மையலிட்ட சிற்பமே-3

அத்தியாயம்-3

கல்யாணம் இனிதே முடிவடைந்த தருணத்தில், கல்யாண சாப்பாடு வேறு பந்தியில் பரிமாறப்பட்டது. கதிரவன் தவமலர் இருவரையும் அமர வைத்து தலைவாழை இலையில் தண்ணீர் தெளித்து, முதலில் இனிப்பை வைக்கும் விதமாக ஜாங்கிரி. அத்துடன் கல்யாண சாப்பாடு பரிமாறப்பட்டதும், மணமானவர்களை ஊட்டி விட வைத்து போட்டோவும் எடுக்கப்பட்டது.

   ஒரு குழந்தைக்கு பள்ளிக்கு செல்லும் போது முதல் முறை தயக்கமான மனநிலையில் செல்ல, அங்கிருக்கும் ஆசிரியர் இனிப்பை தந்து வகுப்பில் அழைத்து செல்வது போல தான் தவமலருக்கு இனிப்பு ஊட்டப்பட்டது.

  கதிரவன் இனிப்பை ஊட்டும் போது தான் ‘என்ன இந்த பிள்ளை சின்னகுழந்தையாட்டும் இருக்கு. அவசரப்பட்டுட்டோமோ’ என்று தற்போது தான் மிக நெருக்கத்தில் அவளை கண்டான்.

    அவன் வீட்டின் தாழ்வாரத்தில் பழைய புகைப்படம் இருக்கும். அதில் தன் அன்னை தந்தையோடு இப்படி தான் சேலை கட்டி நின்றிருப்பார்.
   அவனுக்கு அது நினைவு வரவும் தான் சற்று தெளிந்தான். ஆனாலும் பதினெட்டு வயசு முடியலை என்ற உறுத்தலும் அவனுக்கு இருந்தது.

  எப்படியோ போலீஸ் எதுவும் இல்லாமல் அவன் திருமணம் நல்லபடியாக நிகழ்ந்ததில் அவனுக்கு முறுவலே உதிர்த்தது.

      அது கிராமம் என்பதாலும், உறவுகள் தத்தமது வேலையில் முழ்கினார்கள்.

சிவநேசனுக்கும் காயத்ரிக்கும் தான்  கதிரவனின் தந்தை கண்ணன் சாமுண்டிஸ்வரியிடம் நகையை தீபாவளிக்குள் போடுவதாக எடுத்து சொல்லி சமாதானம் செய்தார்கள்.

   அன்றைய பொழுது மதியம் தாண்ட சத்திரத்தில் இருந்து மாலை கதிரவன் வீட்டுக்கு டிராக்டர் வண்டியில் தான் மணமக்களை அழைத்து வந்தனர்.

   அதே டிராக்டரில் தான் தவமலரின் அப்பா, சித்தி, தம்பி, தங்கை, சிவநேசன், காயத்ரி என்று வந்தனர். வீட்டுக்கு வந்து நின்றதும் ராசாத்தி இடத்தை கண்டு வாயை பிளந்தாள்.

   வீடு ஒன்றும் அப்படியொன்றும் அரண்மனை பேன்றதல்ல, ஓட்டு வீட்டில் ஒரு அறை, பெரிய கூடம், சற்று விசாலமான உள்வராண்டா, சமையல் பகுதி என்று தான் இருந்தது.

  குளியலறை கூட வீட்டுக்கு வெளியே தான் கட்டி வைத்திருந்தனர்.

ஆனால் சுற்றியுள்ள இடம், ஆட்டுக்குட்டி வளர்ப்பு என்று பத்து பதினைந்து ஆட்டையும் இரண்டு மாடும் அங்கே கட்டியிருக்க, கூடுதலாக கோழிகள் அங்கொன்றும் இங்கொன்றும் மேய்ந்திருக்க கண்டார்.

ராசாத்தியோ, “ம்கூம்… உன் மகளுக்கு இதெல்லாம் தேவை தான். முன்ன நம்ம வீட்டுக்குள்ளயே பாத்ரும் இருக்கும்.   ஆனா இங்க பாரு… வெளிய தான் பாத்ரூமே கட்டி வச்சியிருக்காங்க. அங்க வேலை எல்லாம் வீட்டுக்குள்ள பாத்திரம் தேய்க்கவும், துணி துவைக்கவும் பொழுது போகும். இங்க பாரு… ஆட்டு மந்தை எம்புட்டு இருக்கு. இதுங்களை கட்டி மேய்க்கவும், இதுங்க அசுத்தம் செய்யற கழிவுகளையும், இடத்தை பெருக்கி கூட்டி அள்ளவும் உன் பொண்ணுக்கு வேலை சரியா இருக்கும்யா.

  சிருக்கி மக வேலைக்கு பயந்து வெட்கங்கெட்டு கல்யாணம் பண்ணிக்கறதா பேசினா, இப்ப இடுப்பு எலும்பு உடையற வரை வேலை தான். என்னைக்காவது ‘சித்தி புகுந்த வீட்ல வேலை செய்து மாளல, நான் இங்கயே கூழோ கஞ்சியோ குடிச்சிட்டு இருக்கட்டாமா’னு கண்ணை கசக்கிட்டு வருவா பாரு” என்று அழகான சாபத்தை திருமணமான அன்றும் கொடுத்தார்.

ஆவுடையப்பனோ “ஏன்டி… இப்ப உன் ஊத்த வாயை வச்சிட்டு‌ சும்மாயிருக்க மாட்ட. உனக்கென்ன.. அவ அவ பொழுப்பை பார்க்க கல்யாணம் செய்து அனுப்பியாச்சுல. வாயை மூடிட்டு கிட” என்று கண்டித்தார்.

   என்னயிருந்தாலும் தவமலருக்கு அவர் தந்தை. அப்படியிருக்க, இதுபோன்ற பேச்சுக்கு கண்டித்தார். அந்த வகையில் போற்றலாம்.

   இவர்கள் பேச்சு தவமலர் காதுக்கு எட்டவில்லை. அவள் பூஜை அறையில் விளக்கேற்ற கூறியிருக்க அங்கிருந்தாள்.

‘சாமி… நானா தான் கண்ணாலம் பண்ணிக்க மாமாவிடம் நச்சரித்து இப்ப இந்த வீட்டுக்கு வந்திருக்கேன். எனக்கு கூழோ கஞ்சியோ எனக்கு மனசார உத்தினா போதும். யாரும் திட்டாம அடிக்காம இருந்தா கோடி புண்ணியம். என்னை ராசியில்லாதவ தண்டச்சோறுனு திட்டு வாங்க வச்சிடாத. எத்தனை வேலை இருந்தாலும் செஞ்சுடறேன். உனக்கு தினமும் விளக்கேத்தி நன்றி சொல்வேன்’ என்று மனதிற்குள் கடவுளோடு அன்பான கோரிக்கையை வைத்தாள்.

  கதிரவனோ இமை மூடி தன் வீட்டு குலதெய்வ சாமியிடம் என்ன வேண்டுவாளென்ற ஆர்வத்தோடு புதுமனைவியை ரசித்தான்.‌

  கீழே விழுந்து வணங்கி எழுந்திடும் நேரம், காயத்ரி அத்தை கட்டியணைத்தார்.

   எந்தவிதமான அறிவுரையும் வாழ்த்தும் சொல்ல முடியாத நிலை. ஆனால் வந்தவர்கள் ஒவ்வொருத்தராக பார்த்து சென்று வீடு நிறைந்தபடியிருக்க, மாலை ஆகவும் டீ காபி குடித்து, ஒவ்வொருத்தராய் புறப்படவும் ஆரம்பித்தனர்.

  ஆவுடையப்பனும் நாளை மகள் தன் வீட்டுக்கு மறுவிருந்துக்கு வருவாளெனவும், இங்கே சாந்தி முகூர்த்தம் என்பதால் சொல்லி கொண்டு புறப்பட்டார். காயத்ரி சிவநேசன் கூட கதிரவன் பெற்றவர்களிடம் பேசிவிட்டு தவமலரிடம் ‘நல்லபடியா நடந்துக்கோ… நாளைக்கு மறுவீட்டுக்கு வர்றப்ப மத்தது பேசலாம்” என்றார் காயத்ரி.

தவமலரை கதிரவன் வீட்டில் விட்டுவிட்டு தாய்மாமா சிவநேசன் காயத்ரி சென்றதும், பயந்தே போனாள்.

    எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுங்க என்று திருமணம் செய்ய வாய் விட்டு கேட்டவளே, தனியாக இவ்வீட்டில் நின்றதும் அதிர்ந்தாள்.
  
கதிரவனும் அவன் அப்பா கண்ணனும் சற்று தொலைவில் இருக்க, சாமுண்டிஸ்வரி மருமகளை மேலும் கீழும் பார்த்தார்.
  
  காயத்ரி ஏற்கனவே சாத்தி முகூர்த்த சேலை கட்டிவிட்டு சென்றதால், அலங்காரம் கூட செய்ய தேவையின்றி நின்றாள். ஆனால் திருமணத்திற்கு செய்த அலங்காரமே களையாமல் இருந்தது.

  சாமுண்டிஸ்வரி குறுகுறுவென பார்வையிட, கண்களை மிதமாக உருட்டி பயந்தவளை கண்டு, “ம்கூம்.. காத்தடிச்சா பறந்துட மாதிரி இருக்க, சோள கொல்ல பொம்மை மாதிரி கையு. நிறமும் இல்லை…
சேலை மாராப்பு கூட ஒழுங்கா நிற்க மாட்டேங்குது. கூத்துல வேஷம் கட்டறாப்ள கொட்டாங்குச்சி வச்சிட்டு திரிவானுங்க. உனக்கு அப்படி தான் வைக்கணும் போல. இதுல நகையை வேற உன்ற சித்தி போடறதா சொல்லிட்டு முழுங்கிட்டா. இங்க பாருடி… உன்னிடம் வாரிசையாவது எதிர்பார்க்கறேன். அதாவது பெத்து போடு.” என்று கூறிவிட்டு “அந்த அறைக்கு போ” என்று கை காட்டினார்.

  தவமலருக்கு மாமியார் பேசியது புரிந்தும் புரியாமலும் மனதில் பதிவாக, அறைக்கு வந்தவள் தன் உருவத்தை அங்கிருந்த சதுர கண்ணாடியில் கவனித்தாள்.
  
   கருப்புக்கும் மாநிறத்திற்கும் மத்தியில் உள்ள நிறம். அதனால் கதைகளில் வரும் சந்தன நிறத்தையோ, பால் வண்ண மேனி என்றோ இவளை நிச்சயம் வர்ணிக்க முடியாது.

   கண்ணாடியில் தவமலருக்கு தான் ஒரு கருப்பி என்று பதிவானது.
  இத்தனை நாள் உடலும், நிறமும் பெரிதாக கவனித்தது இல்லை. சொல்லப்போனால் கவனிக்கும் சூழலுக்கு அவள் எங்கே நிதானமாக இருந்தாள். வரிசைக்கட்டி பிரச்சனைகள் வேலைகள் சோகங்கள் நிற்க, தன்னையோ தன் நிறத்தையும் உடலையும் சரியாக கவனித்தது கிடையாது.

    இன்று அதை சுட்டிகாட்டி மாமியார் பேச, தன் கைகளையும் நிறத்தையும் பார்த்தாள்.
கண்ணீர் வரவும், அதை துடைக்க, காயத்ரி திருமண அலங்காரத்திற்கென்று பூசி வைத்த பவுடர் கலைந்தது. முகமே வெள்ளை சுண்ணாம்பை நீரால் துடைத்ததுபோல தனியாக எடுத்து காட்டியது.

இத்தனை நாள் வராத கவலை, புதுக்கவலையாக முதுகில் சேர்ந்தது.

இதில் கண்மை கரையவும் முகமோ  பவுடர் திட்டுதிட்டாக கலைந்து, கண்மையும் இழுவி, மலிவாக வாங்கிய உதட்டுசாயமும் தாடையில் இழுவியது.

  அந்த நேரம் கதிரவன் கதவை தாழிடும் சத்தம் கேட்டு பதட்டத்துடன் திரும்பினாள்.

  கதிரவனோ அளவான அலங்காரத்தில், நன்றாக இருந்தவள் ஏன் பேய் படத்தில் சரியாக மேக்கப் போடாத பெண்ணை போல நிற்கின்றாளென விழித்தான்.

   அவனுக்கு தவமலரை பார்த்தபோது ஏனோ அவசரம் காட்டாமல் நடந்து வந்தான்.

“அழுதியா புள்ள?” என்று தாடை பிடித்து கேட்க, அவசரமாய் தவமலர் கண்ணீரை மறைக்க இரண்டடி பின்னால் நகர்ந்தாள்.
தவமலர் முகத்தை துடைக்கவும் பவுடர் அழிந்தே போனது. திகிலுடன் வெளிறி நின்றாள்.

இதுவரை ஒரு ஆடவனோடு தனியாக நின்றதில்லை. காயத்ரி அத்தை ஏதேதோ சொல்லிவிட்டு சென்ற அறிவுரைகள் அப்பொழுது புரியாது முழித்தது, இன்று புத்திக்கு உரைத்தது.

‘இது விளையாட்டு இல்லை தவமலரு… கல்யாணம்.

கல்யாணம் பண்ணிட்டு போனா எல்லா பொண்ணுங்களும் நிம்மதியா இருக்கலாம்னு ஆயிடாது. அங்கயும் உன் சித்திகாரி மாதிரி மாமியாகாரி இருப்பா.
   அதுக்கூட விடுடி. எல்லா வீட்லயும் தான் மாமியாகாரி நாத்தனார்காரினு இருக்காங்க.
 
  உனக்கு பதினெட்டு வயசு கூட ஆகலை. சட்டத்துல பதினெட்டு முடியறதுக்கு முன்ன கல்யாணம் பண்ணினா அப்பன் ஆத்தால ஜெயில்ல போடுவாங்க தெரியுமா? சரி அதையும் மீறி கட்டி வைச்சா, புருஷனோட குடும்பம் நடத்த வேண்டாமா? புள்ளக்குட்டி பெத்துக்கணும். உன் உடம்பு தாங்குமா?’ என்று பேசியதற்கு அன்று காயத்ரியோடு வந்த அவரது அம்மா, ‘ஏன்டி… நான் எல்லாம் பதிமூனு வயசுல வயசுக்கு வந்தேன். ஆறு மாசம் ஆகவும், பதினாலு வயசு வந்தப்பவே என்னை கல்யாணம் கட்டி கொடுத்தாங்க. பதினாறுல முதல் புள்ளைய பெத்தேன். அப்பறமும் சொகுசாவா வாழ்ந்தேன்… வரிசையா புள்ளைய பெத்துட்டுல இருந்தேன்.

இந்த பதினாறு பெத்து பெருவாழ்வு வாழுங்கனு வாழ்த்தின மாதிரி, எனக்கு பதினாறு புள்ளைங்க பிறந்தது. என்ன… அதுல பத்து புள்ளைங்க ஏதேதோ ஜூரம் வயித்தால போயி செத்துடுச்சு. பத்து புள்ள தான் வளர்த்து ஆளாக்கினேன்.

  இவளுக்கு என்ன… பதினேழு வயசு வந்துடுச்சுல. அதெல்லாம் புள்ள பெத்து பொறவு வளர்ப்பா. அதெல்லாம் விவரம் வந்துடும். உடம்புலயும் சத்து பிடிக்கும். மீன் குட்டிக்கு என்ன நீந்த கத்து கொடுக்கவா செய்வாங்க’ என்று கூறியதிலும், சற்று முன் மாமியார் ‘புள்ளயாவது பெத்து கொடு’ என்று பொருமியதையும் அதை தொடர்ந்து கதிரவன் வந்ததில் திகிலுற்றாள்.

ஓரளவு இந்த பதினேழு வயதில், மணமான பிறகு என்ன நடக்குமென அறியாத சிறுமியில்லை தவமலர். படத்திலும் நாடகத்திலும் காதல் காட்சிகளை கன்னத்தில் கையை முட்டுக்கொடுத்து பார்த்து  சிரித்தவளே! ஆனாலும் நிஜத்தில் தன் முன் ஒருவன், இதற்கு முன் பழகாதவன், தாலி கட்டி நிறுத்தி, தனியறையில் அந்த நேரத்தில் நிற்க பயந்தாள்.

   கதிரவனோ “ஏம்புள்ள… எதுக்கு அழுவுற? என்ன இது மூஞ்சிலாம் பவுடர் அழிஞ்சு… கண்மை இழுவி,” என்று அங்கிருந்த கயிற்றில் துண்டு இருக்க, எடுத்து முகத்தை துடைத்து விட்டான்.

  கதிரவன் இருபத்தியொரு வயது என்றதாலும், படிப்பு வரவில்லை என்று தான் விவசாயமாவது பார்ப்போமென தன் வீட்டை சுற்றியுள்ள இடத்தில் சில பயிரை நட்டும், ஆடு மாடு மேய்த்தும் சம்பாரிக்கின்றான்.‌

   அதற்காக எல்லாவிதமான புரிதல் இருக்கும் என்று உரைத்திட முடியாது.

  தவமலர் அழவும், துண்டை வைத்து முகத்தை துடைத்து விட்டான். காலையில் காயத்ரி பார்த்து பார்த்து பவுடரை அடித்து அலங்காரம் செய்தவை, தவமலர் கண்ணீரில் பாதி கரைய, கதிரவன் முழுவதுமாக துடைத்தெடுத்தான்.

எல்லா அலங்காரம் போனதும், இயல்பான முகம் அவளை கூடுதலாக தான் அழகாக காட்டியது. பருவத்தில் இருக்கும் தவமலரின் இமைகள் படபடவென அடிக்க, கதிரவனின் மோக பார்வை அவளுக்கு விளங்கும் முன் மின்சார விளக்கு அணைக்கப்பட்டது.
  இவ்வளவு நேரம் மின்சாரம் எரிவதற்கே, ‘கதிரவன் என்ன விளக்கை அணைக்கலை’ என்று நினைக்க வைத்திருக்கலாம்.
 
  -தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
 
 

4 thoughts on “மையலிட்ட சிற்பமே-3”

  1. இப்பவும் குழந்தை திருமணம் பண்றாங்களே

  2. M. Sarathi Rio

    எல்லாரும் சேர்ந்து அவளை பயமுறுத்திட்டாங்களோ?

    (கதிரவன் வீட்டுக்கு வந்தது, வீட்டோட வசதியை பார்த்து வயிறெரிஞ்சது சித்தி அன்னம் தானே, ஆனா ராசாத்தின்னு பேர் போட்டிருக்கிங்க பாருங்க)

    😌😌😌
    CRVS (or) CRVS 2797

  3. Dharsini Priya

    Paavam endha ponnu 18 yrs kooda agala endha vayasula evlo kashtam edhula kathiravan kum 21 ah angaiyum maturity erukaadhu🙄 mamiyar kita maatikichi paavam enna nadakumo parpom 🧐🤔

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top