அத்தியாயம்-8
“மதுராவை கல்யாணம் கட்டிக்கோ இனியா… அப்படி செய்தா அகிலனை வேரோட சாய்க்க முடியும்.” என்றார் அருளாளன்
அருளாளன் சொன்ன அந்த வார்த்தையில் இனியன் அதிர்ச்சியடைந்து தந்தையை ஏறிட்டான்.
“என்னப்பா சொல்றிங்க?” என்றான். அருளாளன் அமைதியாகவே இருந்தார்.
”நான் சும்மா சொல்லலை இனியா. நல்லா யோசிச்சுதான் சொல்றேன்.” இனியனோ உடனே மறுப்பாய் தலையசைத்தான்.
“இல்லப்பா… என்னால மதுராவை எல்லாம் கல்யாணம் பண்ண முடியாது.” என்று கூறினான்.
அருளாளன் புருவம் சுருக்கினார். “ஏன் முடியாது? கண்ணுக்கு அழகா லட்சணமா இருக்கா. இதுல என் தங்கச்சி பொண்ணு. வேறென்ன வேணும்” என்றார்.
இனியன் மறுப்பாக இமை மூடி, “அவ அழகா இருக்கலாம். லட்சணமா இருக்கலாம். இளையமதி அத்தையோட பொண்ணு தான். ஆனா அதுக்காக நான் அவளை கட்டிக்கணும்னு அர்த்தமில்லை. அதுவும் ஆப்ட்ரால் அகிலனை பழிவாங்கறதுக்காகவா? முடியவே முடியாது.” என்றான்.
அவன் வார்த்தையில் உறுதி இருந்தது. “அகிலனை வீழ்த்த வேற வழி யோசிப்போம் அப்பா. அதுல நான் உங்களுக்கு உதவறேன். ஆனா இதெல்லாம் வேண்டாம்.” என்று முடிவோடு உரைத்தான்.
அருளாளன் மெதுவாக சிரித்தார். “நீ இன்னும் ஒன்னை புரிஞ்சிக்கலை இனியா” என்றார்.
“என்ன புரியணும்?” என்றான் எரிச்சலுடன். “அகிலனுக்கு பெரிய அடியா விழ வேண்டும்னா… அவன் மனசுல இருக்கற உறுதிகளை உடைக்கணும். அவன் ஆசைப்பட்டதை தகர்த்தணும்” என்றார் அருளாளன். இனியன் தந்தையை அமைதியாக பார்த்தான்.
“அதுக்கு மதுரா தான் சரியான தேர்வு.” என்று அதையே திரும்ப கூறினார். “எதை வச்சி சொல்றிங்கப்பா அகிலன் மதுராவை விரும்பறான்னு உங்களுக்கு எப்படி தெரியும்” என்றான் இனியன் உடனே. மதுரா தான் அகிலனுக்கு பிடித்தவள் என்று ஆணித்தரமாக உரைக்கின்றாரே.
அருளாளன் நாற்காலியில் சாய்ந்தார். “இந்த வயசானவனுக்கு தெரியாதுனு நினைக்கிறியா?” என்றார்.
“மதுரா அகிலன் விரும்பறதா வெளிப்படையா ஏதாவது சொன்னாங்களா? காதலிக்கறோம்னு சொல்லிட்டாங்களா? இல்ல எப்படி? எதை வச்சி அவங்க ரெண்டு பேரையும் இணைச்சு பேசறிங்கப்பா?” என்று இனியன் குரலில் நியாயம் இருந்தது.
அதனால் மேலும் பேசினான். “இப்படி யூகத்தோட அடிப்படையில் மதுராவை நான் எப்படி கல்யாணம் பண்ண முடியும்? இது நடக்காதுப்பா. அதுவுமில்லாம அவ படிக்காதவ..” என்று அவன் உறுதியாக கூறிவிட்டு, “அகிலனை வேற வழில பழிவாங்க நான் உதவறேன்.” என்றான்.
அருளாளன் அவனை சில நொடிகள் ஆழ்ந்து பார்த்தார்.
“ஜல்லிக்கட்டு அன்னைக்கு என்ன நடந்துச்சுனு தெரியும்ல?”
“ம்ம்ம்… அன்னிக்கு மருது முட்டி அகிலனுக்கு ரத்தம் வந்துச்சு ஆனாலும் அவன் ஜெயிச்சிட்டான்னு ரொம்ப வேதனையா சொன்னிங்க” என்றான்.
“ஆமா.. ரத்தம் வந்துச்சு.. ஆனா யாரு அவன் காயத்துக்கு துணி கிழிச்சு கட்டினா? தங்கச்சின்னு தூரிகா இருந்தா. அவ கல்லு மாதிரி இருந்தா. ஆனா இந்த மதுரா புது தாவணியை கிழிச்சு கட்டினா. நம்ம மருதுவை அடக்கிப்புட்டு மதுராவை அவன் பார்த்த பார்வை இருக்கே.” என்று அருளாளன் கடுகடுப்பாய் உரைத்தான்.
இனியன் உடனே சிரித்தான். “அப்பா… ரத்தம் வர்றப்ப பக்கத்துல இருக்கற ரிலேட்டிவ் கூட டிரஸ் கிழிச்சு கட்டுவாங்க. அதெல்லாம் லவ்வா? உங்க வயசுக்கு ஒரு பையனிடம் ஒரு பொண்ணு பேசினா லவ்வுனு முடிவு கட்டிடுவிங்க” என்றான் கேலியாக.
அருளாளன் கண்கள் கூர்மையானது. “சில காதல் சொல்லாமலே தெரியும்டா இனியா.” அந்த வார்த்தை இனியனை சற்றே அமைதியாக்கியது.
அருளாளன் மெதுவாக சாய்ந்திருந்தவர் முன்னே வந்தார். “இப்ப நீ கூட தான்… ஏதோ ஒரு பொண்ணை விரும்பற.” என்றவரை கண்டு இனியன் உடம்பே திடுக்கிட்டது.
அவன் முகத்தை பார்த்த அருளாளன் மெதுவாக சிரித்தார்.
“அப்பாவுக்கு தெரியாதுனு நினைச்சியா?” “அப்பா” என்று தயங்கினான்.
“கொஞ்ச நேரத்துக்கு மேலே ரூம்ல பேசினியே… கதவு மூடிட்டு, நான் உள்ள வர்றதுக்கு முன்ன தானே, போனை அணைச்ச.” என்றதும் அவன் வார்த்தை வராமல் நின்றான்.
“உன் முகமே சொல்லிச்சு. அந்த பொண்ணு உன் சிநேகிதியே இல்லை. காதலி.. நீ பேசறப்ப உன் முகமே சொல்லுச்சு.. காதலிக்கற பையன் முகம் அது. உண்மை தானே.. இந்த அப்பா சரியா சொல்லறேனா” என்று கேட்டிட, இனியன் மெதுவாக மூச்சை இழுத்தான். அவன் காதலிப்பதை சொல்ல தயக்கமிருந்தது. அதற்காக தந்தையே பேச்சை ஆரம்பிக்கவும் வசதியாக மாறியது.
“அப்பா” என்று தயங்க,
“யாருடா அந்த பொண்ணு?” என்றார். சில நொடிகள் இனியன் அமைதிக்காத்து, பிறகு மெதுவாக, “அவ பெயரு காவ்யா அப்பா” என்றான்.
அருளாளன் அவனை பார்த்திட, இனியன் தொடர்ந்தான். “நான் அவளை உண்மையாவே விரும்பறேன்ப்பா.” என்று இதயத்தை திறந்தான்.
“எவ்வளவு பிடிக்கும்” என்று கேட்க, “என் வாழ்க்கை முழுக்க அவ கூட வரணும். உங்களையும் அம்மாவையும் எவ்வளவு பிடிக்குமோ அந்தளவுக்கு பிடிக்கும்.” என்றான்.
அருளாளன் சிரிக்கவில்லை. ஆனால் முகம் முழுக்க சிந்தனை. “பெத்தவங்களை மதிக்கறேன்னா, இப்ப நான் சொல்றதை நீ புரிஞ்சிக்கணும். நீ காவ்யாவை நினைக்கிற மாதிரி… அகிலன் மதுராவை நினைக்கிறான்.” என்றார்.
இனியன் உடனே மறுத்தான்.
“இல்லப்பா. அது வேற. நான் காவ்யாவோட பேசுறேன். அவளும் என்னை விரும்பறா. நாங்க ஒருத்தருக்கொருத்தர் தெரிஞ்சு லவ் பண்றோம்.” என்றான். மதுரா அகிலன் அப்படி பேசியது போல தெரியவில்லையே.
அருளாளன் மகனது வெள்ளெந்தி எண்ணத்தை கண்டு, “அப்ப காதல்னா வாயால சொல்லணுமா?” என்று கேள்வி கேட்டார்.
“சில காதல் பார்வையிலேயே தெரியும்.” என்று இனியனே கூறினான்.
“பார்வையில தெரியும் தானே… அந்த மதுரா… இன்று வீட்டுக்கு வந்திருந்தப்ப எப்படி அகிலனை பார்த்தா கவனிச்சியா? அகிலன் எப்படி அவளை பார்த்தான் தெரியுமா?” என்று வினாத்தொடுக்க இனியன் கண்கள் மெதுவாக சுருங்கியது.
அவனுக்கும் அந்த பார்வை ஞாபகம் வந்தது. ஏனோதானோ என்று இளைஞரிடம் பேசினான் என்றாலும் மதுராவை உடனடியாக அவ்விடத்தை விட்டு அனுப்ப மனமில்லை. ஊரில் உள்ள இளைஞர்கள் முன்னே தனக்காக தன் அத்தை மகள் சீம்பால் கொண்டு வந்து, கை நீட்டி கொடுத்து தானாக எடுக்காத வரை நின்றது ஏதோ மிதப்பை கூட்டியது. அப்பொழுது அகிலன் தூரத்தில் வந்தாலும், அவன் பார்வை தன்னை நோக்கியிருந்தது. இப்பொழுது யோசித்தால் அவன் பார்வை மதுராவையும் வட்டமிட்டதை புத்தி கூறியது.
அருளாளன் உடனே அந்த இடத்தில் அழுத்தினார்.
“அவன் பார்வையும் இவளோட அவசரமும் பார்த்தியா?” என்றதும், மதுரா உடனடியாக அவ்விடம் விட்டு அகல அவசரப்பட்டது பளிச்சென தெரிந்தது.
அகிலனுக்காக அவ்விடத்தை விட்டு செல்ல துடித்தாளா? ஆறடி உயரத்தில், கட்டுக்கடங்காத கேசமும், நல்ல நிறமும், ஜிம்மில் உடற்பயிற்சி செய்து செதுக்கிய சிக்ஸ் பேக் உடம்பும், எல்லா பெண்ணின் கண்களும் தன் மேல் பதியும் அளவிற்கு அழகனாக தான் இருக்க, தன்னை போல உயரமும், அடங்காத கேசமும் திண்ம தோள்களும் இருந்தாலும் நல்ல நிறமென்று கூறயியலாது, கருமை கலந்தவனாக இருப்பான் அகிலன்.
அவனை விட தான் எந்தவிதத்தில் தாழ்ந்து போனோம் என்ற எண்ணம் உதித்தது.
“நீ மதுராவை கல்யாணம் கட்டிக்கிட்டா… அகிலன் உடைந்து சுக்குநூறா போயிடுவான் இனியன்.” என்று எடுத்துரைத்தார்.
“அப்பா… அகிலன் மனதை உடைத்து சுக்குநூறா மாத்தணும் ஓகே.. அதுக்காக என்னால மதுராவை கல்யாணம் பண்ண முடியாது. நான் காவ்யாவை விரும்பறேன். அவளை கல்யாணம் பண்ணுவதாக ப்ராமிஸ் செய்திருக்கேன். எங்க காதல் அவங்க அப்பாவுக்கும் தெரியும்.” என்று இனியன் நேராக தந்தையை பார்த்துரைத்தான்.
அருளாளன் வில்லனை போல சிரித்தார். அந்த சிரிப்பில் காதலை பிரிக்கும் குரூரமான வில்லத்தனமும் அச்சத்தை உறைய வைத்திடும் குளிரும் இருந்தது.
“காதல் எல்லாம் வாழ்க்கையில ஒரு விஷயமே இல்ல இனியா.” என்றார்.
“எனக்குஅப்படியில்லைப்பா என் காதல் எனக்கு முக்கியம்.” என்றான். “அப்ப உன் அப்பா முக்கியமில்லையா?” என்றதும் அந்த கேள்வியில் இனியன் அமைதியானான்.
அருளாளன் உடனே எழுந்து நின்றார். “இந்த ஊர்ல நான் தலை குனிஞ்சு நிக்கறத பார்க்க உனக்கு சந்தோஷமா இனியன்?” என்றார்.
“அப்பா”
“என் தம்பி மகன் அகிலன் தினம் தினம் என்னை விட உயர்ந்துட்டு போறான். இந்த ஊர்ல நாள்பட நாள்பட நான் கீழ போறேன்.
இப்பவே சிலர் சொத்தை பிடுங்கி அதியமானை ரோட்டில் விட்டாலும் அகிலன் அதை சரி செய்துட்டான்னு பேசிக்கறாங்க. நாளைப்பின்ன இந்த ஊர்ல நல்லது பொல்லதுக்கு நம்மிடம் யாரும் அபிப்ராயமோ, ஆலோசனையோ கேட்க மாட்டாங்க. எல்லாம்… அந்த அகிலன் பின்னால போயிடுவாங்க. உனக்கென்ன ஒருத்தி இருக்கா…அவ பின்னால அந்தவூருக்கே போயிடுவ. இங்க மானமிழந்து வாழப்போறது நான் தானே.” என்று ஆவேசமாக பேசினார்.
இனியன் தந்தையருகே வந்தான்.. “நான் இருக்கேன்ப்பா. அவனை வேற வழில நிறுத்தலாம். மதுரா எல்லாம் என் மனைவியா என்னால இமேஜன் பண்ண கூட முடியாது. வில்லேஜ் கேர்ள்ப்பா. பிளஸ்டூ கூட தாண்டலை. அப்பா.. நான் வெளிநாட்ல படிச்சிருக்கேன். கொஞ்சம் பொறுமையா யோசிப்போம். அகிலன் எல்லாம் வீழ்த்த அந்த பொண்ணு தான் வேண்டுமா? யார் கண்டா… அந்த பொண்ணை சும்மா கூட பார்த்து வச்சியிருக்கலாம். ஜஸ்ட் கெத்துக்காக.. மாட்டை அடக்கி சீன் போட்டுட்டு அவளை பார்த்திருக்கலாம்.” என்றான்.
அருளாளன் மெதுவாக, “அகிலன் மதுரா ஒருத்தருக்கு ஒருத்தர் விரும்பறது எனக்கு நல்லா தெரியும். அகிலனை மாதிரி ஆட்களை வீழ்த்த சூழ்ச்சி தான் நல்லது.
அகிலனோட மனசை உடைக்கணும். அவன் மனசு முழுக்க என் தங்கை பொண்ணு மதுரா தான் இருக்கா” என்றார்.
அந்த வார்த்தை அறை முழுக்க கனமாக விழுந்தது.
இனியனோ அங்கேயே நின்று தந்தையை பார்த்தான்.
ஒருபக்கம் காவ்யா,
மற்றொரு பக்கம் தந்தையின் வார்த்தைகள், அந்த இரண்டுக்கும் நடுவே நின்றவன் மனதில் முதல் முறையாக குழப்பம் பிறந்தது.
“முதல்ல பஞ்சாயத்து தேர்தல்ல அவனை வீழ்த்துவோம் அப்பா. அதுலயே அவன் உடைந்து போயிடுவான். அதுக்குள்ள வேற ஐடியா யோசிப்போம்.” என்றான்.
அருளாளனோ மகன் தன் பேச்சை கேட்கவில்லை என்றதும், “காதல் எல்லாம் வயசு இருக்குற வரை தான் இனியன். ஆனா இந்த ஊர்ல மரியாதை போனா… அது வாழ்நாள் முழுக்க திரும்ப வராது. நீ வேண்டுமின்னா உன்னோட காதலை காப்பாத்த நினைக்கலாம். நான் என் பேரை காப்பாத்த நினைக்கறேன்.” என்று வெடுக்கென எழுந்து போனார்.
அந்த நேரம் வேல்விழி இவர்கள் பேசியதை கேட்டு வந்தவராக, “இனியா.. என்ற ராசா.. அப்பா சொன்னதை கேட்டு பொசுக்குனு ஏதாவது முடிவெடுத்திடாதய்யா. ஏற்கனவே ஊர்ல சொத்தை ஏமாத்தி வாங்கிட்டோம்னு பெயர் கெட்டு போயிடுச்சு. இதுல மதுரா மனசுல அகிலன் இருக்கான்னு தெரிந்தப்பிறகு அவளை எல்லாம் கட்டிக்க நினைக்கறது தப்புய்யா. உன்ற முடிவுல நீ சரியா நில்லு.
நீ விரும்பற பிள்ளை பேரு சொன்னியே… கவிதா.. அவளையே கட்டிக்கோ.” என்று கூற, “அய்யோ அம்மா.. கவிதா இல்லை. நான் விரும்பற பொண்ணு பெயரு காவ்யா. என்னோட காலேஜில ஜூனியர். அவளை தான் விரும்பறேன். அவ அப்பாவிடம் நம்ம வீட்ல காதலை சொல்லிட்டு அப்பாவையும் உன்னையும் அங்க போய் பொண்ணு பார்க்கவும் கல்யாணம் பேசவும் தான் வந்தேன். இங்க அப்பா முகமே சரியில்லை. அகிலனால ரொம்ப அப்செட்டா இருக்கார். அதான் சொல்ல முடியாம இருந்தேன். இன்னிக்கு அப்பாவிடம் காதலை சொல்லற விதமா அமைஞ்சிடுச்சு.
நான் ஏன் மதுராவை கட்டிக்க ஆசைப்பட போறேன். மதுரா அழகா லட்சணமா இருக்கலாம். அதுக்காக எல்லாம் எப்படிம்மா எனக்கு ஜோடி? அவ படிக்காதவ பட்டிக்காடு. என் டேஸ்ட் உனக்கு தெரியாதா?” என்று மொழிந்தான்.
வேல்விழிக்கும் மகன் பேசியதில் அகிலனிடம் ஏதேனும் சண்டையென்று செல்லததே, நிம்மதியடைந்தவராக ‘அதானே.’ என்றது போல இருந்தார்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்

Sema twist. What will.happen next? Madurai who.is ur partner? Very intresting sis.
Vizhi amma nega la chum unga purushan ku buthi sollunga ivar oda vetti veembukku ku nallu per oda vazhkai ah nasam panna pakkuraru.iniyan avolo solluran nan vera ponnu ah virumburen nu appo kooda avar sonnathu yae thirupi sollikitu irukaru ivar
அய்யய்யோ..! இவர் பெத்த பிள்ளைக்கு எதிராவே கொடி பிடிப்பார் போலவே. போகட்டும் பெரியம்மாவாவது நல்லவங்களா இருக்காங்களே.
😀😀😀
CRVS (or) CRVS 2797
nalla vela iniyan manasu maralakavya va virumburenu sollitan sollium avan appa madhura va kattika solraru paru evlo vanmam iruku manasula paiyan vazhkaiya vida pali vangura ennam tha iruku
Super sis nice epi 👍👌 endha iniyan avan mudivula urudhiya erundha sari 🙄 appa kaga maathida koodadhu pa saami🙏
அருளானுக்கு அகிலன் பழி வாங்க அப்பாவி மதுரா வாழ்க்கையோட சேர்த்து தன்னோட பையன் வாழ்க்கையும் அழியும் என்பது புரியல