meta-google-adsense-platform-account: ca-host-pub-2644536267352236 meta-google-adsense-platform-domain: sitekit.withgoogle.com

மையலிட்ட சிற்பமே-9

அத்தியாயம்-9

   வீட்டில் இனியும் சென்று சமைக்க இயலாதென, வழியில் ஒரு மத்திய தர ஹோட்டலில் வண்டியை நிறுத்தி சாப்பிட்டனர்.
 
   கதிரவன் தவமலர் அமர்ந்து சாப்பிட, சாமுண்டிஸ்வரியோ “நல்லா சாப்பிடு… ஏற்கனவே ஓடிசலா இருக்க. இப்ப வம்சத்தை வேற விருத்தி பண்ண போற. குழந்தை பெத்தெடுக்க உடம்புல தெம்பு வேண்டும். இந்த வயசுல குழந்தை பெத்துக்க கஷ்டம்னு படிச்சவங்க சொல்வாங்க. ஆனா பழைய காலத்துல எல்லாம் பதினாறு வயசுலயே பிள்ளைய சுகபிரசவத்துல பெத்துயிருக்காங்க.
 
   நீயெல்லாம் நல்லபடியா சாப்பிட்டா நல்லதா நடக்கும்.” என்று கூறவும் தலையாட்டினாள்.

  “டேய்… அவளுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காதுனு கேட்டு வாங்கிக் கொடு.” என்று கூற கதிரவனும் சரியென்றான்.

   பிரியாணி எல்லாம் சாப்பிட்டு, அதே கடையில் வெளியே இனிப்பு விற்க அரைகிலோ இனிப்பை வாங்கிக் கொண்டான். மீண்டும் வீட்டுக்கு வர மாலை ஆனது. தீபாவளி என்பதால் வெடிவெடித்து கொண்டாடினார்கள்.

   சாமுண்டிஸ்வரி தான், “மாமனார் வீட்ல வெடி வெடிச்சு, கொண்டாட வேண்டியது.” என்று சலித்துக்கொண்டார்.
  அக்கம் பக்கத்தில் மாமனார் வீட்டுக்கு போகலையா? என்று கேட்டு குடைய, தவமலர் உண்டான விஷயத்தை கூறி, மருத்துவமனை சென்றுவிட்டு இங்கயே வந்துவிட்டதாக கூறினார்கள். அலைச்சல் கூடாதென மருத்துவர் கூறியதாக சொல்லவும் மற்றவர்கள் வினாத்தொடுக்கவில்லை.

  இரவு தவமலரை தன் மார்பில் போட்டுக் கொண்டு, கரத்தை அவளது குட்டி வயிற்றில் வைத்து,  “இன்னிக்கு நான் எவ்ளோ பெரிய தப்பு பண்ணிருக்கேன்னு தெரிந்துக்கிட்டேன். முன்னயே உங்க மாமா வயசை சொன்னார் தான். நான் கல்யாணம் முடியவும் இரண்டு மாசத்துல பதினெட்டு ஆகிடுமேனு மிதப்பா இருந்துட்டேன்.
   இன்னிக்கு அந்த நர்ஸம்மாவும் பேச பேச, கன்பார்மா  ஜெயிலுக்கு போயிடுவேன்னு நினைச்சேன்‌. போலீஸ் வந்ததும் ரொம்ப பயந்துட்டேன்.
    நீ மட்டும் எடுத்து பேசலைன்னா களித் திண்ணுயிருப்பேன். உன்னை போட்டோவுல பார்த்ததும் பிடிச்சது மலரு. அதனால இரண்டு மாசம் தானே ஓடிடும்னு இருந்தேன். உனக்கு பதினெட்டு தொட இன்னும் மூனு மாசம் இருக்குனு தெரிந்தா, உன்னை தொட்டிருக்க மாட்டேன்.
  முதலிரவு அப்ப, ஒரு வேகம் ஆசை நெருங்கிட்டேன். ஏன் இப்பவரை ஒரு மயக்கமிருக்கு. நீ உண்டானது, நான் அப்பாவாயிட்டேன்னு இப்பவும் நம்ப முடியலை.
  அம்மா சொல்லற மாதிரி இந்த குழந்தையை பெத்தெடுக்க உடம்பு தாங்குமா? முன்னயெல்லாம் அதுக்கேத்த உணவு இருக்கும்.
  நீ உங்க வீட்ல இருந்தப்ப ஒழுங்கா மூனு வேளை சாப்பிட்டதே அதிசயம்னு சொல்லற‌. உடம்பு தாங்குமா?” என்று கேட்க, “இங்க வந்ததிலருந்து நான் நல்ல சாப்பிட்டு வெயிட் போட்டிருக்கேன் தெரியலை. அதெல்லாம் பார்த்துக்கலாம்.” என்று கதிரவன் தாடியை பிடித்து ஆட்டினாள்‌.

   “எனக்கு இருபத்திரெண்டு வயசு மலரு. குழந்தை பிறக்கறப்ப இருபத்தி மூனு ஆகும். உனக்கு பதினெட்டு வயசு இருக்கும்.” என்று கூற, “அதெல்லாம் தெரியாமலையா படிப்பை கூட வேண்டாம்னு கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்” என்றாள்.

கதிரவனோ “ஏன் மலரு.. நீ பன்னிரெண்டாவது படிச்சிட்டு இருந்தல்ல… ஏன் மேள்கொண்டு படிக்க பிடிக்கலையா?” என்று கேட்டாள்.

  “படிச்சு என்ன செய்யறது? இதே போல வீட்டு வேலை செய்து இருப்பேன். இதுக்கு எதுக்கு படிப்பு. நான் படிச்சா மட்டும் அந்தஸ்து மாறுமா?” என்று கேட்டாள்.

  “தப்பு பண்ணிட்ட மலரு. படிச்சா என்னை விட வசதியா, படிச்சவனா, கல்யாணம் பண்ணிருப்ப” என்றான்.

  “எங்க சித்திக்கு என்னை வசதியானவனையோ, படிச்சவனோடவோ கட்டி தர நினைக்காது. உங்களை கூட, படிக்காதவன் விவசாயம் பார்த்துட்டு ஆடுமாடு மேய்க்கறதா கேலி பண்ணுச்சு. அதுக்கு என்ன தெரியும். எந்த வேலையும் தப்பில்லைனு.
  சொல்லப்போனா எனக்கு நீங்க கிடைச்சது அதிர்ஷ்டம் தெரியுமா? அத்தை பார்க்க தான் கரடுமுரடா பேசுது. நகை நட்டு சரியா போடலைன்னு திட்டினாலும், உனக்கு என்ன வேணுமோ ஆக்கி சாப்பிடுனு சொல்லுச்சு.
  நானா பயந்துட்டு கொஞ்சமா சோறு போட்டா கூட, எனக்கு அள்ளி வச்சி குச்சிக்கணக்கா இருக்க, திண்ணுடினு திட்டும். அது திட்டி வைச்சாலும் என்னை சாப்பிட சொல்லி வைக்கும். நம்மளை ஒருத்தர் கவனிக்கறப்ப எவ்ளோ சந்தோஷமா இருக்கும் தெரியுமா.?

   மாமா கூட ஏதோ சின்ன புள்ளனு இருப்பார். இந்த இரண்டு மூனு மாசத்துல நீங்க என்னை அடிச்சி திட்டி பேசுனதே இல்லை. ஏன் அதட்ட கூட செய்ததில்லை. இதெல்லாம் போதாதா? நிஜமானவே நான் சந்தோஷமா இருக்கேன்” என்றாள்.

  கதிரவன் மனைவியை அணைத்துக் கொண்டான். ஏற்கனவே வந்ததும் வராததும், சாமுண்டிஸ்வரி வேறா, “ஏலேய்.. அந்த பொண்ணு உண்டாயிருக்கு. எப்பவும் காஞ்ச மாடு கம்பங் செடில பாய்ந்த மாதிரி பாஞ்சிடாத. கர்ப்பமா இருக்கா.. டாக்டரிடம் வேற பார்க்கணும். சூதகமா இரு.” என்று பேசவும், சரியென்று தலையாட்டிக் கொண்டான்.

  அதன் காரணமாக அன்பை மட்டும் பகிர்ந்துக் கொண்டான்.

   மூன்று நாட்களாக தவமலர் கதிரவனிடம் “அப்பாவிடம் நான் கர்ப்பமா இருப்பதை சொன்னிங்களா?” என்று கேட்க, கதிரவனோ தயக்கமாய் பேச்சு தடுமாற்றம் கொண்டு, “ஆங்.. சொல்லிட்டேன்.” என்றான்.

  “நீங்க சொன்னப்பிறகும் அப்பா எனக்கு போன் பண்ணலை. நேர்ல வந்து பார்ப்பார்னு நினைச்சேன்.” என்றவளின் கையை விடுவித்து கொண்டு வெளிவராண்டா வந்தான்.

“ஒரு வேளை சித்தி என்னை பார்க்க விடாம தடுத்திருப்பாங்க” என்றவள் கதிர் எதுவும் பேசாமல் இருக்க, “ஆனா அப்பா என்னிடம் போன்லயாவது பேசுவார். ஒருவேளை நான் அன்னிக்கு திட்டியதில பேச தயங்கறார் போல.” என்றவள் போனை எடுத்து தந்தைக்கு அழைக்க, போன் ரிங் போகவில்லை‌.

  “போன் ரிங் ஆகலை.” என்று உதடு பிதுங்கி கூற, “ஏன் தாயி.. போனை விட்டு தள்ளு. அதெல்லாம் கோபம் குறைஞ்சு அவங்களா வருவாங்க” என்று கூற, மாமியார் பேச்சுக்கு கட்டுப்பட்டாள்.
 
  கதிரவன் பெருமூச்சை விடுத்து அன்னை தந்தையை பார்வையிட, தவமலர் சென்றதும் தந்தையிடம் வந்தான்.‌

  “அப்பா மாமா இன்னும் எங்கயிருக்கார்னு தெரியலையா?” என்று கேட்க கண்ணனோ “தெரியலை‌… அந்த பொம்பளைக்கு போன் போட்டு என்னம்மா சம்பந்தி வந்துட்டாரானு கேட்டா, ‘உங்களால போனவரு இன்னும் வரலை’னு கரிச்சு கொட்டுது. இந்த புள்ளைக்கு அவங்க அப்பா எங்கயோ காணாம போயிட்டார்னு எப்படி சொல்லறது. அந்த பொண்ணு கர்ப்பமா இருக்கு. இந்த வயசுல கர்ப்பமா இருப்பதே பலவீனம்னு அந்த நர்ஸம்மா சொல்லுச்சு. இதுல அவங்க அப்பா இப்ப காணோம்னு சொல்லி ஏதாவது ஆகிடுமோனு பயமாயிருக்கு. நம்ம வீட்டு வாரிசுக்கு எதுவும் ஆகக்கூடாது.” என்று கூறவும் கதிரவனுக்கும் அதே எண்ணம் தோன்றியது.

  தவமலருக்கு இன்னமும் பதினெட்டு வயது பூர்த்தி ஆகவில்லை. ஏதோ அந்த நர்ஸும் அவர்கள் மூலமாக அந்த டாக்டரும் நிறைய அட்வைஸ் செய்து குழந்தை பெற்றுக்க சிகிச்சை அளிக்கின்றனர்.
   இதில் ஏதாவது அதிர்ச்சியான செய்தி வேண்டாமென்று கூறியிருக்க, மனைவி நலத்தை தான் அவன் யோசித்தான்.

  சிவநேசனும் காயத்ரி கூட தவமலரிடம் சொல்ல வேண்டாம். நாங்க அடுத்த வாரம் வர்றோம் நேர்ல பேசறோம் என்று கூறியிருந்தனர்.

   இதெல்லாம் தவமலருக்கு தெரியாமல் பார்த்துக்கொள்ள, தவமலருக்கு ஐந்தாம் மாதம் ஆரம்பமானது.
 
  ஓடிசலாக மாநிறமாக இருந்தவள், நிறம் மட்டும் கொஞ்சம் கூடுதலானது போல தோன்றியது‌. மற்றபடி வயிறு மட்டும் கொஞ்சம் போல வளர்ந்திருந்தது. மற்றபடி வயிறு பெரிதாக கூடயில்லை.

  அன்று சிவநேசன் காயத்ரி நேராக தவமலரை பார்க்க வந்தார்கள்.
பையில் பழம் பூ ஸ்வீட் என்று வந்தாலும், முகத்தில் லேசான பதட்டம்.

  தவமலர் தான் ஆனந்தமாய் வரவேற்றாள்.
  
   “அத்தை… மாமா.. சென்னைமில இருந்து நீங்க கூட வந்துட்டிங்க. ஆனா அப்பா இங்க வரலையே‌. நான் தான் திட்டினேன். ஆனா.. அப்பா இந்த அளவு கோபத்துல இருப்பார்னு நினைக்கலை. சித்தி தான் என்னை பார்க்க விடாம பண்ணிருப்பாங்க. ஆனா போனாவது பண்ணலாம்ல அத்தை. ரொம்ப கஷ்டமாயிருக்கு அத்தை” என்று கூற, சிவநேசனும் கையை பிசைந்து வேடிக்கை பார்த்தார்.‌

காயத்ரி தான் சமாளிக்கும் விதமாக, “மலரு… உங்க சித்தி பத்தி தான் உனக்கு தெரியுமே. உங்கப்பாவே உனக்கு தந்த வளையலை கூட அவங்க ஓளிச்சுவச்சி ஆட்டம் கண்டவங்க. ஏதாவது சொல்லி உங்கப்பாவை இங்க வரவிடாம பண்ணிருப்பாங்க.” என்று கூறவும் சமாதானம் ஆகாமல் நின்றாள் தவமலர்.

  ஆனால் அத்தையிடம் மேலும் பேசி சிக்கலை கூட்டவில்லை.

   “அத்தை… நான் போய்.. மாட்டுக்கு தீவனம் காட்டிட்டு வந்துடறேன்.” என்று எழுந்து சென்றாள்.

  கதகரவனோ சிவநேசனிடம், “இப்படி தாங்க… சதா புலம்பறா. பக்கத்துல யாரோ பிறந்த வீடல ஐந்தாவது மாசம் வளையல் போடுவாங்க. அந்த வளையல் சத்தத்தை குழந்தை கேட்கும்னு சொன்னாங்க. அதுலயிருந்து அப்பா வீட்லயிருந்து வளையல் போடணும்னு ஒரே தொல்லை.
  எங்கம்மா கூட கண்ணாடி வளையல் போட ஆசைப்படறாளேனு அவங்க இரண்டு டஜன் வளையலை சாமி முன்ன வச்சி போட்டு விட்டாங்க. ஆனாலும் அவ மனசுல அவங்க அப்பா வீட்ல வந்து போடணும்னு ரொம்ப எதிர்பார்க்கறா.
   அவளுக்கு என்ன தான் அவங்க வீட்ல ரொம்ப கஷ்டம் என்றாலும், அவங்க அப்பாவை பிடிக்காத மாதிரி நடிச்சாலும், அவளுக்கு பிறந்த வீடுன்னா அந்த குடும்பத்தை தான் எதிர்பார்க்கறா. முடியலைங்க… அவங்க அப்பா இல்லைனு சொல்ல முடியலை‌. அட்லீஸ்ட் காணாம போனதா கம்பிளைனாவது பண்ணலாம்னா, கொஞ்சம் பயமாவும் இருக்கு. மலருக்கு பதினெட்டு ஆக இன்னும் ஒரு மாசம் இருக்கு. எங்க அவங்க அப்பா காணோம்னு புகார் தர போய் என்னை பிடிச்சி வச்சிப்பாரோனு பயமாவும் இருக்குங்க‌.

எங்க தான் போனாரு? செத்துகித்து தொலைஞ்சிட்டாரா? அதுவும் தெரியலை. பைத்தியம் பிடிக்குதுங்க. என் மலரிடம் என்னைக்காவது சொல்லறப்ப, என்னிடம் ஏன் மறைச்சிங்கனு கேட்பா தானே சித்தப்பா” என்று வருந்தினான்.

அவர்களும் இவனிடம் என்னவென்று கூறுவார்கள்.
  ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து துவண்டனர்.

சாமுண்டிஸ்வரியோ “இப்படி தாங்க அவ ஏதாவது அவங்க அப்பாவை பத்தி பேசினா, அவ தலை மறைந்ததும் புலம்பறான்.” என்று காயத்ரியிடம் கூறினார்.

   கண்ணனோ “ஏங்க அந்த பொம்பளை அவங்க வீட்டுக்காரர் காணோம்னு புகார் தரலையா. அதுக்கு இருக்கற வாயுக்கு ஊரையே விலைக்கு வாங்குமே” என்று கேட்டார். என்ன இருந்தாலும் அன்னத்தின் கணவர் அல்லவா?!

சிவநேசனோ “அட அவர் பொண்ணுக்கு வளையலை வாங்கி தந்துட்டார்னு அந்த பொம்பளை கோபத்துல இருக்கு. அதனால அவரே வரட்டும்னு சொல்லிட்டு சுத்துது. சொந்த வீடு, பக்கத்துல ஏதோ தீப்பெட்டி ஒட்டி தந்து வேலை பார்க்குது. போதாதுக்கு ஏதோ ஜாக்கெட் தைய்த்து கொடுத்து காசு பார்க்கு. அதனால மச்சான் ஆவுடையப்பனை தேடலை. அவரா வருவார்னு சொல்லுது. ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தானு காயத்ரி கூட கேட்டதுக்கு, அந்தாளு எல்லாம் சாக மாட்டான். சாகடிக்கற மாதிரி பேச தான் தெரியும்னு சொல்லுது. என்னத்த சொல்ல… தவமலரை நினைச்சு தான் எங்களுக்கும் கவலையா இருக்கு.
  பத்து வயசுலயே எங்களோட வர்றியானு கேட்டதுக்கு, அப்பாவோடவே இருக்கேன்னு விவரம் தெரியாதப்ப சொல்லுச்சு. அவளுக்கு அப்பான்னா உசுருங்க. என்ன பண்ண… விதி…” என்றார்.

தவமலர் வரவும் கதிரவனோ “மலரு வருது‌ அவங்க அப்பா பத்தி பேச வேண்டாம்.” என்று எச்சரிக்கையை கொடுத்தான்.

-தொடரும்.
 பிரவீணா தங்கராஜ்.

4 thoughts on “மையலிட்ட சிற்பமே-9”

  1. இன்னும் இந்த மாதிரி தகப்பனை எதிர் பார்க்கற பெண்கள் இருக்கிறார்கள்

  2. M. Sarathi Rio

    அச்சோ..! இவ்வளவு நடந்தும் இந்தப் பொண்ணுக்கு பெத்த அப்பா மேல உள்ள பாசம் போகலைப் பாருங்களேன்.

    😔😔😔
    CRVS (or) CRVS 2797

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top