meta-google-adsense-platform-account: ca-host-pub-2644536267352236 meta-google-adsense-platform-domain: sitekit.withgoogle.com

மையலிட்ட சிற்பமே-10

அத்தியாயம்-10

   காயத்ரி சிவநேசன் வந்துவிட்டு சென்றப்பின், தவமலருக்கு பிறந்த வீட்டு ஆட்களை காண வேண்டுமென்ற ஆசை கூடுதலானது.

  தினமும் கதிரவனிடம், “அப்பா வரலைன்னா என்ன? நாம அவர் வீட்டுக்கு போகலாமா?” என்று கேட்டாள். கதிரவனுக்கு எத்தனை நாள் தான் பொய்யை கூறி கூறி அலுப்பு நேரிட, கத்திவிட்டான்.

  “சும்மா… அப்பா வரலை. அப்பா வீட்டுக்கு போகணும்னு புலம்பற. அந்தாளு உனக்கு அப்படி என்னடி நல்லது செய்தான். உங்கம்மாவையே பேசி பேசி தற்கொலைக்கு தூண்ட வச்சிட்டு சின்ன வீட்டை பார்க்க போயிட்டான். உங்கம்மா செத்ததும் சின்ன வீட்டை ஊரறிய இரண்டாதாரமா அறிமுகப்படுத்திட்டான்.‌
  அங்க ஒரு வேலைக்காரியா இருந்த. அந்த வீட்டுக்கு போக அவ்ளோ ஆசையா. ஏன் இங்க உன்னை ராணியா தானே பார்த்துக்கறேன். என்ன குறையை கண்ட. தீபாவளிக்கு மரியாதை பண்ணினதே இன்னும் மறக்கலை. இதுல பிறந்த வீட்டு வளையல் வேண்டுமா? இன்னொரு முறை அப்பன்னு ஆரம்பிச்ச அவ்ளோ தான்” என்று தட்டை தட்டி விட்டு பேச, வயிற்றை பிடித்து பின்னால் நகர்ந்தாள் தவமலர்.

  கண்ணன் எட்டி பார்த்து மனைவியை காண, சாமுண்டிஸ்வரியோ மகனை கண்டு, “என்னடா கோபம் உனக்கு. யார் மேலயோ இருக்கற கோபத்தை பிள்ளத்தாச்சிக்கிட்ட காட்டற. வரவர உனக்கு கோபம் அதிகமாகுது. அதுவும் இவளிடம் காட்டற.” என்று அதட்டினார்.

  கதிரவனோ எழுந்து நடக்க, “சாப்பிட்டு போடா” என்று கூற, “உன் மருமகளுக்கே ஊட்டி விடு.” என்று எரிந்து விழுந்தான்.

  அவன் சென்றதும் தவமலர் லேசாக கண்கலங்க, “இந்தா… ஏற்கனவே நோஞ்சானா கிடக்க. பிரசவத்துக்குரிய வயசும் இல்லைனு ஒவ்வொரு தடவையும் அந்த நர்ஸ் என் காதுல ரத்தம் வர்ற அளவுக்கு அட்வைஸ் பண்ணுது. இதுல நீ வேற சோகமா சுத்தினா எப்படி.  
   அவனுக்கு தான் உங்கப்பனை பத்தி கேட்டா பிடிக்கலைனு சொல்லிட்டான்ல. அவனையே நோண்டற. உங்கப்பான் வரலைன்னா உங்க சித்தியை கேளு” என்று கடிந்திட, தவமலருக்கு சங்கடமாய் போனது.

  ஆளாளுக்கு வேலை பார்த்திட சென்றதும், தனியாக அறையில் புரண்டு புரண்டு படுத்தாள்.

  கருவுண்டாகியப்பின் சாமுண்டிஸ்வரி வேலைகளை செய்ய வேண்டாமென கூறிவிட்டார்.
   இந்த வயதில் கருவுண்டானதால் சாதகமாக இந்த வசதி.

   ரொம்ப நேரம் யோசித்தவள் தந்தையை நேரில் காண சென்றால் என்ன என்ற விபரீதமான எண்ணம் உதித்தது.

    தனியாக செல்ல பயமிருந்தாலும், கடைசியாக தந்தை தீபாவளிக்கு அழைத்த அன்று தனக்கும் அவருக்கும் வார்த்தையால் வாதம் நிகழ்ந்து, அவர் மனதை தைத்தோம். தீபாவளிக்கு என்ன கடனை வாங்கினாரோ, எட்டு சவரனை தயார் செய்ததே பெரிய விஷயமில்லையா?

    ஆனால் தந்தையை அன்று கடைசியாக கைப்பிடித்து நிற்க கூறிய போதும் கணவன் கதிரவனின் கையை பிடித்து, தந்தை முகம் பாராது நடந்து வந்துவிட்டாள்.

  ஏனோ வயிற்றில் குழந்தை என்று ஆனதிலிருந்து மனம் இருதலைக் கொள்ளியாக பாசத்திற்கு ஏங்கவும் செய்தது.

      இன்று கணவர் கத்திவிட்டதில் கூடுதலாக தந்தையை காணும் ஆசை பேராசையாக மாற, செல்ல வேண்டுமென மனம் உந்துதலிலேயே இருக்க, அத்தை மாமாவை கண்டாள். மாடும் கன்று ஈன்றிடும் நேரமென்பதால் அதை கவனிப்பதில் கவனம் சென்றது.
  கதிரவன் தான் இவள் மீதுள்ள கோபத்தில் தூரத்தில் பம்பு செட்டில் இருப்பதையும் கண்டாள்.

    மெதுவாக சேலை முந்தானையை எடுத்து முகத்தில் அரும்பிய வேர்வைத் துளியை துடைத்து, இடுப்பில் சொருகி கையில் நாகராஜ் நகைக்கடையில் கொடுத்த பழைய பர்ஸில், கதிரவன் சட்டையிலிருந்து கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொண்டு பூனை நடையிட்டு வெளியேறினாள்.

  ரோட்டுக்கு வந்தவள் பேருந்து நிலையத்தில் அமர்ந்து கொண்டு வந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து குடித்தாள். இதற்கே இப்படி துவள்வதில், ஒரு மணி நேர பேருந்து பயணம் என்ன செய்யுமோ என்று வயிற்றை தீண்டினாள்.

  அவளது வயிற்றில் அசைந்த அவளது கரு, நான் உனக்கு துணையிருக்கின்றேன் என்று ஆதரவு கரம் நீட்ட, பேருந்து வரவும் ஏறினாள்.

  பேருந்து ஏறும் போதே படிக்கட்டு உயரமாக இருந்தது.
  கஷ்டப்பட்டு தான் கம்பியை பிடித்து ஏறினாள்.

  பேருந்தில் ஏறியப்பின், கணவர் கதிரவன் திட்டுவாரா? மாமியார் என்ன சொல்வார். மாமனார் என்ன சொல்வார்.
  இந்த பயணத்தால் குழந்தைக்கு ஏதேனும் ஆகிடுமா? என்று யோசித்தவளுக்கு கொஞ்ச நேரத்தில் உறக்கம் வந்தது.  

   அசதியில் உறங்கினாலும், அடிக்கடி மேடுபள்ளம் வந்து குலுங்க, வயிற்றை பிடித்து பயந்தாள்.

  ஒவ்வொரு முறையும் இதயம் பயத்தில் திளைக்க, எப்படியோ தனது ஊருக்கு வந்து சேர்ந்தாள்.

  வைகை ஆற்றினை கண்டு அதில் கால் பதித்து, நீரோடையில் கையில் அலம்பி மூச்சை ஆழமாய் வெளியிட்டாள்.

   தனது வீட்டுக்கு செல்ல, மாலை நேரம் என்பதால், ஆளாளுக்கு வெளியே அமர்ந்திருந்தனர். தவமலரின் உருவமும், ஆளும் சற்று சட்டென அடையாளப்படுத்தாத விதத்தில் இருக்க, சிலர் உற்று நோக்கும் முன் அவ்விடம் விட்டு நடந்திருந்தாள்‌. சிலர் அப்பவும் அடையாளப்படுத்தி நலம் விசாரிக்க, நின்று நிதானமாக பதில் தந்து சென்றாள்.

   கர்ப்பம் ஆனதே தெரியாது. உன் சித்திகாரி ஒரு வார்த்தை சொன்னாலா? உங்கப்பனை பத்தி கேட்டாலும் கத்தறா. உன்னை பத்தி கேட்டாலும் கத்தறா” என்று கூற, தவமலருக்கு ஏதோ சரியில்லை என்று புரிய, வீட்டை நோக்கி விரசாய் நடந்தாள்.

வீட்டு வாசலுக்கு வந்த நேரம், லதா சுரேஷ் பாடம் படித்துக் கொண்டிருந்தனர்.
 
  “ஐ… அக்கா” என்று சுரேஷ் துள்ள, “மலரக்கா” என்று லதா ஓடிவந்தாள்.
சுரேஷோ “அம்மா… அம்மா..” என்று கத்த, “என்னடா… ஓடிப்போன உங்கப்பன் வந்துட்டானா” என்று வந்து நின்றார். மேடிட்ட வயிற்றுடன் தவமலரை கண்டவரோ, “எங்கடி வந்த?” என்று அதட்டி கேட்டார்.

  “சித்தி… சித்தி… அப்பா எங்க? நான் கர்ப்பமா இருக்கறது உங்களுக்கு அப்பாவுக்கு தெரியும் தானே?
  அப்பாவுக்கு போன் போட்டா போகலை. நீங்களும் என்னை பார்க்க வரலை. தீபாவளிக்கு வந்துட்டு போனதும் கன்சீவ் ஆனதை அப்பாவுக்கு சொல்ல எத்தனை மீறை போன் போட்டேன்.” என்று கேட்க, அன்னமோ “வாயை மூடுடி.” என்றார்.

“அந்தாளு அன்னைக்கு காணாம போனவரு தான். இப்பவரை வீட்டுக்கு வரலை. என்னடி தப்பு பண்ணினேன். உனக்கு வாங்கிய வளையலை நான் வேணும்னு எடுத்து வச்சிக்கிட்டேன். அதுக்கு அந்தாளு அப்படி கத்தறார். சரி அதான் வளையலை உனக்கு கொடுத்து அனுப்பிட்டானே. வீட்டுக்கு வர வேண்டியது தானே. என்னவோ பெருசா வீட்டுக்கு வராம சுத்தறார்.
  சாப்பாட்டுல என்ன விஷமா வைக்க போறேன். இந்தா இரண்டு பிள்ளைங்களும் அப்பனை கேட்டுட்டு இருக்குதுங்க.” என்று கூற தவமலருக்கு தந்தை இத்தனை நாள் வீட்டுக்கு வரவில்லையா? காணாமல் போனாரா? என்றா தலை கிறுகிறுவென சுற்றியது.

  அதே நேரம் கையிலிருந்த பட்டன் போன் அலறியதும், இறுக பற்றினாள்.

கணவன் கதிரவன் தான் அழைத்திருக்க, தூணில் சாய்ந்து, அழைப்பை ஏற்றாள்.

“மலரு… எங்கயிருக்க?” என்றான். அவளை காணாமல் துடிதுடித்து போனவனின் வலி குரலில் தெரிந்தது.

  “என்னங்க… அப்பாவை பார்க்க வீட்டுக்கு வந்தேன். அப்பாவை காணோமாம். தீபாவளியிலருந்தே அப்பாவை காணோமாம்.” என்று அழுவது அவனுக்கு கேட்டது.

  கதிரவன் தலையிலடித்த சத்தம் கேட்க, அதை தொடர்ந்து, “ஆமா.. அவரை காணோம். அதனால தான் அவர் போன் எடுக்கலை. அவர் உன்னை பார்க்க வரலை. இரண்டு நாளைக்கு முன்ன தான் சிவநேசன் சித்தப்பா போலீஸ்ல கம்பிளைன் கொடுத்திருந்தார்.” என்றான்‌.

  தவமலரோ தனக்கு தெரியக்கூடாதென இத்தனை நாள் மறைத்து இருப்பதை அக்கணம் அறிந்தாள்.

  “உன்னை யாருடி தனியா அங்க போக சொன்னது.” என்று அதட்ட, “அப்பாவை பார்க்கணும்னு தோணுச்சுங்க வந்தேன்.” என்று விசும்பினாள். சாதாரணமாக தவமலரை அதட்டியது இல்லாததால் அவளது இந்த விகற்பமில்ல பேச்சில் அவளது பாசத்தை உணர்ந்தவனாக, “உங்கப்பாவுக்கு ஒன்னும் இல்லை. அங்கயே இரு. நான் கிளம்பி வர்றேன்.” என்று கூறிவகட்டு அவளை தேடி புறப்பட்டான்.

  அன்னமோ பிள்ளைத்தாச்சி பெண் என்றும் பாராமல் அவள் பாட்டிற்கு வீட்டு வேலையில் மூழ்க, அதே தூணில் சாய்ந்த தவமலர் கொண்டு வந்த தண்ணீரை குடித்து குடித்து முடித்தாள்.
 
  லதாவும் சுரேஷும் அக்காவிடம் பேச ஆசையாக இருந்தாலும், அன்னை திட்டுவாரென அடிக்கடி மலரை கண்டு நின்றார்.

   மாலை டீ போடவும், தனது பிள்ளைகளுக்கு மட்டும் டீயை தந்தார். அதற்குள் பக்கத்து வீட்டில் மலர் வந்த செய்தி அறிந்து வீடு தேடி சிலர் வந்து பேச, மலருக்கு குடிக்க கூட எதுவும் தராமல் அன்னம் செல்ழதை கண்ட கண்மணியோ தன் வீட்டிலிருந்து பாலை ஆத்தி வந்து கொடுத்தார்.

  வெயிலில் வந்த அலைச்சலோ அல்லது இத்தனை தூரம் பயணம் செய்து வந்த களைப்போ மறுக்காமல் தன் வயிற்றில் வளரும் குழந்தைக்காக பாலை வாங்கி பருகினாள்.

   தன் அக்கா தவமலரின் வயிறு உப்பசமாக தெரிய லதா சுரேஷ் இருவரும் ஆர்வமாக கவனித்தார்கள்.

ஏனோ அன்னம் அவர்கள் பாட்டிற்கு ஆவுடையப்பனை தகட்டி தீர்த்தார். கூடுதலாக தவமலர் வந்து சேர்ந்திருக்க, அவளையும் வசவு மழையில் கொட்டி தீர்த்தார்.

  எதையும் செவிக்கு ஏற்றாமல் தந்தை எங்கு சென்றியிருப்பார் அவரிடம் தான் முகத்திருப்பி பேசியதை எண்ணி கவலைக்கொண்டாள்.

  ஆனால் இதே போல தான் தன் தந்தை தாய் ராசாத்தியிடம் மனம் நோகும்படி பேசியதை அவள் அறிவாள். ஒருவேளை அன்னை ராசாத்தியை போல ஏதேனும் விபரீதமாக முடிவை நாடியிருப்பாரா என்று எண்ண பயந்தாள். அடிவயிறு ஆட்டம் கண்டது.
 
   “அப்பா… அப்பா… அப்பாவுக்கு ஒன்னும் ஆக்ககூடாது” என்ற வேண்டுதலை இறைவனுக்கு ஜெபித்தபடி இமை மூடி வேண்டினாள்.

  தவமலர் கண்மூடி அழுது வேண்ட, லதாவும் சுரேஷும் அருகே வந்து கையை பிடித்தனர்.
அந்த நேரம் தவமலருக்கு அந்த தொடுகை அவசியமாக இருந்தது.
  அதேநேரம் இவர்களும் தந்தை இல்லாமல் பயந்திருப்பது புரிய, “அப்பா.. அப்பா… வந்துடுவார்‌ பயப்படக்கூடாது சரியா” என்று தேற்றினாள்.
  தவமலருக்கே யாராவது தேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்க, அவள் தம்பி தங்கையை தேற்றினாள்.

   அன்னமோ வாய் ஓயாமல் தகட்டி தீர்த்து அறைக்குள் சுவரோடு சாய்ந்து அழுதார்.

  ஒருமணி நேரம் தாண்ட, மூச்சு வாங்க, கதிரவன் ஓடிவந்து தவமலர் முன் நின்றான்.

  “ஏன் புள்ள சொல்லாம கொள்ளாம வந்துட்ட. எப்படி பயந்தேன் தெரியுமா?” என்று அவளை அணைத்து நிற்க, கதிரவன் வந்ததும் அன்னம் சேலை முந்தானையில் மூக்கை துடைத்து எழுந்து வந்தார்.

   ஏன் வந்த? எதுக்கு வந்த? உன்னால தான் அவர் காணோம், என்ற பேச்சை தவிர்த்து, “அவரை எப்படியாவது கண்டுபிடிச்சு கொடுங்க போதும். மூனு மாசமாகுது அவர் வீட்டுக்கு வந்து, எங்க தான் போனாரோ, இல்லை மொத்தமா போயிட்டாரா ஒன்னுமே தெரியலை. யாரிடமாவது உதவிக்கு கேட்கலாம்னா, ஒருத்தரும் உதவ வரமாட்டேங்கறாங்க.” என்று புலம்ப கதிரவனுக்கு கஷ்டமாக போனது. ஏற்கனவே மனைவி மலருக்காக தேட ஆரம்பித்து விட்டான். ஆனாலும் அன்னம் கேட்டதில் தவமலரே ஆச்சரியமாக பார்த்தாள்.

“அப்பாவை எப்படியாவது கண்டுபிடிச்சு தாங்க” என்று அவளும் கோரிக்கை வைக்க கதிரவன் தான் திக்குமுக்காடி போனான்.
 
  இங்கு வந்து கால் வைக்கும் நேரம் தான், ஆவுடையப்பனை போல ஒருவர் இறந்துவிட்டதாக போலீஸிடமிருந்து தகவல் வந்தது. அதையும் போய் பார்க்க வேண்டும். அது உண்மையா பொய்யா என்று அறியாமல் இங்கே எந்த வாக்கும் தரயியலாது நின்றான்.

-தொடரும்.
 பிரவீணா தங்கராஜ்

4 thoughts on “மையலிட்ட சிற்பமே-10”

  1. M. Sarathi Rio

    அட ராமா..! வெண்ணெய் திரண்டு வரச்ச தாளி உடைஞ்ச கதையா ஆகிடுமோ..?

    😔😔😔
    CRVS (or) CRVS 2797

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top