அத்தியாயம்-17
ஹ்ருதேஷ் வாழ்வில் அவன் வீட்டிற்கு மிதிலா வருவது மிகவும் சர்வசாதாரணமாக மாறியிருந்தது.
சனி ஞாயிறு என்றால் பெங்களூரில் ஊர்ச்சுற்றி மால், பார்க், ஹோட்டல் தீம் பார்க், என்று நாளெல்லாம் பொழுதை கழித்து இரவு ஹ்ருதேஷ் வீட்டிற்கு வந்து கணவன் மனைவி போல சில நேரம் இருப்பது வாடிக்கையானது.
மிதிலா வீட்டில் சனி ஞாயிறு வரலாம்ல’ என்று கேட்டதற்கு, எனக்கு இங்க சனி ஞாயிறு தான் க்ளாத் வாங்கணும், அதுக்கேற்ற மெட்டிரியல்ல சம்கி, பீட்ஸ் டிசைனிங் ஒர்க் தேவையானது எல்லாமே அன்னிக்கு தான் வாங்கறேன். சும்மா ஊருக்கு வர முடியாதும்மா. லீவுக்கு வர்றேன்.’ என்று சமாளித்தாள். உண்மையில் பகலில் ஹ்ருதேஷுடன் தான் இதெல்லாம் வாங்குவாள்.
பெரும்பாலும் கௌசிக் வியாபாரம் சூடுப்பிடித்த காரணத்தால் மிதிலாவை பற்றி சற்று யோசிக்க தள்ளி வைத்தார்கள்.
கௌசிக் கடையில் சிலது, என்ட்ரன்ஸில் வீட்டு தயாரிப்பு பொடிகள், ஊறுகாய் இடம் பெற்றியிருக்க, தீபாவுமே பிசியாக இருந்தார்.
செல்வராகவனும் பையனுக்கு தோதாக சில நேரம் கடையில் இருப்பார்.
அதனால் அவர்கள் வீட்டில் மிதிலாவை சிந்திக்க நேரமில்லாமல் கடந்தது.
ஆனால் ஹ்ருதேஷ் வீட்டில் அவன் ஞாயிறு தோறும் வராததால் சொல்வராணிக்கு மகனை காணும் ஆர்வம் அதிகமானது. ஒரே பையன் சனி ஞாயிறு கூட வராதது அவர்களுக்கு ஏக்கத்தை தந்துவிட்டது.
ராஜலிங்கத்தை குடைச்சல் தந்து, பெங்களூர் வருவதற்கு டிக்கெட் எடுத்தார்கள்.
ராஜலிங்கமும் பையன் வாழும் இடத்தை காண ஆசையாக வந்தார்.
அன்று வியாழன் மதியம் ஹ்ருதேஷ் மிதிலாவுடன் போன் பேசியபடி வீட்டிற்கு வரவும், வாசற்படியில் ராஜலிங்கமும் செல்வராணியும் பார்த்தவன் அதிர்ந்து, “மிதிலா.. என்னோட அப்பா அம்மா வீட்டுக்கு வந்துயிருக்காங்க. போன் எதுவும் பண்ணாதடி” என்றான்.
“என்னப்பா… சொல்லாம கொள்ளாம வந்திருக்காங்க” என்று கேட்க, “தெரியலையே” என்றான்.
“ஓய்… பொண்ணு கின்னு பார்த்து போட்டோ எடுத்துட்டு வந்திருந்தா என்னப் பண்ணுவ?” என்றாள்.
“நல்லவளே… உன்னை தவிர எவளையும் ஓகே சொல்லமாட்டேன். பயப்படாம இரு. அப்பறம் நானா பேசறேன்.” என்று துண்டித்து பேக்கெட்டில் போனை வைத்து, “என்னம்மா… சொல்லாம கொள்ளாம வந்திருக்கிங்க? எப்ப வந்திங்க?” என்று பொதுபடையாக தந்தையையும் பார்த்து கேட்டான்.
“ம்ம்ம.. துரை… நீ வருவனு காத்திருந்து காத்திருந்து கண்ணு பூத்துடுச்சு. அதான்… ஒரு முறை உன்னை பார்க்க வந்தேன்.” என்றார்.
“ஆமா… நான் வந்து நாலு மாசமாகுது. உங்களுக்கு இப்பதான் வரணும்னு தோணுதுல?” என்றவன் வீட்டை திறந்தான்.
ஏற்கனவே வீட்டை வீடியோகாலில் பார்த்தவர்கள் என்றாலும் பையன் எப்படி சுத்தமாக வைத்திருக்கின்றான் என்று பார்த்தனர்.
ராஜலிங்கத்திற்கு ஆச்சரியம் தான். இதற்கு முன் பையன் அறையை எட்டி பார்த்த போது இருந்த அதே நேர்த்தி இந்த வீட்டிலும் இருந்தது.
“ஏன்டா.. தனியா இந்த வீடே போதும்னு இருக்கியா? நம்ம வீடு பிடிக்காம போயிடுச்சா” என்று கேட்க வந்தவர்களுக்கு குடிக்க நீரும் குளிர்பானமும் எடுத்து டேபிள் மேஜையில் வைத்து, “டிரஸ் மாத்திட்டு வர்றேன் மா” என்று குளியலறை ஓடினான்.
அறைக்கதவை சாற்றியவன் மிதிலாவின் பொருட்கள் ஏதாவது இருக்கின்றதா என்று தேடினான்.
பெரும்பாலும் சனி ஞாயிறு மிதிலா இருந்தாலும் அவளே அடுத்த நாள் எல்லாவற்றையும் தூய்மைப்படுத்தி சென்றிடுவதால் மிதிலாவின் உடைமைகள் இல்லை. இதே சனி ஞாயிறு வந்திருந்தால் அவளது க்ளிப், ரப்பர் பேண்ட் ஷால், கர்ச்சீப் என்று அங்கங்கே கிடக்கும்.
”பாருங்க… என் பையன் தனியா சம்பாரிச்சு ஒரு வீட்டுல வாழ கத்துக்கிட்டான். பொண்ணு எல்லாம் பார்த்து கட்டி வச்சா, நல்லா தான் வாழ்வான்.” என்று காதை புண்ணாக்கினார்.
வீட்டை எல்லாம் அளவிட்டவர் கண்ணில் சட்டென விழுந்தது, தாய் தந்தையர் புகைப்படத்தை தாண்டி, கௌசிக், மிதிலா, ஹ்ருதேஷ் மூவரும் சேர்ந்து எடுத்த புகைப்படம்.
அவசரமா குளித்து முடித்து தலைதுவட்டி வந்தவன், தந்தை பார்வையை வைத்து, நேர்க்கொண்ட பார்வையை தவிர்த்தான். எல்லாத்தையும் மறைச்ச, இதை மறந்துட்டியே?’ என்று மனசாட்சி நகைத்தது. ஆனால் கௌசிக் இருப்பதால் பிழைத்தான்.
“என்னம்மா… என் கூடவே வந்துடறியா? சமைச்சி போட?” என்று அன்னையை கட்டிக்கொண்டு கேட்டான்.
“போடா… உனக்காக வந்துட்டா என் வீட்டுக்காரருக்கு யார் சமைப்பா. உனக்கு வேண்டுமின்னா ஒரு பொண்ணை பார்த்து கட்டி வைக்கிறேன்.” என்றார்.
“பச்… சமைச்சி போடலாம் பொண்ணு தேவையில்லை. பக்கத்து ஹோட்டல்ல செமையா இருக்கும் சாப்பாடு” என்று மறுத்தவன், “ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்திருக்கலாம். எதுல வந்திங்க” என்றான்.
“உன்னை பார்க்க தினமும் தான் கேட்பேன். உங்கப்பாவுக்கு இன்னிக்கு தான் உன்னை பார்க்க அழைச்சிட்டு வர மனசு வந்துச்சு. கூட்டிட்டு வந்தார்” என்றார் செல்வராணி.
ஏன்டா துணியெல்லாம் நீயே துவைச்சி போட்டுக்கறியா” என்று பால்கனியில் உலர்ந்ததை கவனித்தார்.
மிதிலா வந்து துவைத்து காயப்போட்டது. மடிக்காமல் இரண்டு நாளாக இங்கே இருப்பதை கூறாமல், “ஆமா மா. நானே துவைச்சிடறேன்” என்றான்.
“அதென்னடா இந்தவூர்ல தமிழ்ல பேசினா புரியாம பேசுறாங்க” என்று சலித்துக் கொள்ள, “பின்ன இங்க கன்னடம் பேசுவாங்க. நீ செந்தமிழை பேசினா புரியுமா?” என்று சிரித்தான்.
“அப்பறம் நீ எப்படி பேசுவ? உனக்கு கன்னடம் தெரியுமா?” என்று ஆச்சரியமாக கேட்க, ‘கன்னடம் எல்லாம் தெரியாது. இங்கிலிஷ் தெரியும். இங்க அதை வச்சி சமாளிச்சிடுவேன். அதை மீறினா தமிழ் கூட பலருக்கு பேசினா புரியும்.” என்றான்.
”ஆமா… உங்கப்பா இந்த அட்ரஸை தந்துட்டு பேரம் பேச புரியாம போகவும், பக்கத்துல இருந்தவங்க பேசி ஏத்தி விட்டாங்க.” என்றார்.
அதன்பின் இரண்டு மூன்று நாட்கள் தங்கப்போவதாக கூறியிருக்க, ‘தாராளமா தங்குங்க” என்று மகிழ்ந்தான்.
செல்வராணிக்கு வந்ததும் கல்யாண விஷயம் பேசினால் மூஞ்சை காட்டுவானென இரண்டு மூன்று நாளில் பேசுவோமென அமைதியானார்.
சாப்பாடு மட்டும் வெளியே சாப்பிடுவது செல்வராணிக்கு பிடிக்கவில்லை. ஆனால் பையன் நேரத்திற்கு ஆர்டர் தந்துவிட்டு வீடு தேடி வந்து உணவு வரவும், “பாருங்களேன்…. சமைக்க ஒருத்தி இருந்தா நல்லா இருக்கும்னு பேச வாயெடுக்கலாம்னு பார்த்தா. வீடு தேடி வேளை வேளைக்கு சோறும் வந்துடுது. இவனிடம் எப்படி ஆரம்பிக்கறதே தெரியலை” என்றார்.
ராஜலிங்கத்திற்கு வரன் பார்க்கும் ஆசையே வெறுத்துவிட்டது. மகன் தன்னுடன் பேசுவது கிடையாது. இதில் போதாதிற்கு ‘வசதி பார்த்து கட்டி வைக்கணும்னு என்னை விற்க பார்க்கறிங்க’ என்று கத்தியிருந்தான். அதிலிருந்து ராஜலிங்கத்திடம் பேசுவது குறைந்துவிட்டது.
இரண்டு நாட்கள் தனியாக இருந்துவிட்டு மூன்றாம் நாள் சனி ஞாயிறு அன்னை தந்தையை சுற்றி பார்க்க அழைத்து சென்றான்.
“ஏன்டா… இந்த பொண்ணுங்க எல்லாம் இப்படி தான் அறையும் குறையுமா அலையுமா? முழுசா போர்த்திட்டு வர தெரியாது.” என்றார்.
ஹ்ருதேஷ் இடையில் கையை வைத்து “ஏம்மா… யாராவது உத்து உத்து பார்க்கறாங்களா?” என்று வாயடைக்க வைத்தார்.
“ஆமா.. பார்க்கறவன் உத்து பார்ப்பானா? சாதாரணமா பார்க்கற மாதிரி பார்த்தாலும் உள்ளுக்குள்ள என்ன வக்கிரத்தோட பார்த்து தொலைப்பாங்களோ?” என்று பேசினார்.
“அது அவங்க கவலைம்மா.” என்றான்.
“எனக்கு என்புள்ள மனசு கெட்டுடுமோனு பயமாயிருக்கு. இவன் வேற.’ என்று முனங்கினான்.
“அந்த பொண்ணு… கௌசிக் தங்கச்சி கூட இப்படி தான் துணி போடுமா?” என்று கேட்க, “அப்படில்லாம்…” ‘அப்படில்லாம் இல்லை என்றவன் வார்த்தையை முழுங்கி, “எனக்கு என்ன தெரியும். அவ ஏதோ பேஷன் டிசைனிங் படிக்கற.” என்று முடித்துக் கொண்டான்.
”இந்த ஊர்ல பொம்பளை பொண்ணை தனியா விட்டுட்டு எப்படி தான் தீபா எல்லாம் நிம்மதியா இருக்காளோ? எனக்கு எல்லாம் உன்னை தனியா இருக்க விட்டுட்டு ஊர்ல மனசு அல்லாடுது.” என்று பேசவும், “அம்மா… அந்த கடையில் தான் உங்களுக்கு மைசூர் சில்க் வாங்கினேன். இன்னொரு சேலை பார்க்கறியா?” என்று அழைத்து சென்று பேச்சை மாற்றினான்.
ஹ்ருதேஷிற்கு எப்ப இவர்கள் செல்வார்கள் என்ற ரீதியில் அவர்கள் பேச்சால் காது புண்ணாகியது.
இதில் அன்னையின் ஹான்ட்பேக்கில் மூன்று பெண்ணின் புகைப்படம் இருக்க, “இதுல ஒரு பொண்ணு செலக்ட் பண்ணிதாடா ராஜா” என்று தாடை பிடித்து கொஞ்சினார்.
கைப்பையை சுமந்துக் கொண்டே திரிய தனக்கு வரனையும் பார்க்கும் பெண்ணின் புகைப்படமும் கைக்குள் வைத்து திரிவதில், எரிச்சலடைந்தாலும், “எதுவும் பிடிக்கலை. இங்க பாருங்க… எவளும் என் டேஸ்டுக்கு இல்லை” என்றான்.
“அப்படியென்ன டேஸ்டோ” என்று முனங்கியவருக்கு, இப்படி மார்டனாக உடயும் அலங்காரமும் செய்தவர்கள் மத்தியில் வாழ்பவன், தான் வைத்துள்ள புகைப்பட பெண்ணிற்கும் வித்தியாசம் இருக்க, லேசாக புரிய துவங்கியது. ஆனால் அவருக்கு வீட்டுக்கு ஏத்த பவ்யமான மருமகளை இந்த கூட்டத்தை போன்ற இடத்தில் எங்கே தேடுவது.
பையன் வேண்டுமென்றே மறுக்கின்றானோ என்று கூட தோன்றியது.
ஆனால் அலுவலகத்தில் பணிப்புரியும் பெண் ஒருத்தி இவனை தேடி வந்து பேச, வாய்பிளந்துக் கொண்டார்.
“என்னங்க இது ஒருத்தி வந்து எம்புள்ளைய தொட்டு தொட்டு பேசறா?” என்று நெஞ்சை தாங்கி பிடித்து கேட்க, “அது அவன் கூட வேலை செய்யற பொண்ணுனு சொன்னானே” என்றார்.
“நம்மூர்ல இல்லாத வேலையா? இவன் ஏன் இங்க வந்தான்.” என்று பொறும, “சம்பளம் இங்க தானே படிச்ச படிப்புக்கு கூடுதலா தர்றாங்க. டான்னு ஒன்னாந்தேதி உன் பையன் சம்பளம் அனுப்பிட்டானானு கேட்டு சந்தோஷப்படற. ஊர்ல இருக்கறவங்ககிட்ட எல்லாம் என்புள்ள அரை லட்சத்துக்கு சம்பாதிக்கறான்னு பெருமை பேசற, இதையும் சேர்த்து கவலைப்படு” என்றார் ராஜலிங்கம்.
வீட்டுக்கு திரும்பியதும் முதல் வேலையாக “டேய்.. நீ இங்க எவளையாவது காதலிப்பியா? இல்லை நம்மூர் பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணுவியா?” என்று கேட்க, அன்னை கையில் சத்தியம் செய்யும் விதமாக கையை வைத்து, “இந்த ஊர் பொண்ணை கல்யாணம் பண்ண மாட்டேன், என் ஆபிஸ் பொண்ணுங்கள்ல கூட வேலை செய்யற எவளையும் கல்யாணம் பண்ண மாட்டேன். நம்மூர் பொண்ணை கட்டிப்பேன். போதுமா. பயப்படாம இருங்க.” என்று அன்னையின் கட்டிக் கொள்ள செல்வராணி மகிழ்ந்து போனார்.
அவர் கேட்க தவறிய ஒன்று, ‘நாங்க பார்க்கற பெண்ணை கட்டிப்பியா?’ என்றதை. பாவம் அவர்கள் தற்போது மகனது பேச்சில் கர்வமாக திருப்திப்படுத்துக். கொண்டார்கள்.
திங்களன்று தாய் தந்தை இருவரும் சேலம் திரும்பி செல்ல பேருந்து ஏற்றிவிட்டு அலுவலகம் செல்ல, வழியனுப்ப வந்தான்.
செல்வராணியிடம் பேசிக்கொண்டே வர, ராஜலிங்கமோ “உங்கம்மா அவ பார்க்கற பொண்ணை தான் கட்டிக்க போறதா நினைச்சி கனவு கண்டுட்டு இருக்கா. ஆனா நீ ஏதோ சரியில்லைனு மட்டும் எனக்கு தெரியுது. என்னனு தான் விளங்கலை.” என்றார். ஹ்ருதேஷ் பதில் தராமல் அமைதிக்காக்க, “இங்கிருக்கற வசதியும் நாகரிகமும் உன்னை வலைச்சிட போகுது. பார்த்து சூதனமா செலவு பண்ணு. அவ்ளோ தான் சொல்வேன்.” என்றார்.
“சரிப்பா.” என்று மட்டும் கூறிக் கொண்டான்.
அவர்கள் சென்றதும் அலுவலகம் வரை தந்தை பேசியதே நினைவில் ஓடியது.
அப்பா ஏதோ சந்தேகத்தோட தான் என்னை பார்க்கறார். அவருக்கு மிதிலா மேல சந்தேகம் வருதா இல்லையா.. ஒன்னும் புரியலை. சரி.. என்னைக்காவது எல்லாம் தெரிய வர்றப்ப இதை பத்தி யோசிக்கலாம்” என்று அலுவலக கட்டிடத்தில் நுழையும் போது தனக்கு தானே சொல்லிக் கொண்டான்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்
