அத்தியாயம்-18
ஆதினி அவளாக உட்காருவதற்கு கூட அஞ்சுகின்றாளென அயன் அவனது உலகத்திலிருக்கும் உருவத்திலிருந்து, பூமியில் உள்ள மனித உருவத்தில் இருந்த அயனாக மாறினான்.
ஆதினிக்கு அந்த நேரிடை மாற்றம், அவள் மனதில் ‘அயன் என்ற தன் கணவன் மனிதனாக ஓடிவந்து தன்னை இந்த உருவத்தில் இருப்பவனிடமிருந்து காப்பாற்றுவான்’ என்ற எஞ்சியிருந்த நம்பிக்கையை தூளாக்கியது.
அயன் இயல்பான மனித உருவத்தில் வரவும் ஆதினி சோபாவில் தோய்ந்தவளாக தொப்பென அமர்ந்தாள். அந்த நேரம் அவள் கருவுற்று இருந்தது கூட புத்திக்கு எட்டவில்லை.
அயன் ஆரம்பித்த இடத்தில் ஆதினி முடிவு கேட்டபடி நின்றாள்.
ஹாலில் மின்விளக்கின் ஒளி மட்டுமே எரிந்தது.
சோபாவின் ஓரத்தில் அமர்ந்திருந்த அயனின் உருவம், அவள் நேசித்து மறுமணம் புரிந்த அயனின் உருவம். தன் குழந்தை அக்ஷயா அயலப்பா என்று ஆசையாக கூப்பிட்ட அயனின் உருவம்.
ஆதினி இன்னும் முகம் பொத்தி அழுதாள். கைகள் வயிற்றை பற்றியபடி, அவளது மூச்சின் அதிர்வை காட்டினாள். அயனால் அவளை உணர முடிந்தது.
“ஆதினி” என்றான் மெதுவாக.
இந்த முறை பழைய கணிவு வந்தது.
அவள் மெதுவாக மாற்றான் என்ற ரீதியில் பயந்தே அமர்ந்தாள்.
அவன் அருகே வரவில்லை.
“நான் உன்னை ஏமாத்தலை ஆதினி” என்று ஆரம்பித்தான். ஆதினி விரக்தியாக சிரித்தாள். அயன் மனித உருவில் பேசினாலும் ஏனோ இம்முறை ஒட்டாத உணர்வு “ஆனா என்னை பத்தி… முழுசா சொல்லலை” என்றதும் அவள் கண்ணீர் வழிந்த கண்களால் அவனை பார்த்தாள்.
“நீ யாரு?” என்று ஆதினிக்கு குரல் நடுங்கியது.
அவன் மெதுவாக மூச்சை இழுத்தான்.
“நீ ‘பாரலல் யூனிவர்ஸ்’ன்னு கேள்விப்பட்டிருக்கியா? நம்ம உலகத்துக்கு இணையான இன்னொரு உலகம். அதை தான் அப்படி சொல்வாங்க.
உருவத்தில் வேறுபாடு குறைவு. ஆனா உயிரியல் அமைப்பில் சில மாற்றங்கள் இருக்கும்.” என்றான்.
அயன் பச்சை கண்கள் மெதுவாக ஒளிந்தன.
“எங்க இனத்தில பெண்இனம் பல வருடங்களுக்கு முன்பே சுருங்க ஆரம்பிச்சிடுச்சு. பெண்இனத்தோட பிறப்பு வீதம் குறைந்தது.
அப்படியே பிறந்த பெண்குழந்தைகள் உயிரோட நிலைக்க முடியல. எங்களுடைய உலகத்துல ஜெனெடிக் அமைப்பு சிதற ஆரம்பிச்சது.” என்றான்.
ஆதினியின் மூச்சு சற்று தடைப்பட்டது. என்ன தான் சொல்ல வருகின்றான் என்ற ஆர்வம் அவளை திடக்காத்திரமாக இருக்க வைத்தது.
“ஒரு இனம் அழிவதா இருந்தா, அந்த இனத்தை காப்பாற்ற போராடுவாங்க. இனப்பெருக்கத்தில் கலப்பினம் செய்ய முயலுவாங்க.
அப்படி தான் எங்க இனவிருத்தி குறையவும், அதுக்கு இணையான கலப்பினத்திற்காக, எங்க உலக்ததில் ஆய்வுகளை ஆரம்பிச்சோம்.
எங்க அமைப்போட ரீசோனனஸ் மேட்ச் ஆகுற உலகங்களை தேடினோம்.
அப்படி தேடினப்ப கிடைச்சது தான் உங்க பூமி.
உங்க பூமியில் இருக்கற பெண்கள் ஸ்டேபிள். உங்க பெண்களின் கருப்பை சூழல் எங்க உலகத்தோட இனத்தை கலந்தாலும் உயிரை பாதுகாக்கும் திறன் அதிகம்னு ஆய்வோட முடிவு” என்றதும், ஆதினி அவள் வயிற்றை பற்றிக் கொண்டாள்.
அயன் தொடர்ந்தவனாக “நான் அந்த ஆய்வுக்காக வந்தவன் ஆதினி.” என்ற அந்த ஒரு வரி ஆதினியை கத்தி போல குத்தியது.
அவள் கண்களை மூடி, “அப்ப நான்… நான் ஒரு லேப் எலி மாதிரியா?” என்று கேட்டாள்.
அவன் கண்கள் உடைந்தது போல தெரிந்தது.
“ஆமாம்… ஆரம்பத்தில்… அப்படி தான்.” என்றதும் அங்கே அமைதி.
அயனாகவே “ஆனா… அது அப்படியே இல்லாம போச்சு.”
அவன் எழுந்து ஜன்னலருகே சென்றான்.
வானம் இருண்டு இருந்தது. “உன்னை முதல் நாள் பார்த்தப்போ… நான் கம்பேன்டிபிளிடி (compatibility) பார்த்தேன். உன் உடல் அமைப்பு, உன் உயிர் துடிப்பு… எல்லாம் எங்க தரவோட மேட்ச் ஆனது.” அயன் சிரிக்க முயன்றான் ஆனால் சிரிக்க முயலாமல் உதடு படுத்தோல்வியை தழுவியது.
“என்னோட உணர்வுகளில் சில விஷயம் எந்த டேட்டாவுலயும் வராது ஆதினி.” என்றான். அவன் என்ன கூற வருகின்றானென ஆதினி மெதுவாக தலை தூக்கினாள்.
“நாங்க நாசாவை தான் குறிவச்சோம். ஆனா அங்க ஏதாவது மாறுதல் அடைந்தா மாட்டிக்க வாய்ப்பு இருக்குனு தான், இங்க இஸ்ரோ வந்து சேர்ந்தோம். நாங்க வந்த ஷிப் வந்த சுவடே இல்லாம மறைந்திடுச்சுனு தான் நினைச்சோம் ஆனா பிரதாப் பார்த்துட்டான்.
பராமரிப்பு பிரிவில அவன் அவசரமா இங்க வர்ற வேலையில் இருந்தப்ப கூட, எங்களோட வருகையை எப்படியோ தெரிந்துக்கிட்டு என் முன்னவே நின்றான்.
எங்க கூட்டத்துல இருந்த மற்றொருவன் பிரதாப்பை எரிச்சிட்டான். ஐ அம் சாரி… அந்த விபத்துல பிரதாப் டீம்ல அங்க வந்த ஐந்து பேரும் இறந்துட்டாங்க.” என்றதும் ஆதினிக்கு நெஞ்சை அடைத்தது. இத்தனை நாளாக ஏதோ தானாக நிகழ்ந்த விபத்தாக இருக்கும். அல்லது நாட்டிற்காக ஏதாவது ஆய்வு செய்து அது தோல்வி தழுவி, பராமரிப்பு பிரிவில் இருந்தவர் இறந்திருக்கலாமென மனதை தேற்றியிருந்தாள். இன்று அயனை போன்ற ஓருவனால் இறந்திருக்க கோபம் வந்தது.
இஸ்ரோவை பொறுத்தவரை அது ஏதோவொரு விபத்து எப்படி நடந்ததுனு தெரியாமலே போச்சு. மேபீ இன்னமும் காரணம் தேடலாம்.
ஆனா அதுக்கு பிறகு எங்களோட தேர்வு தொடர்ந்தது.
பொதுவா இங்கயிருக்கற பெண்களை எப்படி நாங்க அழைச்சிட்டு போறதுனு யோசித்தோம்.
அதுல தவறான அணுகுமுறைகள் என்ற விஷயமா, கிட்னாப் தான் முதல்ல இருந்தது. கடத்திட்டு போனா ஒரு குறிப்பிட்டவர்கள் அந்த பெண்ணை தேட ஆரம்பிச்சு, அதுவொரு இஸ்ஸுவா கிளம்பும்.
எங்களுக்கு அதுல விருப்பமில்லை. ஏன்னா… நாங்க வந்த சுவடே இல்லாம இங்கிருந்து கிளம்பி, எங்க உலகத்துக்கு போகணும்.
சோ… வேற ஆப்ஷன் தேடினோம். அப்ப தான், சில விஷயங்களில் பெண்களை எங்களோட அழைச்சிட்டு போனாலும் எந்த இஸ்ஸுவும் பாதிக்காம இருக்கும்னு தெரிந்தது.
அதுல காதல் முதலிடம், அனாதையான பெண்கள், தனக்கு ஒன்னுன்னா கூட தேடி வராத குடும்பங்களில் இருக்கற பெண்களை டார்கெட் செய்தோம்.
எப்படியும் மனித உருவத்தில் ஒரு பெண்ணுக்கு ஆணாக அறிமுகமாகி, காதலிச்சு வீட்ல பேரண்ட்ஸ் காதலை ஏத்துக்காம முறையா திருமணம் செய்து, வீடு வேலைனு சொல்லி மற்றவர்கள் தொடர்பை கொஞ்சம் கொஞ்சமா அழிச்சு, அந்த பெண்ணை எங்க உலகத்துக்கு அழைச்சிட்டு போறது.
என்னோட வந்தவங்க எல்லாருமே அனாதையான பெண்களை தேடி போனாங்க. ஆர்டிபிசியல் இன்டலிஜென்ட் மூலமாக இந்த பூமியில, இந்த உலக்ததுல இருக்கற மனிதர்கள் எப்படி ஒரு பெண்ணிடம் நடக்கணும் பேசணும், எப்படி தன் வசப்படுத்தணும் என்றதை கொஞ்சம் கொஞ்சமா படிச்சி பார்த்து காதலிச்சாங்க.
ஆனா விருப்பம் இல்லை என்றாலும் தூங்கிட்டு இருக்கறப்பவே, அந்த பொண்ணோட பர்மிஷன் இல்லாம எங்க உலகத்துக்கு போயாச்சு. சில பொண்ணுங்களுக்கு என்ன ஆனாலும் தேடி வராத குடும்பம் இருக்கவும் அவங்களை டார்கெட் செய்து அழைச்சுட்டு போயிட்டாங்க.
இப்படி தான் இந்த பூமியிலருந்து எங்க உலகத்துக்கு பெண்கள் அழைச்சிட்டு போறது. பட் என் தலைமையில் வந்தவங்கள்ல வேலை முடியவும் ஸ்பேஷிப் வரவழைச்சி எல்லாரும் எங்க உலகத்துக்கு போயாச்சு.
அதுல பிரதாப்போட இருந்த டீம்ல, தீவிபத்துல இறந்தவங்களோட மனைவி தங்கை, அக்கா, இப்படி இருந்த பெண்களை காதலிச்சு மணந்து கூட்டிட்டு போயாச்சு. ஆனா… எல்லாருக்கும் அங்க போனப்பிறகு தான் விஷயம் தெரிந்தது.
சிலருக்கு.. பிசிகல் ரிலுஷன்ஷிப்ல வேற்று இனம் கண்டதும், பயந்து ஓடமுயல, அடாவடியா தான் எல்லாரும் போனாங்க.
இங்க நான் மட்டும் தான் இன்னமும் உன்னோட அபிப்ராயம் கேட்டு, அழைச்சிட்டு போக காத்திருக்கேன். ஏன்னா… நான் உன்னை அளவுக்கு அதிகமாகவே அப்சர்வ் பண்ணினேன்.
நீ அக்ஷயாவை எப்படி தூக்கி அணைத்தேன்னு பார்த்தேன். அவளோட அழுகைக்கு முன்பே நீ ஓடுறதை கவனிச்சேன். உன் பயம், உன் தைரியம்… உன் கோபம்… உன் சிரிப்பு… ஒவ்வொன்னும் நுணுக்கமா பார்த்தப்ப என்னை அறியாம என் உணர்வுகள் உன்னிடம் சரணடைந்தது.
ஒரு மனிதினியை தேடி வந்த எனக்கு மனிதனோட உணர்வுகள் ஆக்கிரமிக்க, என் எந்திரத்தனமான வாழ்க்கை முறையை தாண்டி உணர்வால் உன்னோட இணைந்தேன்.
அதை சொல்லும் பொழுது அயன் குரல் தளர்ந்தது.
“நான் பிரதாப் உடலை இங்க கொண்டு வந்தப்பவே கணக்கிட்டேன். ஆனா… நான் உணர ஆரம்பிச்சதும், நீயே என்னை தேர்ந்தெடுத்து நேசிக்க ஆரம்பிக்கணும், அதுக்கேற்ற மாதிரி நடந்தேன். ஆனா உன் வாழ்க்கையில பிரதாப்பை தவிர வேறொரு ஆள் இதயத்தில் நுழைய முடியாது என்பதை, உன் முக உணர்வும் மனவுணர்வையும் படிச்சப்பவே தெரிந்துக்கிட்டேன்.
அதனால தான் உன் வாழ்க்கைக்குள் நான் நுழைந்தேன். அதுக்கு ஏற்ற மாதிரி உங்களோட உலகத்துல, உன்னை விதவை என்ற சாயத்தை வச்சி எங்க போனாலும் காயப்படுத்தினாங்க. அது எனக்கு வசதியா இருந்தது.
இங்க வர்றப்ப உன்னை காதலிச்சு கர்ப்பமாக்கி அழைச்சிட்டு போறது என்னோட மிஷன். ஆனா காதல் வந்ததும் உன் மனசை காயப்படுத்தாம அழைச்சிட்டு போக நினைச்சேன்.” என்றான்.
“காதலா?”அவள் கசப்பாக சிரித்தாள்.
ஏனோ பிரதாப் மரணம் இயற்கையான தீவிபத்தோ அல்லது நாட்டிற்காக ஏதோ நடக்க ஏற்பாடாகி அதில் அசம்பாவிதம் நடந்து இழந்த உயிராக இல்லாமல் போனதாலும், பிரதாப் இறப்பே அயனின் வருகையால் என்றதில் பயம் கலைந்தது.
“என் கணவரை கொன்றுயிருக்கிங்க. திட்டமிட்டே என் கணவர் சடலத்தோட வந்து, என்னை லேப் எலியா மாற்றா முயற்சிப் பண்ணிருக்க. அதுல உணர்வை மீட்டெடுத்து, காதல் வந்ததா கதை விடற? சபாஷ்.” என்றவள் நிதானமாக ஆரம்பித்து குரலில் சப்தம் கூட்டி ஆக்ரோஷமாக “இதுல எங்கயிருக்கு காதல். இது… வெறும் திட்டமிடல். இதுல.. உன் ஒவ்வொரு பார்வைக்கும் என்மனசை படிச்சி பொருள் உணர்ந்து அதுக்கு ஏற்ற மாதிரி பந்தை உருட்டியிருக்க. என் மக தான் உலகம்னு தெரிந்ததும். என் மகளோட ரொம்ப நெருக்கமா பழகி என்னை பணிய வச்சியிருக்க. உன் மேல வந்த காதல்… இப்ப எப்படி காதலா இருக்கும்.
நீ காட்டிய அன்பு எல்லாம், வெறும் உன் உலகத்தோட இனவிருத்திக்காக நீ செய்த திட்டமிடல். ஆய்வு. லேப் எலி…” என்று கத்த, அக்ஷயா கண்ணை கசக்கி, “அம்மா.” என்று எழுந்தாள்.
இத்தனை நேரம் திடமாய் கத்தியவளுக்கு மகளை கண்டதும் பயம் மீண்டும் ஓட்டிக்கொண்டது.
தன் மகளை ஏதாவது செய்தால்? குழந்தையை அணைத்து “இங்க பாரு… எங்களை விட்டுடு. நீ இங்கிருந்து போயிடு. என்னால இனி உன்னோட வாழ முடியாது, வரமுடியாது.” என்றவள் மகளை பிடித்து இழுத்தபடி வாசலுக்கு ஓடினாள்.
அங்கே செல்வம் ஜமுனா இருவரும் நீண்ட நாட்களுக்கு பிறகு வாசலில் வந்து நிற்க, கடவுளை கண்ட பக்தனை போல, “ஆன்ட்டி… அங்கிள் என்னை காப்பாத்துங்க. இந்த அயன்… மனுஷனே இல்லை. இவன் ஒரு ஏலியன்… இவன் இவன் என்னையும் அக்ஷயாவையும் வேற உலகத்துக்கு இழுத்துட்டு போக வந்திருக்கான். எங்களை காப்பாத்துங்க” என்று அவர்கள் கரத்தை பற்றியபடி நின்றாள்.
அயனோ பதறாமல் அந்த இருவரையும் பார்த்து அசையாது நின்றான்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.

ஒருவேளை அவங்களும் ஏலியன்ஸோ..?
😔😔😔
CRVS (or) CRVS 2797
crt time la eppadi vanthanga