meta-google-adsense-platform-account: ca-host-pub-2644536267352236 meta-google-adsense-platform-domain: sitekit.withgoogle.com

நின் பிரேமம் என் சிநேகம்-6

அத்தியாயம்-6

  காதல் மிகவும் இனிமையானது, சுகமானது, சந்தோஷத்திற்குரியது, மனதிற்கு நெருக்கமானது, தரையில் கால் இருந்தும் வானில் பறக்கும் உணர்வை தருவது, தனக்கென யாருமில்லை என்றாலும், உலகமே தனக்கு கிடைத்ததாக மாயத்தை உருவாக்குவது, ஏன் புது உலகில் நடமாட வைப்பது, மனம் இலகுவாக மாற்றுவது, பல்வேறு ஏக்கத்தை மயக்கத்தை புத்திக்குள் ஏற்றி, இதயத்தை நேசித்தவளுக்கு மொத்தமாய் தந்து விடுவது எல்லாம் ஆனந்தமல்ல, பேரானந்தம் என்று ஹ்ருதேஷ் சமீபகாலமாக எண்ணியெண்ணி மகிழ்கின்றான்.
  
   பெற்றவர்களிடம் கூட இரண்டு நாள் முகம் தூக்கி வைத்திருந்தவன், மூன்றாம் நாள் பேசிவிட்டு இயல்பாகிவிட்டான். அவர்களுமே ஹ்ருதேஷிற்கு ஒரு வேலையை அவனே தேடியப்பிறகு கல்யாணத்தை பேசாவோமென விட்டுவிட்டார்கள். அப்படியும் சொல்ல முடியாது, வீடு தேடி வந்த வரனில், பெண் இவன் நிறத்திற்கு சற்று குறைவாக இருந்தார்கள். முதலில் வசதி வாய்ப்பிற்காக ஆசைப்பட்ட ராஜலிங்கம், மகனுக்கு அழகான பெண்ணாக அமைந்தால் மறுக்க மாட்டான் என்று எண்ணிவிட்டதால் நிறமான பெண்ணை தேடி நிராகரித்தார். அதனால் மீண்டும் கல்யாண குழப்பம் தற்சமயம் தவிர்க்கப்பட்டது.

    இதோ அதோவென்று கண்ணாம்பூச்சி ஆடிய வேலைக்கான முடிவு அன்று வந்தது.

   ஹ்ருதேஷ் மெயிலில் அப்பாயின்மெண்ட் லெட்டர். போஸ்டிங் பெங்களூர் என்று வரவும், ஹ்ருதேஷிற்கு தலைகால் புரியவில்லை.
  காதலி அருகே செல்வதற்கு காலம் அதுவாக வாய்ப்பை நல்கியதில் அவனுக்கு அத்தனை சந்தோஷம்‌ இருக்காதா?!

  வீட்டில் தாய் தந்தையிடம் கூட உரைக்காதவன் முதலில் கௌசிக்கிற்கு அழைத்து விவரத்தை கூறினான்.

”மச்சி இன்டர்வியூ போனதுக்கு ரிசல்ட் வந்துடுச்சுடா. சென்னை சேலம் பெங்களுர் கோவை இந்த நாலு இடத்துல ஏதாவது போஸ்டிங் வரும்னு நினைச்சேன். பெங்களுர்ல போஸ்டிங் போட்டிருக்காங்கடா.” என்று துள்ளி குதிக்காத குறை.

   “ஏன்டா.. சேலத்துலயே கிடைச்சா சந்தோஷமா இருக்கும்னு சொன்ன. இப்ப பெங்களூர் என்றாலும் ஹாப்பியா துள்ளற. என்னை விட்டு போறதுக்கு பீல் ஆகலையா ஹ்ருதேஷ்?” என்று கௌசிக் கேட்டதும் தான், நண்பனை காண்பது இனி குறைந்திடும் என்பதே புத்திக்கு உரைத்தது.

கௌசிக் இங்கே வருந்தி உரைத்திட, தீபாவோ “ஏன்டா… நீயும் படிச்சி உத்தியோகத்துக்கு போகாம சுத்தற. அவனுக்காவது வேலை அமைஞ்சதே சந்தோஷப்படுடா. உன்னையே எத்தனை காலத்துக்கு பார்த்துட்டு இருப்பான். ஹ்ருதேஷுக்கு வரன் தேடறாங்க அவன் இங்கயே இருந்து என்ன பண்ண போறான். 
  அடுத்து நீயும் அரியரை க்ளியர் பண்ணிட்டு வேலையை தேடு” என்று கூறவும் கௌசிக் “சாரி மச்சி. சந்தோஷமான விஷயம். உன்னை பிரிய நேருமோனு செல்பிஷ்ஷா பேசிட்டேன்.” என்று மன்னிப்பு வேண்டினான் கௌசிக்.

ஹ்ருதேஷோ “மச்சி… ஆன்ட்டி சொல்லற மாதிரி அரியர் க்ளியர் பண்ணிட்டு வேலை தேடுடா. உன்னை பிரியறது எனக்கு கஷ்டம் தான். ஆனா அம்மா அப்பா கல்யாணம் பேசவும், இங்கிருந்து எஸ்கேப் ஆக இந்த சந்தர்ப்பம் அமையவும் ஹாப்பியா இருந்துட்டேன். ரியலி உன்னை மிஸ் பண்ணுவேன்.” என்றான் உண்மையான பாசத்துடன்.
கௌசிக்கோ “சரி சரி ட்ரீட் எப்ப மச்சி?” என்று பேச்சை மாற்ற, “நீ ஓகே சொன்னா அடுத்த நிமிஷம்டா” என்று ஆனந்தமாக பகிர்ந்துவிட்டு பேசி துண்டித்தார்.

   அடுத்து மிதிலாவுக்கு தான் அழைத்தான் ஹ்ருதேஷ்.

“ஏய்.. மிதிலா.. ஒரு ஹாப்பி நியூஸ். எனக்கு வேலை கிடைச்சிடுச்சு. அதுவும் பெங்களூர்ல” என்று கூறியதும், “வாவ்.. சூப்பர் ஹ்ருத்… நிஜமாவே இது எனக்கு இரட்டை சந்தோஷம் தெரியுமா? ஆனா.. உங்க வீட்ல கல்யாணப்பேச்சை திரும்ப ஆரம்பிச்சிடுவாங்களா?” என்று பயந்து கேட்டாள்.

  பத்து நாட்களாக கல்யாண பேச்சில் காதலிப்பதாக ஹ்ருதேஷ் உரைத்தாலும், அவன் பெற்றோரின் பேச்சில் எரிச்சலாகி, எங்கே ஹ்ருதேஷுக்கு மீண்டும் கல்யாண பேச்சை ஆரம்பித்துவிடுவார்களோ என்ற பயமும் ஓட்டிக் கொண்டது.

  “எம்மா தாயே… உன்னிடம் காதலிப்பதை சொல்லறதுக்கு முன்னயே அவங்களிடம் மேரேஜ் வேண்டாம்னு சொன்னவன் நான். அப்படியிருக்க… இப்ப உன்னிடம் லவ்வை சொல்லிட்டேன். நமக்காக பேச மாட்டேனா. அதெல்லாம் பார்த்துப்பேன்.” என்று எந்த இடத்தில் அலுவலகம் உள்ளதென்று அவளிடம் சொல்லி, அவளது இருப்பிடமும் கேட்டுக் கொண்டான்.

  அதன்பின் அன்னையிடம் வேலையை பற்றி கூறினான்.

“ஏன்டா.. இரண்டு வாரத்துக்கு முன்ன வேலை கிடைச்சிருக்க கூடாது. அறுபது சவரன் நகைப்போட்டு வந்த வரன் கை நழுவி போச்சே. நாலு நாள் முன்ன தான் அந்த பொண்ணை பொண்ணு பார்த்து பேசி முடிச்சிட்டாங்க.
  முதல்லயே இந்த வேலை கிடைச்சா என்னவாம்” என்று செல்வராணி அலுத்துக் கொண்டார்.‌

ராஜலிங்கம் மட்டும் ஹ்ருதேஷ் வாங்கி வந்த இனிப்பை எடுத்து சாப்பிட்டார்.

அவனும் தந்தையிடம் பேசாமல் நழுவினான். எங்கே பேச ஆரம்பித்தால் திரும்ப ஏதாவது கல்யாணம் என்று காதை புண்ணாக்கிவிட்டால்?

   ஹ்ருதேஷ் மிக கவனமாய் தந்தையை கையாண்டான்.

   முன்பு எப்படியோ இனி பார்த்து காய் நகர்த்த வேண்டும். இங்கிருந்து பெங்களூர் சென்று விட்டால், கொஞ்ச நாட்களுக்கு தன்னை கல்யாணத்திற்கு தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்று அடுத்து புறப்பட தயாரானான்.‌

  இன்னும் நான்கு நாட்களில் பணியில் சேர்வதற்கு கூறியிருக்க, செல்வதற்கு இடத்தை தேட முயன்றான்.‌

     அவனுக்கு பெங்களூரில் யாரையும் தெரியாது. ஆனால் மிதிலா நட்பில் சொல்லி வைத்து, ஆண் நண்பன் ஒருவனால் தனியறை கிடைத்தது.
 
  அதற்கு கூட ஹ்ருதேஷ், ‘கேடி, வீடு பார்த்து தர்ற அளவுக்கு பிரெண்ட்ஷிப் இருக்காங்களா உனக்கு? பயங்கர ஆளா இருக்க?” என்று பாராட்டினான்.

  “ம்கூம்..‌. இங்க வந்தப்ப ஒன்னும் தெரியாத தத்தியா இருந்தேன். அப்பறம் எது சரி எது தப்புனு தெரியவும், எப்பவும் போல வாயாட ஆரம்பிச்சாச்சு. நிறைய பிரெண்ட் கிடைச்சிட்டாங்க. இதுல இரண்டு மூனு தடிமாடுங்க இருக்கு. நான் எது கேட்டாலும் அலாவுதீன் பூதம் மாதிரி சொடக்கு போட்டதும் செய்யும்.
  இந்த வீடும் அப்படி தான். சட்டுனு இன்பார்ம் பண்ணிட்டாங்க. ஆக்சுவலி எங்கண்ணாவோட  பிரெண்ட்னு சொல்லி தான் கேட்டேன். என் லவ்வருக்குடானு சொன்னா அம்புட்டு அலாவுதீன் பூதமும் ஜீபூம்பானு காணாம போயிடுவானுங்க” என்று சிரித்தாள்.

ஹ்ருதேஷிடம் சில மௌனம் எட்டிப்பார்க்க, “ஹ்ருத்… என்னாச்சு சைலண்ட் ஆகிட்ட சந்தேகப்படறியா?” என்று கேட்டாள்.

“இல்லை.. உன் பின்னால சுத்தறவங்களை விட்டுட்டு என்னை ஏன்டி லவ் பண்ணின? என்‌மனசுலயும் ஆசை வளர்த்துட்ட. கௌசிக்கு தெரிந்தா அவன் எப்படி எடுத்துப்பான்னு தெரியலை.” என்று சோர்வடைந்தான். கௌசிக் என்றால் தானாக மனம் காதலித்தது தவறென்றே சொல்கின்றதே‌.

“அட லூசு ஹ்ருத். யாருக்கு யார் மேல காதல் வருதோ அவங்களிடம் தான் காதலை சொல்ல முடியும். எனக்கு உன் மேல வந்துடுச்சு. லவ் சொல்லிட்டேன். இங்கிருக்கறவங்களுக்கு நான் கமிட்மெண்ட் என்று தெரிந்தாலே ஒதுங்கிடுவாங்க. இதெல்லாம் பெரிய விஷயமா? 
  இத்தனை வருஷம் லவ்வை அக்சப்ட் பண்ணாத நீ… என் காதலுக்கு தலையாட்டிட்ட. இது எவ்ளோ ஹாப்பி…
  எங்கண்ணாவோட பெஸ்ட் பிரெண்ட் நீ. உன்னை அவனுக்கு அவ்ளோ பிடிக்கும். உன்னை தான் லவ் பண்ணுவதா சொன்னா மச்சினு கட்டிப்பிடிக்க மாட்டான். அதெல்லாம் பிரச்சனை வராது ஹ்ருத். கண்டதை யோசிக்காத. பெங்களூர் வந்தப்பிறகு பேசுவோம்” என்று முத்தம் வைத்து அணைத்தாள்.

இங்கு பேசிவிட்டு பெங்களூர் செல்வதற்கு தேவையானவை சில மட்டும் வாங்கினான்.
   அதற்கெல்லாம் கௌசிக் தான் கூடவே வந்தான்.
”மச்சி… உனக்கு பீல் ஆகலையா? என்னை விட்டுட்டு போறதுக்கு?” என்று முகம் தூக்கி வைத்து கேட்டான் கௌசிக்.

   “ஏன்டா… வேலைனு வந்துட்டா நீயும் அடுத்து மூவ் ஆவ. இது காமன் தானே. நான் இருக்கற வரை நீ உருப்படற மாதிரி தெரியலை. அடுத்து நீயும் வேலை தேடி என்னோட வந்துடு.” என்று சிரித்தான்.

  ஏனோ ஹ்ருதேஷ் இயல்பாக பேசியது கௌசிக்கால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

   ஆனால் அதற்காக ஹ்ருதேஷிடம் காட்டிக்கொள்ளாது தேவையை வாங்கினான்.
  
செல்வராணி மகன் முதல் முறை பிரிவதால் கவலைப்பட்டாலும், வேலைக்கு பெங்களூர் போகவும் பெருமை பீற்றிக் கொண்டார்.

ராஜலிஙகம் மட்டும், “பணம் ஏதாவது வேண்டுமாடா” என்று கேட்க, வீட்டுக்கு முன்‌பணம் தந்ததே போதும்.” என்று பையை தூக்கினான்.

கௌசிக் கூடவே வருவதால் அவர்களும் வாசல் வரை வழியனுப்பினார்கள்.

  “நான் வேண்டுமின்னா பெங்களூர் வந்து விட்டுட்டு வரவா?” என்று கூடவே பஸ் ஸ்டாப் வரை வந்தான் கௌசிக்.

அடிக்கடி போன் ரிங்டோன் அலர, அதை கத்தரித்து பேக்கட்டில் போட்டுமுடித்தான் ஹ்ருதேஷ்.

“வேண்டாம் மச்சி அலைச்சல் தான்‌.” என்று மறுக்க, “போடா.. ஏதோ உயிரே போற மாதிரி இருக்கு. மிதிலாவை பார்க்க வந்தா உன்னை பார்க்காம திரும்ப மாட்டேன். பேசாம அம்மாவிடம் சொல்லி மிதுலாவை பார்க்க போகட்டானு கேட்டு உன்னோடவே வந்திருக்கணும்.” என்று புலம்பிக்கொண்டே வந்தான்.

  பஸ்ஸில் ஏறியதும், “அடுத்த முறை வா.. அதுக்குள்ள ரூம் எல்லாம் பெர்ப்பெக்டா மாத்திடுவேன். நீ உன் தங்கச்சியை பார்க்க வந்தா அங்க வா” என்று கூற, கடைசியாக கௌசிக் ஹ்ருதேஷ் இருவரும் கட்டிக்கொண்டார்கள்.

  இனி தங்கையால் மோத வரும் வாய்ப்பு அமையும் என்று கௌசிக்கும் எதிர்பார்த்திருக்க மாட்டான்.
   ஹ்ருதேஷும் காதலால் நட்பு உடையுமென்று நினைக்க மறந்தான்.
  பேருந்து புப்படவும் கௌசிக் கண்மறையும் வரை டாட்டா காட்டியவன், அடுத்த போனை எடுத்து, மிதிலாவுக்கு அழைத்தான்.

  அவள் அழைப்பை எடுத்ததும், “ஏய்… எதுக்கு கால் பண்ணிட்டே இருக்க. உங்கண்ணா என் பக்கத்துல தான் இருந்தான். நீ பாட்டுக்கு கால் பண்ணற. அங்க தானே வர்றேன்.” என்று கடுப்புடன் மொழிந்தான்‌

“ஹ்ருத் பேபி… ஆசையா தானே கால் பண்ணினேன். எனக்கென்ன தெரியும்‌. எங்கண்ணா உன் கூட வேதாளம் மாதிரி தொற்றிக்கிட்டு வருவான்னு.” என்று கொஞ்சினாள்.

“பஸ் ஸ்டாப் வரை வந்து விட்டுட்டு போனான். விட்டா என் கூடவே வந்திருப்பான். அவனை அனுப்பறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு. இதுவரை கௌசிக் கூடயிருந்ததை இப்படி நினைச்சதில்லைடி முதல் முறை ‘என்னை விட்டு போடா’னு நினைக்க வச்சிட்ட. மிதிலா… ரியலி.. எனக்கு கஷ்டமாயிருக்கு.” என்று மெய்யான வருத்தத்தை பகிர்ந்தான்.

“அச்சோ.. இதே சொல்லாத ஹ்ருத். நீ வருவதை ஜாலியா நினைச்சிட்டு இருக்கேன். நீ என்னடான்னா.. பிரெண்ட் பிரெண்டுனு புலம்பற. பியார் பிரேமம் அமோர்னு காதலை துதிச்சு பேசுடா ஹ்ருத்” என்றாள்.

காதலி சாதாரணமாக பேசினாலே பனிக்கூழாக மாறும் காதலன் உள்ளம். இப்படி கொஞ்சி பேசி தன் மீது பைத்தியமாக இருப்பவளின் பேச்சை கேட்டு மனம் உருகாதா?

“சரி அங்க தான் வர்றேன். பஸ் புறப்பட்டுடுச்சு வைக்கட்டா?” என்று அணைக்க முயல, “ஏ தத்தி ஹ்ருத்… பேசிட்டே வந்தா என்ன குறைஞ்சா போயிடுவ. ஏதாவது பேசுடா.” என்று கேட்க மென்னகை புரிந்து அவளது கொஞ்சலில் குழைந்து போனான் ஹ்ருத்.

-தொடரும்.

பிரவீணா தங்கராஜ்

1 thought on “நின் பிரேமம் என் சிநேகம்-6”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top