meta-google-adsense-platform-account: ca-host-pub-2644536267352236 meta-google-adsense-platform-domain: sitekit.withgoogle.com

மையலிட்ட சிற்பமே-7

அத்தியாயம்-7

   அன்றிரவு கதிரவன் காமத்தை வழங்கவில்லை. காதலை வழங்கும். விதமாக தன் நெஞ்சில் தவமலரை சாய்த்துக்கொண்டான்.

தவமலர் உறங்கியதும், அவளை கண்டு, ரசிக்க துவங்கினான்.
   இவ எத்தனை கஷ்டம் அனுபவிச்சாலும், இனி ஒரு கஷ்டமும் அனுபவிக்காம பார்த்துக்கணும்.’ என்று எண்ணினான்.

   அதன்பின் வந்த நாட்களில் மாட்டு சாணம் அல்லும் நேரம், “ஏய்… மலரு.. நான் அள்ளிக்கறேன். நீ போ. என்னை கட்டிக்கிட்டு கஷ்டப்பட வேண்டாம்” என்று அனுப்ப, “இது நம்ம வீட்டு வேலை தானே. இதுல ஏது கஷ்டம். வீட்டு வேலையை எல்லாம் கஷ்டத்துல சேர்த்தியில்லைங்க” என்று புன்னகை முகமாக கூறி சந்தோஷமாக வேலையை கவனித்தாள்.

  முன்பை விட மனதால் நெருக்கமான தம்பதிகள், நன்றாக பழகவும் செய்ய, அது பொறுக்காமல் தீபாவளி உருவத்தில் அரக்கன் வந்தான்.
  
  அரக்கனை மன்னித்து அனுப்பியிருந்தால் கூட, தீபாவளி அன்று புது மாப்பிள்ளைக்கு நகை நட்டு துணிமணி சீர் என்று செய்யும் தேவை இருந்திருக்காது.
   இங்கு மன்னிப்பை வழங்காமல் ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரா பெண் வீட்டில் சங்கடம் சண்டை நிகழும் வகையில் இன்னமும் தீபாவளி வலி தந்து செல்கின்றது.
  அப்படி தான் ஆவுடையப்பன் வீட்டுக்கு வந்த கதிரவனுக்கு மோதிரம் செயின், மற்றும் தவமலருக்கு முன்பு சபையில் போடத குறைக்கு ஒரு கழுத்தொட்டிய செயினை தந்தார் ஆவுடையப்பன்.

  ஆனால் மொத்தத்தையும் கூட்டினாலும் ஐந்து சவரன் அளவிற்கு செய்திருக்க, இது தீபாவளிக்கு செய்த சீர், வரதட்சனையாக போட வேண்டிய எட்டு சவரன் நகை எங்கே என்று சாமுண்டிஸ்வரி கேட்க, அன்னமோ ”இந்தா.. எங்களால் இவ்ளோ தான் போட முடியும்.” என்று சட்டமாய் கூற, சாமுண்டிஸ்வரிக்கும் அன்னத்திற்கும் சண்டை உருவானது. கதிரவன் தவமலர் இதில் யாரை தணித்து போக கூறுவது?
கண்ணனுக்கும் அதிருப்தி என்மதால் ஆவுடையப்பனிடம், “தீபாவளிக்கு போடறதா சொன்ன நகையை போடாம ஏமாத்தறிங்க. இதுக்கு முதல்லயே நகை எதுவும் போடாம தான் மகளுக்கு கல்யாணம் பண்ணப்போறதா செல்லிருந்தா கூட பெரிய மனசு பண்ணி கேட்க மாட்டோம்ல” என்றார்.‌

  “இல்லைங்க அது வந்து” என்று பேச, கண்ணனோ அவ்விடம் விட்டு எழுந்துக்கொண்டார். தனியாக சிவநேசனிடம் பேசுவதற்கு சென்றார்.
  சாமுண்டிஸ்வரியோ அன்னத்திடம் வாதிட்டு தவமலரையும் ஏசினார்.
  தவமலரை ஏசுவதை தான் கதிரவனால் தாங்கமுடியஸில்லை‌.

  “அம்மா அவங்க நகை போடலைன்னா இது என்ன பண்ணும்‌. இத்தை போய் திட்டற” என்று கேட்டான்.‌

   சாமுண்டிஸ்வரிக்கு கோபம் அதிகமாக, “பேசுவடா… பேசுவ… உன்னை மயக்கி வச்சியிருக்கால.. இதை விட நிறைய பேசுவ.” என்று பேசவும், கதிரவன் மௌனமானான்.
  அவனொன்றுமா காவிய நாயகன் இல்லை. அன்னை பார்வைக்கு அடங்கும் மகன். பலர் வீட்டில் மகன் சொல்லுக்கு அஞ்சும் அன்னையர் இருக்கலாம்‌. அதெல்லாம் நிதர்சனமில்லையே. அன்னை சொல் கோட்டு அடங்கும் மகன் இயல்பு தானே.!

   ஆவுடையப்பனோ மகளிடம் ஏதோ பேச வர, அவளோ அவரை காணாமல் அவ்விடம் விட்டு நகர்ந்தாள். அந்த வலி அதிகம் தாக்கவும், அன்னத்தின் அறைக்கு சென்றவர், அங்கே பளபளப்பான ஒரு ஜோடி வளையலை எடுத்துக் கொண்டு வந்தார்.

சாமுண்டிஸ்வரக முன்னே பகளது கையில் அணிவித்து, “இதை தவிர என்னிடம் எந்த நகையும் இல்லைம்மா. எட்டு சவரன் இருக்கு. ஆனா தீபாவளிக்குன்னு என்னால எதுவும் கொடுக்க முடியலை” என்றுரைத்தார்.

  “யோவ் உனக்கு என்ன அறிவில்லையா?” என்று அன்னம் அதட்ட, சாமுண்டிஸ்வரியோ “நகை வாங்கி வச்சிட்டு தான் இல்லைனு விளையாடுதா. இந்தாம்மா… நீ இவளுக்கு சித்திக்காரி தான். அதுக்குன்னு பெத்தவர் அவ பொண்ணுக்கு வாங்கியதையும் ஒளிச்சி வச்சிக்கற.” என்று கத்தினார்.

லதா மற்றும் சுரேஷ் இருவரும் சண்டையில் மிரண்டு வேடிக்கை பார்த்தனர்.

  மீண்டும் ஆரம்பம் ஆன சண்டையில் தவமலரை இழுத்துக் கொண்டு சாமுண்டிஸ்வரி நடையை கட்டினார்.

தீபாவளிக்கு ஒரு வாய் கூட கறி சோறு உண்ணாமல் செல்ல, தவமலருக்கே திகிலானது.
  மாமியார் கோபமாக இருக்கின்றார் என்று.

  அவளுக்குமே அன்னத்தின் இந்த செய்கை அருவெறுப்பாக இருக்க யாரை நோவாள்.

  தந்தை தான் பின்னாடியே வந்து நின்றார். தவமலர் கதிரவனை காண “நீங்க வீட்ல அவங்களை போய் பாருங்க” என்று அனுப்பினான்.

கதிரவனுக்கு சிவநேசன் போன் செய்து மன்னிப்பு கேட்டு, அந்த குடும்பமே அப்படி தான் தம்பி. தவமலரை வாழ விடக்கூடாதுனு அந்த அன்னம் கங்கனம் கட்டிக்கிட்டு அலையுறா.

  சிவநேசனிடம் பேசியப்பின் சாமுண்டிஸ்வரி போனை பிடுங்கி, “தம்பி… இனி எங்களுக்கு அந்த குடும்பத்துல எதுவும் வேண்டாம். அந்த பொம்பளையை பார்த்தாலே எரிச்சலாகுது. இதோட அந்த வீட்டுக்கு மலரு போகாது. உங்களுக்கு மலரை பார்க்கணும்னா எங்க வீட்டுக்கு வந்து பார்த்துட்டு போங்க.” என்று அழுத்தமாய் முடித்து கொண்டார்.

  சிவநேசன் காயத்ரி தொலைவில் இருந்தபடி என்னவென்று சமாதானம் செய்வார்‌.

   தவமலர் எல்லாவற்றையும் பார்த்து அமைதியாக வந்தாள். காயத்ரி மட்டும் வீட்டுக்கு வந்தப்பின் தவமலருக்கு போனில்  அழைத்து பேச, “மோதிரம் செயின் எனக்கு ஒரு செயின் எல்லாம் ஐந்து சவரன்ல வாங்கியிருக்காங்க அத்தை. வளையலும் அப்பா வாங்கியிருப்பார் போல. அதை தான் சித்தி அது பீரோல ஒளிச்சு வச்சிக்கிச்சு. அத்தை திட்டி சண்டை போடவும், அப்பா என்ன நினைச்சாரோ வளையலை கொண்டா வந்து முன்ன வச்சிட்டார்.
   அத்தைக்கு அது பிடிக்கலை. நகை போச்சேனு புலம்ப, எங்கத்தைக்கு இப்படி சண்டை போட்டு வாங்கணுமானு கடுப்பாகவும் வந்துட்டாங்க. அந்தளவு இரண்டு பேரும் பேசி சண்டை போயிடுச்சு.
  இப்படி வீட்டுக்கு வந்து அவமானப்படணுமானு எங்கத்தை சோத்துல கூட கை வைக்கலை. இந்தா… இங்க வந்து தான் அரிசி கழுவி வச்சிட்டு இருக்கேன். எங்கத்தை கோழியை பிடிச்சி தீயில கருகி இறகை பிடுங்குது.
 
     அங்கிருந்து வந்ததிலருந்து சித்தியை கரிச்சு கொட்டறாங்க. இப்படியா பொண்டாட்டி கால்ல ஒருத்தன் விழுந்து கிடப்பான். மூத்த பொண்ணு என்ன இளக்காரமானு கத்திட்டாங்க. என்னமோ போ அத்தை.. ஒரு மணி நேரத்துல அப்பா வீடு. ஆனா அங்க இனி போக முடியாத அளவுக்கு என் நிலைமை.” என்று வருந்தினாள்.

காயத்ரியோ “ஏன்டி.. இல்லைன்னா மட்டும் நீ அங்க போய் நிற்பியா? இல்லை உங்க சித்திகாரி தான் வாடினு கூப்பிடும்மா.” என்றார்.‌

  தவமலரோ “இல்லத்தை… என்னயிருந்தாலும் அப்பா வீடுனு ஒரு இடம் இருந்தது. இப்ப அதுவும் இல்லை.” என்று விசும்பினாள்.

காயத்ரிக்கு அவள் சொல்ல வரும் சாரம்சம் புரிய, “என்னடி பண்ணறது. சிலருக்கு எல்லாம் நல்லதா அமையும். உனக்கு இவ்ளோ தான் நல்லது நடக்கும்னு கடவுள் விதிச்சிட்டார்.” என்றார்.

“மசாலா அரைச்சிட்டியா இல்லையா? இன்னும் போன்ல கதை அளக்கறியா?” என்றதும், “போ.. உங்கத்தை பேச்சையாவது கேட்டு நல்லபடியா இரு. ஊருக்கு வர்றப்ப வந்து பார்க்கறேன்” என்று அணைத்தார்.

  தவமலரும் போனை அணைத்துவிட்டு மசாலா அரைக்க வந்தாள்.
   ஏற்கனவே மிக்சியில் மின்சாரம் லேசாக கசியும். அதில் கதிரவன் தான் கருப்பு டேப் போட்டு ஒட்டி வைத்திருந்தான்.
  இன்று அதை கவனகக்காமல், தவமலர், மிக்சியை போட்டுவிட, மின்சாரம் பாய்ந்து, தூக்கி எறியப்பட்டாள்.

  கதிரவன் தவமலரை பார்த்து தான், தந்தையிடம் பேசிக் கொண்டிருக்க, தவமலருக்கு மின்சாரம் தாக்கவும், “மலரு…” என்று கத்தி ஓடிவந்தான்‌.

  சாமுண்டிஸ்வரியும் மினது அலறலில் கோழியை அப்படியே போட்டுவிட்டு வர, அங்கே சமலயல் அறையில் தவமலர் மகன் மடியில் சரிந்தபடி ஆங்காங்கே மசாலாவுக்கு அரைக்க எடுத்த பொருட்கள் சிதறியிருந்தன.

  நொடியில் நிலைமையை ஊகித்த கண்ணனோ, “கதிரு… மூச்சு இருக்கா பாரு. சட்டுனு ஹாஸ்பிடலுக்கு தூக்குடா” என்றார். சாமுண்டிஸ்வரியும் போடா” என்றதும் டிராக்டரில் தவமலரை தூக்கி போட்டுக்கொள்ள கதிர் கூடவே இருந்தான்.
கண்ணன் டிராக்டரை ஓட்ட, சாமுண்டிஸ்வரி வீட்டை அப்படியே பூட்டி விட்டு, விசிறியால் தவமலருக்கு விசிறியபடி வந்தார்.‌

கதகரவனோ “மலரு… ஏய் மலரு.. எந்திரிடி.” என்று பைத்தியம் போல அணத்த துவங்கினான்.

  சாமுண்டிஸ்வரியோ, “ஒத்த வளையலை தூக்கி கொடுத்துட்டு சபிச்சியிருக்கா பாரு. வீட்டுக்கு வந்து அரை மணி நேரத்துல ஷாக் அடிச்சிருக்கு. விளங்குவால அந்த சிறுக்கி. இப்பவே இப்படி பண்ணிருக்காளே, பத்து வயசுல இருந்து இந்த புள்ளையை என்னயென்ன பண்ணியிருப்பாளோ. எப்பா ஐய்யனாரே.. இந்தப்புள்ளையை காப்பாத்து” என்று பயந்தபடி வேண்டினார்.

   கதிரவன் தாடையை தட்டி தட்டி தவமலரை எழுப்ப முயன்றும் அவளோ துளியும் சலனம் காட்டாமல் இருந்து அவனுக்கு பயத்தை கூட்டினாள்.
 
   அரசாங்க மருத்துவமனையில் டிராக்டர் நின்றதும் கதிரவன் தவமலரை தோளில் தூக்கியபடி மருத்துவரை காண வந்தான்.
  அன்று தீபாவளி என்றதால் மருத்துவர்கள் இல்லை. சொர்ப்பமாய் சிலரே இருக்க, பல வருடமாக நர்ஸாக இருந்த பெண் தவமலரை காண வந்தார்.

  “டாக்டர் இல்லையாங்க” என்று கதிரவன் துடிக்க, “என்னாச்சுப்பா” என்று கேட்க, மின்சாரம் தாக்கியதை கூறினான்.

கண்ணின் கருவிழியை இழுத்து பார்வையிட்டு கவனிக்க ஆரம்பித்தார்.

  “உயிருக்கு ஒன்னுமில்லை. பயத்துல மயங்கி இருக்கா” என்று ஊசியை செலுத்தினார்.

  கன்னத்தை தட்டி தட்டி “எப்படியும் அரை மணி நேரத்துல எந்திரிப்பா. கன்னத்தை மட்டும் தட்டி விடுங்க.” என்றார்.

  “பேஷண்ட் பெயர் என்ன? இந்த பொண்ணுக்கு என்ன வயசு? கல்யாணமாகிடுச்சா?” என்று தாலியை பார்த்து கேட்டார்.

  கதிரவனோ “மலரு.. தவமலருங்க. வயசு 17 ஆகுது. கல்யாணமாகிடுச்சு. நான் தான் இதோட புருஷன்” என்று கூறினான்.

  நர்ஸ் எழுதுவதை நிறுத்திவிட்டு, “மைனர் பொண்ணை கல்யாணம் பண்ணிருக்க? தானா ஷாக்கடிச்சதா? இல்லை நீங்களா ஏதாவது செய்திங்களா? உங்களை பார்த்தா சரியா தெரியலை. இருங்க நான் போலீஸுக்கு போன் போடறேன். அதென்ன மைனர் பொண்ணை யார் கல்யாணம் பண்ணி வச்சா? லவ் மேரேஜா இருந்தா உன்னை உள்ள தூக்கி போடுவாங்க. அரேஜ் மேரேஜா இருந்தா இந்த பொண்ணோட அப்பா அம்மாவை உள்ள வைப்பாங்க.” என்று போன் போட எடுத்தார்.

  “இரண்டு மாசத்துல பதினெட்டு ஆகும்னு சொன்னாங்க. இப்ப கல்யாணமாகி மூனு மாசமாகுதுங்க. பதினெட்டு வயசு ஆகியிருக்கும்” என்று கதிரவன் கூற, “அதெல்லாம் நீ போலீஸ் வந்தப்பிறகு சொல்லு” என்று முடித்துவிட்டு போலீஸுக்கு அழைத்தார்கள்.

  கதிரவனோ தவமலர் கண் திறக்க காத்திருக்க, கண்ணனோ இதென்ன இந்த தீபாவளி நமக்கு நல்லாவே போகலை. ஆண்டவா” என்று வாய்விட்டு புலம்ப, சாமுண்டிஸ்வரியோ “அந்த கேடுகெட்டவ மனசுல பொறுமறா போல. எல்லாம் நம்ம தலையில விடியுது.” என்று சுவரோடு தரையில் அமர்ந்தார்‌.

கதிரவனுக்கு மட்டும் மலர் எழுந்து நடமாடினாள் போதுமென்ற வேண்டுதலோடு காத்திருந்தான்.

-தொடரும்.

3 thoughts on “மையலிட்ட சிற்பமே-7”

  1. M. Sarathi Rio

    அ ராமா..! ஏற்கனவே இருக்கிற பிரச்சினை போதாதுன்னு இப்ப இது வேறயா?

    😔😔😔
    CRVS (or) CRVS 2797

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top