meta-google-adsense-platform-account: ca-host-pub-2644536267352236 meta-google-adsense-platform-domain: sitekit.withgoogle.com

மையலிட்ட சிற்பமே-1

             மையலிட்ட சிற்பமே!

அத்தியாயம்-1

தேனீயில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில், மலைகளின் உச்சியில் சூரியன் மறையும் நேரம், வானம் மெதுவாக ஆரஞ்சு, சிவப்பு மற்றும் பொன் நிறமாக மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருந்தது.
அந்த மலைகளின் நிழல் பள்ளத்தாக்குகளின் மீது நீண்டு, ஓர் அற்புதமான ஓவியத்தைப் போல மாறியது.
    பகலின் வெப்பம் தணிந்து, மலைகளின் வழியாக வரும் குளிர்ந்த காற்று மெதுவாக வீசியது. இந்தச் சிலுசிலுப்பான காற்று, ஒரு நாள் முழுவதும் உழைத்த மக்களுக்கு இதமளிக்கும் விதமாக இருக்க, நாள் முழுவதும் இரை தேடி அலைந்த பறவைகள் தங்கள் கூடுகளை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தது.  அவற்றின் சத்தம் அந்த அமைதியான மாலையில் ஒரு இனிமையான இசையை தருவித்தது.
     வயல்வெளிகளில் வேலை செய்த விவசாயிகள் தங்கள் தோள்களில் மம்முட்டி, ஏர்களைப்பை சுமந்தவாறு, மாடுகளை ஓட்டிக்கொண்டு, வீடுகளை நோக்கித் திரும்பினார்கள்.
அவர்கள் முகங்களில் ஒரு நாள் நிறைவடைந்த திருப்தியும் தெரிந்தது.
  
சூரியன் மறைந்த பின், வீடுகளில் சின்னச் சின்ன மின்விளக்குகளும், சில ஏழ்மையான வீடுகளில் மண்ணெண்ணெய் விளக்குகளும் ஏற்றப்படும். அந்தச் சிறு வெளிச்சத்தில் ஊரே ஒரு மெல்லிய ஒளியில் ஜொலிப்பது போல இருக்க, குழந்தைகள் ரோட்டில் விளையாடுவதையும், பெரியவர்கள் வீட்டின் முன் அமர்ந்து அன்றைய நிகழ்வுகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதையும் கேட்கலாம்.

அப்படி தான் காபி அல்லது டீயின் வாசனை அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பரவி, மாலையின் இதமான உணர்வைத் தூண்டியபடி, தவமலரை பற்றி பேசினார்கள் சுமதியும் திண்ணை கிழவியும்.

  “ஒரு வாரத்துல கல்யாணம் வச்சிட்டு இந்த புள்ளையை தண்ணி எடுக்க அனுப்பியிருக்கா சிறுக்கி மக… அவபிள்ளைன்னா இப்படி இந்த நேரத்துக்கு அனுப்புவாளா?” என்று குறைப்பட்டார் ராமசாமி வீட்டு திண்டில் உள்ள கிழவி. கிழவியின் பெயரெல்லாம் காலப்போக்கில் மறந்துவிட்டது. திண்ணைகிழவி என்ற பெயர் தான்  அழைக்கப்படுகின்றது.

“ஏங் கிழவி… அந்தப்புள்ளயோட பெத்தவ தான் செத்துட்டா.
  அவ அப்பன் இரண்டாதாரமா ஒரு பஜாரியை கட்டிட்டு வந்துட்டான். இந்த புள்ளய அவங்க தாய்மாமன் அவங்க வீட்டுக்கு வந்துடுனு கூப்பிட்டார்ல. அப்பவே அந்த தவமலர் அவங்க அம்மா வழி உறவுக்காரங்க வீட்டுக்கு போயிருந்தா… இன்னிக்கு இந்த நிலைமை வருமா?” என்று தவமலரின் செய்கையால் கிழவியிடம் வாதம் செய்தார் எதிர் வீட்டு சுமதி.

“இப்ப என்ன நிலைமை கெட்டுப்போச்சு. கண்ணாலம் பண்ணி புகுந்த வீட்டுக்கு போனாலாவது அந்தப்புள்ள நல்லா வாழும்.” என்று திண்ணை கிழவி வாழ்த்தியபடி உரைத்தார்.

  சுமதியோ “என்னத்த வாழும்… கல்யாணத்துக்கு அவ அப்பன் பார்த்த மாப்பிள்ளை படிக்காதவன்..‌ வானத்தை பார்த்து விவசாயத்தை பண்ணறான் அவனுக்கு கட்டித்தர்றாங்க.

அங்கங்க பெத்தபுள்ளைங்களை நல்லபடியா வாழ மாச சம்பளகாரனுக்கு கட்டித்தர்றாங்க. இந்த தவமலரு புகுந்த வீட்லயும் போய் கஷ்டப்பட போகுது. இதுல இன்னொரு சேதி தெரியுமா? அந்த புள்ளை தவமலருக்கு 18 வயசுக்கூட இல்லை. அப்பறம் எப்படி குடும்ப பாரத்தை தாங்கும், குடும்பம் நடத்தும். பள்ளிக்கூடம் போறப் பிள்ளைக்கு கண்ணாலம் பண்ணறாங்க. போலீஸுக்கு தெரிந்தா உள்ள தூக்கி வைப்பாங்க.” என்றாள் கிசுகிசுப்பாய்.

திண்ணைகிழவியோ, “ஏன்டி எனக்கு கண்ணாலம் பண்ணினப்ப எனக்கு 14 வயசுதேன். ஏன் நான் எல்லாம் நல்லா இல்லை. குடும்ப பாரத்தை தாங்கலை? நான் தான் பதினைந்து வயசுல எம்புருஷனுக்கு சோறு ஆக்கினேன். அதெல்லாம் மீன் குஞ்சுக்கு நீந்த கத்தா கொடுப்பாங்க. குடும்ப நடத்த கண்ணாலம் ஆனா போதும். அதுவே நல்லது கெட்டது பார்த்துக்கும். அதுக்கு எதுக்குடி போலீஸ் பிடிக்கப்போகுது.” என்றார்.‌

  “உன்கிட்ட சொன்னேன் பாரு. 18 வயசு முடியாம கண்ணாலம் பண்ணி வச்சா போலீஸ் கூண்டோட புடிச்சு ஜெயில்ல போட்டுடும். நாட்டு நடப்பு தெரியாத கிழவி. உனக்கு தான் ஒரு பக்கம் காது கேட்காதே… இதெல்லாம் மட்டும் பேச எப்படி கேட்குதோ” என்றார். 

“அடிகூறுக்கெட்டவளே… அப்படி போலீஸ் பிடிச்சா தவமலரோட சித்தியையும் அவ அப்பன்காரனையும் தானே பிடிக்கும். பிடிச்சிட்டு போகட்டும்.” என்றார்.

   “நாம தான் விசனப்படறோம். அந்த புள்ள என்ன நினைக்குதோ?” என்று புலம்பியபடி வீட்டு வேலையில் மூழ்கினார்கள்.

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள வருஷநாடு மற்றும் ஆண்டிப்பட்டி மலைத் தொடர்களில் உற்பத்தியாகி, தேனி மாவட்டத்தின் கம்பம் பள்ளத்தாக்கு வழியாகப் பாயும் வைகை ஆறு, இப்பகுதி மக்களின் உயிர்த்துடிப்பு என்று கூறலாம்.

வைகை மலைகளில் இருந்து பிறக்கும்போது, அது தூய்மையான, குளிர்ந்த நீரோடையாகத் துவங்குகிறது. இதன் நீரோட்டம் பாறைகளைத் தழுவி, சலசலவென ஓசையெழுப்பி கீழே இறங்கும்போது கவிதை போல பயணிக்கும்.

தேனி மாவட்டத்திற்குள் நுழையும் வைகை, இருபுறமும் உள்ள பச்சைப் பசேலென்ற வயல்வெளிகளுக்கு உயிர் கொடுப்பது போல தோன்றும்.

பொதுவாக, மழைக்காலங்களில் மண் சுமந்து செந்நிறமாகப் பாயும் வைகை, மற்ற காலங்களில் தெளிந்த நீரோட்டத்துடன் வெள்ளி ரேகையைப் போலப் பிரகாசிக்கும்.
அப்படிப்பட்ட நேரமாக தான் தற்போது இருந்தது. பெரும்பாலும் ஆற்றங்கரைகள் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். மக்கள் தங்கள் அன்றாடத் தேவைகளுக்காகவும், துணி துவைப்பதற்காகவும், கால்நடைகளுக்கு நீர் காட்டுவதற்காகவும் இங்கு கூடுவார்கள்.
சிலநேரம் சிறுவர்கள் இளைஞர்கள் ஆற்றில் ஆங்காங்கே வலை வீசி மீன் பிடிக்கும் காட்சிகளும், ஆற்றின் அமைதியை மீறி எழும் மக்களின் பேச்சொலியும் இருக்கும்.
இன்றோ சூரியன் மறையும் நேரத்தில், வைகை ஆற்றின் மேற்பரப்பில் தெரியும் பொன்னிறப் பிரதிபலிப்பு மனதை அமைதிப்படுத்த அங்கே தவமலர் தாவணி அணிந்து வீற்றிருந்தாள்.

   குடத்தில் தண்ணீர் பிடித்து வைத்துவிட்டு, அங்கிருந்த படித்துறையில், கண்கள் கலங்க அமர்ந்திருந்தாள்.

பதினொன்றாவது படிக்கும் பெண், 17 வயது பூர்த்தியடைந்தவள். பதினெட்டு வயதை அடைய இன்னும் ஆறுமாதத்திற்கு மேல் உள்ளது. ஆனாலும் இந்த திருமணம் நிகழப்போகின்றது.

  தவமலரை பற்றி சுருங்க கூறினால் அப்பா ஆவுடையப்பன். அம்மா ராசாத்தி.
   தவமலரின் அம்மா இறந்தது அவளது சிறு குழந்தை பருவத்தில்…
  இவளுக்கு எட்டுவயது இருக்கும், இவள் கண்ணெதிரே தான் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துக்கொண்டார்.
   அடுத்த சில நாட்களிலேயே தற்கொலை என்று ஊர்ஜிதமானப்பின், ஆவுடையப்பன் வெப்பாட்டியாக வைத்திருந்த அன்னம்மாளை ஊரறிய திருமணம் செய்துக் கொண்டார். அப்பொழுதே அன்னத்திற்கு ஆறு வயதில் லதாவும், நாலு வயதில் சுரேஷும் இருந்தார்கள்.  எல்லாம் ஆவுடையப்பனின் குழந்தைகள் தான்‌. அதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அந்தக் காரணத்திற்காக தான் தற்கொலை செய்திருக்கலாமென்று கூட அந்த உண்மை வதந்தியாக பரவியது.

  ஏற்கனவே அன்னத்திற்கு அவளுக்கு பிறந்த இரண்டு குழந்தையிருக்க, தவமலரையும் வளர்க்கின்றாள்.
  தவறு அப்படி சொன்னால் பொறுப்பான அன்னை என்ற நற்பெயரை அன்னம் தட்டி சென்றிடுவாரே. 
எல்லா சித்தியையும் போல வேலைக்கு வைத்துக் கொண்டாள்.
  இரண்டு வேளை சாப்பாடு போட்டு வீட்டு வேலைகளை ஏவி பெண்டு நிமிர்த்திடுவாள்.

  அப்படியென்ன தவமலர் வேலை செய்திடுவாள்? என்பவருக்கான பட்டியல்.

தினமும் சூரியன் உதிக்கும் முன் எழுந்து பல் விளக்கி, வாசலுக்கு சாணம் கரைத்து தெளித்து, பெருக்கி, கூட்டி, வீட்டு வாசலில் கம்பி கோலம் முதல் டிசைன் டிசைனான ரங்கோலி வரை வாசலை வண்ணமயமாக்குவாள்.

அடுத்து, வீட்டில் உள்ள பெரிய தொட்டியில் தண்ணீரை நிரப்ப வேண்டும்.
  வீட்டுக்கு ஒரு குழாயை போடும் இந்தக்காலத்திலும், தெரு பைப்பில் தண்ணீரை பிடிக்கும் ஆட்கள் இருக்க தான் செய்கின்றார்கள். 

சாமி விளக்கை தேய்ப்பதற்கு மட்டும் வைகை ஆற்று நீர் தான் வேண்டுமென்பாள் அன்னம். இறைப்பக்தி எல்லாம் கிடையாது. மாலை ஆனதும் தவமலர் புத்தகத்தை திறந்து வைத்து, மகளை விட புத்திசாலியாக படித்திடுவாளென்றதால் இந்த வேலையை ஏவுவாள்.

   இதுப்போக தவமலர் அவள் துணியை துவைத்து காயப்போட்டு விடுவாள். சிலநேரம் லதா மற்றும் சுரேஷின் துணிமணிகளையும் துவைக்கவும் செய்வாள். ஆவுடையப்பனின் துணியெல்லாம் வெல்லம் மூட்டை தூக்கும் இடமென்பதால் உடையெல்லாம் பிசுபிசுபித்து அழுக்குக்கறை அப்படியே இருக்கும். தவமலரால் பள்ளிக்கு செல்லும் நேரம் அவசரமாய் துவைக்கவே அழுக்கு போகாமல் அதற்கும் திட்டும் வாங்குவாள்.

இத்தனையும் செய்தாலும் காலை வெறும் வயிற்றோடு பள்ளிக்கு வந்த  நாட்கள் உண்டு. மதியம் மட்டும் மதிய உணவு திட்டத்தால் நிறைவாக சாப்பாடு சாப்பிடுவாள். இரவு எப்படியும் தன் குழந்தைகள் சாப்பிட்ட மிச்ச மீதி என்று மீறவும், தவமலருக்கு உணவாக போய் சேரும்.
 
   இதில் மாவு அரைக்க, துணி மடிக்க, சில நேரம் சோறு ஆக்குவதும் இவளே. அந்த நேரம் பச்சை காய்கறி எல்லாம் ருசித்திடுவாள். அதெல்லாம் அவளை பொறுத்தவரை லாபகரமானது.

   தவமலருக்கு இத்தனையும் அந்த வயதில் செய்தும், ஏதாவது ஒரு விஷயத்திற்காக திட்டும், முதுகில் அடியும் வாங்கிடுவது தான் சோகம்.

  அவளும் இந்த ஒன்பது வருடம் பார்த்துவிட்டாள். அடிகள் கூடுகின்றதே தவிர குறையவில்லை.
   
  என்ன செய்யலாமென்ற தீவிர யோசனைக்கு பிறகே திருமணம் செய்தால் வேறொரு வீட்டிற்கு சென்றிடலாம். இங்கிருந்து தப்பிக்கலாமென்ற திட்டம் உகுத்தியது.

  அவளாக தான் தன் தாய்மாமாவிடம் சென்று ‘எனக்கு கல்யாணம் செய்து வையுங்க’ என்று வாய் விட்டு கேட்டாள்.
 
  ஒரு பெண் தானாக கல்யாணம் செய்ய பெற்றவர்களிடம் கேட்பதற்கு கூச்சமாக இருக்கும். இங்கே தவமலரோ தாய்மாமாவிடம் பதினெட்டு வயது பூர்த்தியாகாத பட்சத்தில் தனக்கு யாரையாவது திருமணம் செய்து வையுங்கள், மணந்துக் கொள்ள தயார்’ என்றாள்.

  அப்படி அவளாக கேட்டு முடிவானது இத்திருமணம். தாய்மாமன் சிவநேசன் நிறைய அறிவுரை கூட கூறினார்.  ஆனாலும் தவமலருக்கு உள்ளுக்குள் கலக்கம்
இது சரியா தவறா?

  ஒரு வாரத்தில் தனக்கு கல்யாணம். அடியோ திட்டோ வாங்கினால் கூட பனிரெண்டாம் வகுப்பு வரை படிக்கலாமே தவமலர் என்று தாய்மாமன் கேட்டதற்கு முடியாது என்று மறுத்துவிட்டாள்.

அவளுக்கு என்ன கஷ்டமோ என்று வருடத்திற்கு ஒரிரெண்டு முறை அவளை காண்பவருக்கு நெஞ்சம் பதைபதைத்தது. எல்லா வீட்டிலும் மூத்த தாரத்தின் குழந்தை என்றால் இரண்டாவதாக வந்த பெண்மணிக்கு புகைச்சல் இருக்கும். இல்லாத கஷ்டத்தை தந்து வளர்ப்பாளென்று ஊரறிந்த ரகசியமென்றாலும், இத்தனை சின்ன வயதில், படிக்கும் வயதில் தன்னிடம் கண்ணை கசக்கி அழுது கல்யாணம் செய்ய கேட்டு நிற்பவளுக்காக யோசித்தார் சிவநேசன்.

சரி அவசரமாக பார்த்தாலும் நல்ல வரனாக தேர்ந்தெடுத்தார்.
ஏற்கனவே ஆவுடையப்பன் ‘குண்டுமணி தங்கம் போடமுடியாது. செலவும் செய்ய மாட்டேன், படிக்கிற வயசுல கழுதைக்கு கல்யாண ஆசை வந்துடுச்சு’ இப்படி தான் தவமலரை தூற்றினார். ஏதோ ராசாத்தியின் நகை எட்டு பவுன் இருக்க, படிக்காதவளுக்கு ஏற்ற, படிக்காத மாப்பிள்ளையையும் வசதி குறைச்சலாகவும் பார்க்கப்பட்டது. உண்மையில் தவமலர் வீடும் வசதி குறைச்சலென்பதால் இதில் ஒரு திருப்தி, கதிரவனுக்கு சொந்தமாய் ஓட்டு வீடும் வயல்வரப்பும் உள்ளது. அதில் தான் கதிரவன் இருந்தான்.

   கதிரவனுக்கு தாய்தந்தையர் உண்டு. அவர்களிடம் சிவநேசன் தவமலரை பற்றி தெளிவாய் விவரித்துவிட்டார்.
“தாயில்லாத பிள்ளை‌… எங்கக்கா செத்ததும் எங்களோட வர கூப்பிட்டு பார்த்துட்டேன். அப்பா கூட இருந்துக்கறேன்னு சொல்லுச்சு. அவன் அப்பன் அப்படியிப்படி இருந்தாலும் பெத்த குழந்தையிடம் பாசம் காட்டுவான்னு இருக்கவிட்டாச்சு. அவன் இரண்டாதாரமா கட்டிக்கிட்டு வந்தானே தவிர, எங்கக்கா மகளை சரியா கவனிக்க மாட்டேங்கறான். கவனிக்காட்டி பரவாயில்ல… அந்த பிள்ளையை வேலையா ஏவி அடிக்கிறா.
    அதுக்கு தான் ஒரு கல்யாணம் பண்ணி ஒரு குடும்பத்துல சேர்க்க பார்க்கறேன். நகை நட்டுனு எட்டு பவுன் அக்காவோடது தருவாங்க
அதை தாண்டி என் சக்திக்கு இரண்டு சவரன் போடறேன். அதுக்கு மேல என்னால செலவு பண்ணவோ, வரதட்சணையாவோ எதுவும் கொடுக்கறதுக்கு இல்லைய்யா. உங்களுக்கு பத்து சவரன் நகை பொண்ணு போதும் என்று தோணுச்சின்னா இஷ்டம்னா முடிங்க” என்று கேட்டதால் கதிரவனோ வீட்டுக்குள் இருந்து கேட்டவனை அன்னை பார்த்ததும் ”கட்டிக்கறேன்னு சொல்லு ஆத்தா.” என்று பதில் தந்தான்.

  எப்படியும் மகனுக்கு ஒரு பிள்ளையை கட்டிவைக்க ஆசையிருந்தது‌. அதுவும் வீட்டு வேலையை முன்பு போல சாமுண்டிஸ்வரிக்கு செய்ய தோதில்லை என்றதும், தவமலர் மாநிறமாய் ஒடிசலாக சின்னபெண்ணாக இருந்தாலும் தன் பேச்சை கேட்பாளென்று சம்மதித்துவிட்டார்.

  தவமலர் ‘அப்பனை விட்டுட்டு சொந்த ஊரு, வீடு, பழகியவங்கன்னு விட்டுட்டு கல்யாணத்தை நம்பி போறேன். அங்கயும் ஏதாவதுன்னா… எங்க ஆத்தா மாதிரி நானும் தீக்கு இறையாவேன் வைகை தாயே. என்னை அப்படியொரு முடிவை எடுக்க வச்சிடாதே தாயி. எங்க ஆத்தா அப்படி செய்ததே மனசுல ரணமா மறக்கமுடியாம பதிஞ்சு போயிருக்கு’ என்றவளின் தலையில் படீரென்ற அடி கிடைத்தது.
 
  “பொழுது போய் உன்னை ஆளைக்காணோம்னு ஆளாளுக்கு தேடறோம். இங்க வந்து குமரிக்கு தண்ணில முகத்தை ரசிக்கறிங்களோ? ஊர்ல என்னடான்னா என்னவோ நான் தான் உன்னை வேலை ஏவறதா பேசவைக்கறது. தண்ணி எடுக்க போனா விரசா வரத்தெரியாது’ என்று கத்தியது சாட்சாத் தவமலருக்கு மூன்று வேளையில் குறைவைத்தே வயிற்றுக்கு படியளக்கும் ஆவுடையப்பனின் இரண்டாதாரமாக மணந்த அன்னம் தான்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
  

4 thoughts on “மையலிட்ட சிற்பமே-1”

  1. பாவம் தவமலர் கல்யாணத்துக்கு பிறகாவது சந்தோசமா இருக்கட்டும்

  2. M. Sarathi Rio

    என்னை கேட்டால் தவமலர் எடுத்த முடிவுத்தான் சரி.
    கல்யாணம் கட்டிக்கிட்டாவது நிம்மதியா இருக்கட்டும்.

    😌😌😌
    CRVS (or) CRVS 2797

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top