Forum

மதுர ஜில்லா... மச்ச...
 
Notifications
Clear all

மதுர ஜில்லா... மச்சானே!-7

4 Posts
3 Users
3 Reactions
260 Views
(@praveena-thangaraj)
Posts: 265
Member Admin
Topic starter
 
[#81]

அத்தியாயம்-7

அகிலன் வயலுக்கு சென்று திரும்பிவந்ததிலிருந்து கோபத்தை மறைக்க முடியாமல், நேராக வீட்டுப் பின்புறம் வந்து நின்றான்.

மீனாட்சியோ, "என்னடா இப்படி முகம் இறுகி வர்ற?" என்று கேட்டார்.

"ஒன்னுமில்லைம்மா" என்றவன், சில்லென்ற தாகம் தணிக்கும் பானை குடத்தில் இருந்த தண்ணீரை மடமடவென குடித்தான். மனசு மட்டும் அமைதியாக குளிரவேயில்லை.
அவன் கண் முன்னே இன்னும் அதே காட்சி, அருளாளன் வீட்டு வாசலில் நின்ற மதுரா, இனியன் முன் தட்டோடு நின்றது. இதில் அவன் கையை பிடித்தது.
எல்லாமே மனதை எரிச்சலடைய வைத்தது.

அந்த நேரம் வாசலில் இருந்து, "மச்சான்" என்ற மதுராவின் குரல் கேட்டது. அகிலன் திரும்பிப் பார்க்க, மதுரா மூச்சுவாங்க ஓடிவந்தாள். அவளுக்கு பின்னால் நிலானி இவளது ஓட்டத்திற்கு இணையாக ஓடமுடியாமல் சோர்வுடன் நடந்து வந்தாள்.
  மதுரா முகமே அவன் கோபத்தை புரிந்து கொண்டது போல இருந்தது.

"என்ன?" என்றான்.

"நான் உங்களை பார்க்க தான் வந்தேன்" என்றதும், ''அப்படியா.. பெரியப்பா வீட்டுக்கு பக்கமாவா இருந்தது. அந்தபக்கம் தட்டு பிடிச்சிட்டு நின்ற... அந்த சோலி முடிஞ்சிடுச்சா?" என்றான் கசப்பாக.

அந்த வார்த்தை நேராக மதுராவையே குத்தியது.

"நான் கிளம்பறேன்" என்று கண்கள் கலங்க திரும்ப, "ஏய்… நில்லு" என்று அகிலன் கூப்பிட்டான்.

மதுரா மெதுவாக திரும்பினாள்.
"இங்க வா." அவள் அருகே வந்ததும், "எனக்கு எங்க பெரிப்பா தான் ஏதாவது வம்பு பண்ணி கோபமூட்டுவார்னு பேசுவ. என்ன அந்த பக்கம்?" என்றான்.

"அம்மா தான் அனுப்பினாங்க" என்றாள் மெதுவாக.

"அத்தை அனுப்பினா அப்படியே நாள் முழுக்க நின்னுட்டு இருப்பியா? ஆமா.. எதுக்கு இவ்ளோ சீக்கிரமா காலையிலயே அவன் வீட்டுக்கு, அத்தை உன்னை அனுப்பினாங்க." என்றான்.

"அது" என்று தடுமாற, நிலானி உடனே, "அக்காவை இனியன் மச்சான் தான் பேசிக்கிட்டு நிக்க வச்சாரு. அம்மா இனியன் மச்சான் வந்திருக்கு கடம்பபால் கொடுத்துட்டு வர சொல்லுச்சு. அவருக்கு பிடிக்குமாம். ஊர்ல இருந்து வந்தவருக்கு தர சொன்னாங்க" என்று உண்மையை போட்டுடைத்தாள்.

"நிலானி" என்று மதுரா அவளை முறைக்க, அகிலனோ உள்ளுக்குள் சிரிப்பை மறைத்தான். இனியன் வெளிநாட்டில் இருந்ததால் அத்தை இவ்வாறு கிராமத்துக்கே உரிய உணவு வகைகளை கொண்டு செல்ல உந்தியது தவறாக தெரியவில்லை‌. இளையமதி அத்தையின் குணமே அதுதான். பெரிதாக காசு பணம் சேர்த்திட தெரியாவிட்டாலும், இது போல வீட்டில் விளைந்ததை எல்லாம் இரண்டு அண்ணன் வீட்டிலும் அவ்வபோது கொண்டு வந்து பார்த்து செல்வது தான்‌.
 
"ஆஹா… அப்படியா? என்ன பேசினார் வெளிநாட்டுல படிச்ச உங்க இனியன் மச்சான்?" என்று கேட்டான்.

மதுரா முகம் சுருக்கி, "அவர் வாங்கி தந்த சீலை பிடிச்சிருக்கானு கேட்டார்" என்றாள்.
"ஓ அவன் வாங்கி தந்த சீலையா?" என்றான். அகிலன் புருவம் சுருக்கினான். ''உனக்கு மட்டும் வாங்கினானா?'' என்று ஆச்சரியமாய் கேட்டான்‌.

"இல்ல… இன்னொரு சீலை இருந்துச்சு" என்றாள்.

அவன் உடனே, "அப்ப நிலானிக்கும் சேர்த்து வாங்கியிருப்பான்." என்று சாதாரணமாக எடுத்துக் கொண்டு கூறினான்.

அந்த ஒரு வார்த்தையிலேயே அவன் மனசு அமைதியாகியது.
‘இனியன் தனியாக மதுராவுக்காக மட்டும் வாங்கவில்லை' என்ற எண்ணமே உள்ளுக்குள் குளிர்ச்சியளித்தது. அத்தை மகளுக்கு என்று வாங்கி தரக்கூடாதா. இனியன் அப்படி வாங்கியிருப்பான் அல்லது பெரிய மாமா ஏதாவது அப்படி வாங்கி வர கூறியிருக்கலாம்.

மதுராவோ அகிலன் முகம் இயல்பாய் மாறியதை கவனித்தாள்.

"மச்சான்… நீங்க கோபமா இருந்திங்களா.. இப்ப என் மேல கோபமில்லையே." என்று மெதுவாக கேட்டாள். "நான் எதுக்கு கோபப்படணும்?" என்றான்.

"இனியன் மச்சான் சீலை வாங்கியதுக்கு நீங்க கோபப்படுவிங்கனு கேட்கலை. அந்த வீட்டுக்கு போனதால." என்று வினாத்தொடுத்தாள்.

"நீ அங்க போனது எனக்கு பிடிக்கல." என்று நேராக சொன்னான். மதுரா அமைதியானாள்.
"இத்தனை நாளா பெரியப்பா வீட்டுக்கு போகாத நீ… அவன் வந்த உடனே போனதும்… கொஞ்சம் பொறாமை வந்துடுச்சு.'' என்றான்

"ஏன் பொறாமை..? நான் தான் அம்மா அனுப்பினாங்கன்னு சொன்னேன்ல" என்றாள்.

"ம்ம்… என்னனு தெரியலை... நீ அங்க நின்னது பிடிக்கல. ஆனா அதுவும் உனக்கு மாமா வீடு. அத்தை அந்த உரிமையில அனுப்பி வச்சியிருக்கலாம் " என்றான்.

அந்த உரிமை கலந்த வார்த்தையில் மதுராவுக்கு உள்ளுக்குள் இனிப்பு பரவியது.

"சரி… இனிமே அம்மா சொன்னா நைஸா நிலானியை அனுப்பிட்டு வந்துடறேன்." என்றாள் சமாதானமாக.

அகிலன் அவளை சில நொடிகள் பார்த்தான். மெருன் வண்ண தாவணியில் அவள் இன்னும் அழகாகவே தெரிந்தாள். அவள் கண்கள் மெதுவாக உயர்ந்தது.

நிலானி இவர்கள் அருகே வரவும், தங்கையை அழைத்துக் கொண்டு அத்தை மீனாட்சியை காண சென்றாள். அவள் சென்றபிறகும் அகிலன் அவள் போன வழியையே பார்த்துக் கொண்டிருந்தான். எப்படியும் அன்னையிடம் பேசி சிரித்து தங்கை தூரிகாவிடமும் வம்பளந்து செல்வாள் மதுரா.
தனக்கு வேறு வேலை காத்திருக்க புல்லட்டை உதைத்து புறப்பட்டான் அகிலன்.

அதே நேரம், இனியன் தனது அறைக்குள் சென்று கதவை பூட்டினான்.

கதவை சாற்றிய உடனே வீடியோ காலில் காவ்யா அழைத்தாள். ஏற்கனவே ஊர் இளைஞர்களிடம் பேசும் போது, நேரத்தை சொல்லி வீடியோ காலில் வருவதாக தெரிவித்திருக்க, நாசூக்காய் பேசி முடித்து இளைஞர்களை அனுப்பிவிட்டு, அகிலன் வரவும் மதுராவை வழிமறைத்து பேச்சு தந்து அவனையும் கோபமூட்டிவிட்டு, பேசி அனுப்பி நேரம் பார்த்து கதவை லேசாக சாற்றினான்.

அலைப்பேசி திரையில் காவ்யாவின் முகம் பளிச்சென தெரிந்ததும் அவன் முகமே மென்மையானது.

"ஹாய் பேபி" என்றான்.

"இப்பதான் கால் பண்ண தோணுச்சா டா?" என்று உதட்டை சுழித்தாள் காவ்யா.

"ஏய்… பேபி கோபமா?" என்றான்.
"பின்ன.. கால் பண்ணறேன்னு சொன்ன... சாட்டிங் மட்டும் தான். கேட்டா பிஸிபிஸினு பேசற. அந்த கிராமத்துல என்னடா வேலை இருக்கு" என்றாள்.

"அடடா… அப்பாவோட வேலை தான். அவர் சார்பில் சில வேலையை இழுத்து போட்டு பண்ணினேன். உனக்கு தெரியுமா? எங்க ஊர் என்ட்ரன்ஸ்ல பேருந்து நிலையம் தான் ஹைலைட். அதையே சென்னையில மாதிரி உட்கார சேர் எல்லாம் போட்டு நீட்டா மாத்தறதா பேசிட்டு இருந்தேன். அதுக்கான வரவு செலவு வேலைனு பிஸிடி செல்லம்.
இல்லைன்னா உனக்கு கால் பண்ணாம இருப்பேனா? என் புஜ்ஜிம்மா கோபப்பட்டா எனக்கு கஷ்டமா இருக்குடி." என்று குழைந்தான்.
"பொய். நீ அங்க போனதும் என்னை மறந்துட்ட" என்றாள் காவ்யா.

"நிஜமாடி… இங்க வந்ததிலிருந்து உன்னையே மிஸ் பண்ணிட்டு இருக்கேன்." காவ்யா முகம் மெதுவாக மாறியது.

"நானும் உன்னை மிஸ் பண்ணறேன் இனியன்" என்றவளது விழிகள் அவனை சிலிர்க்க வைக்க இனியன் சிரித்தான்.

"இப்படி பேசாதடி… இப்பவே கிளம்பி அங்க வரணும்னு இருக்கு." என்றான்.

"பெட்டர் வந்துடு." என்றாள் காவ்யா.

"அப்ப உங்கப்பா என்னை உயிரோட விடுவாரா? இப்பவே  எங்க வீட்ல உன்னை பத்தி சொல்லி ஓகே வாங்கிட்டு பிறகு காதலிக்க சொல்றவர் ஆச்சே" என்றதும் இருவரும் சிரித்தார்கள்.

அந்த நேரம் காவ்யா சற்றே தயக்கமாக, "இனியா… உங்கப்பாவிடம் நம்ம காதலை சொன்னியா?" என்று கேட்டாள்.

இனியன் சில நொடிகள் அமைதியானான். சற்று விளையாட்டை மூட்டை கட்டிவைத்துவிட்டு "இன்னும் இல்லை காவ்யா" என்றான்.

"ஏன் சொல்லலை... நீ அங்க போனதே நம்ம காதலை உங்க வீட்ல சொல்லி ஓகே வாங்க தானே. பிறகென்ன?" என்றாள்.

"இங்க வந்ததிலிருந்து அப்பா முகமே சரியில்லை. அந்த அகிலன் வேற மாட்டை அடக்கி வீம்பா பேசிட்டு போனதுலயிருந்து அப்பா அவன் பெயரையே சொல்லி எரிச்சலில் சுத்தறார். இதுல ஒரு யூடியூப் சேனல் 'நம்ம மதுர'னு பேரு. அதுல லைவ்வா அகிலன் மாட்டை அடக்கியதை போட்டு விட்டுட்டாங்க. ஒரு பெருசு அதை வேற அப்பாவுக்கு அனுப்பிடுச்சு. அதை பார்த்து எக்ஸ்ட்ரா கோபப்படறார்.

இதுக்கு நடுவுல பஞ்சாயத்து எலக்ஷன் அதுல புதுசா இளைஞர் அணி தலைவரா அகிலன் நிற்கறான். அப்பா கோபமா சுத்தறார். இதுல நம்ம விஷயத்தை சொல்லவே முடியலை. நான் கூட ஏதாவது அப்பாவுக்கு பேவரா சொல்லி, மனசை ரிலாக்ஸா மாத்தி, நம்ம மேட்டரை சொல்ல பார்த்தேன். நேரம் அமைய மாட்டேங்குது காவ்யா." என்றான்.

"அப்ப நம்ம விஷயம்? இனியன் எங்கப்பா எனக்கு வேற கல்யாணம் பண்ணி வச்சிட்டா உனக்கு ஓகேவாடா?" என்றாள்.

"ஏய்… உன்னை நான் விளையாட்டுக்காக லவ் பண்ணல. நிஜமாவே உன்னை விரும்பறேன் காவ்யா. நீ இல்லாம என் வாழ்க்கையே நினைக்க முடியாது." என்றதும் காவ்யா கண்கள் கலங்கியது.

"இனியன் நீ என்னை ட்ரூவா விரும்பற. எனக்கு அது தெரியுது. உன் சிட்சுவேஷன் கூட புரியுது. ஆனா நீ அங்க போனதுலயிருந்து எங்கப்பா தினம் தினம் கேட்கிறார்.  இனியன் வீட்டிலிருந்து எப்ப பொண்ணு பார்க்க வருவாங்கன்னு, என்ன சொல்லி சமாளிக்கறது." என்றாள்.

"உன்னை பொண்ணு பார்க்க வருவேன் காவ்யா. கொஞ்சம் டைம் கொடு. அப்பா இப்ப தேர்தல் விஷயத்துல ரொம்ப தீவிரமா இருக்கார். அது மட்டும் முடிச்சா கூட நானே அவரிடம் பேசிட்டு குடும்பமா கூட்டிட்டு வர்றேன்" என்றான்.

"என்னவோ இனியா... குயிக்கா முடிவெடு. இல்லை... நான் அங்க வந்துடுவேன்" என்றாள்.

"அப்படி வந்தாலும் எனக்கு ஓகே தான்." என்று சிரித்தான்.

"போடா.." என்றாள்.

"ஓகே பேபி... வேறவொன்னுமில்லையே. நான் நைட் கால் பண்ணறேன். லவ் யூ.. உம்மா... பை பேபி." என்று தொலைப்பேசியில் பறக்கும் முத்தம் தந்துவிட்டு, வீடியோ காலை கத்தரித்தான்.

அறை கதவு திறந்தது. அருளாளன் உள்ளே வந்தார். இனியன் உடனே போனை கீழே இறக்கினான்.

  இதுவரை எதிரே அவன் இஷ்டத்திற்கு பேசியவன் தந்தையை கண்டதும் பதட்டமானான்.

"பேசிட்டு இருந்தியா?" என்று கேட்டார்.

"ம்ம்ம்… பிரெண்ட்ப்பா. பிரெண்ட் கூட பேசிட்டு இருந்தேன்." என்றான். 
இப்பஅவசரத்தில் பொய் முன்னிலை வந்துவிட்டது. உண்மை பின்னடைந்து வந்திருந்தால் கூட இனியனுக்கு தோதுவாக காவ்யா மீதிருந்த காதலை தெரிவிக்க வாய்ப்பாக அமைந்திருக்கும்.

அருளாளன் சந்தேகமாக பார்த்தாலும் எதுவும் சொல்லவில்லை. "கீழே வா. உன்னிடம் சிலதை பேசணும்." என்று அழைத்தார்.

"இதோ வர்றேன்ப்பா." என்று போனை பேக்கெட்டில் வைத்து தந்தையை பின் தொடர்ந்தான்.‌ கீழே வந்த இனியன், தந்தை அருகே அமர்ந்தான்.

அருளாளன் மெதுவாக, "இனியா… நீ இங்க வந்ததிலிருந்து நான் உன்னிடம் ஒன்னு சொல்ல நினைக்கிறேன். ஆனா நீ அதை உதாசினப்படுத்திடுவியோனு கஷ்டமாயிருக்கு. ஆனா சொல்லி பார்த்து உன் முடிவை தெரிந்துக்கிட்டா நான் திடமா இருப்பேன்." என்றார்.

இனியன் எதையும் யோசிக்காமல், "அப்பா... நீங்க எள்ளுன்னா நான் எண்ணெய்யா நிற்பேன் அப்பா. என்னனு சொல்லுங்க." என்றான்.

இனியனை பார்த்து பார்த்து தயங்கியவர், "என் தம்பி அதியமானை நான் லேசுல சாய்ச்சிப்புட்டேன். அவன் என் முன்ன நிற்கவும் தயங்குவான். ஆனா என்னால அகிலனை அசைச்சு பார்க்க முடியலைய்யா. நான் அவன் பாதையை அடைச்சாலும் காட்டு மரமா வளர்ந்து, எனக்கான பாதையையும் இல்லாம பண்ணிடறான்.

இந்த மருதுவை வச்சி எத்தனை காலம் நம்ம வீராப்பா இருந்தோம். ஒத்த போட்டில மாட்டை அடக்கி என் வீராப்பையும் அடக்கிட்டான்.
  தேர்தலிலையும் இளைஞன் அணி தலைவரா அடியெடுத்துட்டா, என்னை தினம் தினம் நெய்யாண்டி செய்து கேள்வி எழுப்புவான். இதெல்லாம் காண சகிக்கலை இனியா.

  இந்த அகிலனை சாய்க்க என்னிடம் ஒரு யோசனை இருக்கு. அதை செய்ய உன்னால முடியும்." என்றார்.

"என்னனு சொல்லுங்கப்பா. உடனே செய்துடுவோம்" என்றான் இனியன்.

"உங்கத்தை இளையமதியோட பொண்ணு மதுரா இருக்காளே..." என்றார்.

இனியனும், "ஆங்... மார்னிங் கூட சீம்பால் தந்துட்டு போனா. நீங்க கூட ஏர்போர்ட்ல இருந்து வர்றப்ப அம்மாவுக்கு சேலை எடுப்போம்னு கூட்டிட்டு போயிட்டு, இளையமதி அத்தைக்கும், அவளுக்கும் சேலை எடுத்திங்க. இதுல என் சார்பில் தரச்சொன்னிங்க. அவ என்னடானா சேலையை பார்த்தாலா கூட தெரியலை. நான் என்ன கலர்னு கேட்டா திருதிருனு முழிக்கறா.
  அகிலனை பத்தி பேசறப்ப அவளை எதுக்கு பேசறிங்க" என்றான்.

"அவளை கல்யாணம் கட்டிக்கோ இனியா. அகிலனை சாய்க்க முடியும்" என்றார்.

இனியன் அதிர்ச்சியடைந்து தந்தையை ஏறிட்டான்.

-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்

https://onlinetamilnovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a9%e0%af%87-7/

 


 
Posted : June 17, 2026 4:10 pm
(@kavi-bharathi-arunkumar)
Posts: 126
Estimable Member
 

Enna manushan indha aalu ivar oda vetti verapu ku madhura ah pagadai ah use pannuvaru ah chai 


 
Posted : June 18, 2026 12:40 pm
(@kavi-bharathi-arunkumar)
Posts: 126
Estimable Member
 

Iniya ne unga appa kita first yae unnoda love ah solli irundhu irukalam ippo unga appa kaga ne madhura ah va marriage panna ok nu solluviya enna .

First of all madhura enna panna indha manushan vermbuku nu akilan kita prachanai pannuraru ippo vum avan ah kastapadutha madhura ah va kalyanam pannika solluraru ava enna porul ah ivar oda istathuku uruti vilayada ah 


 
Posted : June 18, 2026 12:42 pm
(@aishu-selva)
Posts: 31
Eminent Member
 

Nenaithathu than ..

Unmaiya marainthal ipadi than nadakum iniyan


 
Posted : August 15, 2026 7:45 pm

Scroll to Top