meta-google-adsense-platform-account: ca-host-pub-2644536267352236 meta-google-adsense-platform-domain: sitekit.withgoogle.com

மையலிட்ட சிற்பமே-6

அத்தியாயம்-6

   தவமலர் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி, “எனக்கு தெரியும் அப்பா. அம்மாவை நீங்க தான் உயிரோட கொன்னீங்க. அம்மா என் எதிர்ல தான் மண்ணெண்ணெய் ஊத்திக்கிச்சு. ஆனா அதுக்கு முன்ன நீங்க பேசிய வார்த்தை எனக்கு அப்ப புரியலை. பத்தாவது பரீட்சை முடிஞ்சி வீட்ல இருந்தேன்ல அப்ப மூக்கு முட்ட குடிச்சிட்டு வந்து புலம்பினிங்க. அதை நான் கேட்டேன். எனக்கு எல்லாம் புரிஞ்சிடுச்சு.” என்று கூற நெஞ்சை நிடித்தபடி மகளை ஏறிட்டாள்.
 
   “அதெப்படிப்பா..‌. அம்மாவை நீ எதுவும் பண்ணலை. ஆனா அம்மாவே அது மேல மண்ணெண்ணெய் ஊத்தி கொளுத்திக்க வச்ச? உன் மேல அன்பா பாசமா இருந்தது தப்பா? நீ பாட்டுக்கு பேசிட்டு போயிட்ட. அம்மாவை பார்றேன்… லூசு மாதிரி அது உயிரை மாய்ச்சிக்கிச்சு. பத்து வயசு நான் அது கண்ணெதிர இருந்தும் அதுக்கு என் நினைப்பு வரலை பார்றேன். நான் என்ன நிலைக்கு ஆளாவேன்னு கொஞ்சமும் யோசிக்காம போயிடுச்சு.” என்று தழுதழுக்க கூற ஆவுடையப்பன் துண்டை வாயில் வைத்து கடித்து அழுகையை அடக்கினார்.

  அந்த நேரம் நாய் குலைக்க, நான் கல்யாணம் பண்ணிட்டு வந்தது உன் முகத்தை பார்க்க வேண்டாம்னு தான்.” என்று கூறிவிட்டு மாட்டுக்கு தீவனம் கலக்க சென்றாள்.

ஆவுடையப்பனோ அவ்விடம் விட்டு நடைப்பிணமாக நடந்தார்.

  தவமலர் தடுக்கவில்லை… அவள் வீட்டுக்கு வரும் நேரம் கதிரவன் அனைத்தும் கேட்டவனாக தவமலரை பார்வைமிட்டான்‌.

தவமலரோ கணவன் பார்வையில் “டீ போட்டு தரவா?” என்று கேட்க, மறுப்பாய் தலையசைத்தான்.

   அதற்குள் சாமுண்டிஸ்வரியோ “எங்கடி உங்க அப்பனை காணோம்.” என்று விசாரிக்க, அவர் போயிட்டார் அத்தை.” என்றாள்.

  “என்னது போயிட்டாரா? இதென்ன  கிளம்பறப்ப சொல்லிட்டு போகணும்னு வழக்கமில்லை. எங்களை கண்டா என்ன நினைப்பாம்.” என்று தவபலரை வறுத்தெடுத்தார்.

கண்ணனோ “ஏம்மா.. போறப்ப ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம் தானே?” என்று கேட்க, கதிரவனோ அன்னை தந்தை கேட்க தவமலர் கையை பிசைந்து நின்ற நிலையில், “என்கிட்ட சொல்லிட்டு போனார்ப்பா.” என்றான் அவளை காப்பாற்றும் விதமாக. இது தான் அவன் தவமலருக்காக முதல் முறை யோசித்து பேசியது.

  “ம்கூம்… மாப்பிள்ளையிடம் மட்டும் பேசிட்டு கிளம்பிட்டாரா.” என்று அதற்கும் சாமுண்டிஸ்வரி குத்தல் பேசினார். கண்ணனுக்கு என்னவோ போங்க’ என்று விட்டுவிட்டார்.
  அவருக்கு தவமலர் வயதில் சின்ன பிள்ளை. அவள் பிறந்த வீட்டில் சற்று சரியில்லை என்று சிவநேசன் கூறியதால் பெரிதுப்படுத்த மாட்டார். கொஞ்சம் வருத்தம் உண்டு. ஆனால் தெரிந்தே பெண்ணை எடுத்த பிறகு கேட்டு என்னவாக போகின்றது என்ற எண்ணமுண்டு.

இரவு கம்பு தோசை சுட்டு முடித்து, அன்றாடும் செய்யும் வேலையை எல்லாம் முடித்து கதிரவனும் அவளேம் புழங்கும் அறைக்கு வந்தாள்.

  எப்பொழுதும் தவமலர் வந்ததும் கட்டிக்கொண்டு தாம்பத்திய ருசியை தேடுபவன். இன்று அவள் வந்ததும், உட்கார கூறினான்.

தவமலர் அவள் சீதனமாக கொண்டு வந்த கட்டிலில் அமர்ந்ததும், “இத்தனை நாள் பிறந்த வீட்ல சித்திகாரியால கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கற பொண்ணு. என்னை கட்டிக்கிட்டா இங்க வந்து நல்லா வாழ வைக்கலாம் நினைச்சேன். அப்படி தான் நீ சந்தோஷமா இருக்கனு நினைச்சேன். ஆனா கல்யாணம் பண்ணியதே உங்க அப்பா முகத்தை கூட பார்க்க பிடிக்காம வந்தது இன்னிக்கு தான் தெரிந்தது.
  என் தப்பு தான்… இதுவரை உன் மனசுல என்ன ஓடுதுனு நானா கேட்டதில்லை. வீட்ல எப்பவும் அம்மா அப்பாவும் இருப்பாங்களா. இந்த ரூமுக்கு நீ வருவதே அதிசயம். வெளியே நின்னு பேசறது வேலை செய்யறதுமா போகும். ரூமுக்கு வந்ததும் என்னோட இளமை பசியை தான் தேடினேன். உன்னிடம் ஆரஅமர்ந்து பேசியது கிடையாது. அதுக்கு அவசியமிருக்காதுனு நினைச்சேன்.
  சின்ன வயசுல அடிதிட்டு வாங்கியிருப்ப இனி அது இங்க இருக்காதுனு நினைச்சேன்.
   ஆனா உங்கப்பாவிடம் நீ பேசியது புரியலை. நீயா கல்யாணம் பண்ணிக்க கேட்டதுக்கு என்ன காரணம்? உன்‌மனசுல ஏதாவது ஒளிச்சி வச்சிட்டு இருந்தா என்னிடம் சொல்லு.” என்றான்.

தவமலர் கதிரவனை ஏறிட்டு பார்த்து மௌனமானாள். எப்பொழுதும் தன்னை பாய்ந்து வந்து கழுத்தில் உதட்டால் ஊர்ந்து, தன்னை இன்பக்கடலில் தள்ளி அதில் கதிரவனும் முக்குளிப்பது போல இன்று நடக்கப்போவதில்லை. மாறாக தன்னிடம் காரணம் அறிவதற்கு நிற்பதை கண்டு வாய் திறக்க தயாரானாள்.

   “எனக்கு பத்து வயசு இருக்கும் வரை அம்மா அப்பா கூட தான் இருந்தேன்.‌ விவரம் தெரியறதுக்கு முன்னயே அம்மாவும் அப்பாவும் சண்டை போட்டுக்கிட்டு கத்தறதை நிறைய முறை பார்த்திருக்கேன். அப்ப எல்லாம் ஏன் சண்டை எதுக்கு சண்டைனு எனக்கு தெரியாது.
    அம்மா தனியா உட்கார்ந்து அழும். அப்பா ஒரு நேரம் நல்லா இருப்பார் ஒரு நேரம் கத்துவார். இப்படி தான் இருந்தது.

  அன்னிக்கு அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பெரிய சண்டை. அப்பா அப்மாவை அடிச்சி உதைச்சு என்னென்னவோ சொல்லிட்டு போயிட்டார். அம்மா ஓரமா உட்கார்ந்து அழுதுட்டு இருந்தது. நான் தமிழ் புக் வச்சிட்டு படிச்சிட்டு இருந்தேன். அம்மா என்ன நினைச்சதோ, அடுப்படியில இருந்த கெரஸினை எடுத்து மேல ஊத்திக்கிட்டு பத்த வச்சிக்கிச்சு.
   தீ திகுதிகுனு எரிந்தப்ப, என்னடா இது இவ்ளோ வெளிச்சம்னு திரும்பினேன். அது வெளிச்சமில்வை.. என் வாழ்க்கையில இருள் சூழ்வதற்கான அறிகுறினு அப்ப தான் தெரிந்தது.
  என் கண்முன்ன அம்மா அலறிட்டு எரிவதை பார்த்தேன். ‘அம்மா அம்மா’னு அலறுறேன். ஆனா வார்த்தை வரலை. அக்கம் பக்கத்துல இருந்தவங்க வந்து தண்ணீ ஊத்தி அம்மாவை காப்பாத்த போராடினாங்க.   

  ஆனா முக்காவாசி எரிந்துடுச்சு. தொண்டைக்குழில கொஞ்சுண்டு உசுரு மட்டும் மிச்சம் இருந்தது.

  ஹாஸ்பிடல்ல போலீஸ் எல்லாம் வந்தாங்க.
என்னிடம் விபத்து நடந்தப்ப அப்பா இருந்தாரா? அவர் தான் அம்மாவை இப்படி செய்தாரானு கேட்டதும் இல்லைனு தலையாட்டினேன்.

அதென்னவோ சாகறப்ப கூட அம்மாவை உதாசினப்படுத்தி இன்னொருத்தியோட வாழ்ந்த அப்பாவை அம்மா காட்டிக்கொடுக்க விரும்பலை. போலீஸ் போற உசுரை நிறுத்தி, ‘உன் சாவுக்கு உன் புருஷன் காரணமா?’னு கேட்டு நின்றப்ப கூட அம்மா இல்லைனு சொல்லிட்டு செத்துடுச்சு.
சாகறப்ப கூட புருஷனை காட்டிக்கொடுக்காத எங்கம்மாவுக்கு, என் ஙினைப்பு துளிக்கூட இல்லை. என்னை அனாதையா விட்டுட்டு போயிடுச்சு.” என்றவள் கையை காமத்தை ஆறுதலுக்காக முதல் முறை தவிர்த்து தீண்டினான்.

  “அம்மா செத்து போச்சு. அதுவும் நெருப்புல துடிதுடிச்சு. பொண்டாட்டி செத்தா புருஷன் புதுமாப்பிள்ளைல? எங்கப்பா தான் ஏற்கனவே அன்னத்தோட வாழ்ந்தாரே. லதா, சுரேஷ்னு அவங்களோட வாழ என்னை அழைச்சிட்டு போயிட்டார்.

  அப்பாவுக்கு தனியா ஒரு குடும்பம் இருப்பதே அன்னிக்கு தான் எனக்கு தெரியும். அம்மாவை விட அப்பாவுக்கு அவங்களை தான் ரொம்ப பிடிக்கும்னு தெரிந்துக்கிட்டேன். ஏன்னா என்னை அடிச்சி திட்டறப்ப எங்க சித்தி அன்னத்தை ஏன் இப்படி பண்ணறனு ஒரு வார்த்தை கேட்க மாட்டார்.

  நான் அங்க வளர வளர, சித்தி எப்ப பாரு திட்டும் வேலை வாங்கும். சோறு ஒரு வேளை போடும் ஒரு வேளை போடாது. வயிறு காய அழுதுட்டே பட்டினியா இருந்த காலம் உண்டு. நிறைய வேலைக்கு நடுவ நானும் வளர்ந்தேன். சித்தின்னா இப்படி தான். அம்மா எதுக்கோ செத்துடுச்சு. எதுக்கோ என்ன எதுக்கோ.. அதோட இடத்தை விட்டு தர முடியாம செத்துடுச்சு.
  அப்ப பத்தாவது படிச்சி பரீட்சை முடிஞ்சி பாஸ் மார்க் வந்துச்சு.
  அப்பா அன்னிக்கு சந்தோஷத்துல குடிச்சார்.

  அன்னிக்கு வராண்டாவிலேயே உருண்டுட்டு இருக்க விட்டுட்டாங்க.
  அப்ப தான் அப்பா உலறினார். ‘உன்னை பொருட்டா மதிக்காம இன்னொருத்தியை தேடி போய் விழுந்தேன். என்னை வராண்டாவுல படுக்க விரட்டிட்டா. இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிந்தா ராசாத்தி உன்னை செத்து போடினு திட்டியிருக்க மாட்டேன். உன்னை வேறொருத்தனோட தப்பா பேசியிருக்க மாட்டேன். உன்னை தற்கொலை பண்ணிக்க வைக்கிற அளவுக்கு பேசியிருக்க மாட்டேன்னு புலம்பினார்.
  ஏதேதோ பேசினார். அதுல ஒன்னு மட்டும் நல்லா புரிந்தது. எங்கப்பா எங்கம்மா மேல வச்ச அன்புக்கு மதிப்பில்லைனு அம்மாவுக்கு புரியவும் அவங்க வாழ விரும்பாம இறக்க முடிவெடுத்தது.

   கொலை செய்தவனை விட கொலை செய்ய தூண்டினவனை சட்டம் தண்டிக்கும். அப்படி பார்த்தா… தற்கொலைக்கு தூண்டின எங்கப்பாவை சட்டம் தண்டிச்சிருக்கணும். ஆனா எங்கம்மா உயிர் போகறப்ப கூட எங்கப்பாவை கிட்டி கொடுக்கலை. அவங்களுக்கு தீராத வயிற்று வலியால தற்கொலை பண்ணிக்கிட்டதா சொல்லிட்டாங்க. உண்மையில அம்மா நினைச்சா என்னை தவிர்த்து இன்னொரு பொண்ணோட கல்யாணம் செய்து வாழ்ந்திருக்கார்னு கேஸ் போட்டு உள்ள தள்ளியிருக்கலாம். அவங்க அப்படி பண்ணலை. சாகறப்ப கூட புருஷனை காப்பாத்தின புண்ணியவதி. போலீஸ் வந்து என்னிடம் கேட்டப்ப அம்மாவே கொளுத்திக்கிச்சுனு சொன்னேன். அதனால அப்பா மேல எந்த கேஸும் பதிவாகலை. எந்த குற்றவுணர்வும் நேராம அவர் இருந்துட்டார்.

ஆனா மனசாட்சி குத்தவும், அன்னிக்கு குடிச்சிட்டு நான் தான் உன்னை சாகடிச்சிட்டேன். உன்னை நல்லபடியா பார்த்திருந்தா எனக்கு இந்த நிலைமை வராதுனு சொல்லவும் அப்பா மேல தான் தப்புனு புரிந்துடுச்சு. இர்ணடாதாரமா ஒரு பொண்ணோட வாழறான்‌ அப்பவே தப்புனு தெரியலையானு கேட்கலாம். ஆனா அப்ப அம்மா இறப்புக்கு அவங்க தப்பான முடிவு எடுத்ததா நினைச்சேன். இனா அவங்க எடுத்த முடிவே அப்பாவோட ஏச்சும் பேச்சும்னு தெரியறப்ப அவரை பார்க்கவே பிடிக்கலை. கொஞ்சம் கொஞ்சமா அப்பாவை தவிர்த்தேன். எப்படியும் அவரை விட்டு தொலைவா போக முடிவெடுத்து தான் கல்யாணம் பண்ணி வீட்டை விட்டு வெளியேற நினைச்சேன்.” என்றாள்.

இப்பவரை அப்மாவுக்கு வயித்து வலினு சிலரும், சிலர் இரண்டாதாரமா ஒருத்தி வந்ததால தான் செத்ததாகவும் சொல்வாங்க. ஆனா அப்பாவோட பேச்சு கேட்க சகிக்காம இறந்துட்டாங்க. எனக்கு கூட சித்தி ஏதாவது பேசி திட்டறப்ப செத்துடலாம்னு யோசிப்பேன். ஆனா அம்மா மாதிரி முட்டாளா நானும் முடிவெடுக்க கூடாதுனு நினைச்சு தான் கல்யாணத்தை தேர்ந்தெடுத்து வீட்டை விட்டு இங்க வந்தது. ஏன்னா எங்கம்மா துடி துடிச்சு அலறி வீட்ல அங்கயும் இங்கயும் தள்ளாடி கத்தி கூச்சலிட்டது இப்பவும் என் காதுல கேட்குது.

   இங்கயும் நிறைய வேலை இருக்கு, திட்டும் கிடைக்குது. ஆனா இது என்‌ வீடு. எங்கம்மாவை கொன்ற எங்கப்பாவை தினம் தினம் பார்க்கலை. அந்த நிம்மதி. போதும்.” என்றாள்.
 
  அனைத்தும் பேசிவிட்டு, கண்ணீரை துடைத்து கதிரவனை கண்டாள்.

  “உனக்கு இப்பவும் உங்கம்மாவை மிஸ் பண்ணறியா?” என்று கேட்க, “ஒரு பொண்ணுக்கு அம்மா இருந்து இறந்துட்டாலே, அவ அவங்க அம்மாவை மனசுக்குள் தேடாம இருக்க மாட்டா. எனக்கு எச்கம்மாவை ரொம்ப பிடிக்கும். நான் தினமும் அவங்களோட மனதுக்குள்ள பேசுவேன்.
  
  -தொடரும்.

பிரவீணா தங்கராஜ்

4 thoughts on “மையலிட்ட சிற்பமே-6”

  1. பாவம் தவமலர்… தவமலர் அம்மா சாவுக்கு காரணமான ஆவுடையப்பனுக்கு சரியான தண்டனை கிடைக்கும்

  2. M. Sarathi Rio

    பாவம் தவமலர், பெத்த பிள்ளைக்கு தாய் மேல பாசம் இருந்திருக்கு, ஆனால் அந்த தாய் பிள்ளைளையை கண்டுக்காமலே போய் சேர்திடுச்சு.

    😔😔😔
    CRVS (or) CRVS 2797

  3. Dharsini Priya

    Romba emotional epi sis🥺 paavam thavamalar evlo kashtam manasukullaiye vechiruka😔 edha solla kooda avaluku yaarum ellaiye nallavela husband ahvudhu ketaney oru ponnuku amma ellana ava nelama romba mosam pa😭

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top