Forum

மதுர ஜில்லா... மச்ச...
 
Notifications
Clear all

மதுர ஜில்லா... மச்சானே!-9

2 Posts
2 Users
1 Reactions
216 Views
(@praveena-thangaraj)
Posts: 266
Member Admin
Topic starter
 
[#84]

அத்தியாயம்-9

அடுத்த சில நாட்களில் அலங்காநல்லூர் முழுக்க இனியனை பற்றி பரபரப்பாக பரவ ஆரம்பித்தது.

"அருளாளன் பெரிய பையன் ஊர்ல செட்டில் ஆகப் போறாராம்பா"
"பஞ்சாயத்து தேர்தல்ல அருளாளனுக்கு பதிலா இறங்கப் போறாராம்."
"வெளிநாட்டுல படிச்சவங்க... இப்ப நம்ம ஊருக்காக வேலை செய்ய வர்றாராம்." என்று தினுசு தினுசாக தேநீர் கடை முதல் சந்தை வரை பேச்சு ஓடியது.

இனியனோ அந்த பேச்சை மறுக்கவும் இல்லை. முழுசாக ஏற்கவும் இல்லை. எல்லாம் தானாக நடப்பது போல அமைதியாக காய் நகர்த்திக் கொண்டிருந்தான். பின்னால் அருளாளன் சிலரை வைத்து பொம்மலாட்டம் நிகழ்த்தினார்.

அன்று காலை, ஊர் பேருந்து நிலையத்தில் சில வேலைகள் நடந்து முடிந்துக் கொண்டிருந்தது.

பழைய சிமெண்ட் பெஞ்சுகள் அகற்றப்பட்டு, புதுசாக இரும்பு நாற்காலிகள் வைக்கப்பட்டன. சுவர்கள் பெயிண்ட் அடிக்கப்பட்டது. மேலே சிமெண்ட் ஷீட் அமைக்கும் வேலை நடந்தது.

"அண்ணே... எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாம இவ்வளவு செலவு பண்றிங்களே?" என்று ஒருவர் ஆச்சரியமாய் கேட்டார். சிலரெல்லாம் தேர்தலில் வெற்றி அடைந்தப்பிறகு கூட சொன்னதை செய்து விட்டு போக மாட்டார்கள். இனியன் செய்துவிட்டானே என்று மனதார பாராட்டினார்கள்

இனியன் கண்ணாடியை கழற்றி சிரித்தான். "நான் பிறந்த ஊருக்காக தானே செய்வது. நாம பயன்படுத்தற இடம் நல்லா இருந்தா நமக்கு சந்தோஷம்." என்றவன் பேச்சு மென்மையாக இருந்தாலும், அதை சுற்றி நின்ற இளைஞர்களின் கண்களில் வியப்பு இருந்தது.

"என்னயிருந்தாலும் வெளிநாட்டுல படிச்சவங்கன்னா ஊருக்கு நல்லது செய்யணும்னு இறங்கிட்டா பணத்தை யோசிக்காம செய்வாங்க." என்றார்கள்.

"பார்க்கவே அழகா அம்சமா இருக்காரு அருளாளன் ஐயாவோட புள்ளையா?'' என்று பெண்கள் சிலர் பேசிக்கொண்டனர்.

"அருளாளன் அண்ணனுக்கு சரியான வாரிசுயா.'' என்றனர்.

இனியனுக்கு இதெல்லாம் கேட்டு பரவசமாகும் சமயம், அந்த நேரம் தூரத்தில் புல்லட் சத்தம் கேட்டது. இனியனின் புன்னகை கொஞ்சம் கொஞ்சமாக மாயமானது.

அகிலன் வயல் பக்கம் இருந்து வந்தவன், பேருந்து நிலைய வேலைகளை பார்த்ததும் பைக்கை மெதுவாக நிறுத்தினான்.

அங்கிருந்த இளைஞர்கள் சிலர் உடனே அவனிடம் வந்து, "அண்ணே... பஸ் ஸ்டாப்பை பார்த்திகளா.‌.. அம்சமா மாத்திட்டாங்க" என்றார்கள்.

அகிலன் சுற்றிப் பார்த்தான். புது நாற்காலி, பெயிண்ட், இடமே சுத்தமாக மாறியிருக்க குப்பை போடுவதற்கு கூட தனி தொட்டி அமைத்திருந்தான். "நல்ல விஷயம் தானே." என்றான் சாதாரணமாக.

ஆனால் அவன் பார்வை நேராக இனியனை தான் தேடியது. இனியன் அங்கிருந்த ஒருவரிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தான். அவன் திரும்பி அகிலனை பார்த்ததும் லேசாக சிரித்தான்.

அங்கிருந்தவர்களுக்கு இவர்களது சொத்து பிரச்சனையால் பிரிவு ஏற்பட்டு அந்தளவு சுமூகமான உறவில்லை என்றது வரை தெரிந்தாலும், இளையதலைமுறை எப்படி பழகுகின்றனர் என்று பார்வையிட்டனர்.

"ஹாய் அகிலன்." என்று இனியனும்,

"வணக்கம் இனியன்" என்று அகிலனும் ஆரம்பித்தனர். இரண்டு பட்டாசும் வெடிக்காமல் வேடிக்கை காட்டும் விதமாக தான் நடையிட்டது.

"எப்படி இருக்கு?" என்று பேருந்து நிலையத்தை காட்டினான் இனியன்.

அகிலன் ஒரு நிமிடம் பார்த்துவிட்டு, "நல்லாதான் இருக்கு. ஊருக்கு பயன்படறது எதுவும் நல்லது தான். அது யார் செய்தாலும்.. செய்தவங்களை பாராட்டலாம். பெரிப்பாவை விட உனக்கு நல்ல மனசு" என்றான்.

அகிலனுக்கு புரிந்து விட்டது. இனியன் சாதாரண உதவி செய்யவில்லை. பெரிப்பா கீ கொடுக்க, இவன் எதையோ செய்கின்றானென யூகித்தான்‌.

அதே நேரம், ஊரின் மறுபக்கம் குடிநீர் தொட்டியிலிருந்து மண்ணுக்குள் குழாய் வழியாக தண்ணீர் செல்லும். அப்படி செல்கின்ற ஏதோவொரு இடம் பைப் உடைந்து குடிநீர் வீணானது. இவர்கள் இருக்குமிடம் வரை தண்ணீர் வெள்ளம் போல ஆறாக ஓடி வந்தது.
" இந்தா... தண்ணி விடற நேரத்துக்கு பைப் உடைந்ததால இங்குட்டு தண்ணி ஆறா ஓஞுது. இதுக்கு வேற அரசாங்க ஆளை கூப்பிடணும். அவன் எப்ப வருவானோ." என்று பேசினார் பெரியவர் ஒருவர்.

"என்னாச்சு மாப்ள?" என்று அகிலன் கேட்க, "தண்ணீர் பைப்பு எங்க உடைந்து இருக்குன்னே சரியா தெரிலைண்ணா. ஊருக்கு தண்ணி விடறப்ப எல்லாம், இந்த பகுதி முழுக்க தண்ணி வெள்ளம் மாதிரி பொங்குது." என்று சுட்டிக்காட்ட, புதிதாக கட்டிய பேருந்து நிலையம் பக்கமும் நீர் சரசரவென வரத்துவங்கியது‌.

இனியன் நீரை கண்டு தன் உடையில் சேறாகிடக் கூடாதென ஒதுங்கினான்.‌

அகிலனோ நீர் வந்த பாதையை வெறித்தபடி முன்னோக்கி நடந்தான். அணிந்திருந்த வெள்ளை வேஷ்டியை மடித்து பார்வையிட்டான். சொல்லப் போனால் நேராக உள்ளே இறங்கினான்.

வெள்ளை வேட்டி முழுக்க நீரும் சேறு படிந்தாலும் கவலைப்படவில்லை. தானாக குழாய் பைப் இருந்த இடத்தை ஆராயத்துவங்கினான்.
தன் நண்பன் ரகுவுக்கு அழைத்து, "மச்சான் பொதுக்குழாய் உடைந்து கிடக்கு. குழாய் பைப் சைஸ் சொல்லறேன். வாங்கிட்டு விரசா வா" என்று அங்கே இருந்தவர்களிடம் ஈட்டி மண்வெட்டி எல்லாம் எடுத்து வரக்கூறி அவ்விடத்தை தோண்டினான்.

சில நிமிடங்களிலேயே குழாயும் பைப்பும் உடைந்த இடத்தை ஆராய்ந்து சரிப்பார்த்து வைத்தான். ஒரு பெரியவரிடம் துண்டை வைத்து தற்காலிகமாக அடைத்தான்.
ரகு கூடவே பிளம்பரை வரவழைத்திருக்க, கல்லை தூக்கி வைத்து, தண்ணீர் ஓட்டத்தை திருப்பினான். மடமடவென குழாய் பைப்பை சீர்ப்படுத்த ஆரம்பித்தார்கள். அரை மணி நேரத்துக்குள் தண்ணீர் குழாய் பைப்பை சரிப்படுத்தினார்கள்.

"சூப்பர்பா அகிலா. நிமிஷத்துல களத்துல இறங்கி சரிப்படுத்திட்டியே." என்று ஆளாளுக்கு அங்கிருந்த பெரியவர்கள் பேச, அகிலன் சிரித்துவிட்டு, "பின்ன அரசாங்கத்துல சொல்லி அப்பறம் வந்து பார்க்கட்டும்னு விட்டா தண்ணீ வேஸ்டா போயிடும்ல." என்று கூறிவிட்டு அதே தண்ணீர் குழாயில் கைகால் அலம்பி, இனியனிடம் செய்கையால் விடைப் பெற்றான்.

"என்னயிருந்தாலும் ஒரு பிரச்சனைன்னா அரசாங்கத்தை நாடணும்னு இல்லாம அகிலன் செயலில் இறங்கிடறான். அந்த துடிதுடிப்பு இப்ப சிலரிடம் தான் இருக்கு" என்று அகிலன் கிளம்பிய பிறகும் பேசப்பட்டது.

'இந்த தடவை தேர்தல்ல நிக்கணும். இளைஞர் அணிக்கு அவனை மாதிரி பையன் தான் தேவை." என்று பேச்சு பரவியது.

இந்த இரண்டு சம்பவங்களும் மாலைக்குள் அருளாளன் காதுக்கும் சென்றது.

அவர் ஹாலில் அமர்ந்திருந்தார். முகம் இறுகியிருந்தது.

"என்னங்க... இனியன் நல்ல விஷயம் தானே பண்றான். அப்படியிருந்தும் கடுகடுனு இருக்கிங்க." என்று வேல்விழி மெதுவாக கூற, அருளாளன் பெருமையாக நினைக்கவில்லை.

"இனியன் பண்றது நல்ல விஷயம் தான்... ஆனா அந்த அகிலன் எங்க போனாலும் இனியனை விட மேல நின்னுடறான்." அந்த நேரம் இனியன் உள்ளே வந்தான்.

"என்னதான் குறை கண்டிங்கப்பா" என்று அலுத்தபடி வந்தான் இனியன். தந்தைக்கு எது செய்தாலும் சமாதானம் ஆகாமல் சலித்துக் கொள்கின்றாரே.

அருளாளன் உடனே, "இங்க பாரு." என்று கூப்பிட, ஒரு யூடியூப் சேனலில் அகிலன் வேஷ்டியை மடித்து கட்டி காலையில் அவனாக சரிசெய்த செயலை, யாரோ துண்டித்து துண்டித்து பதிவாக வீடியோ போட்டிருந்தார். அதிலும் பேக்ரவுண்ட் மியூசிக் வேறு சினிமா பாடல் ஒன்றை மாஸாக எடிட் செய்து சேர்த்திருக்க, அதை பார்க்க கேட்கவே அழகாக இருந்தது.

இனியன் புருவம் சுருக்கினான்.

"இது யாரு..‌ எடுத்தா?"

"இந்தூரு லோக்கல் சேனல் 'நடத்தறவன். தனியா சேனல் வச்சி ஏதாவது போடறான். சமீபமா 'நம்ம மதுர' சேனலில் நம்ம ஊர் விஷயமா போட்டு வைக்கறான்.

இப்ப காலம் அப்படி தானே. வீடியோ எடுத்து போட்டா பேசப்படுது. அதேக்குன்னு எங்க இருந்தாலும் இந்த பைய வீடியோவும் கையுமா அலையறான். அதானே மக்கள் கண்ணுக்கு தெரியுது. எத்தனை பேர் பார்த்திருக்காங்க பாரு. இதுக்கு முன்னயும் இதே சேனல் காரனுங்க தான் ஜல்லிக்கட்டுல மாட்டை அடக்கியதையும் போட்டிருக்காங்க." என்று கோபமாக சுட்டிக் காட்டினார்.

இனியன் சில நொடிகள் அமைதியாக இருந்தான்.

அவன் இதெல்லாம் நிறைய பார்த்திருக்கின்றான். ஆனால் தன்னை பற்றி பேசுவதை காட்டிலும் அகிலன் பெயர் இந்த ஊரில் பிரச்சித்தம் பெற்றதை தாமதமாக புரிய துவங்கியது. லேசான அதிருப்தி வந்தது.

சேற்றில் இறங்கி பிரச்சனையை சரிசெய்திட்ட அகிலன்.

'எங்களுக்கு அரசாங்கம் கூட வேணாம்... அகிலன் மாதிரி பையன் போதும்."

என்று ஒருவர் பேசிய வீடியோ. அதை பார்த்த அருளாளன் முகம் மீண்டும் இறுகியது.

இனியனோ அந்த வீடியோவை அமைதியாக பார்த்தான்.
அதன் கீழ் நிறைய கருத்துக்கள், 'Real hero'
'மண்ணின் மைந்தன்'
'அடுத்த இளைஞர் அணி தலைவன்' வந்துக்கொண்டே இருக்க இனியன் மெதுவாக போனை அணைத்தான்.

அவன் முகத்தில் முதல் முறையாக ஒரு அமைதியற்ற தன்மை தோன்றியது.

'பார்த்தல்ல... நீ என்ன செய்தாலும் இந்த ஊர்ல எவ்வளவு பில்டப் பண்ணினாலும், அகிலனுக்கு கிடைக்கும் மரியாதை வேற மாதிரி. நீ என்னயிருந்தாலும் வெளிநாட்ல படிக்க போயிட்ட. அவன் ஊர்காரனுங்க மனசை படிச்சி வச்சிட்டான்.
இதை தான் நான் படிச்சு படிச்சு சொல்லறேன். அவனை வீழ்த்த இந்த ஊரை வச்சி ஒன்னும் பண்ண முடியாது." என்று அருளாளன் எடுத்துரைக்க இனியன் பதிலின்றி நின்றான்.

அருளாளன் தூண்டிவிட்ட அந்த உணர்வு இனியனின் ஈகோவை மெதுவாக தீண்ட ஆரம்பித்தது.

அறைக்குள் வந்த இனியன், சிறுவயதில் சில விஷயத்தில் அகிலனிடம் தோற்றால் எப்படி மனம் நோக நெஞ்சு விம்ம துடிப்பானோ அவ்வாறு மனஅமைதியின்றி துடித்தான்.

தன்னிலை மறக்கும் நேரம் காவ்யா வீடியோ காலில் போனில் வந்தாள்.

இனியன் அவ்வழைப்பை ஏற்று முடிக்க, "ஏ.. இனியா.. அப்பாடா.. எப்படியோ போனை அட்டன் பண்ணிட்டியே. இரண்டு மூன்று நாளா கால் பண்ணினா பிசி பிசினு வந்துச்சு. இன்னிக்கு தான் ப்ரீயானியா?" என்று கேட்டாள்.‌

"ம்ம்" என்றான்.

"ஆமா... என்னப்பா நீயா ஒரு கால்‌ கூட செய்யலை. அதிசயம் தான் போ" என்று கேட்டாள்.

இனியனோ "அப்பாகிட்ட நம்ம லவ் மேட்டரை சொல்லிட்டேன் காவ்யா" என்றான்.

"ஏ..‌ சூப்பர் இனியா. வீட்ல என்ன சொன்னாங்க" என்றாள்.

"எதுவும் முட்டுக்கட்டை போடலை. ஆனா..." என்று இழுத்தான்.

காவ்யாவோ, "ஓகே ஓகே புரிது. உடனே வீட்ல ஓகே சொல்ல மாட்டாங்க. லேசா பிகு பண்ணினா ஆட்டோமெடிக்கா ஆறேழு மாசத்துல வழிக்கு வருவாங்க. நீ அதான் உம்முனு இருக்கியா?" என்றதும் இனியன் எவ்விதமான முகமாற்றத்தில் ஆனந்தமின்றி இருந்தான்.

"இனியன் ஏதாவது யோசிக்கறியா?" என்று கேட்க, "ஆங்... ம்ம்ம்... காவ்யா.. எனக்காக காத்திருப்பியா?" என்றான்.‌

காவ்யாவோ "அட லவ் பண்ணிட்டோம். உடனே வீட்ல சொல்லியிருக்க... கல்யாணம் பண்ணி வைக்க லேட்டாகலாம். நான் வெயிட் பண்ணுவேன். இனியன் நீ மனதை தளரவிடாத. உங்க வீட்ல நம்ம காதலை ஏத்துப்பாங்க. ஆறேழு மாசம் காத்திருக்கேன். நீயேன் டல்லா இருக்க" என்றாள்.

"அந்த அகிலன் இன்னிக்கும் கொடி கட்டி பறக்கறான் காவ்யா. அவன் பெயரை பலரும் உச்சரித்து பாராட்டி பேசறப்ப எரிச்சலாகுது. இந்த 'நம்ம மதுர'னு ஒரு லோக்கல் சேனல் அது கூட அவன் புராணத்தை போட்டு எரிச்சல்படுத்தறான்.

இந்த அகிலனை வீழ்த்த வழித்தெரியாம இருக்கேன். இத்தனைக்கும் ஊர் பஸ் ஸ்டாப்பை எப்படி அல்ட்ரா மாடலா மாத்தி வச்சேன் தெரியுமா?" என்றான்.

"அட... அவனுக்கு எதை செய்தா காயமாகுமோ அதை செய். அப்பறம் பாரு... ஆட்டோமெடிக்கா மனசளவில் டவுன் ஆவான்‌. இதுக்கெல்லாம் உட்கார்ந்து பீல் பண்ணுறியே. அவன் ஆப்ட்ரால் கிராமத்துல வளர்ந்தவன் காட்டான்" என்றாள்.

இனியனோ காவ்யா கண்ணை கண்டவனாக, "அந்த அகிலனோட ஏதாவது செய்யணும். ஆனா என்ன செய்யறதுனு தான் சட்டுனு தோனலை." என்று ஆலோசனை கேட்டான்.

''டெபனட்லி... ஏதாவது செய்து பாரு.. அந்த அகிலன் உடைந்து போவான். சிலரை சில சூழ்ச்சியால வெல்ல முடியும். எல்லா நேரமும் ஒருத்தன் ஜெயிக்க முடியாது இனியா. ஒரு சில நேரம் தந்திரமா காய்நகர்த்தும் யுக்தியில வெல்ல முடியும்." என்று நம்பிக்கை தந்தாள்.

இனியனோ "காவ்யா... எனக்கு கொஞ்சம் டைம் தர்றியா.. அவனை ஜெயிக்கற வரை என்னை டிஸ்டர்ப் பண்ணாத." என்றான்.

"அட... நானே போன் செய்தது எதுக்காம். நானும் இப்ப பிசியாக போறேன். என் காலேஜ் பிரெண்ட் ஆலியாவுக்கு மேரேஜ். அதுக்கு அவளோட ஊருக்கு போய் ஜமாய்க்க தாய்லாந்து போறேன். ஆலியா அப்பாவோட பிரெண்ட் பொண்ணு என்பதால மணப்பெண் தோழியா நான் கூடவே இருப்பதா சொல்லிட்டேன். இந்த லீவு முடிய நானும், உங்கப்பா தேர்தல் முடிய நீயும், பிசியா இருப்பதால சொல்லிடலாம்னு தான் கால் பண்ணினேன்." என்றாள்.

இனியன் கணக்கு வேகமாய் போட்டது. இந்த இடைப்பட்ட காலம் அகிலனை வீழ்ந்த வேறொரு வழியில் அவனை தாக்க வேண்டுமென்று சிந்தித்தான்.

தந்தையின் தம்பி மகன், தனக்கும் தம்பி முறை என்ற உறவெல்லாம் மாறி, சம வயதுள்ளவனிடம் போட்டியிடுவது மட்டுமே கருத்தில் பதிந்தது.

"ஓகே இனியன் டேக் கேர்." என்று காவ்யா அணைத்திட, இனியன் போனை ஓரமாய் வைத்துவிட்டு அகிலனை வீழ்த்த தந்திரமாய் யோசித்தான்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

https://onlinetamilnovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a9%e0%af%87-9/


 
Posted : June 19, 2026 8:46 am
(@kavi-bharathi-arunkumar)
Posts: 128
Estimable Member
 

Appan vum paiyan um ore mathiri than irukaga ah ithae akilan iniyan seiyutha thuku endha vengeance um kammikala aana andha gunam iniyan kita illa yae nama jeikanum nu nenaikirathu thappu illa aana ivanga ennam andha mathiri illayae avan ah entire ah azhikanum nu la nenaikira ga ah ippo ivan vera konjam nallaiku enna disturb panna tha ah kaviya kita solli tu akilan ah jeikanum nu plan poduran aana athula madhura ah va izhuthu vida ma irundha seri .


 
Posted : June 19, 2026 9:15 am

Scroll to Top