியங்கள் தங்கள் காதலை வளர்த்துக் கொண்டு திரிகின்றனர். அதில் புதிதாக ஹ்ருத் சேர்ந்துவிட்டான். 

   பேருந்து ஏறும் பொழுது பேச ஆரம்பித்து, நடுவில் மிதிலா அவளது படிப்பிற்காக அரை மணி நேரம் தலைக்காட்டினாள்.

பின்பு மீண்டும் அலைப்பேசியில் பேச ஆரம்பித்தது, இதோ பெங்களூர் மண்ணை மிதிக்கவும், படியில் கால் வைத்து இறங்கியவனை, மிதிலா ஓடிவந்து கட்டி அணைத்துக் கொண்டாள்.

ஹ்ருதேஷ் தான் பதட்டமாக மாறி “மிதிலா என்ன‌ பண்ணற?” என்று பயந்து சுற்றிமுற்றி ஆட்களை கவனித்தான்.

அவரவர் ஆளாளுக்கு இறங்கி தங்கள் வேலையை பார்வையிடவும், தங்களை உற்று கவனித்து பேசிட அங்கே யாருமில்லை.

  “பயப்படாத மேன்… இங்க யாரும் நம்மளையே பார்த்து வீட்ல போட்டு தர விலாசம் தேட மாட்டாங்க. ஜாலியா எந்த பயமும் இல்லாம வா” என்று லக்கேஜை தூக்கி, வாடகை காரை பிடித்தாள்.

     முட்டி வரை கொண்ட மிடியும் டீஷர்டும் அணிந்து வந்தவளை மேலிருந்து கீழ்வரை பார்வையிட்டு, “அநியாயத்துக்கு மாறியிருக்க, அங்க உங்க அண்ணா டீஷர்ட், ஃபுல்-ஸ்கர்ட் இல்லைன்னா சுடிதார்னு போடுவ. இதென்ன முட்டிவரை ஸ்கர்ட்?” என்றான்.

மிதிலாவோ “மினி ஸ்கர்ட் போட ஆசை தான். ஆனா இரத்தத்தில் கலந்த நம்ம கல்ச்சர். முட்டிக்கு மேல போட மனசு வரலைப்பா.” என்றாள்.

  பேஷன் டிசைனிங் படிக்க வந்துட்டு, இதுக்கூட இல்லாமல் எப்படியென்று விட்டவன், சாலையோரத்தில் கடந்து சென்றவர்களை வேடித்கை பார்த்தான்.

பெரும்பாலும் மினி ஸ்கர்ட், டெனிம் ஜீன்ஸ், ஸ்லீவ்லஸ், கிளிவேஜ் உடைகளாக பெண்கள் அணிந்திருப்பதில் ஹ்ருதேஷ் காண கண்கள் தெறித்தது.

  மெதுவாக மிதிலாவை பார்வையிட, அவளோ கண்கள் கூர்மையிட்டு, ‘என்ன மேன் பார்க்கற?’ என்ற ரீதியில் லேசான கோபத்தில் பார்வையிட்டாள்.

“பெங்களூரில் டிரஸிங் தாராளம்னு கோள்விப்பட்டிருக்கேன். முதல் முறை நேர்ல பார்க்கறேன். கொஞ்சம் நாடு போற நிலையை பார்த்தா பயமா தான் இருக்கு” என்றவன் டிரைவர் இருக்க, அச்சோ… சத்தமா பேசறேனோ? பட்டிக்காட்டான்னு நினைச்சிட போறான்.’ என்று கிசுகிசுக்க, “டிரைவருக்கு தமிழ் தெரியாதுடா” என்று உரிமையாக ஆரம்பித்தவள், “பார்க்கறதோட நிறுத்திக்கோ ஹ்ருத். எவளையாவது உத்து உத்து பார்த்த, பேஷன் டிசைனிங்குனு பெரிய கத்திரிக்கோல் வச்சியிருக்கேன். கண்ணை குத்திடுவேன் குத்தி” என்று கூற, ஹ்ருதேஷ் புன்னகைத்தான்.

  அவளது பொறாமை ஹ்ருதேஷிற்கு மகிழ்ச்சியை தருவித்தது.

   டிரைவருக்கு தமிழ் புரியாததால் அவர்கள் சரளமாக பேசியபடி வந்தார்கள்.

இறங்க வேண்டிய இடம் வந்ததும், ஹ்ருதேஷ் வாலெட்டை எடுக்க, அதற்கு முன் மிதிலா பணத்தை தந்து சிரித்தாள்.

“எனக்கு நான் தந்துப்பேன் மிதிலா இனி இப்படி செய்யாத.” என்று கட்டளையிட்டான்.‌

  அப்பார்ட்மெண்ட் கொண்ட வீடு. அதில் சிங்கிள் பெட்ரூம் பார்த்து வைத்திருக்க, கதவை திறந்தாள்.

   “வீடெல்லாம் நல்லா தான் பார்த்திருக்க, குட் சாயிஸ்” என்று லக்கேஜை வைத்துவிட்டு சுற்ற, அங்கிருந்த சோபாவில் சாய்ந்து ‘யாயா’ என்ற தோரணையில் மிதிலா ஹ்ருதேஷை பார்வையிட்டாள்.

    ஹால், கிச்சன், ஒரு படுக்கையறை, அதிலேயே அட்டாச் பாத்ரூம் பால்கனி இருந்தது. கிட்டதட்ட கணவன் மனைவி கூட வாழ வசதியாக இருக்கும் வீடாக தான் தெரிந்தது.

   ஹ்ருதேஷ் சுற்றி பார்த்து பால்கனியை வளைவை பிடித்து சாலையை நோட்டமிட, மிதிலா பூனை போல வந்து சேர்ந்தாள். ஹ்ருதேஷின் கை வளைவுக்குள் தன்னை புகுத்தி நிற்கவும், பால்கனி பிடியை நழுவவிட்டு கையை இழுத்துக்கொள்ள முயன்றான் ஹ்ருதேஷ்.

மிதிலாவோ, அவன் பால்கனி பிடியை எடுக்கவும், அவன் கையை தன் இடையை வளைக்கும் விதமாக கோர்க்க, “மிதிலா… என்ன பண்ணற.” என்று தள்ளி நகர முயல, “போயா… எனக்கு எத்தனை முறை கனவுல வந்து இப்படி சில்மிஷம் பண்ணின. நீ நான் தனியா இருக்கோம். உன்னை கட்டிக்கணும்” என்று அவன் நெஞ்சில் முகம் புதைத்து நின்றாள்.

ஹ்ருதேஷுக்கு இந்த அணைப்பு புதிதாக, அவளை மெதுவாக அணைக்க முயன்றான்.

சரியாக கௌசிக் போன் கால் வந்து தடுத்தது. “கௌசிக் கால் பண்ணறான்” என்று அவளை விட்டு தள்ளி நின்றான்.

“ஸப்பா” என்று மிதிலா நகர்ந்தவள் கூற, “ஹ்ருதேஷ்…. அங்க ரீச் ஆகிட்டியா?” என்று கௌசிக் கேட்டதும் ஆமென்று கூறினான்.

“சூப்பர் மச்சி… வீடெல்லாம் யாரோ பார்த்து வச்சதா சொன்ன. வீடு செட்டாகிடுச்சா? வீடியோ கால் பண்ணவா?” என்று ஆசையாக கேட்டான்.

ஹ்ருதேஷ் பதறிக்கொண்டு, “இல்லை மச்சான்.. வீட்ல இன்னும் திங்க்ஸ் எல்லாம் செட் பண்ணிட்டு நானே கால் பண்ணறேன். இப்ப வைக்கவா?” என்று அணைக்க துடித்தான்.

மிதிலா இருக்கும் நேரம் கௌசிக் உடன் பேசுவது ஹ்ருதேஷுக்கு சங்கடமாய் இருந்தது.

  “ம்ம்ம். சரிடா.” என்று கௌசிக் துண்டித்துவிட்டு, அமைதியாக மாறினான்.

   “அம்மா… மிதிலாவுக்கு ஏதாவது கொடுக்க மறந்து போயிருந்தா சொல்லு. நான் போய் கொடுத்துட்டு வர்றேன்.” என்று அவனாக கேட்டான்.
தீபாவோ “ஆஹ்ஆ.. உன் பிரெண்டை பார்க்க இதுவொரு சாக்காடா. அவன் போனதும் தான் எனக்கு நிம்மதியா இருக்கு. எப்ப பாரு.. அவன் பின்னால நாய்குட்டி மாதிரி திரியற. உனக்குனு ஒரு வேலையை தேடு.” என்று திட்டி தீர்க்கவும், கௌசிக் மேலும் உடைந்தான். கூடுதலாக “நீங்க எப்ப பாரு அவன் வர்றப்ப திட்டிட்டே இருந்திங்க. அதான் அவன் என்னை விட்டு தள்ளி போயிட்டான்.” என்று கத்திவிட்டு குளத்தங்கரை சென்றான்.‌

இங்கு ஹ்ருதேஷை உடைகளை அங்கிருந்த கப்போர்டில் அடுக்கிய மிதிலாவோ “ஹ்ருத்.. வெளியே போய் சாப்பிடலாமா? ஆர்டர் பண்ணிடவா?” என்று கேட்க, “வந்ததும் ஊர்சுத்த முடியலை‌. அதுவும் கௌசிக்கிடம் பொய் சொன்னது, இப்ப பிரிந்தது ஒரு மாதிரி இருக்கு. நீ ஆர்டர் பண்ணிடு. நான் குளிச்சிட்டு வந்துடறேன். நீ வெளியே போ” என்று அறையிலிருந்து விரட்டினான்.

“ஓகே ஓகே… கௌசிக் புராணமா பாடாத. நான் வெளியே வெயிட் பண்ணறேன்” என்று சென்றாள்.

  ஹ்ருதேஷிற்கு மிதிலாவுடன் இங்கே இருப்பது, ஒருவிதமான சங்கடம் தந்தாலும், அவன் மனதிடம் ஏதேதோ சமாதானம் செய்துக் கொண்டான்.

   குளித்து முடித்து பசியோடு வந்தவனை சரியாக செல்வராணி போனில் அழைத்துவிட்டார்.

“போய் சேர்ந்துட்டா ஒரு போன் பண்ணக்கூடாதுடா.” என்று ஆரம்பிக்கவும், “ம்ம் வந்து குளிச்சிட்டு சாப்பாடு ஆர்டர் தந்துட்டு உட்காருறேன். போன் பண்ணிட்டிங்க.” என்றான்.

“ம்கூம்… அங்க பஸ்ல இருந்து கீழயிறங்கியதும் போன் பண்ண சொன்னது. உனக்கென்ன… கல்யாண பேச்சை எடுத்ததும் ஜாலியா கிளம்பிட்ட. ஏன்டா… கல்யாணம் பண்ணிட்டு அங்க போயிருந்தா, இந்நேரம் பொண்டாட்டி கையால பரிமாறி ருசியா சாப்பிடலாம்ல, எனக்கு மனசுல அந்த குறையிருக்கு” என்று பேசவும், இங்கே மிதிலா சத்தமில்லாமல் ஹ்ருதேஷிற்கு பரிமாறினாள்.

அன்னை பேசியதையும் மிதிலா பரிமாற செய்வதையும் கண்டு மென்னகையுடன், “அதெல்லாம் எந்த குறையும் இல்லாம பேஷா இருக்கேன். நீங்க ஏன் கஷ்டப்படறிங்க.” என்று சிரித்தான்.

“என்னவோ போ… இங்கிருந்தவரை கௌசிக் கூட சுத்தின. அங்க புதுசா யாரிடமும் பழகாத. ஜாக்கிரதையா இருடா” என்று கூற மிதிலா உணவை ஊட்டி விடவும், “சரிம்மா சரிம்மா வைம்மா” என்று துண்டித்தான்.

“நீயும் சாப்பிடு” என்று அமரவைத்தவன் அவளது கையை பிடித்திட, உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது மிதிலாவுக்கு.

    ஹ்ருதேஷிற்கு அவளை தீண்டும் போது, அவன் இதயமும் புது இரத்தம் பாய துவங்க, அவளை ஏறிட்டான். உடலெங்கும் மயிர் கூச்சம் பெற்றவளை கண்டு, தனது தீண்டல் அவள் இதயத்தையும்  பாதிக்கின்றதை உணர்ந்தவன், இனி கவனமாக தீண்டலை தவிர்க்க நினைத்தான்.

  சாப்பிட்டு முடித்ததும், கொஞ்ச நேரம் “நீ என் காதலை எப்படியெல்லாம் அவாய்ட் பண்ணிட்ட ஹ்ருத். உனக்கு நினைவுயிருக்கா… நான் ஸ்கூல் படிக்கறப்ப லெட்டர் எழுதி வந்து உன்கிட்ட நீட்டினேன். நீ என்ன நினைச்ச, யாரோ ஒரு பொண்ணு உனக்கு என்னிடம் தந்து தூது விட்டதா நினைச்சி அந்த லெட்டரை வாசித்த. கடைசியா லெட்டரை என் கண் முன்ன வாசித்து, ‘யார் தந்தா மிதிலா’னு நீ கேட்டப்ப, ‘நான் தான் எழுதினேன். எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. லவ் யூ ஹ்ருத்னு’ சொல்லி சிரிச்சேன்.
  நீங்க அக்கம் பக்கம் பார்த்து, பேப்பரை கிழிச்சி, என் முகத்திலயே வீசியெறிஞ்சிட்டு ‘உங்கண்ணாவும் நானும் பிரெண்ட். என்னை நீ அண்ணாவா பார்க்கணும். எனக்கே லவ் லெட்டரை நீட்டற. கௌசிக்கிடம் சொல்லவா?’ மிரட்டினிங்க” என்றாள்.

ஹ்ருதேஷ் அந்த நாட்களை எண்ணி பார்த்து சிறு புன்னகை வீசி, “ஆமா… அப்படியே மிரட்டவும் பயந்துட்டியா நீ? ‘எங்கண்ணாவிடம் சொன்னா சொல்லிக்குங்க. நான் உங்களை லவ் பண்ணறேன். என் விருப்பத்தை சொன்னேன். இதுல என்ன தப்பு’னு என்னை மடக்கி கேட்டியே… அன்னிக்கு எல்லாம், ‘என்னடா இது இப்படி இருக்கா?’னு நான் தான் மிரண்டுட்டேன்.
  அதுக்கு பிறகு எல்லாம் உங்க வீட்டுக்கே வர தயங்கினேன் தெரியுமா? நீ காலேஜ் படிக்க போனதும் தான் நிம்மதியா கௌசிக்கை பார்க்க திரும்ப உங்க வீட்டுக்கே அடியெடுத்து வச்சேன்.
  அப்ப கூட, உங்க வீட்ல அங்கங்க உன் போட்டோ பார்த்து, பள்ளிக்கூடம் முடிக்கறதுக்கு முன்ன என்ன வாயு இதுக்கு?’னு உன் போட்டோ பார்த்துட்டு திட்ட தான் தோண்றும். உங்கம்மா தான் அய்யோ என் பொண்ணு தனியா படிக்க பெங்களூர் போயிட்டாளேனு சதா புலம்புவாங்க. கௌசிக் கூட ‘நான் எல்லாம் தனியா அம்மா அப்பாவை விட்டு பிரிய மாட்டேன்டா. இவளை பார்றேன் என் கனவு பேஷன் டிசைனரா ஆகணும்னு, நாங்க என்ன சொல்லியும் கேட்காம பறந்துட்டா’னு அதிசயமா சொல்வான்.
  உன் தங்கை தானே… ஊரே விலைக்கு வித்துடுவானு வாய் வரை வார்த்தை வரும்” என்று சிரிக்க, அவன் புஜத்தில் இரண்டு மூன்று அடியை பரிசாக வழங்கினாள் மிதிலா.

  மிதிலா தோழிகள் அடிக்கடி அழைப்பு தொடுக்கவும், “ஓகே… நீ கிளம்பு. எனக்காக வந்து இவ்ளோ நேரம் இருந்துட்ட. உன் படிப்பையும் பாரு.” என்று அனுப்ப முயன்றான்.

“ஹ்ருத்… இங்கிருந்து என் காலேஜிக்கு நாற்பத்தி ஐந்து நிமிஷம் ஆகும். அதுலயிருந்து டென் மினிட்ஸ் கூடுதலா நேரம் ஒதுக்கினா, பக்கத்துல ஹாஸ்டல்… உனக்கு என்னை பார்க்கணும்னா நீ தாராளமா காலேஜ் பக்கம் வரலாம்.” என்று கூறினாள்.

“ம்ம்ம்.” என்று வாசல் வரை வந்தான். மிதிலாவுக்கு அவனை விட்டு செல்ல மனம் வரவில்லை. சோழியை போல கண்களை சுழட்டி, வாசலை சுற்றி நோட்டமிட்டு, சட்டென ஹ்ருதேஷ் நெஞ்சில் சாய்ந்து கட்டி கொண்டு, “ஐ லவ் யூ ஹ்ருத்” என்றாள்.

  அவனோ திகைத்து அவளை போலவே அக்கம் பக்கம் யாராவது இருக்கின்றனரா என்று கவனித்து, “மீ டு மிதிலா” என்றவன் அணைப்பை இறுக்கினான்.

அவள் பஞ்சு மேனி அவன் நெஞ்சில் உரச, சட்டென விலகினான்.

  “கிளம்பு” என்று வார்த்தையில் அதட்டல் தோணிக்க, ஹ்ருத்தை கண்டு புன்னகையோடு மிதிலா கிளம்பினாள். 

   ஹ்ருதேஷோ கதவை தாழிட்டு, அறைக்குள் வந்து அங்கிருந்த கண்ணாடியில், தன்னை பார்த்து ‘மிதிலா நெருங்கினாலே என் ஹார்ட்பீட் ஓவரா துடிக்கு.’ என்று வெட்கம் கொண்டான்.

கண்ணாடியோ அவன் வெட்கத்தை பிரதிபலித்தது. ஆனால் பின்னால் நடக்க போகும் விபரீதத்தை காட்டும் மாயக்கண்ணாடி இது இல்லையே. அதனால் பொருத்திருந்து இவர்கள் காதல் விளையாட்டை காண நினைத்தது.

-தொடரும்.

பிரவீணா தங்கராஜ்

1 thought on “நின் பிரேமம் என் சிநேகம்-7”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top