meta-google-adsense-platform-account: ca-host-pub-2644536267352236 meta-google-adsense-platform-domain: sitekit.withgoogle.com

நின் பிரேமம் என் சிநேகம்-33

அத்தியாயம்-33

கதவின் அருகே நின்றவனை பார்த்த நொடியில் கௌசிக்கின் இதயம் ஒரு தாளம் தப்பியது.

ஹ்ருதேஷ் வாசல் விளக்கின் வெளிச்சத்தில் அவன் முகம் தெளிவாக தெரிய, அவன் பார்வை நேராக குழந்தை மீதிருந்தது.

கௌசிக் தன்னாலேயே குழந்தையை இன்னும் இறுக்கமாக மடியில் வைத்தான். ஹ்ருதேஷ்  பறித்து விட்டு தன்னை உதாசினம் செய்வானோ என்ற அச்சம்.

அடுத்த நொடியே தன் செயலில் அவனே திகைத்தான். ஹ்ருதேஷ் தானே அப்பா. அப்படியிருக்க அவன் குழந்தையை அவன் கேட்டா தரணும். எனக்கென்ன உரிமையிருக்கு?
அந்த உணர்வு கையை சற்று தளரச் செய்தது.

ஹ்ருதேஷ் மெதுவாக நடந்தான். ஒவ்வொரு அடியும் அளந்து வைத்தது போல. அவன் பார்வை இன்னும் குழந்தை மேல் தான். கௌசிக்கை நோக்கி ஒருமுறையும் திரும்பவில்லை.
கௌசிக்கின் உள்ளே ஏதோ சுருண்டது.
    ‘பேசு… ஏதாவது பேசு…’ என மனசாட்சி தூண்ட உதடும் தொண்டையும்  உலர்ந்திருந்தது.

ஹ்ருதேஷ் அருகே வந்து நின்றான். குழந்தையின் மூச்சு சத்தம் கூட அந்த அமைதியில் கேட்கும் அளவுக்கு சூழல் நிற்க,
கௌசிக்கை மெதுவாக தலை தூக்கி பார்த்தான்.
இரு நண்பர்களின் பார்வை சந்தித்தது.

ஒரு நொடி.

அந்த ஒரு நொடி‌.. பழைய சிரிப்பு, சண்டை, நட்பு, துரோகம், கோபம், எல்லாம் ஓடி போய் திரும்பி வந்தது போல ஹ்ருதேஷின் கண்களில் சோர்வு இருந்தது. மீண்டும் கௌசிக் தன்னிடம் முகம் காட்டி சென்றால் ஹ்ருதேஷிற்கு தாங்க இயலாதே.

தற்போது தன் மகனை தூக்கி வைத்துள்ளான் என்றவொரு மனநிம்மதி.
அவனாக வந்திருக்கான் உதவி செய்திருக்கின்றான்.‌

அந்த எண்ணம் அவனுடைய முகத்தில் தெரியாமல் ஒளிந்தது.

கௌசிக் உதட்டை நனைத்தான்.

அவனுக்கும் வார்த்தை வரவில்லை.
ஹ்ருதேஷ் கையை மெதுவாக நீட்டினான். குழந்தை முகத்தை தொடும் முன் ஒரு நொடி நின்றான்.
அவன் விரல்கள் நடுங்கின.
கௌசிக்கின் மார்பில் ஏதோ நெரித்தது.
  “தூங்கறான்” என்று கிசுகிசுத்தான் அவன். குரல் தன்னையே ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு மென்மை.
ஹ்ருதேஷ் சிறிது தலையசைத்தான். அவன் விரல் குழந்தையின் கன்னத்தை மெதுவாக தொட்டது.
குழந்தை முகம் சுருங்கி மீண்டும் தளர்ந்தது.
அந்த நொடியில் ஹ்ருதேஷின் மூச்சு உடைந்தது போல வெளியேறியது.
அவன் கண்கள் மூடியது. நான் “அவளை பார்த்துட்டு வர்றேன். இல்லைன்னா… என்னை விட இன்னிக்கு பிறந்தவன் முக்கியமானு கேட்டு என்கிட்ட சண்டைக்கு வருவா.. உன்னை மாதிரியே..” என்றதும் கௌசிக் சிரித்தான்.

கௌசிக் அந்த மாற்றத்தை பார்த்தான். அந்த நொடியில் தான் உணர்ந்தான்‌
   ஹ்ருதேஷ் தன்னை விட மிதிலாவையும் அவள் காதலையும் நாடியதில், தான் முகம் தூக்கி சண்டையிட்டோமோ? அதை தான் சொல்கின்றானா?!

இங்கே மிதிலாவின் பார்வை
மருந்தின் மந்தமான வாசனையில்,
தலைக்கு மேலே சுழன்ற விளக்கின் வெள்ளை வெளிச்சம், தூரத்தில் யாரோ மெதுவாக பேசும் சத்தம்…
மிதிலா கண்களை திறக்க முயன்றாள்.
உடம்பு முழுக்க ஒரு சோர்வு.
வயிற்றில் வெறுமை.
ஆனா அந்த வெறுமையோடு சேர்ந்த ஒரு ஆழ்ந்த நிம்மதி.
குழந்தை…
அந்த எண்ணம் வந்த நொடியே அவள் மூச்சு வேகமாயிற்று.
கண்களை மீண்டும் திறந்தாள்.
முதலில் தெளிவில்லாத நிழல்கள். பிறகு மெதுவாக உருவம் எடுத்தது.

வாசலருகே சேர் அருகே இருவர்
ஹ்ருதேஷ்-கௌசிக்.
அவர்களுக்கிடையில் ஒரு சிறிய வெள்ளை துண்டில் குழந்தை.

மிதிலாவின் இதயம் மெதுவாக துடித்தது. அவர்கள் பேசாமல் பார்வை பரிமாற்றம் செய்ததை கவனித்தாள்.

மிதிலா கணவன் வந்ததும்
அசைய முயன்றாள். உடம்பு உடனே எதிர்த்தது. ஒரு லேசான வலி. உதட்டில் சத்தமில்லா மூச்சு.
அந்த சத்தத்தைக் கேட்டு ஹ்ருதேஷ் நெருங்கினான்..

அவன் பார்வை அவளைத் தொட்ட நொடி. முகம் முழுக்க ஏதோ உடைந்தது போல மென்மையாயிற்று.
“மிது” ஹ்ருதேஷின் குரலில் கிசுகிசுப்பு.

கௌசிக் உடனே தங்கை பக்கத்திற்கு நகர்ந்தான். அவன் முகத்தில் ஒரு தயக்கம். ஒரு நிம்மதி… இரண்டும் கலந்து இருந்தது. ஹ்ருதேஷ் குழந்தையை சரியாக பார்த்தானோ என்னவோ தங்கையோடு சேர்ந்து பார்க்க விரும்பினால்?

அவன் எதிர்பார்த்தது போல மிதிலா பேச முடியவில்லை. அவள் பார்வை குழந்தை மேல் ஒட்டிக் கொண்டது.
ஹ்ருதேஷ் அருகே வந்தவன் கைகளில் குழந்தை.
“பாரு” என்றான் மெதுவாக.

அவன் குனிந்து குழந்தையை அவள் பார்வைக்கு அருகில் கொண்டுவந்தான்.
சிறிய முகம். சுருங்கிய விரல்கள். மூச்சின் லேசான அசைவு.
மிதிலாவின் கண்கள் நிரம்பின.
‘இது… நம்ம குழந்தை’ என்ற உணர்வு அவளுக்குள் அலை போல பரவியது.

அவள் கையை உயர்த்த முயன்றாள், ட்ரிப்ஸ் போட்ட கைகள் நடுங்கியது. ஹ்ருதேஷ் உடனே அவள் கையை பிடித்து குழந்தை அருகே கொண்டு போனான்.
அவள் விரல் குழந்தையின் கன்னத்தை மெதுவாக தொட்டது.
உலகமே அந்த நொடி அமைதியாக நின்றது போல.

கண்ணீர் அவள் காதருகே வழிந்தது. “ஹ்ருதேஷ்” அவள் குரல் மிக மெலிதாக கேட்டது.

“ஹ்ம்…” என்றான் அவனும்.

“ஏன்டா உடனே வரலை.” என்றாள்.

“வேலையில வரமுடியலைடி சாரி” என்றான்.‌

கௌசிக் ஹ்ருதேஷ் இருவரையும் பார்த்த மிதிலா, ”என் மேல உங்க இரண்டு பேருக்கும் கோபமா? நான் உங்க நட்பை சிதைச்சிட்டு என் காதலை அடைய விரும்பலை. என் காதலை புரிஞ்சிப்பிங்கனு நினைச்சேன்” என்றாள்.
  “ஏ லூசு… எதுக்கு இந்த டாபிக். ரெஸ்ட் எடு” என்றான் ஹ்ருதேஷ்.

கௌசிக்கும், “உன்னால பேசவே முடியலை கஷ்டமாயிருக்கும். முதல்ல ரெஸ்ட் எடு. முடிஞ்சதை பத்தி பேசாத.” என்றான்.

“டேய்… குழந்தையை சரியா பார்த்தியா இல்லையா. இங்க பாரு உன்னை மாதிரியே கைகால், மூஞ்சு கூட அச்சு அசலா உன்னை குட்டியா பார்க்கற மாதிரி இருக்கு” என்று கௌசிக் ஆனந்த கண்ணீரோடு பேசினான்.‌

ஹ்ருதேஷோ “ரொம்ப ஸ்ட்ராங்கா உன் கையை பிடிச்சிருக்கான். ரொம்ப அழுத்தக்காரனா உன் தங்கச்சி மாதிரி இருப்பான்.  தாய்மாமா குணமும் வரும் பாரு” என்றான் அவனும்.
இருவரும் இயல்பாக பேச மிதிலா நிம்மதியாக  பார்த்தாள்.

  “இரண்டு பேரும் பேசுங்க. நான் என் மாப்பிள்ளையோட அங்கயிருக்கேன்” என்று கணவன் மனைவிக்கு தனிமை தந்து விலகினான்.

அறையில் ஒரு புதிய சமநிலை இருந்தது.
ஹ்ருதேஷ் மெதுவாக மிதிலாவை தன் மார்பில் சாய்த்தான். இன்னொரு கையால் மிதிலாவின் நெற்றியை வருடினான்.
“ரெஸ்ட் எடு.. அந்த கல்லு கரைஞ்சிடுச்சு. இனி பேசாம முகம் திருப்ப மாட்டான். என் பிரெண்டை பத்தி எனக்கு தெரியும்‌” என்றான்.

அந்த வார்த்தையும் அவன் தொடுதலும், அவளுக்கு  பாதுகாப்பு போல இருந்தது.
கண்கள் மெதுவாக மூடியது.

மனைவி நெற்றியில் முத்தமிட்டு மகனை மீண்டும் காண வந்தான். குழந்தை தற்போது பெரியவர்கள் மாறி மாறி தூக்க ஆரம்பித்து கொஞ்சினார்கள்‌

கௌசிக் தான் “சாரிடா.” என்றான் ஹ்ருதேஷிடம்.

“போடா… எவ்ளோ வலிச்சது தெரியுமா? நான் நட்புக்கு துரோகம் பண்ணலைடா. என்னால அவ காதலையும் இக்னோர் பண்ண முடியலை.” என்று கட்டிக்கொள்ள கௌசிக்கும் அணைத்தான்.

  “நீ சொன்னது மாதிரி நான் கொஞ்சம் புரிஞ்சிக்கிட்டுயிருந்தா, விமர்சனமா கல்யாணம், வளைகாப்பு பண்ணிருக்கலாம். அதோட நம்ம மனசால வலியோட நடமாடியிருக்க மாட்டோம்‌‌.” என்று கௌசிக் கூறியதும், “சரி விடு வேற பங்ஷனுக்கு ஜமாய்ச்சிடலாம்” என்றான் ஹ்ருதேஷ்.

“என் மாப்பிள்ளைக்கு பெயர் வைக்கறப்ப பெரிய மண்டபம் பிடிக்கணும்” என்று கண்ணீரை அடக்கினான்.‌

அடுத்த நிமிடம் ‘மாமா என்னை இந்த பெருசுங்களிடமிருந்து காப்பாத்து‌ ஆளுக்கு ஆள் தூக்கி பந்தாடறாங்க’ என்பது போல ஹ்ருதேஷ் குழந்தை சிணுங்கவும், கௌசிக் “குழந்தையை கொஞ்ச நேரம் பார்த்துக்க சொன்னா அழ வச்சிட்டிங்க” என்று பிடுங்கி கொண்டான்.

  குழந்தையை கௌசிக் தூக்கி ஹ்ருதேஷிடம் தரவும், அவன் வாங்கிக் கொண்டு, “நீ பிறந்த பிறகு தான் உன்‌ மாமா என்னிடம் பேசுவேன்னு சபதம் ஏதாவது போட்டிருக்கான் போல‌. நீ உங்கம்மா வயித்துல என்டர் ஆனப்ப சண்டை ஆரம்பம். எக்ஸிட் ஆனதும் சமாதானம்” என்று கௌசிக்கிடம் கூறியபடி, மகனை முத்தமிட்டான் ஹ்ருதேஷ்.

ஹ்ருதேஷின் தாடி குத்த, அதற்கும் குழந்தை அழுதது. கௌசிக்கோ, “ஏன்டா… தாடி குத்தும்ல. இதுல குழந்தையிடம் என்டர் எக்ஸிட்டுனு பேசறான்.” என்று குழந்தையை வாங்க முயல, “அட இருடா.. பத்து நிமிஷம் கூட முழுசா தூக்கலை” என்று குழந்தையை தந்தையான தன்னிடம் கொடுக்க வேண்டுதல் வைக்க, நர்ஸ் வந்து, “ஆளாளுக்கு குழந்தையை கையில வச்சிட்டு இருந்தா குழந்தைக்கு ஒத்துக்காது. குழந்தையை அம்மாவோட அரவணைப்புல படுக்க வைங்க” என்று அதட்டி செல்ல வேறு வழியின்றி மிதிலாவிடம் சேர்த்தனர்.

அதன்பின் குழந்தை உறங்குவதால் நண்பர்கள் இருவரும், கேன்டீன் சென்று தங்கள் பேச்சை நீட்டித்து உலகை மறந்தறனர்.

   இந்த இடைப்பட்ட நாளில் அவர்கள் பிரிவை முறியடிக்கும் விதமாக ஒன்றாக உலாவினார்கள்.

செல்வராணி தீபா மாறி மாறி குழந்தையையும் மிதிலாவையும் கவனிக்க உணவை எடுத்துக் கொண்டு வந்தார்கள். ஒரு வாரம் ஹாஸ்பிடல் வாசம் தான்.

கௌசிக் கடைக்கு ஆளை நியமித்துவிட்டு அடிக்கடி‌ தங்கை குழந்தையை காண வரவும், ஹ்ருதேஷும் அங்கு தான் விடுப்பு எடுத்துவிட்டு இருந்தான்.

அங்கேயிருந்த நர்ஸ் கூட, “சார் இது ஒன்னும் காலேஜ் இல்லை. சத்தமா சிரிச்சிட்டு இரண்டீ பேரும் கதையடிக்கறிங்க. குழந்தை இருக்கு மெல்லமா பேசுங்க.” என்றார்.

  ஹ்ருதேஷ் கௌசிக் இருவரும் அதை காதில் வாங்கினால் தானே.

ஹ்ருதேஷே ”டேய்… கடையில அடிக்கடி ஆளை வச்சிட்டு வர்ற. முதல்ல பிசினஸை பாரு” என்றான்.

  “அடப்போடா.. குழந்தை முக்கியமா கடை முக்கியமா?” என்றான்.‌
 
  “குழந்தைக்கு பெயர் வச்சதும் உனக்கு ஒரு கல்யாணம் செய்துடணும்னு மாமா சொன்னார்.

  ஏதோ அசல்ல ஒரு வரன் அமையுதாம். அந்த வீட்லயிருந்து வந்து உன்னை பார்க்க முந்தா நேத்து கடைக்கு வந்திருக்காங்க. நீ என்னடானா இங்க வந்துட்ட. கடைப்பையன் ஓனர் ஹாஸ்பிடல் போனதா சொல்லவும் கிளம்பியிருக்கார். நேத்தும் வந்திருக்காங்க நீ இல்லை. இங்க வந்திருக்க.” என்றான்.‌

கௌசிக்கோ “அப்பா எதுவும் என்னிடம் சொல்லலையே” என்றான் கௌசிக்.‌

”அவங்க சட்டுனு வருவாங்கனு மாமாவுக்கும் தெரியாது. இன்னிக்கு தான் போன்ல சொல்லவும், தங்கச்சிக்கு குழந்தை பிறந்து ஹாஸ்பிடல்ல இருக்கா. குழந்தையை பார்க்க ஓடினான்னு சொல்லியிருக்கார்.” என்றதும், “சொல்லியாச்சுல அப்பறம் பார்க்கலாம்.” என்றான்.‌

   மிதிலா குழந்தையுடன் தன் பிறந்த வீட்டிற்கு சென்றிட ஹ்ருதேஷ் தான் தற்போது மாமனார் வீடு தேடி ஓடினான்.

  செல்வராணியோ ‘இனி பாருங்க நம்ம வீடு தங்க மாட்டான். முன்னவே பிரெண்டை தேடி ஓடுவான். இப்ப பொண்டாட்டி புள்ளனு சேர்ந்தாச்சு. மரியாதையா பேரனுக்கு பெயர் வச்சி இங்க கூட்டிட்டு வாங்க” என்றார். ராஜலிங்கம் தலையாட்டி பொம்மையாக, தலையாட்டி முடித்தார்.

நண்பன் வீட்டுக்கு பழையபடி துள்ளலாய் மகனை காணும் ஆர்வத்துடன், தோழனை காணவும் வந்தான். முன்பு தீபா ஹ்ருதேஷை கரித்து கொட்டுவார், இன்றோ மாப்பிள்ளை மரியாதையுடன் வரவேற்றார்.

இந்த முறை கௌசிக் வரவேற்பு… சொல்லவா வேண்டும். மிதிலா காதில் புகைச்சல் வராத குறையாக மகனை மடியில் வைத்து கொஞ்சி அண்ணனும் கணவனும் பேசிபேசியே மூழ்கினார்கள்.

ஏதோ பிரசவ கால ஓய்வு தேவைப்படுவதால் மிதிலா இளைப்பாறினாள்.

-தொடரும்.
 பிரவீணா தங்கராஜ்
  
 
 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top